இந்த பாழாப் போன மகாதியானத்துனால கல்யாணத்திற்கு
முன்பு வரை நான் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சொல்வதற்கு நிறைய சம்பவங்கள்
இருக்கிறது. அதில் ஒன்று இது.
2005-06 சமயத்தில் நான் வேலை பார்த்த கட்டுமான
கம்பெனி விருதுநகரிலிருந்து கயத்தாறு வரை ஆறுவழிப்பாதை தேசிய நெடுஞ்சாலை போடுவதற்கான
டெண்டர் எடுத்து வேலையும் துவங்கியது. இதற்கென அலுவலகம் விருதுநகர் சாத்தூர் இடையே
உள்ள சிலுக்குவார்பட்டியில் அமைக்கப்பட்டது.
நான் அந்த சமயம் சென்னை மண்டல அலுவலகத்தின்
நிர்வாக அதிகாரியாக இருந்தேன். சென்னை மண்டலத்துக்குட்பட்ட எந்த திட்டத்தில் விபத்துகள்
நடந்தாலும் நான் தான் அதனை கவனித்து பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி முதல் கம்பெனியிலிருந்து
நிவாரண நிதி வரை வாங்கித் தர வேண்டும்.
ஒரு முறை பிக்ஸட் அசெட் ரிஜிஸ்டரை சோதனை
செய்வதற்காக சிலுக்குவார்பட்டிக்கு சென்றிருந்தேன். முதல் நாள் வேலையை முடித்து விட்டு
விருதுநகருக்கு சென்று அய்யா காமராஜர் வாழ்ந்த வீட்டை பார்த்து விட்டு உற்சாகமாகவே
மகாதியானத்தை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.
நிற்க.
இந்த இடத்தில் ஒரு விளக்கம். நான் அதுவரை
தென்பகுதிகளுக்குட்பட்ட சிறுநகரங்களுக்கோ கிராமத்திற்கோ சென்றதில்லை. மதுரை, நெல்லை,
கன்னியாக்குமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் இங்கெல்லாம் நல்ல பரிட்சயம் உண்டு. திருவனந்தபுரத்தில்
2004-05ல் இதே நிறுவனத்தின் வேறொரு புராஜெக்ட்டில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து
இருக்கிறேன்.
விளக்கம் முடிந்தது. பின்னாடி உபயோகப்படலாம்
உங்களுக்கு.
நான் ஒரு தேசாந்திரி. எந்த ஊருக்கு சென்றாலும்
அந்த ஊரில் உள்ள சந்து பொந்து வரை சென்று வந்து விடுவேன். முதல் நாள் விருதுநகர் சென்று
விட்டதால் மறுநாள் சாத்தூர் என்று முடிவு செய்து விட்டோம்.
மறுநாள் மதியம் இரண்டு மணியளவில் அலுவலகத்திற்கு
ஒரு போன் வந்தது. எங்கள் அலுவலத்திலிருந்து 2 கிமீ தொலைவில் எங்கள் நிறுவனத்தில் மெக்கானிக்காக
பணியாற்றிய ஒருவர் சாலை விபத்தில் சிக்கி விட்டதாக கூறினர்.
அந்த ப்ராஜட் மேனேஜர் விவரத்தை சென்னை மண்டல
பொது மேலாளருக்கு தெரிவிக்க அவரோ "செந்தில் அங்கு தான் இருக்கிறான். அவனிடம் பொறுப்பை
விட்டு விடுங்கள் அவன் பார்த்துக் கொள்வான்" என்று கூறியது மட்டுமில்லாமல் என்னிடமும்
விவரம் தெரிவித்து கவனிக்கச் சொன்னார்.
உடனே அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன். நான்
போய் சேரும் சமயம் விருதுநகரிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து விட்டது. அந்த மெக்கானிக் கம்பெனியின்
பஜாஜ் எம்80 வண்டியில் சென்று ஒரு பொக்லைனின் பழுது பார்த்து விட்டு திரும்பி வரும்
போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றிருக்கிறது. தலையில் பலத்த காயம்.
அடிபட்ட வண்டியை ஒரு அலுவலக உதவியாளரிடம்
கொடுத்து அலுவலகத்திற்கு எடுத்து செல்ல சொல்லி விட்டேன். வண்டி ஓட்டும் கண்டிசனில்
இருந்தது.
ஆம்புலன்ஸில் ஏற்றி அவன் தலையில் துணியை
சுற்றி என் மடியில் வைத்துக் கொண்டேன். அவனுக்கு நினைவு இருந்தது. ஆந்திரா பையன் எப்படி
விபத்து நடந்தது என்று தெலுகில் என்னிடம் கூறிக் கொண்டே வந்தான். ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை
உள்ளே நுழையும் போது சிறு விசும்பலுடன் தலை தொங்கியது.
மருத்துவர்கள் சோதித்து அவன் இறந்து விட்டதாக
சொல்லி விட்டார்கள். உடல் மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவன் குடும்பம் பற்றி
விசாரித்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். விருதுநகரில்
வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.
அந்த பெண்ணிடம் விஷயத்தை சொல்ல முடியாது.
எனவே ஊரில் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவளது கணவன் அவசர வேலையாக கேரளா
சென்று விட்டதால் அவளை காரில் ஊருக்கு போகச் சொன்னதாகவும், அவன் கேரளாவிலிருந்து நேரடியாக
ஊருக்கு வந்து விடுவான் எனவும் அந்த பெண்ணிடம் சொல்லி காரில் எங்கள் அலுவலகத்தில் வேலை
பார்த்த இரண்டு பெண்களை துணைக்கு அமர்த்தி அனுப்பி வைத்தாயிற்று.
அதன் பிறகு தான் கவனித்தேன், என் சட்டை,
பேண்ட் ரத்தமாக இருந்தது- பிறகு அங்கேயே கடையில் வேட்டி சட்டை வாங்கி மாற்றிப் போட்டுக்
கொண்டேன்.
அதற்குள் போலீசில் இருந்து ஆள் வந்து விடவே
விவரம் தெரிவித்து, கவனித்து மற்ற பார்மாலிட்டிஸை பார்க்கச் சொன்னேன். மருத்துவமனையில்
கேட்டால் பிரேத பரிசோதனை பண்ணும் டாக்டர் நாளை தான் வருவார். பிறகு தான் பாடி கிடைக்கும்
என்று சொல்லி விட்டார்கள்.
அவர்களையும் கவனித்து 6 மணிக்குள்ளாகவே பிரேத
பரிசோதனை முடித்து போலீசில் டாக்குமெண்ட் வேலைகளை முடித்து ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றி
அனுப்பி வைத்தேன். இவ்வளவும் முடிந்து அரைமணி கழிந்தே நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
மண்டல பொது மேலாளரிடம் தகவல் தெரிவித்து
விட்டு ஜீப் நேராக மகாதியான கூடாரத்திற்குள் புகுந்தது. பிறகென்ன சாப்பிட அரைக்கல்லு,
பார்சல் அரைக்கல்லு வாங்கிக்கிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சிலுக்குவார்பட்டி வந்தோம்.
மற்ற நண்பர்கள் படுக்க சென்று விட நான் மட்டும்
செக்யூரிட்டியிடம் பேசிக் கொண்டு இருந்தேன். சிவகாசியில் ஒரு தியேட்டரில் 23ம் புலிகேசி
வெளியாகியிருப்பதாகவும் பகல் காட்சியே பார்த்து விட்டதாகவும் படம் பிரமாதம் என்றும்
கூறினார்.
அப்போது எனக்குள் இருந்த அரக்கன் விழித்துக்
கொண்டான்.
அப்போது மணி எட்டரை. மற்ற நண்பர்களை கூப்பிடலாம்
என்று போனால் எல்லாம் மட்டையாகி தூங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் மட்டும் கிளம்புவது
என்று முடிவெடுத்தேன். செக்யுரிட்டியிடம் சிவகாசிக்கு வழி கேட்டேன்.
திருநெல்வேலி பக்கம் சாலையில் சென்றால் கொஞ்ச
துரத்தில் ஒரு நாலு வழி சந்திப்பு இருக்கும். அதில் இடது பக்கம் சாத்தூர் செல்லும்
வழி எனவும் வலது பக்கம் சிவகாசி செல்லும் வழி
எனவும் போட்டு இருக்கும் அதில் வலது பக்கம் திரும்பினால் அரைமணியில் சிவகாசி வந்து
விடும் என்றார். வாசலில் இருந்த ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மிச்சமிருந்த அரைக்கல்லை
அரைலிட்டர் பெப்ஸியில் கலந்து இடுப்பில் சொருகி கொண்டு புறப்பட்டேன்.
சொன்னவழியே சென்று வலது பக்கம் திரும்பினேன்.
போகும் வழியில் அரைக்கல்லை சாப்பிட்டுக் கொண்டே சென்று படமும் பார்த்து விட்டு சரியான
வழியில் எங்கள் ஆபீசுக்கும் வந்து அறைவாசலில் வண்டியை நிறுத்தி விட்டு என் அறையில் உறங்கியும்
விட்டேன்.
காலையில் எழுந்து பார்த்தால் நேற்று விபத்துக்குள்ளான
வண்டி வாசலில் இருந்தது.
ஆரூர் மூனா
எல்லாம் அரைக்கல்லு செய்த வேலை....!
ReplyDeleteஅரைக்கல்லு இல்லை அய்யா, முழுக்கல்லு
Deleteஅதனால ஒண்ணும் இல்ல. அதான் வீடு வந்து சேர்ந்துடீங்கல்ல பத்திரமா.
ReplyDeleteமகாதியானம் நிறுத்த முடிவெடுத்தது இன்னும் அமுலில் இருக்கா இல்ல அவ்ளோ தானா