Thursday, 5 July 2018

மகாதியான சித்தப்பா

என் சித்தப்பா ஒருத்தர் இருக்காரு, வித்தியாசமான கேரக்டரு, ஒவ்வொரு குழுமத்துக்கும் இவர் மாதிரியான ஒரு ஆள் கண்டிப்பாக இருப்பார்கள்.
மகாதியானம்னா தெறிச்சி ஓடுவாரு, எப்படியாவது ஆசை காட்டி ஒரு கால் கல்லு வாங்கி வச்சி அவருக்கு ஒரு கட்டிங் கொடுத்துட்டா போதும். அன்றைய பொழுது முழுவதும் நமக்கு செலவு பண்ணி சரக்கு வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருப்பார்.


மறுநாள் தான் அவருக்கு நடந்ததெல்லாம் புரிந்திருக்கும். கையில இருக்குற காசு முழுவதையும் செலவழிக்க வச்சிட்டானேன்னு திட்டிக்கிட்டே நம்ம இருக்குற பக்கமே வர மாட்டார். மறுபடியும் ஒரு நாள் தொக்கா மாட்டிக்குவார். வச்சி செஞ்சிடுவோம் அவரை.
படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போவதற்குள் வெட்டியா சுத்துவோமே, அந்த காலகட்டத்தில் அவர் தான் எங்களுக்கு படியளக்கும் கடவுள்.
நானாவது பரவாயில்லை, பாவம் பார்த்து கொஞ்சமா செலவு பண்ண வைப்பேன். என் மச்சான் ஒருத்தன் இருக்கான் வெள்ளையும் சொள்ளையுமா மேலவாசல்ல. இப்ப சம்பாதிச்சி சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் அந்த சமயம் அவனும் வெட்டிப் பய தானே. கடைசி துட்டு வரைக்கும் அவரை செலவு பண்ண வச்சிடுவான்.
நானும் அவனும் வீட்டு வாசல்ல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். எங்களை கடக்கும் போது பார்க்காத மாதிரியே கடந்து போவார். "யோவ் சித்தப்பா" னு கூப்பிட்டா சிரிச்சிக்கிட்டே "அவசர வேலையே போய்க்கிட்டு இருக்கேன். இப்ப வந்துடுறேன்" னு நழுவிடுவார்.
கண்டிப்பா வேற வழில தான் போவார்னு தெரியும், அங்க ஒரு பட்றய போட்டுருப்போம். கையில இருக்குற ஐம்பது அறுவதுக்கு ஒரு கால் கல்லு மட்டும் தான் வாங்க முடியும். வாங்கி தயாரா உக்கார்ந்து இருப்போம்.
வர்றவர்கிட்ட நைஸா பேசி பம்புசெட்டுக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவோம். போகும் போதே சொல்லிக்கிட்டு வருவார், "டேய் என்கிட்ட காசே இல்லடா, நாளைக்கு சாப்பிடலாம்"னு நழுவுவார். "அட வாங்க சித்தப்பா, இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்"னு சொல்லி ஒரு கட்டிங் தான் கொடுப்போம்.
பத்து நிமிசம் கழிச்சி தலைய சிலுப்புவார். "மவனே, இந்தாடா காசு, ஒரு அரைக்கல்லு, ஒரு கால்கல்லு, ஒரு சோடா பாட்டிலு, சிக்கன் லாம் வாங்கியாடா" ன்னுவார். சாயந்திரம் ஆரம்பிச்ச மகாதியானம் நடுராத்திரி வரைக்கும் நிக்காம ஒடும்.
மறுநாள் மதிய சோறு நேரம் வரைக்கும் வெளிய தென்படவே மாட்டார். வீட்டுக்குள்ள பார்த்தா கொல்லப் பக்கமா தலைல துண்டு போட்டு உக்கார்ந்து விக்ஸ் தேச்சிக்கிட்டு இருப்பார்.
அடுப்பாங்கரையிலிருந்து சித்தி குரல் கேக்கும். கன்னாபின்னான்னு எங்களை தான் திட்டிக்கிட்டு இருக்கும். எங்களை பார்த்ததும் "வாங்கடா கண்ணுகளா, லட்டு சாப்பிடுங்கடா" னு சாப்பிட கொடுக்கும். எங்களுக்கு தெரியாம நைஸா மாமாகிட்ட "வெளியில இவனுங்களோட போன தொலைச்சிப்புடுவேன்"னு மிரட்டி வைக்கும்.
2000 சமயத்துல சில மாதங்கள் எங்களுக்கு இப்படி தான் போய்க்கிட்டு இருந்தது.
ஒரு முறை இப்படி தான் ஓவரா குடிச்சிப்புட்டு சித்தப்பா சைக்கிளை மறந்து வச்சிட்டு நடந்தே வீட்டுக்கு போயிட்டார். நானும் மச்சானும் கொடுக்கலாம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்கு போய் பார்த்தா சித்தி அவரை அடி வெளுத்துக்கிட்டு இருக்கு. நின்ன மேனிக்கு காலை தூக்கி அவர் தாவாடைலயே ஒரு கிக்கு விட்டது பாருங்க.
சித்தி ஒரு பொடவ கட்டுன பொன்னம்பலம் னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. மறுநாள் கேக்கும் போது தான் சித்தப்பா சொன்னார். அன்னைக்கு விக்ஸ் தடவிக்கிட்டு இருந்தது ஹேங் ஓவர்னால இல்ல, சித்தி விட்ட அறைல காது கொய்ய்னு ஆகி வலி தாங்க முடியாம தான் ன்னு.

ஆரூர் மூனா

Friday, 29 June 2018

அசுரவதம் - சினிமா விமர்சனம்

சசிகுமார் படத்துக்கும் எனக்கும் ஒரு சோக நிகழ்வு இருக்கு. சுப்ரமணியபுரம் படமும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. சாந்தியில் சுப்ரமணியபுரமும் தேவிபாலாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் வெளியாகி இருந்தது.


நானும் என் நண்பனும் சாந்தி தியேட்டர் வாசலில் நின்று பேசிக்கிட்டு இருந்தோம். நான் சுப்ரணியபுரம் படத்துக்கு போகலாம்னு சொல்ல அவனோ புது இயக்குனர் படம் எப்படியிருக்கும்னு தெரியாது, ரிஸ்க் எடுக்க வேண்டாம் எம்டன் மகன் இயக்குனரின் அடுத்த படம் முனியாண்டி, வா இதற்கே போகலாம்னான்.

போய் தலைவலி வாங்கி வந்தது தான் மிச்சம். ரெண்டு நாள்ல மக்களிடையே மவுத் டாக் பரவி சுப்ரமணியபுரம் பிச்சிக்கிட்டு ஓடுது. எந்த தியேட்டர்லயும் டிக்கெட் கிடைக்காம அல்லாடுறோம். 15 நாளுக்கு பிறகு பாடாவதி தியேட்டரான மடிப்பாக்கம் குமரனில் பார்த்தோம். நல்ல படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவற விட்ட வருத்தம் இப்பவும் உண்டு.


தாரை தப்பட்டை, பலே வெள்ளைய தேவா படங்களை தவிர வேற படங்கள் என்னை ஏமாற்றியதில்லை. நவீன உலகின் ராமராஜன் சசிகுமார் தான். இவர் படங்களுக்கு மக்கள் குடும்பமாக வருவதே இந்த நூற்றாண்டின் அதிசயம்.

இந்த படத்துக்கு வருவோம். ட்ரெய்லரே பெரும் கவனம் ஈர்த்தது. நம்பி அயனாவரம் கோபிகிருஷ்ணா தியேட்டருக்கு போனால் படம் பார்த்தவங்க மொத்தமே பத்து பேரு தான்.

ஸ்பாய்லர்ஸ் இருக்கும், மத்தவங்க ஒதுங்கிக்கங்க.


ஒரு சாதாரண மளிகை கடை நடத்தி வரும் வசுமித்ர வுக்கு போன் வருகிறது. ஒரு வாரத்தில் கொல்லப் போவதாகவும் அதுவரை சித்ரவதைகளை அனுபவிக்கனும்னு சசிகுமார் சொல்ல வசுமித்ர பாதுகாப்புக்கு ரவுடிகளை அமர்த்திக் கொள்கிறார். 

சொன்னபடி சசிகுமார் கொன்னாரா இல்லையா, என்ன காரணம் அவ்வளவு தான் படத்தின் கதை. 

படத்தில் சிறந்த கதைலாம் கிடையாது. கதையா பார்த்தா தமிழ் சினிமா அடிச்சி துவைச்சி எடுத்த பழிவாங்கல் கதை தான். படம் ஒரு விஷுவல் ட்ரீட். இந்த வகை மேக்கிங் நம்மூருக்கு புதுசு. 

கேமரா ஆங்கிள் முதற்கொண்டு சண்டை காட்சிகள் வரை எல்லாமே புதுசு. டெக்னீசியன்களின் களமான இதில் ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.

படத்தின் கதை சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவுமில்லாமல் வெறும் மிரட்டலை மையமாக வைத்தே பரபரவென்று இடைவேளை வரை வந்து விடுகிறார்கள். நமக்கே புதுசா இருக்கு. 

இரவில் சசிகுமாரை வசுமித்ர தேடிக் கொண்டிருக்க இருட்டில் ஒரு சிகரெட் கங்கு தெரிய கூடவே புகை படர மின்னல் வெளிச்சத்தில் சசிகுமார் நிற்கும் காட்சி செம அப்ளாஸ் வாங்குகிறது.

வசுமித்ர இந்த பாத்திரத்திற்கு பொருத்தமான காஸ்டிங் கிடையாது. சுமை தாங்க முடியாமல் திணறுகிறார். உடல்மொழி னு ஒன்னு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை போல. நடக்கும் போதும் ஒடும் போதும் கோவப்படும் போதும் அந்த தாக்கம் நம்மை பற்றிக் கொள்ளவே இல்லை. அந்நியமாக இருக்கிறது. 

பாம்பு எதற்கு வருகிறது அதனால் சொல்ல விழைவது என்னன்னு புரியல. துப்பாக்கி சசிகுமாருக்கு எப்படி கிடைக்கிறது, கிராமத்தில் பட்டுபட்டுனு சாதாரணமா சுடுவதும் பொருந்தவில்லை. 

ப்ளாஷ்பேக் பழிவாங்கும் படத்திற்கு பொருத்தமான குரூரத்தை கொண்டிருக்கிறது. ஆனாலும் சாகும் போது வசுமித்ர பலாத்காரத்திற்கு உட்படுத்திய பெண்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே இருப்பது உறுத்துகிறது. அப்படி சொல்வது பொருந்தனும்னா சாதாரண மளிகை கடைக்காரர் என்ற பேக்ட்ராப் இருந்திருக்க கூடாது. இன்னும் குரூரமான பேக்ட்ராப் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

விஷூவலா புது முயற்சியை கொண்டிருக்கும் அசுரவதத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday, 22 June 2018

டிக் டிக் டிக் - சினிமா விமர்சனம்

முன்னலாம் வெள்ளிக்கிழமையானா வண்டி நேரா தியேட்டருக்கு போயிடும். பல வருசமா பழகிப் போன விஷயம் அது. இடையில் சில வருடங்கள் பழக்கத்தை நிறுத்திட்டு, இன்னிக்கி படத்துக்கு போகலாம்னு கிளம்பும் போதே ஒரு மாதிரியான அன்கம்பர்ட்டபிள் பீல் வந்துச்சி. ஒரு வழியா தயக்கத்தை உடைச்சி தியேட்டருக்கு போயிட்டேன். 


படத்தின் விமர்சனத்தில் நிறைய ஸ்பாய்லர்ஸ் இருக்கும். படம் பார்க்கனும்னு நினைச்சா எஸ்ஸாகிடுங்க. கவனமா விமர்சனம் பழக்கம் விட்டுப் போச்சுல்ல, கொஞ்ச நாள்ல அந்த கான்சியஸ் வந்துடும்.

ஒரு பெரிய விண்கல், அதாவது 50 கிலோ மீட்டர் விட்டமுள்ள விண்கல், சென்னைக்கு அருகில் உள்ள கடலில் விழப் போகுது. அப்படி விழுந்தா தமிழ்நாடு, ஆந்திரா, இலங்கை போன்றவற்றின் கடல்பகுதியில் 1000 மீட்டர் அளவுக்கு எழும்பும் கடல் அளவுகள் உருவாகும். 

4 கோடி பேர் இறக்கும் வாய்ப்புள்ளதால் இந்திய அரசாங்கம் அந்த விண்கல்லை விண்வெளியிலேயே உடைத்து விட திட்டம் போடுது. திட்டத்தை செயல்படுத்த ஜெயிலில் இருக்கும் திருடன் ஜெயம் ரவி, ரிச்சி ஸ்ட்ரீட்ல செல்போன் ரிப்பேர் பண்ணும் திலக், ஹேக்கர் அர்ஜுனன் ஆகியோரை அனுப்புது, விண்கல்லை தகர்த்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.


படத்தின் கதை கேட்டதும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. நான் ப்ளஸ் 2 படிக்கும் சமயம் விஜயகாந்தின் தாயகம் னு ஒரு படம் ரிலீசாச்சி. பள்ளியை கட்டடிச்சிட்டு நண்பர்களுடன் முதல் காட்சி பார்க்க உக்கார்ந்து இருக்கோம். ஒரு விஞ்ஞானியை காஷ்மீர் தீவிரவாதி கடத்தி விட தமிழ்நாட்டு மீனவரான விஜயகாந்த் கையில் அருவாளை எடுத்துக்கிட்டு காப்பாத்த கிளம்புவார். தியேட்டரே விழுந்து விழுந்து கைதட்டி கலாய்ச்ச சீன் அது. 


இந்த படமும் அப்படி தான் இருக்கு. இயக்குனர்  சக்தி சௌந்தர்ராஜனின் முந்தைய படங்களான நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்றவை சுவாரஸ்யமான கன்ட்டென்ட்டுகளை கொண்டிருக்கும் ஆனால் எக்ஸிக்யுசனில் கோட்டை விட்டுருப்பார்கள். சம்பவங்கள் இந்த படத்திற்கும் பொருந்துகிறது.


படத்தின் பலம்னா அது சிஜி தான். பெரிய அளவுல மெனக்கெடாம அதிக பொருட்செலவும் வைக்காம முடிந்த அளவுக்கு கச்சிதமா பண்ணியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் ப்ளூமேட் அபத்தங்கள் நிகழவேயில்லை. பல நூறு கோடிகள் போட்டு க்ராபிக்ஸ் கொடூரங்கள் நிகழ்த்தும் ஷங்கர்லாம் பத்து அடி தள்ளி நிக்கலாம்.

ஜெயம் ரவி நல்லா பண்ணியிருக்கார். கண்ணில் ஒரு மெல்லிய சோகம் தவழ்ந்து கொண்டே இருப்பது கச்சிதமாக பொருந்துகிறது. உடல்மொழி, உச்சரிக்கும் திறன் இவர் வேற கட்டத்தில் இருக்க வேண்டிய நடிகர் என்பதை நமக்கு குறியிட்டு குறியீட்டில் காட்டுகிறார். 

நிவேதா பெத்துராஜ் நாயகியாக வருகிறார். ஒரு உட்டாலக்கடி கிஸ்ஸிங் சீன் தவிர ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. ஒரு நாள் கூத்து படத்தில் இருக்கும் க்யூட்னஸ் இதில் மிஸ்ஸிங்.


மற்ற நடிகர்களும் பெரிய சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் கடனே னு நடித்திருக்கிறார்கள். 

அவ்வளோ பெரிய ஆபரேசன் நடத்த ஒரு ஜவான் கூடவா ராணுவத்தில் இல்லை. அதுவும் 200 கிலோ எடையுள்ள அணு ஆயுதம், விண்வெளியில் அக்கடா னு இருக்குமாம். போய் மேஜிக்லாம் பண்ணி பொத்துனாப்புல தூக்கிட்டு வந்துடுவாங்களாம். டேய். எங்களையெல்லாம் பார்த்தா எப்பட்றா தெரியுது. 

சீனா ஸ்பேஸ் ஸ்டேசன்ல இருக்கிறவன்லாம் பழைய ஜெய்சங்கர் பட வில்லனின் கையாள் போலவே இருக்கிறார்களே, மக்கள் கலாய்ப்பார்கள் என்று கூடவா தெரியவில்லை. சீன ராணுவ வீரன் சண்டை போடும் போது பஞ்சத்தில் அடிபட்ட கூர்க்கா மாதிரியே தெரிவது எனக்கு மட்டும் தானா,

20 முதல் 25 வயதுக்குள் இருக்கும் நாயகி எப்படி ராணுவத்தில் இவ்வளவு பெரிய நிலையில் இருக்கிறார் என்று சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள். ராணுவ விருது வழங்கும் விழாவில் முடியை விரித்துப் போட்டு மெடல் வாங்கும் பெண் அதிகாரியை இப்ப தான் பார்க்கிறேன். 

இந்த மாதிரி படங்களுக்கு டீட்டெயிலிங் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு சொல்லனும்னா தெலுகுல ஷை னு ஒரு படம் வந்தது. ராஜமவுலி ஆரம்ப காலத்துல இயக்கிய படம். படம் ரக்பி விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு மசாலா படம். மசாலா படம் தானேன்னு அடிச்சி விடல. 

ரொம்பவும் பக்குவமா, படத்தின் ஆரம்பத்திலிருந்து ரக்பி பற்றிய விதிகளை கொஞ்சம் கொஞ்சமா பார்வையாளர்களுக்கு புரிய வைத்துக் கொண்டே இருப்பார் இயக்குனர். அது தான் க்ளைமாக்ஸ் மேட்ச்சுக்குள் மக்களை ஈர்க்க காரணமாக அமைந்தது. 

பல கோடி போட்டு எடுக்கிற படத்துக்கு இந்த மெனக்கெடல் கூட இல்லைனா எப்படி இயக்குனர் சார். பாக்குற எங்களைப் பார்த்தா  கேனப் பயலுக மாதிரியா தெரியுது. 

ஆரூர் மூனா 

Wednesday, 20 June 2018

ரோஸ்மில்க்

மெர்சல் படத்துலயே எனக்கு புடிச்ச சீன், தம்பி ரோஸ்மில்க் வாங்கித் தர்றேண்டா என்பது தான். மத்தவன்லாம் சமந்தாவை ரசிச்சிக்கிட்டு இருந்தா நான் விஜய் ரோஸ்மில்க் குடிக்கும் அழகை ரசிச்சிட்டு இருப்பேன்.


ரோஸ்மில்க் பெருமையப் பத்தி நாளெல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம். கடைல வாங்கி குடிக்கிற ரோஸ்மில்க்கை விட அபூர்வமாக வீட்டு விஷேசங்களில் கிடைக்கும் ரோஸ்மில்க் அலாதி சுவையா இருக்கும்.
மைலாப்பூர் காளத்தி பேப்பர்ல கிடைக்கும் ரோஸ்மில்க் நல்ல டேஸ்ட்டா தான் இருக்கும், ஆனால் நான் சாப்பிட்ட ரோஸ்மில்க்குகளில் அது சிறந்ததுனுலாம் சொல்லமாட்டேன்.
திருவாரூர்ல ராம்ஜி மாமா னு ஒரு சமையற்காரர் இருந்தார். வடக்கு வீதி குடும்ப விழாக்களுக்கு அவர் தான் சமையல். எங்க ஊர் கல்யாணங்களில் முதல் நாள் மாலை கண்டிப்பாக ரோஸ்மில்க் இருக்கும்.
அதன் சுவையே அலாதி. கடையில் சிரப் வாங்கி பாலில் கலக்காமல் ரோஜா இதழ்கள், பன்னீர் சிரப், சர்க்கரை கலந்து அவரே தயாரிப்பார். அதுவும் கறந்த பாலை காய்ச்சி குளிர வைத்து அதில் செய்யப்படும் ரோஸ்மில்க்கின் சுவை மறக்கவே மறக்காது.
தரமான ரோஸ்மில்க் சுவைக்க ஒரு விதி இருக்கிறது.
நல்லா சில்லுனு இருக்கும் ரோஸ்மில்க்கை முகத்தருகே எடுத்து வரும் போது அதன் மணம் நாசியை துளைத்து, மயிர்கால்கள் சிலிர்க்கனும். பிறகு சுவைக்கும் போது பக்குவமாக கலக்கப்பட்ட எசன்ஸ் மற்றும் பாலின் கலவை வாயெல்லாம் பரவி ஒரு திருப்தி தரும் பாருங்க. எத்தனை டம்ளர் குடித்தாலும் அலுக்காது. மனமும் வயிறும் கேட்டுக்கிட்டே இருக்கும்.
சென்னையில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உடன் தேடும்பானம் ரோஸ்மில்க் தான். இப்பலாம் காலை மாலை வேளைகளில் காபி, டீயெல்லாம் குடிப்பதில்லை. ரோஸ்மில்க் தான்.
காதி பவனிலிருந்து சிரப் வாங்கி கொடுத்து விடுவேன். ரெண்டு ஐஸ் க்யூப்கள் டம்ளரில் போட்டு திக்கா பாலை ஊற்றி எனக்கு எந்தளவுக்கு புடிக்குமோ அந்தளவுக்கு மட்டும் எசன்ஸை ஊற்றி தருவார் வீட்டம்மா,
எவ்வளவு கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தரமான ரோஸ்மில்க் குடித்த திருப்தியை தரனும் அது. சந்தானம் கூட ஒரு படத்தில் சொல்வாரே, குடிச்சிட்டு வச்ச மாதிரி இருக்கனும்னு. அது தான் நம்ம பதம்.
இப்ப சில இடங்களில் ரோஸ்மில்க்கை அப்டேட் பண்றேன்னு சப்ஜா விதைகள் அல்லது பாதாம் பிசின் சேர்த்து தர்றாங்க. ரோஸ்மில்க் டேஸ்ட்டையே கெடுத்து விட்டுது அது. ரோஸ்மில்க் பாரம்பரியம் மாறாமல் இருந்தால் தான் அந்த சுவை கிடைக்கும்.
ஆரூரான் திருமண மண்டபத்தில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் திருமணம் தான் நடக்கும். வெங்கடேஸ்வரா பள்ளிக்கு பக்கத்தில் வேறு மண்டபம் இருக்குமா, பள்ளி முடிந்து வரும்போது நோட்டம் விட்டே வருவோம். சமையற்கூடத்தில் ராம்ஜி மாமா இருந்தால் சட்டு சட்டுனு பசங்களுக்கு தகவல் பரவி விடும்.
வீட்டுக்கு போய் டவுசர் மாற்றி, பேட்டும் பாலும் எடுத்துக்கிட்டு மண்டபத்துல பூந்துடுவோம். எங்களை பார்த்தவுடன் "வந்துட்டானுங்க, பிரம்மஹத்திங்க"னு திட்டுவார்.
ஆனால் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ரோஸ்மில்க் ஊத்திக் கொடுத்துக்கிட்டே இருப்பார். "போதும் மாமா" ன்னு சொன்னாலும் "இன்னும் குடிடா படுவா" ன்னு கொடுப்பார்.
இப்பலாம் திருமணங்களில் நுழைந்தவுடன் வெல்கம் ட்ரிங்க் னு ஒன்னு கொடுக்குறானுங்க. நல்லா கெமிக்கல் கலந்த க்ரேப் ஜுஸ் தான் பெரும்பாலும் இருக்கும். கொமட்டிக்கிட்டு வரும் நமக்கு.
இப்ப ஆரூரான் மண்டபத்துக்குள்ள போய் 20 வருசத்துக்கு மேல ஆயிடுச்சி, ராம்ஜி மாமாவையும் பார்த்து 15 வருசத்துக்கு மேல ஆச்சி. இப்ப எங்க இருந்தாலும் ரோஸ்மில்க்கை தயார் செய்து கொடுத்துக்கிட்டு தான் இருப்பார். இந்த பக்குவமெல்லாம் அதுவா அமையனும்.

ஆரூர் மூனா

Friday, 12 January 2018

ஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ராபிக்குகள். எல்லாம் வழக்கொழிந்து விட்டது. ரங்கண்ணாவுக்கு பிறகான பாபு மாதிரி ஆகிடுச்சி, என் ப்ளாக்கு. 

தோத்தவண்டாவின் முதல் ப்ளாக்ஸ்பாட் களவாடப்பட்டது. புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி முதல் ப்ளாக் பெற்ற 11 லட்சம் ஹிட்டுகளுக்கு நிகராக இதையும் 7.5 லட்சம் ஹிட்ஸ்களுடன் உருவாக்கினால் உள்நாட்டு சிக்கல்களால் எழுதுவதே நின்று விட்டது.  

இந்த வருடமாவது விட்டுப் போன ப்ளாக்கை தூசு தட்டி மறுபடி நிமிர்த்தனும். பார்ப்போம்.

------------------------------------

ஸ்கெட்ச் போட்டு பைனான்ஸ் வண்டிகளை தூக்குவதில் வல்லவர் விக்ரம். ஹரீஷ் பெரேடிக்காக வேலை செய்கிறார். அவருக்காக ரிஸ்க் எடுத்து ராயபுரம் தாதா பாபுராஜ் வண்டியை தூக்குகிறார். அதனால் ஏற்படும் மோதலில் விக்ரம் வாழ்வில் ஏகப்பட்ட சிக்கல் உண்டாகிறது. எப்படி விக்ரம் சரி பண்ணுகிறார் என்பதே ஸ்கெட்ச் படத்தின் கதை.


நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது விக்ரமின் தோற்றம். ஐம்பதை கடந்து மாமனாராகவும் ஆயிட்டார். இன்னும் இளமையாகவே தெரிகிறார். பெர்பார்மன்ஸில் விக்ரமை மிஞ்ச ஆளேது. சண்டைக் காட்சிகள் துருதுருவென இருக்கிறார். மோர் சிகரெட்டை இழுக்கும் ஸ்டைலே தனி.

தமன்னா இந்த படத்துக்கு சம்பிரதாயத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் கதாபாத்திரத்தை நீக்கி விட்டாலும் படத்தின் ஓட்டத்துக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது. தோற்றத்தில் அத்தனை வசீகரம் இல்லை. அவரின் தோழியாக வருபவரே அதிக கவனம் ஈர்க்கிறார். பேசாம அவரையே நாயகியாக போட்டுருக்கலாம்.

பாபுராஜ் எத்தனை பெரிய பர்பார்மர் தெரியுமா, உடம்பு தாட்டியா இருந்ததால் ஆரம்ப காலகட்டத்துல அடியாள் கதாபாத்திரம் ஏற்று படிப்படியாக வளர்ந்து, சால்ட் அண்ட் பெப்பர் மூலமா நகைச்சுவையிலயும் பேர்எடுத்து இருக்கிறவரை சும்மா நிக்க வச்சி அனுப்பியிருக்காங்க. ஒரு கூடுதல் தகவல் ஆல்டைம் பேவரைட் ஆண்ட்டியான வாணி விஸ்வநாத்தின் கணவர் தான் இவர்.

சூரி என்ற ஜந்துவை எப்போது தமிழ் சினிமாவில் இருந்து விலக்குவார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். வாலு படம் காமெடி லாம் இயக்குனரின் திறமைன்னு நினைச்சிருந்தேன். அது சந்தானத்தின் தனிப்பட்ட குழுவின் திறமை என்பதை இந்த படம் சொல்லி விட்டது.

ஓவர் பில்ட்அப்கள் பொறுமையை சோதிக்கின்றன. ஸ்கெட்ச் ஸ்கெட்ச்னு சொல்றாய்ங்களே தவிர படத்தின் முக்கியமான காட்சியான இன்டர்வெல் ப்ளாக் ஸ்கெட்ச்சே மொக்கையா இருக்கு. மற்ற நேரம்லாம் வார்த்தை ல தான் விளையாடுறானுங்க.

ஸ்ரீமன் நிகழ்வு இப்படி தான் இருக்குமென்பதை கர்ப்பிணி மனைவி, போன் கால் வைத்து சின்னக் குழந்தை கூட சொல்லி விடும். எதுக்கு 60களில் வந்த மாதிரியான ஒரு இன்ட்ரோ.

ஜனதாகேரேஜில் வந்த அதே செட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தின் வில்லன்கள் யாராக இருக்கக்கூடும் என்பதை விஸ்வநாத், செல்போனை உடைக்கும் போதே கண்டுபிடித்து விட்டேன். அந்த ட்விஸ்ட்டை மக்கள் யூகிக்க கூடாது என்பதற்காக பெரேடி மேல் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

பாடல்கள் எல்லாம் சுத்த வேஸ்ட். பார்க்கும்படியும் இல்லை, கேட்கும்படியும் இல்லை.

வாலு படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு கம்ப்ளீட் இருக்கும். எந்த காட்சியும் தொங்காது. போரடிக்கிற மாதிரி ஒரு சீன் கூட இருக்காது. காமெடில்லாம் ரசிக்கும்படி இருக்கும். இதெல்லாம் இயக்குனரின் திறமை. அந்த எதிர்பார்ப்பு தான் இந்த படத்திற்கு கூட்டிச் சென்றது. ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமேயில்லாமல் இருக்கிறது. பல காட்சிகள் போரடிக்கிறது. 

பார்த்தே தீர வேண்டிய படம்லாம் இல்லை. பண்டிகை காலம் நண்பர்களுடன் சந்தோஷத்தில் களிக்க இந்த படத்தை தேர்தெடுத்தால் தப்பு இல்லை. ஆவரேஜ் தான். 

ஆரூர் மூனா

Friday, 28 April 2017

பாகுபலி 2 - சினிமா விமர்சனம்

கண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல போய் பரவசத்தை அனுபவித்து விட்டு வாருங்கள். 


2009ல் இருந்து சினிமா விமர்சனம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ரொம்ப வருடமாக வெள்ளிக்கிழமை சினிமாவுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஆனால் அயனாவரத்துக்கு வீடு மாறிய பிறகு நேரமும் இடமும் தகையாமல் சினிமாவுக்கு போக முடியவில்லை, விமர்சனமும் எழுத முடியவில்லை. 

பைரவாவில் இருந்து விட்டுப் போனதை தொடரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்த படத்தில் இருந்து விமர்சனத்தை தொடர நினைக்கிறேன், பார்ப்போம் முடியுமா என்று. 

படத்தின் சுவாரஸ்ய முடிச்சுகள் என்னையறியாமல் நான் சொல்லி விடும் வாய்ப்பு இருப்பதால் சுவாரஸ்யத்துடன் பார்க்க நினைப்பவர்கள் இத்துடன் கழண்டு கொள்ளலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் துவங்குகிறது.


பிரபாஸை அரசனாக அறிவித்த பிறகு முடிசூட்டிக் கொள்ள நாடும் நாயகனும் தயாராகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாஸ் அனுஷ்காவை சந்திக்கிறார். அவரிடம் காதல் வயப்பட்டு மன்மத சாகசங்கள் புரிந்து கொண்டு இருக்கும் வேலையில் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக பிரபாஸ்க்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடைவெளி ஏற்படுகிறது.

அதை பயன்படுத்தி ராணா அரசனாகிறார். மக்கள் பிரபாஸ் பக்கம் நிற்க வெறுப்படையும் ராணா சூழ்ச்சி செய்து பிரபாஸை கொல்கிறார் (தட் பாகுபலியை கட்டப்பா எந்துக்கு சம்ப்பயாடு மொமண்ட்), மகன் சரத் குமார் ச்சே (அப்பா மகன் கதையென்றாலே சரத்குமார் தான் நினைவுக்கு வருகிறார்) பிரபாஸ் பழிக்கு பழி வாங்குவதே பாகுபலி 2 படத்தின் கதை.

முதல் பாதி பரபரவென எங்கும் தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கிறது. அதுவும் இடைவேளையில் பதவியேற்கும் நிகழ்வும் மக்களின் எதிர்வினையும் சிலிர்க்கிறது, வேறென்ன மயிர் தான். 

இன்டர்வெல் விட்டதும் ஒன்னுக்கு அடிக்க செல்பவன் கூட கக்கத்தில் கட்டி வந்தவன் போல் கையை அகட்டிக் கொண்டே செல்கிறான். அந்தளவுக்கு மக்கள் படத்துடன் ஒன்றியிருந்தார்கள்.


அதன் பிறகு சில காட்சிகள் லேக் ஆகிறது. அதுவும் க்ளைமாக்ஸ் ரொம்ப ஓவர்ர்ர்ரு. மேன் ஆப் ஸ்டீல் (படத்தின் பேரு அதுதான) படத்தில் வரும் ரோபோ சண்டை போல் ஆகிறது. இரும்பால் அடித்துக் கொள்கிறார்கள், கருங்கல்லால் அடித்துக் கொள்கிறார்கள். பனைமரத்தை ப்ளெக்ஸிபிலாக்கி 100 அடிக்கு கும்பலாக பறக்கிறார்கள். எப்படா படம் முடியும் என்பது போல் ஆகி விட்டது.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தின் ஆக்கத்திற்காக கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் இது. என்ன மாதிரியான காட்சிகள், என்ன மாதிரியான நுண்ணுழைப்புகள், நம்ம ஊரு சினிமாடா என்று காலரை தூக்கி விட்டுக்கலாம்.

படம் முழுக்க வருகிறார் சத்யராஜ், படத்தின் நாயகன் இவரோ என்று நமக்கு சந்தேகமே வருகிறது. சிறந்த பண்பட்ட நடிப்பு, காலம் கொடுத்த கொடை இப்படத்தில் பிரதிபலிக்கிறது. நாசர் அந்த நயவஞ்சகம், மகன் மீதான பாசம், குறுக்குபுத்தி, இறுதியில் எல்லாம் இழந்து அவமானத்தில் குறுகி சபையில் நிற்கும் போது அனுபவத்தை கொட்டியிருக்கிறார்.


நாயகனின் அறிமுக காட்சியில் மதம்பிடித்த யானை ஒரு  பக்கம் ஓடி வருகிறது, எதிரில் ரம்யா கிருஷ்ணன் நடந்து வர, கதவை உடைத்து நாயகன் என்ட்ரி, நான் கூட பயந்துட்டேன். முதல் பாகத்தில் காட்டெருமையை வில்லன் அடக்கி மண்டையில் மடாரென அடித்து வீழ்த்துவது போல் பிரபாஸ் ஒரே கொட்டுல யானையை வீழ்த்திடுவாரோ என, நல்ல வேளை அப்பயெல்லாம் ஒன்று நடக்க வில்லை, கோட்டான கோடி நன்றி ஏசப்பா, கோட்டான கோடி நன்றி.

அனுஷ்காவிடம் காதல் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவியாக நடித்து விட்டு ஒரு எதிர்பாராத சமயத்தில் கத்துக்கிட்ட எல்லா வித்தையையும் இறக்கி அனுஷ்காவை கவரும் காட்சியில் மூளையை கழட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

அனுஷ்கா, பிரபாஸ், ராணா பற்றி என்ன சொல்ல, படத்திற்காக 5 வருடம் உழைத்து உடம்பை ஏற்றி இறக்கி பாடுபட்டு இருக்கிறார்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள். ராஜமௌலியின் முத்திரை படம் நெடுக இருக்கிறது. 

யார் என்ன சொன்னாலும், யார் இழந்து பேசினாலும், யார் கழுவி ஊத்தினாலும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தயவு செய்து படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். ஒரு நல்ல அனுபவம் காத்திருக்கிறது. 

ஆரூர் மூனா

Thursday, 12 January 2017

பைரவா - சினிமா விமர்சனம்

படம் விமர்சனம் பண்ணி ரொம்ப நாளானதால் இப்ப டைப் பண்ணும் போது கையெல்லாம் குதூகலிக்குது.


கம்ப ராமாயணத்துல கண்டேன் சீதையைனு சொன்ன மாதிரி படத்தின் விமர்சனத்தை முதல் பாரவுலயே சொல்லிடுறேன், என்னடா இவன் கம்பராமாயணமெல்லாம் படிச்சிருப்பானோன்னு நினைக்க வேண்டாம், ஏதோ ஒரு கம்பர் கழக விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னது மனதில் பச்சக் கென்று ஒட்டிக்கிட்டது, அனுமன் சீதைய பார்த்த பின் ராமரை சந்திக்க சென்று சந்திக்கும் போது, போன விஷயம் வந்த விஷயம் எல்லாம் சொல்லி அவர் ஆர்வத்தை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று எடுத்ததும் கண்டேன் என்று சொல்லி பிறகு தான் சீதைன்னு சொல்லுவாராம், அந்த மாதிரி தான் இந்த விமர்சனத்தின் கடைசி பாராவை முதலிலேயே சொல்லி விடுகிறேன், 


படம் பக்கா தெலுகு மசாலா ஆக்சன் படம். லெஜண்ட், டெம்பர், தூக்குடு மாதிரி ஒரு படம். திருப்பாச்சி, சிவகாசி வரிசையில் இந்த படம் ஓடிவிடும். கலெக்சன் 100 கோடியை தொட்டு விடும். ஏன் எதற்கு என்று லாஜிக்கெல்லாம் இந்த படத்தில் பார்க்க கூடாது. விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழிப்பார்கள். 

இந்த படத்தை துப்பாக்கி, கத்தி வரிசையில் வைத்தால் சாமி வந்து கண்ணை குத்தி விடும். சரி இனி விமர்சனத்திற்கு போய் விடுவோம்.

ஸ்பாய்லர் இருக்கும் அதனால் படம் பார்த்து பிறகு படிக்க நினைக்கும் கண்மணிகள் ஜுட் விட்டு விடவும்.

--------------------------------------

சென்னையில் இருக்கும் விஜய், நெல்லையிலிருந்து சென்னை வரும் கீர்த்தியை பார்த்ததும் காதலிக்கிறார். பிறகு அவருக்கு படாபடா வில்லனான ஜெகபதிபாபுவினால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்ளும் விஜய், தனியாளாக நெல்லை சென்று எல்லாப் பிரச்சனைகளையும் டபக்கு டபக்கு என்று தீர்த்து வைத்து ஜெகபதி பாபுவையும் தீர்த்து வைத்து படத்தை முடித்து வைக்கிறார். 


இது என்ன மாதிரியான படம் என்பது முதல் சண்டைக்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் பேட் பால் வைத்து முதல் வில்லனை பழி தீர்த்து அறிமுகமாகும் போதே நம் காதில் ரத்தம் வழிகிறது. விஜய் ரசிகன் என்னும் கண்ணாடி அணிந்து பார்ப்பவன் கும்மாளமிடுகிறான். 

கலர் கலரா உடைகளை அணிந்து க்ளைமாக்ஸுக்கு முன் ஹீரோ, ஹீரோயின் மற்றும் குடும்பங்களே ஆடும் குத்தாட்டம், லாஜிக் என்ற வஸ்து இல்லாத ஹீரோ ஓர்க்ஷிப் காட்சிகள், செம த்ரிலிங்கான இன்டர்வெல் ப்ளாக், கொஞ்சம் கூட சிரிப்பே வராத சதீஷின் காமெடி, பகுதி வில்லன் மைம் கோபி, மீடியம் வில்லன் டேனியல் பாலாஜி என அக்மார்க் தெலுகு படம் இது. டப்பிங் செய்து வெளியிட்டாலேயே போதும், தெலுகில் ஒரு 100 கோடி கலெக்சன் பார்த்து விடலாம்.



விஜய், சில வருடங்களாக மசாலா கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து நம்மை பாதுகாத்து வைத்திருந்த விஜய், மீண்டும் அதே மசாலாவை அண்டா அண்டாவாக அள்ளி தெளித்து வைத்து மீண்டும் பல வருடங்கள் பின்னே சென்று விட்டார். படத்தில் மைனஸ் கதை திரைக்கதையை விட பெரியது விஜய்யின் ஹேர்ஸ்டைல் தான். சகிக்கல.

கீர்த்தி சுரேஷ் வந்து டங்கு டங்கு என்று குதித்து விட்டு போகாமல் பெர்பார்ம் பண்ணும் படியான கதாபாத்திரம், கவனிக்கும் படி செய்கிறார். க்ளைமாக்ஸ்க்கு முந்தைய குத்தாட்டத்தில் 3 கலர்ல பாவாடை தாவணி கட்டி பார்ப்பவர்களை கண்ணு வழியே ஜொள்ளு விட வைக்கிறார்.

படத்தில் மொக்க காமெடி போடும் சதீஷ், எதுக்கென்றே தெரியாமல் மொட்டை ராஜேந்திரன், இரண்டாம் பாதியில் கழுத்தறுக்கும் தம்பி ராமையா எல்லா காமெடிக்கான எல்லாம் பார்ட்ஸும் படு வீக்கு.


டேனியல் பாலாஜி நன்றாக பெர்பார்ம் செய்துள்ளார். கவனிக்க வைக்கும் நடிப்பு. ஜெகபதிபாபு லெஜண்ட் படத்தில் செய்துள்ளதை ரிபீட் செய்துள்ளார். 

இவ்வளவு கொடுமைகள் இருந்தும் படம் நல்லாயிருக்கு சீன் பார்மேட் சரியாக வைத்துள்ளார்கள், சில இடங்களை தவிர. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றுகிறது. 

கீர்த்தி சுரேஷின் ப்ளாஷ்பேக் முடிந்ததும் வரும் சண்டைக்காட்சியும் அதன் பின்னான பஞ்ச் வசனங்களும் செம செம, பொங்கல் போன்ற விழா சமயங்களில் இந்த மாதிரியான படங்கள் வெளி வந்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

ப்ளாஷ்பேக் வரும் வரையான காட்சிகள், இரண்டாம் பாதியில் அரைமணிநேரம் காட்சிகள் கடுப்படிக்கிறது, மிச்சமிருக்கும் இரண்டரை மணி நேரத்தை விசிலடித்து கொண்டாடி விட்டு தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் மறந்து விட்டால் இது பொங்கல் கொண்டாட்டத்திற்கான படமே. 

ரொம்ப நாளைக்கு பிறகு 
திருவாரூரிலிருந்து ஆரூர் மூனா