Sunday, 29 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 6

இதுவரை எழுதியதை விட்டு விடுங்கள். ஆனால் இந்த பதிவை மட்டும் மிகக் கவனமாக படியுங்கள். உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சாதாரண கட்டுரையினால் மிகப் பிரகாசமாக மாற வாய்ப்புள்ளது.


IRS எனப்படும் இந்த பதவிக்கான தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றால் வாழ்வியல் முறையே மாறி விடும்.

இதில் இரண்டு வகைகளில் தேர்ச்சி முறைகள் உள்ளது. ஒன்று Engineering Services Exam எனப்படும் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான தேர்வு, இதில் தேர்ச்சியடைந்தவர்கள் பயிற்சி முடிந்ததும் இந்தியாவில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலைகள், பழுதுநீக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் Assistant Workshop Manager நியமிக்கப் படுவார்கள்.

அடுத்தது Special Class Railway Apprentice எனப்படும் தேர்வு முறை. இதனை பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தால் அவர்களே இஞ்சினியரிங் படிக்க வைத்து முடித்ததும் நேரடியாக ரயில்வே அதிகாரி போஸ்டிங்கில் நியமித்து விடுவார்கள். இவர்களும் பயிற்சி முடிந்ததும் இந்தியாவில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலைகள், பழுதுநீக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் அதிகாரிகளாக நியமிக்கப் படுவார்கள்.


பொதுவாக தொழிற்சாலை பதவிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்

Kalassi
Technician  Gr III
Technician Gr II (நான் இந்த பதவியில் தான் இருக்கிறேன்)
Technician Gr I
Senior Technician
Junior Engineer
Section Engineer
Senior Section Engineer
Assistant Workshop Manager
Workshop Manager
Deputy Chief Mechanical  Engineer
Chief Workshop Manager

இது என் தொழிற்சாலையில் உள்ள பதவிகள் வரிசை. இந்த IRSME (Mechanical Engineering) முடித்தவர்கள் நேரடியாக Assistant Workshop Manager ஆக நியமிக்கப்படுவார்கள். இரண்டு வருடத்தில் Workshop Manager என படிப்படியாக உயர்ந்து சென்று கொண்டே இருப்பார்கள்.


வருடத்திற்கு 42 சீட்டுகள் மட்டுமே Special Class Railway Apprenticeல் இருக்கிறது. அதற்கு தோராயமாக 4 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். நிறைய பேருக்கு, இல்லை இல்லை 98 சதவீதம் மக்களுக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பதே தெரியாது. 

Special Class Railway Apprenticeக்கான அறிவிப்பும் சிலபஸ் ம் ஒவ்வொரு வருடமும் June - July மாதங்களில் UPSC வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

நுழைவுத் தேர்வு Mathematics, Physics, Chemistry, English Language, General Knowledge, and Psychological Test (Mental Ability) சப்ஜெக்ட் சார்ந்து இருக்கும். இதில் தேர்ச்சியடைந்தவர்கள், அடுத்த கட்டமாக இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் தேர்ச்சியடைந்தவர்கள் Indian Railways Institute of Mechanical and Electrical Engineering, Jamalpur இல் பயிற்றுவிக்கப்படுவார்கள். 

ஐஆர்எஸ் மட்டுமில்லாமல் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகளும் UPSC ஆல் நடத்தப்படுகின்றன.
Indian Railway Traffic Service (IRTS)
This branch of the Indian Railways looks after transportation and commercial matters pertaining to transportation. The branch is further divided into two divisions:
  • The commercial division: This division deals with all commercial responsibilities like ticket checking, catering, administration and management of stations, reservation, platform announcements etc.
  • The operations division: This division deals with controlling movement of the trains, keeping a check on incoming and outgoing trains.
A career with the IRTS begins with 3 years of probationary training. The training is carried out for 2 years at Lal Bahadur Shastri Academy of Administration in Mussourie, zonal training centres and incorporates on the job training.
Indian Railway Accounts Service (IRAS)
This branch of the Railways deals with the accounting and finance operations of the Indian Railway. Appointed officers of the IRAS begin their careers with two years of probationary service.
Indian Railway Personnel Service (IRPS)
This division handles all matters relating to recruitment, promotions, training and even staff welfare, staff welfare activities, transfers, disciplinary actions and so on. The officers of the personnel department also undergo a 3-year probation period.
Railway Protection Service/ Railway Protection Force
This branch of the Indian Railway Services operates as other para-military forces. They are responsible for the maintenance of law and order on trains and on premises owned and used by the Indian Railways. On recruitment a RPF officer undergoes training for 3 years at Baroda, Lucknow and Police training establishments.
Indian Railway Engineering Service
It is the technical side of the Indian Railways and is engaged in activities like installation, maintenance, construction and planning of railway tracks, bridges and buildings.
Indian Railway Stores Service
An engineering service which assists other departments in their material procurementents,their storage, and scrap disposal.

 இந்தியாவில் கீழ்க்கண்டவை தயாரிப்பு தொழிற்சாலைகள்.
  • Diesel Locomotive Works, Varanasi
  • Chittaranjan Locomotive Works, Chittaranjan
  • Diesel-Loco Modernisation Works, Patiala
  • Integral Coach Factory, Chennai
  • Rail Coach Factory, Kapurthala
  • Wheel & Axle Plant, Bangalore
  • Rail Spring Karkhana, Gwalior
  • Rail coach Factory, Rae Bareli
நான் பார்த்தவரை இந்த அளவுக்கு பொறியியல் முடித்தவர்களுக்கும், இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கும் இந்த அளவுக்கு உயர் பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள் இருக்கும் போது கடைநிலை பதவியான, பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக வைத்துள்ள கலாசி பதவிக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் தேர்வு எழுதிக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

எனக்கும் கூட இதையெல்லாம் சொல்ல யாருமில்லை. நான் விபத்தாக இந்த துறைக்கு வந்த பின்பே இவற்றைப் பற்றி அறிந்து கொண்டேன். என்னுடைய உறவினர்களின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி படிப்புகள் இருக்கிறது, முயற்சியுங்கள் என்று சொன்னால் அடப்போய்யா, என் பிள்ளை சாப்ட்வேர் இஞ்சினியர் தான் ஆகவேண்டும் என்று சொல்கிறார்கள். என்னத்த சொல்ல.

ஆரூர் மூனா

டிஸ்கி : இந்த கட்டுரையில் சில தகவல்கள் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

Friday, 27 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5

ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வேயில் உள்ள புறசலுகைகள் என்பது ரயில்வே பாஸ், ரயில்வே மருத்துவமனை, அப்புறம் ரயில்வே குவார்ட்டர்ஸ். இதில் வெளியில் இருப்பவர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏகப்பட்ட மித் வைத்துள்ளார்கள். அதில் ரயில்வே பாஸ் பற்றிய விளக்கங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


அடுத்தது மெடிக்கல் கார்டு. ரயில்வேயில் வேலை பார்ப்பவர்களை எந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுகளும் நெருங்கவே முடியாது. அந்த கவரேஜ், இந்த கவரேஜ் என்று சொல்லி உங்களிடம் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட வைக்கவே முடியாது.

எல்லா விதமான பிணிகளுக்கும் ரயில்வே மருத்துவமனையில் இலவச வைத்தியம் தான். வேலையில் சேர்ந்ததும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஐடி கார்டு வழங்கிவிடுவார்கள். அதில் உங்கள் குடும்ப புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கும். 


நமது இருப்பிடத்திற்கு அருகே உள்ள ரயில்வே மருத்துவமனையின் பெயர் அதில் குறிப்பிடப் பட்டு இருக்கும். உதாரணத்திற்கு எனது வீட்டிற்கு அருகே அயனாவரம் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை உள்ளதால் அந்த மருத்துவமனையின் கோட் எண் என் மெடிக்கல் பாஸ்ஸில் குறிப்பிடப்பட்டு இருக்கும். நான் அங்கு தான் ஒபி சீட்டு (OP) போட முடியும். ஒரு முறை போட்டு விட்டால் அது ஒரு வருடம் வரை செல்லும். மறுவருடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

காலை எட்டு மணிக்கு ஓபி துவங்கும். ஓபி பல பிரிவுகளாக உள்ளது. மேல் ஓபி (Male), பீமேல் ஓபி (Female), ஆர்த்தோ ஓபி, சர்ஜிக்கல் ஓபி என பல உள்ளது. அந்தந்த அறைகளின் வாசலில் நமது ஓபி சீட்டை வைத்து விட்டு காத்திருந்தால் வரிசைப்படி நமது பெயரை சொல்லி அழைப்பார்கள். 

சாதாரண பிணியாக இருந்தால் அங்கேயே பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் வல்லுனர்களின் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். அங்கேயே சில குறிப்பிட்ட நேரங்களில் வல்லுனர்கள் வருகை இருக்கும். சாதாரண காய்ச்சல் முதல் முற்றிய வியாதிகள் வரை அனைத்துக்கும் மருத்துவம் இலவசம். தரமானதானவே சிகிச்சைகள் இருக்கும்.


வெளியே லட்சங்களில் பிரசவத்திற்கு கட்டணமாக வாங்கி ஆபரேசன் செய்து குழந்தையை எடுப்பார்கள். இங்கு 90 சதவீதம் சுகப்பிரசவமாகத்தான் அமையும். தவிர்க்கவே முடியாத காலக்கட்டங்களில் தான் ஆபரேசனுக்கு பரிந்துரைப்பார்கள். 

இங்கு பார்க்க முடியாத சிகிச்சைகளுக்கு மட்டும் வெளி மருத்துவமனைக்கு பரிந்துரைப்பார்கள். அந்த சிகிச்சைக்கு கூட அவர்களே பில் செட்டில் செய்து விடுவார்கள்.

யார் யாரை மெடிக்கல் பாஸ்ஸில் சேர்க்கலாம்.

மனைவி குழந்தைகள் சேர்க்கலாம். தந்தை காலமாகியிருந்தால் தாய்க்கு அனுமதி உண்டு. அது போல் தான் தங்கைக்கும்.

அடுத்தாக குவார்ட்டர்ஸ், சென்னையின் பிரதான ரயில்வே குடியிருப்பு அயனாவரத்தில் உள்ளது. ஒரு காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த காலனி இது. பெரும்பாலானவை சிதிலமடைந்து இப்போ 3000க்கும் குறைவான வீடுகளே பயன்பாட்டில் உள்ளது.

இது போக சென்னையில் ரயில்வே ஸ்டேசன்களில் சில குவார்ட்டர்ஸ்கள் இருக்கும். அது ஸ்டேசன் ஊழியர்களுக்கானது. 

சென்னையில் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், சென்ட்ரல், தலைமை அலுவலகம் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அயனாவரம் குடியிருப்பில் தான் உள்ளனர். 

பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் 10,000த்துக்கும் மேல் வாடகை உள்ள வீடுகளை விட குவார்ட்டர்ஸ் பெரிது. ஆனால் குறைவான வீடுகளே இப்போது இருப்பதால் குவார்ட்டர்ஸில் வீடு அலாட்மெண்ட் வாங்க பெரும் போட்டியே நிலவுகிறது. நானே ரெண்டு வருசமா முயற்சிக்கிறேன், ஒன்னும் முடியலை. பார்ப்போம் இந்த வருசமாவது குவார்ட்டர்ஸ் வாங்க முடிகிறதா என்று.

குவார்ட்டர்ஸ் வந்தால் HRA 2300 ரூபாய் கட்டாகும். அவ்வளவு தான் அதற்கான வாடகை. இன்றைய நிலையில் இந்த பகுதிகளில் ஒற்றை அறை கூட இந்த வாடகைக்கு கிடைக்காது.

முக்கிய தகவல் : IRS எனப்படும்  ரயில்வே சர்வீஸ் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. ரயில்வேயின் உயரதிகாரி வேலை இது. BE (Mech, Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகி விட்டால் உங்கள் வாழ்க்கை முறையே மாறி விடும். மெக்கானிக்கல், சிவில் படித்த பொறியாளர்களே உங்களின் மாற்றத்திற்கு தயாராகுங்கள். ஐடி துறையை விட அதிக சம்பளம், அதிக சலுகை, அதிக செல்வாக்கு உள்ள பதவி இது. மாற்றம் உங்கள் கையில். மேலும் தகவலுக்கு UPSC வலைத்தளத்தை பார்க்கவும்.

இந்த ஐஆர்எஸ் படிப்பும் அதன் பலன்களையும் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.

ஆரூர் மூனா

Tuesday, 24 March 2015

உருளைக்கிழங்கு வறுவல்

தலைப்பை பார்த்தவுடன், யாரும் பேப்பர் பேனாவெல்லாம் எடுத்துட்டு படிக்க உக்கார வேண்டாம். இது சமையல் குறிப்பு பதிவு அல்ல.


ஒருவரது சமையல் லட்சணம் பார்க்க அவர்களை கடினமான உணவு வகைகளையெல்லாம் சமைக்க சொல்ல வேண்டாம். வெறும் உருளைக்கிழங்கு வறுவல் போதும், அவர்களின் கைப்பக்குவத்தை அறிந்துக் கொள்ள.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் என் வீட்டு வறுவலை மட்டும் இந்த விவாதத்தில் இருந்து தள்ளி வைத்து விடுகிறேன்.

வெகு காலம் தன் வீட்டுச் சாப்பாட்டு இல்லாமல், வெளியிலேயே சாப்பிடும் ஆண்களைக் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஆனால் ஒரே ஊர், ஒரே டைப்பான உணவகம் என்பது மட்டும் தான் என்னை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.


சென்னையில் பல இடங்கள், காஞ்சிபுரம், திருத்துறைப்பூண்டி, மதுரை, விருதுநகர், குண்டூர், ஐதராபாத், டெல்லி, திருவனந்தபுரம், நாகர்கோவில், போபால் என நான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் மெஸ்களில் சாப்பிட்டே வளர்ந்தவன்.

எங்கு சென்றாலும் உணவில் மாறாமல் இடம் பெறும் அயிட்டம் உருளைக்கிழங்கு வறுவல் தான். அதை சாப்பிட்டே காலம் தள்ளியவன் நான். இன்று வரை என் ப்ரிட்ஜ் காய்கறிப் பெட்டியில் எந்நேரமும் உருளைக்கிழங்கு இருக்கும். 

வெறும் சோறு வடித்தால் கூட போதும், உருளைக்கிழங்கு வறுவலை வைத்து ரெண்டு நாளைக்கு சமாளித்துக் கொள்ளலாம்.


ஆனால் வறுவலை சமைக்கிறேன் என்று இவர்கள் செய்யும் அராஜகம் இருக்கே அப்பப்பா.

உருளைக்கிழங்கை இரு வகைகளில் வறுக்கலாம். ஒன்று முன்பே வேக வைத்து துண்டுகளாக்கி மசாலா கொதித்துக் கொண்டு இருக்கும் போது அதில் போட்டு பிரட்டுவது, அல்லது உருளையை சிறு துண்டுகளாக வெட்டி மசாலாவுடன் சேர்த்து அப்படியே வறுப்பது. அவரவர்கள் சேர்க்கும் மசாலாவில் தான் ருசி வித்தியாசப்படும்.


எங்கக்கா ஒன்னு புதுக்கோட்டையில் இருந்தது. நான் அவர்கள் வீட்டுக்கு போன அன்று அத்தானுடன் என்ன சண்டையோ தெரியவில்லை. உருளையை வேக வைத்து அப்படியே மிளகாய்த்தூளை கொட்டி எடுத்து தட்டில் வைத்து விட்டது போல. நாம வேற அன்னிக்கி மப்புல இருந்தோமா. வறுவலை எடுத்து வெளாசித் தள்ளிட்டேன். அப்புறம் ரெண்டு நாளைக்கு சொம்பும் கையுமா கொல்லைக்கு திரிஞ்சிக்கிட்டு இருந்ததெல்லாம் இப்ப இந்த கட்டுரைக்கு தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

என் சித்தி தஞ்சாவூர்ல இருக்காங்க, அவங்க செய்யும் வறுவலுக்கு இணையே கிடையாது. அவ்வளவு கச்சிதமா இருக்கும். சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளிச்சி வெங்காயம் பதமா வதக்கி, தக்காளி சேர்த்து மசிஞ்சதும் மிளகாய்த்தூள், உப்பு, சிறுதுண்டு வெல்லம் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதனுடன் வேக வைத்த உருளையை சேர்த்து சில நிமிடங்களில் கொஞ்சமா நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி வைப்பார் பாருங்க. ரெண்டு வேளைக்கு சேர்த்து சாப்பிடச்  சொல்லி மனது கேட்கும். வயிற்றில் இடமில்லாததால் வருத்தத்துடன் இலையை விட்டு எழுவேன்.

விருதுநகர்ல இருந்தப்ப மெஸ் மாதிரியான ஒரு வீட்டில் கணக்கு வைத்து சாப்பிடுவேன். அசைவம் கூட பக்கத்தில் நிற்காது, அந்த வீட்டின் உருளைக்கிழங்கு வறுவலுக்கு முன்னால்.

சரியாக ஒரு சென்ட்டிமீட்டர் அளவு டைஸ் வடிவில்  வெட்டிய உருளைக்கிழங்கை, வெங்காயம், பூண்டு, கொஞ்சமா மிளகாய்த்தூள், கொஞ்சமா மிளகுத்தூள், உப்பு போட்டு வதக்கிய மசாலாவில் சேர்த்து சுருள சுருள வறுத்து வைப்பார்கள். அதன் ருசியே சுருள வறுப்பதில் தான் இருக்கிறது. செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

திருவனந்தபுரத்தில் கோராமையா இருக்கும். கன்னாபின்னா வடிவத்தில் வெட்டிய உருளையை அப்படியே, சரியாக வதக்கப்படாத மசாலாவில் சேர்த்து அரைவேக்காடாய் வறுத்து வைப்பார்கள். இலையில் வைத்தமாதிரியே எந்திரிக்கும் போதும் இருக்கும். வீணாப் போகுதேன்னு மனசு கெடந்து அடிச்சிக்கும்.

குண்டூரில் நான் சாப்பிட்ட இடத்தின் சிறப்பே மசாலா தான். அது அசைவ ஊறுகாய்கள் தயாரிக்கும் இடம். சிக்கன் ஊறுகாய், மட்டன் ஊறுகாய், மீன் ஊறுகாய் எல்லாம் தயாரித்து ஐதராபாத்துக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். 

உருளை வறுவலில் அப்படியே வாங்கிய மிளகாய்த்தூளை எல்லாம் சேர்க்க மாட்டார்கள். அன்னன்னைக்கு மசாலா அரைப்பார்கள். குண்டூர் மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, ஜீரகம், மிளகு இன்ன பல பொருட்களை அளவாய் வறுத்து மைய அரைக்காமல் நறநறவென அரைத்து அதில் செய்யப்படும் உருளைக்கிழங்கு வறுவல் இருக்கே. சத்தியமாய் அந்த தெய்வீக ருசியை நான் எங்குமே அனுபவித்ததில்லை.

காஞ்சிபுரத்தில் இருந்த போது ஒரு வயதான அய்யங்கார் தம்பதிகளிடம் கேரியர் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம். எங்களுக்கு மட்டும் சமைத்து தருவார்கள். அவர்கள் சமையலில் வெங்காயம், பூண்டு இருக்காது. காரம் கூட குறைவு தான். எதற்கும் தொட்டுக் கொள்ள வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். உடலுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. பங்கு சந்தை பெரும் சரிவின் காரணமாக மூணு மாசத்திலேயே காஞ்சிபுரம் அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பணம் போய் நஷ்டப்பட்டதை விட அவர்கள் சமையலை தொடர்ந்து சாப்பிட முடியாமல் போனதே என்று தான் அதிக வருத்தப்பட்டேன்.

இப்படி உணவுக்காகவும், ருசிக்காகவும் ஏங்கி ஏங்கியே இப்படி வீங்கிப் போய் விட்டேன். என்ன செய்ய நாவுக்கு மட்டும் சமாதானம் சொல்ல முடிய மாட்டேங்குதே.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை திருப்பதியில் மாயவரம் செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். அந்த சமயம் ஒரு பெரும்தாடி வைத்த வட நாட்டு சாமியார் ஒருத்தர் ரயில் நிலைய ப்ளாட்பாரத்திலேயே சமைக்க ஆரம்பித்தார். மூணு கல்லை நட்டு பாத்திரம் வைத்து உருளையை நெய்யில் வதக்கி மசாலா சேர்த்து வறுத்து வைத்து தான் வைத்திருந்த ஈரத்துணியில் சுற்றப்பட்ட சப்பாத்தியை எடுத்து மசாலாவுடன் சாப்பிட ஆரம்பித்தார். 

மசாலா வாசம் என்னால் பொறுக்கவே முடியவில்லை. எழுந்து நேரே அவரிடம் போய் விட்டேன். 

அடுத்த அரைமணியில் அந்த சாமியார் என் செலவில் சிவபாணம் புகைத்துக் கொண்டு இருந்தார். நானோ அவர் சமைத்த நெய்யில் வறுத்த உருளைக்கிழங்கை சப்பாத்தியில் திணித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.

ஆரூர் மூனா

Sunday, 22 March 2015

பரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை

பரபரப்பான சென்னை லைப்ஸ்டைலை விட்டு விலகி அமைதியா சென்னையிலேயே வசிப்பது அதற்கு விடப்படும் சவால் தான். ஆனால் இப்போ அப்படித்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.


சென்னைக்கு வந்த 1997 முதல் 2013 வரை அதே பரபரப்பு, அதே டிராபிக் சிக்கல், அதே லேட் நைட் வாழ்க்கை என இருந்தாச்சி. இப்போ எல்லா பரபரப்புகளையும் விட்டு என் ஏரியாவின் பரப்பளவை நானே சுருக்கிக் கொண்டேன்.

தெற்கே ஐசிஎப், வடக்கே திருவிக நகர், கிழக்கே வியாசர்பாடி, மேற்கே வில்லிவாக்கம் நாதமுனி அவ்வளவு தான் என் சென்னை. இதை தாண்டி போவதே கிடையாது. ஊருக்கு செல்வதாக இருந்தால் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையத்தில் ஏறி எழும்பூர் சென்று காரைக்கால் எக்ஸ்பிரஸ் பிடித்து திருவாரூர் சென்றடைவேன்.

திரும்ப வருவது கூட அதே வழி தான். மாலை 6 மணிக்கு மேல் வாசப்படியை தாண்டுவதில்லை. சனி, ஞாயிறு சூரிய வெளிச்சம் கூட உடம்பில் பட அனுமதிப்பதில்லை. இந்த வாழ்க்கை கூட பிடித்திருக்கிறது.


முந்தைய காலக்கட்டத்தில் பணிநிமித்தம் ஒரு நாளைக்கு 150 கிமீ வரை சென்னை பரபரப்பான டிராபிக் இடையே டூவீலரில் சுற்றுவேன். நான் வேலை பார்த்த கட்டுமான நிறுவனம் ஆலந்தூர் பாதாள சாக்கடை திட்டம், சூளைமேடு குடிநீர் திட்டம், போரூர் பைபாஸ் டோல்கேட் கட்டுமானம், தாம்பரம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுதல் போன்ற வேலைகளை டெண்டர் எடுத்திருந்தது. 

நான் தான் நிர்வாக அதிகாரி. எல்லா ப்ராஜக்ட்டுக்கும் சென்று ரிப்போர்ட்கள் தயார் செய்து தருவது, சில திட்டங்களுக்கு ப்ரொக்யூர்மெண்ட் ஆபிசராகவும் இருந்ததால் பர்சேஸ் ஆர்டர் போடுதல், அப்ரூவல் வாங்குதல் என அலைந்து கொண்டே இருப்பேன். 


இரவானால் மகாதியானம், கையேந்திபவன் உணவு, ரெண்டாம் ஆட்டம் சினிமா என்றே பத்து வருடங்களுக்கு ஏன் ரொட்டீன் ஒர்க்காக இருந்தது. ஞாயிறன்று கூட வேலை இருக்கும்.

நள்ளிரவு உணவகங்கள் எங்கே இருக்கும், போலீஸ் எந்த இடத்தில் செக்கிங் நிற்கும், நள்ளிரவில் எங்கெங்கே சரக்கு கிடைக்கும் வரை எல்லாமே அத்துப்படியாக இருந்தது.

அது தான் சம்பாதிக்கும் வாழ்க்கை என ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

கல்யாணத்திற்கு அப்புறம் கூட ஊர் சுற்றுதல் குறையவில்லை. 

என் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போ தான் எல்லாத்தையும் கட் பண்ணி விட்டு வீட்டுக்கு அடங்கி இருக்கிறேன். மாறியதற்கு அப்புறம் பெரிசாக வித்தியாசம் தெரியவில்லை.

ஆனால், அப்புறம் ஒரு நாள் திநகருக்கு போக வேண்டிய வேலை வந்ததால் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திநகர் வழியில் சென்ற போது சென்னை இந்த ரெண்டு வருசத்தில் மாறிப் போன மாதிரியே இருந்தது. டிராபிக்கைப் பார்த்தால் எரிச்சலாக வந்தது.

அது போல இரவுகளில் சென்னை நகரின் சாலைகள் அனைத்துமே போலீஸின் கண்ட்ரோலில் இருப்பது போன்ற உணர்வு. எல்லா சாலைகளிலும்  செக்போஸ்ட்கள் அமைத்து வாகனங்களை கண்காணிக்கிறார்கள். 

இந்த லட்சணத்தில் கோடை வேறு வருகிறது. இந்த சமயத்தில் வெளியில் போற மாதிரி வேலை மாட்டினால் என்ன ஆவது என்ற கவலை தான் வருகிறது.

வெளியில் செல்வதாக இருக்கும் வேலைகள் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுதல், மார்க்கெட், துணி பர்சேஸ், சினிமா இப்போதைக்கு இவ்வளவு தான். 

தொழிற்சாலை வீட்டிலிருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் தான் இருக்கிறது. மார்க்கெட் திரு.வி.க நகர், துணி பர்சேஸ் பண்ண பெரம்பூர் ரேவதி ஸ்டோர், சினிமாவுக்கு வில்லிவாக்கம் ஏஜிஎஸ் அல்லது கொளத்தூர் கங்கா. அவ்வளவு தான் சோ சிம்பிள்.

இப்போதைய என் விருப்பம், இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் J.E (Junior Engineer) அல்லது சீனியர் டிடிஈ தேர்வெழுதி பாஸ் ஆகி டிரான்ஸ்பர் வாங்கி ஊர்பக்கமே செட்டிலாகி விட வேண்டும். பட்ட வரைக்கும் போதும் பரபரப்பான சென்னை வாழ்க்கை.

ஆரூர் மூனா

Saturday, 21 March 2015

ஸ்பானிய பெண்ணுடன் பதினைந்து நாட்கள் நான்...- பழசு 2012



சத்தியமா பொய் சொல்லலீங்க. ஆனா அதுக்காக இது கில்மாவும் இல்லைங்க. நான் 2006ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். அந்த ஆண்டு சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக அரசு டெண்டர் வெளியிட்டது. அந்த டெண்டரின் கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஏற்கனவே இது போன்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செய்திருக்க வேண்டும் என்று இருந்தது.

எங்கள் நிறுவனத்திற்கு அதற்கு முன் அது போன்ற வேலைகளில் முன் அனுபவம் இல்லாததால் அதற்குரிய அனுபவம் ஏற்கனவே பெற்றிருந்த ஒரு ஸ்பெயின் கம்பெனியுடன் ஜாயின்ட் வென்ச்சர் போட்டு இந்த டெண்டரை பெற எங்கள் கம்பெனி முனைந்தது. டெண்டர் போட்டு அந்த புராஜெக்ட் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

புராஜெக்ட் கிடைத்ததும் Project Analysis Report தயார் செய்வதற்காக அந்த ஸ்பெயின் நிறுவனத்தின் Planning Head ஆக இருந்த அலெக்ஸான்ரியா செ கார்லெ என்பவர் சென்னை வந்தார். எங்கள் பாஸ் என்னை அந்த அம்மிணிக்கு Co-Ordinator ஆக என்னை நியமித்தார். அதன் பணி என்னவென்றால் அந்த அம்மிணி சென்னை வந்ததும் விமான நிலையத்தில் வரவேற்பது முதல் அந்த அம்மிணி Prepare செய்யும் Project Analysis Report ஐ முடித்து திரும்பி அனுப்பி வைப்பது வரை நான் உடனிருக்க வேண்டும்.

ஆஹா நமக்குள் கற்பனை பறக்கிறது. அவளுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வது முதல் வரும் அம்மிணி நன்றாக இருந்தால் பிக்அப் செய்து ஸ்பெயினில் செட்டிலாகி விட வேண்டும் என்பது வரை யோசித்து பார்த்து விட்டேன். நம்மால் முடிந்தது யோசிக்க மட்டும் தானே. அந்த நாளும வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தேன். சில மணித்துளிகளுக்கு பிறகு அவர் வந்தார். அடடடா என்னா கலரு என்னா பிகரு. பார்த்ததும் கொஞ்ச நேரம் மெய்மறந்து நின்றேன். மிகக்கொஞ்ச நேரமே. என்னிடம் வந்து ஆர் யூ மிஸ்டர் செந்தில் என்றாள். ஆஹா என்ன குரல். குயில் ஆங்கிலத்தை ஸ்டெயிலாக பயன்படுத்தியது போல் இருந்தது.

கொஞ்சம் நில்லுங்கள். ஒவர் பில்ட் அப்பாக இருக்குது. ஜொள்ளு கதையா இது என்று நினைக்க வேண்டாம். அந்த அம்மிணியை பற்றிய நல்ல நினைப்பெல்லாம் சில மணிநேரங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு நடந்ததெல்லாம் டெரர் தான்.

வந்து காருக்குள் நுழைந்ததும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். டமால் டுஸ் டகீர். என்னடா புரியாத சப்தம் என்று பார்க்காதீர்கள். என் இதயம் வாய் வழியாக வெளி வந்து உடைந்து நொறுங்கி விட்டிருந்தது. என் எதிர்பார்ப்பெல்லாம் காலி.

அவர் வருதற்கு முதல் நாள் இரவு ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "அத்தான் காபி சாப்பிடுங்க".

நல்ல கனவு, கனவுடனே சென்று விட்டது. அந்த சமயத்தில் என் கற்பனையில் அதே பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "மச்சி நெருப்பு இருக்கா".

கல்யாண கனவு கலைந்து சும்மா குஜாலுக்காவது முயற்சி பண்ணுவோமே, எதிர்பார்ப்பு அடுத்த கட்டமாக இறங்கி வந்தது. அவர் வந்து என் நிறுவனத்தின் மேலதிகாரிகளை சந்தித்த பின் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட கெஸ்ட் அவுஸில் தங்க வைக்க அழைத்து சென்றேன். இரண்டு நாள் ஒய்வு தேவை, டிரைவர் மட்டும் போதும், இரண்டு நாள் கழித்து பணியை துவங்குவோம் என்றார். நான் எங்கள் டிரைவர் அண்ணாதுரையை விட்டு விட்டு சென்றேன். நாமும் உடனடியாக முயற்சித்து விடக்கூடாது பொறுமை காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து காலையில் அவரை அழைக்க சென்றேன். காலையிலேயே வின்டெஜ் கட்டிங் அடித்துக் கொண்டிருந்தார். மிச்சமிருந்த நம்பிக்கையும் கரைந்து ஒடி விட்டது. இனிமேல் இவரை ஒண்ணும் பண்ண முடியாது. நமக்கு நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து மாமா இது தான் அண்ணா சமாதியா என்று கேட்டு வியக்கும பெண்ணே சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன்.

மீதமிருந்த நாட்களும் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் சென்றது. ஒரு நாளைக்கு 3 பாக்கெட் தம்மடிப்பார். ஒரு புல் பாட்டில் அடிப்பார். ஆனால் ஆள் போதையில் இருப்பது போலவே தெரியாது. நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன். நாம இன்னும் வளரணும் என்பது மட்டும் தெரிந்தது.

இதையெல்லாம் விடுங்க. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு நடந்தது என்பதை சொன்னால் நான் ஜோக்கராகி விடுவேன். தமிழோடு கலந்து பேசும் தமிங்கிலீஷ் தெரியும், மலையாளி பேசும் மங்கிலீஷ் தெரியும், அது போலவே தெங்கிலீஷ், ஹிங்கிலீஷ் எல்லாம் கேட்டு விட்டேன். எனவே நான் மிகப்பெரிய இங்கிலீஷ்மேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் வந்து பேசிய இங்கிலீஷ் இருக்கே அப்பப்பப்பா, அது ஸ்பெங்கிலீஷ். இங்கிலாந்துகாரன் பேசும் இங்கிலீஷே புரியாது ஸ்பெயினை தாய்மொழியாக கொண்டவள் பேசும் இங்கிலீஷ் எப்படியிருக்கும். அவள் பேசுவதை கேட்டால் விவேகானந்தா கல்வி நிலையத்தின் ஓனரே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒடுவார். நானெல்லாம் எம்மாத்திரம். சிக்கிட்டேன். பேசிப்பேசியே என்னை சிதைச்சிட்டார்.

கெஸ்ட் அவுஸ் சர்வீஸ் பையனிடம் இவர் ஒன்று கேட்க அவன் என்னைப் பார்க்க நான் ஒன்று சொல்ல அவன் வந்து கொடுத்த பிறகு தான் தெரியும் அவர் கேட்டது வேறு என்று. பலமுறை நடந்த இந்த கூத்தை என் பாஸ் ஒரு முறை பார்த்து விட்டார். பிறகென்ன என்னை கிழிகிழி என்று கிழித்து விட்டார். வெக்கம், மானத்தை விட்டு எப்படியெல்லாம் வேலைப் பார்க்க வேண்டியிருக்கு. துடைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

ஒரு வழியாக அவர் கேட்ட பொருட்களின் ரேட்களை எல்லாம் நான் மார்க்கெட்டில் விசாரித்து கொடுக்க ஒரு வழியாக புராஜெக்ட் ரெடி செய்து விட்டு புறப்பட்டார். ஏர்ப்போர்ட்டில் வழியனுப்பும் போது தாங்க்யூ பார் எவரிதிங் என்று சொல்லி ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டு புறப்பட்டார். கடைசி வரையில் என்னன்னமோ எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். நல்லவேளை தப்பித்தேன்.

அன்றிரவு மீண்டும் கனவு அதே வெள்ளைக்காரப் பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் கேட்டாள் "மச்சி நெருப்பு இருக்கா".

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு தினமும் மட்டையாகும் அளவுக்கு சரக்கடிக்காமல் நான் தூங்கியதில்லை.

ஆரூர் மூனா

நிஜ மம்பட்டியானின் கடைசி நாட்கள் - பழசு 2012



மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், "தேடுதல் வேட்டை" முடுக்கிவிடப்பட்டது. காடுகளில் சென்று தேடும் விசேஷ பயிற்சியைப்பெற்ற மலபார் சிறப்பு போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ஆயுதப்படை போலீசார் விரைந்தனர்.

மைசூர் போலீஸ் உதவியும் கேட்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் இந்த அதிரடிப்படை செயல் பட தொடங்கியது. மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்குள் மம்பட்டியான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அப்போது சிக்கல்ராம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவன் மம்பட் டியானின் நண்பன் ஆனான். அவன் கள்ளச்சாராயம் விற்பவன். சில சமயம் அவனைத்தேடி அவன் வீட்டிற்கே மம்பட்டியான் சென்றான்.

கருப்பண்ணனுக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை, கணவனை இழந்த விதவை. அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பில் மம்பட்டியானுக்கும், அவளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கருப்பண்ணனின் 2வது தங்கை நல்லம்மாள் ஒரு நாள் மம்பட்டியானின் கண்ணில் பட்டுவிட்டாள். அவள் நல்ல அழகி. அவளையும் அடைந்துவிட வேண்டும் என்று மம்பட்டியான் ஆசைப்பட்டான்.

போலீசாரின் வேட்டை தீவிரம் அடைந்ததை உணர்ந்த மம்பட்டி யான், தன்னுடைய இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டான். நல்லம்மாளையும் தன்னுடன் அழைத்துச்சென்று விடவேண்டும் என்று நினைத்தான். தன்னுடைய இந்த விருப்பத்தை கருப்பண்ணனிடமும், அவரது தந்தை பொன்னப்ப கவுண்டரிடமும் கூறினான். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

"ஏற்கனவே விதவைத் தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறாயே! அவளையே கல்யாணம் செய்து அழைத்துக்கொண்டு போ! 2வது தங்கையை தரமாட்டேன்" என்று கருப்பண்ணன் அடித்துச் சொல்லிவிட்டான். இதனால் மம்பட்டியானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. "நல்லம்மாளைதான் திருமணம் செய்வேன். அவளை என்னுடன் அனுப்பு. ரூ.1,000 தருகிறேன். நீ சம்மதிக்காவிட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன்" என்று கூறிவிட்டு மம்பட்டியான் காட்டுக்குள் சென்று விட்டான்.

தங்கைகளின் பிரச்சினையால் மனக்குழப்பம் அடைந்த கருப்பண்ணன், போலீஸ் உதவியை நாடினான். பெண் ணாகரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சப் இன்ஸ்பெக்டரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தான். அவர் மூத்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உதவி செய்வதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு கருப்பண்ணனை சந்தித்த ஒரு அதிகாரி, "மம்பட்டியானுடன் மோதி உன்னால் ஜெயிக்க முடியாது. விஷத்தைக் கொடுத்து அவனைக் கொல்ல முயற்சி செய்" என்று ஆலோசனை கூறினார்.

27.03.1964 அன்று கருப்பண்ணன் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மம்பட்டியான் அவன் முன் வந்து நின்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. "நீ என்னை போலீசில் காட்டிக் கொடுக்கப்போவதாக சொன்னாயாமே! எங்கே காட்டிக்கொடு பார்ப்போம்" என்று கூறிக்கொண்டே, மம்பட்டியான் கருப்பண்ணனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால், குறி தவறியது.

உடனே கருப்பண்ணன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மம்பட்டியானை நோக்கி 2 முறை சுட்டான். மம்பட்டியான் வயிற்றில் ஒரு குண்டும் இடுப்பில் ஒரு குண்டும் பாய்ந்தன. மம்பட்டியான் கீழே விழுந்தான். கருப்பண்ணன் ஓடிப்போய் மம்பட்டியான் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை சுட்டான். மம்பட்டியான் அதே இடத்தில் செத்தான். இதுவே அதிகாரபூர்வ தகவலாகும்.

இது தவிர அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றொரு தகவல் உலவியது. நல்லம்மாளை கூப்பிடுவதற்காக மம்பட்டியான் சம்பவ தினத்தன்று கருப்பண்ணன் வீட்டிற்கு சென்றான். மம்பட்டியானுக்கு வீட்டில் விருந்து கொடுத்தான். அந்த சமயத்தில் தர்பூசணியில் விஷத்தை ஏற்றி கொடுத்தான். அதை சாப்பிட்ட மம்பட்டியான் சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தான். உடனே மம்பட்டியானை கருப்பண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். இவ்வாறு பரவலாக பேசப்பட்டது.

எது எப்படியோ, மம்பட்டியானை கருப்பண்ணன் தீர்த்து கட்டிவிட்டான்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் அதிகாரி கிருஷ்ணராஜ், உதவி சூப்பிரண்டு வி.பொன்னையா, பெண்ணாகரம் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மம்பட்டியானுக்கு வயது சுமார் 30 இருக்கும். 5 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான். முறுக்கு மீசை வைத்திருந்தான். ராணுவ வீரரை போல உடை அணிந்திருந்தான். இடுப்பில் பெரிய `பெல்டு' கட்டியிருந்தான். அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அவன் கையில் 2 அடி நீள பெரிய கத்தி இருந்தது. கையில் கெடிகாரம் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். அதில் புலி நகம் கோர்க்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டுச்சோறு மூட்டையும் வைத்திருந்தான். அதில் மான் கறி குழம்பும், சோறும் கலந்த சாப்பாடு இருந்தது. மம்பட்டியானின் உடல் பரி சோதனைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.

பிரேத பரிசோதனைக்குப்பிறகு மம்பட்டியான் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலை வாங்க உறவினர்கள் யாராவது வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.

இதனால் உடலை போலீஸ் லாரியில் ஏற்றி தர்மபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் தகனம் செய்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தார்கள். மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மம்பட்டியானை கொன்ற கருப்பண்ணனுக்கு பரிசு வழங்க போலீஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதனை தொடர்ந்து கருப்பண்ணனுக்கு ரொக்கப்பணம் 2 ஆயிரமும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அதோடு தற்காப்பிற்காக அவனுக்கு லைசென்சு (அனுமதி) பெற்ற துப்பாக்கியும் கொடுக்கப்பட்டது.

மம்பட்டியான் கோஷ்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர், கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த 5 பேர்களில், சுப்பிர மணி, சாமியண்ணன், சின்னண்ணன், நல்லப்ப கவுண்டர் என்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவன் சிறுவனாக இருந்ததால், சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.


ஆரூர் மூனா

ப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்சனம் - பழசு 2012



நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.

சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.

சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.

இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.

அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.

இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.

இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.

ஆரூர் முனா