Thursday 28 May 2015

மாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்

அபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் சீன் ஆர்டரை மாத்தி போட்டு அதில் குள்ள கமல்ன்ற மேஜிக்குக்கு பதில் ஆவிகள் கண்ணுக்கு தெரியிது என்கிற மேட்டரை வைத்து எடுக்கப்பட்டு நமக்கு காதுல பூ சுத்தி வழங்கப்பட்டு இருப்பதே மாஸ் என்கிற மாசு.


நாம மாஸ் படத்தின் ஆர்டரிலேயே கதையை சொல்லனும் என்றால்

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சூர்யா ஒரு சிக்கலில் மாட்டி அதனால் ஒரு விபத்தில் சிக்குகிறார். அதன் பிறகு அவர் கண்களுக்கு ஆவிகள்  தெரிய ஆரம்பிக்கிறது. அதை வைத்து காசு சம்பாதித்து ஜாலியாக இருக்கும் போது ஒரு வீட்டில் சூர்யா போன்ற ஆவியை சந்திக்கிறார் சூர்யா. அதன் பிறகு அந்த ஆவிக்காக தவறுதலாக ஒரு கொலையை விபத்தாக்கி செய்கிறார். 

யார் அந்த ஆவி, சூர்யாவுக்கும் இன்னொரு சூர்யா ஆவிக்கும் என்ன உறவு வில்லன்கள் யார் என்பதை நமக்கு சொல்லியிருக்கும் படமே மாஸ்.

கத்தி படத்திலும் இந்த தவறு தான் நடந்தது. படத்தின் மெயின் கதைக்கு ஆரம்பத்திலேயே வராமல் கண்ட இடங்களில் அலைந்து திரிந்து இன்டர்வெல் டைம்ல மெயின் கதைக்கு வருவது. இது அவுட் ஆப் பேஷன் ஆகி ரொம்ப நாள் ஆகிப் போச்சி.


இந்த படத்திலும் சின்ன திருட்டுகள் நயன்தாராவுடன் காதல், மற்ற ஆவிகளை வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்தல் போன்ற கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களே முன் பாதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

ஆவி சூர்யா அறிமுகமான பிறகு தான் படத்தின் கதையே தொடங்குகிறது. இது படத்தினுள் நம்மை ஒன்ற விடாமல் செய்து விடுகிறது.

இதற்கிடையில் மெட்ராஸ் பவன் சிவா படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு மெசேஜ் அனுப்பினார். இந்த படம்  The Frighteners என்ற ஆங்கிலப் படத்தின் காப்பியாம்.

நமக்கு இப்பல்லாம் தமிழ்ப்படம் பாக்குறதுக்கே நேரமில்லை. நாம எங்க இங்கிலீஷ் படம் பாக்குறது. எனவே எனக்கு படம் பார்த்து முடியும் வரை இந்த காப்பி சமாச்சாரமெல்லாம் தோணவேயில்லை.


சூர்யா வழக்கம் போல நன்றாக நடித்துள்ளார். ஒரு பெண் ஆவியின் வேண்டுகோளுக்காக ஆவியின் கண் தெரியாத மகனுக்கு உதவும் காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து இருக்கிறார். அந்த இலங்கைத் தமிழன் கதாபாத்திரமும் டயலாக் டெலிவரியும் நான் அறிந்த வரையில் மோசமில்லை என்றே தோன்றுகிறது.

நயன்தாரா இந்த படத்திற்கு எதற்கு என்றே தெரியவில்லை. படத்தின் கதைக்கு எந்த விதத்திலும் உதவாத கதாபாத்திரம். நாயகி வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் கட்டாயத்திற்காக நடிக்க வைக்கப் பட்டுள்ளார்.

ப்ரணீதா ப்ளாஷ்பேக் காட்சியில் வருகிறார். அந்த மரணம் சம்பவிக்கும் காட்சியில் ஒகே ரகம் தான்.

வழக்கம் போல இந்த படத்திற்கு இவர் எதற்கென்றே தெரியாத ப்ரேம்ஜி. அவர் செத்து இருப்பதாக சூர்யா அறிந்து ஓடும் காட்சியில் மட்டும் தனித்து தெரிகிறார். க்ளைமாக்ஸில் ஒரு இடத்தில் கவனிக்க வைக்கிறார். மற்ற இடங்களில் எல்லாம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை.

பார்த்திபன் சில இடங்களில் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். அவ்வளவு தான், மற்ற இடங்களில் மொக்கை போடுகிறார்.

சமுத்திரக்கனி வில்லன் என்றதும் எதாவது வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ப்ச். சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இலங்கைத் தமிழன் என்பது கூட வியாபார தந்திரம் தான்.

முதல்பாதி கடியைக் கொடுத்தாலும் இரண்டாம் பாதி சுவாரஸ்யம் கொடுப்பதால் படம் மயிரிழையில் தப்பிக்கிறது. வெங்கட் பிரபு டீம் என்ற பெயரில் எல்லா ரெகுலர் நடிகர்களையும் நுழைக்காமல் வெளியில் இருந்து ஸ்ரீமன், கருணாஸ், RMSK (குமார்) என ஆட்களை எடுத்திருப்பதே பெரிய ஆறுதல் தான். 

பார்க்காவிட்டால் தப்பில்லை. பார்த்தாலும் முதலுக்கு மோசமில்லை.

ஆரூர் மூனா

Tuesday 26 May 2015

சரக்கில்லாமல் பிறந்த 2013 புத்தாண்டு - பழசு 2013

வணக்கம் நண்பர்களே, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வாரத்திற்கும் மேல் இணையம் பக்கம் வராமல் இருந்தேன். இதுவே பெரிய சாதனை.

இதற்கு முன்பு எந்த ஊருக்கு சென்றாலும் எப்படியும் தினம் ஒரு முறையாவது இணையத்தில் உலாவுவது வழக்கம். இந்த முறை தான் இணையம் பக்கமே வராமல் இருந்தேன். ஒரு வாரமாக நடந்த சம்பவங்கள் பஞ்சாயத்துகள் எல்லாம் இனிமே தான் விசாரித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மெடுல்லா ஆப்ளிக்கேட்டா சம்பவத்திற்கு பிறகு கசாயத்தை தொடவேயில்லை. தொடவும் முடியாது என்பது வேறு விசயம். ஊருக்கு சென்றதும் வீட்டம்மா எல்லா மேட்டரையும் அப்பா, அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட சென்னையில் வாங்கிய வசவுகள் தாண்டி திருவாரூரில் அதிகம் கிடைத்தது.
சென்னை வந்ததுக்கு பிறகு எதையாவது எழுதலாம் என்று காலையிலிருந்து மேட்டர் தேடிக் கொண்டு இருக்கிறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. அதுக்காக பதிவப் போடலன்னா நாமெல்லாம் அப்புறம் எப்படி சீனியர்னு சொல்லிக்கிறது. அதனால கவலைப்படாதீங்க, எப்படியும் சுவையான பதிவா இத தேத்திடுவேன்.

எப்பொழுதும் புத்தாண்டை கொண்டாட்டங்களுடனே கழிப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான கொண்டாட்டங்கள். ஒரு வருடம் அண்ணா சாலையில் ஒவர் களேபரம் செய்து காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தது வரை உண்டு. எல்லாவற்றிற்கும் மாற்றாக இந்த வருடம் எந்த வாழ்த்தும் சொல்லாமல், பெற்றுக் கொள்ளாமல் சென்னை வரும் ரயிலில் தூக்கத்திலேயே நமக்கு தெரியாமல் புத்தாண்டு பிறந்து விட்டது.
இந்த ஆண்டுக்கான சபதம் எடுக்க வேண்டுமென்று யாரைப்பார்த்தாலும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சாமி கண்ண குத்திவிடும் என்ற மிரட்டலோடு. ஒரு விபத்து காரணமாக கெட்ட பழக்கம் எல்லாத்தையும் விட்டாச்சி. இல்லன்னா அதை காரணம் காட்டி தப்பிச்சிருப்பேன்.

யோசிக்கிறேன். ஒன்னும் புடிபடல. சரி உபயோகமா யோசிச்சதுல, இருக்கும் ரூபாய் 5 லட்சம் கடனை இந்த ஆண்டுக்குள் அடைத்து விட வேண்டுமென்று சபதம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவேனா என்பதை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது போல காலண்டர் துரதிஷ்டம் என்று ஒன்று என்னை துரத்தும். ஒவ்வொரு ஆண்டும் ஏதோவொரு தொழிலில் மும்முரமாக இருப்பேன், ஆண்டு முழுவதும் நன்றாக போகும் அது கடைசியில் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும். அதனால் என்னால் எனது நிறுவனத்திற்கான காலண்டரை அடிக்க முடியாமல் போய் விடும். இந்த ஆண்டு அரசு வேலையில் சேர்ந்து விட்டதால் நிரந்தரமாக அந்த ஆசை நிராசையாகி விட்டது.
பதிவு எழுதுவதில் என்ன சபதம் எடுப்பது என்று யோசித்ததில் நிறையவே இருக்கிறது என்று தெரிகிறது. இந்த ஆண்டு வெற்றியாக நான் நினைப்பது யார் சாயலும் இல்லாமல், எந்த கட்டுரையிலிருந்தும் மூலம் எடுக்காமல் நானே எழுத வேண்டுமென்று நினைத்தது முக்கால் வாசி நடந்தது தான்.

அது போல் தேவையில்லாத ஒரு பிரச்சனையில் நம்ம பேர இழுத்து விட்டனர். பிறகு நான் அளவுக்கு அதிகமாக பொங்கி எழுந்தது எல்லாம் அனைவரும் அறிந்தது. பிறகு யோசித்துப் பார்த்தால் ரொம்ப சின்னப்புள்ளத்தனமாக இருந்தது. இனி எங்கேயும் பொங்கல் வைக்க மாட்டேன். இதற்காக ஸ்பெசல் அட்வைஸ் பண்ணிய உண்மைத்தமிழன் அண்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் அந்த சண்டை சரியா தவறா என்று தெரியாமல் என் பெயர் சம்பந்தப்பட்ட காரணத்தால் நிபந்தனையில்லா ஆதரவு தந்த நண்பர்களுக்கு ஸ்பெசல் நன்றிகள். அவற்றில் முக்கியமானது பல உள்ளது. ஒரு உதாரணம் ஜெர்மனியிலிருந்து ஒரு ஈழத்தமிழ் நண்பர் முதல் முறையாக போன் செய்து வழக்கமாக தோத்தவண்டா வலைத்தளத்தை படித்து வருவதை கூறி ஆதரவாக பேசிய போது ரொம்பவே நெகிழ்ந்து போனேன்.

ஆரம்பகாலங்களில் எது பதிவின் தரம், எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரியாமல் நானும் பதிவில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்து முடிந்த அளவுக்கு எழுதினேன். அதற்கு இரண்டு பாரா கூட வரவில்லை என்பதற்கு நான் முதன் முதலில் எழுதிய டீஸ்மார்கான் என்ற இந்திப்படத்தின் விமர்சனம் உதாரணம்.

பிறகு காப்பி பேஸ்ட் தவறென்று தெரியாமல் ரெண்டு மூணு செய்தேன். பிறகு சில பல காயங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்து இன்று கண்டெண்ட்டே இல்லாமல் கூட பதிவெழுதுகிறேன். நண்பர்களின் சம்பிரதாய பாராட்டுகளை மீறி அறிமுகமில்லாத நண்பர்களின் பாராட்டுகள் தான் நான் நன்றாக எழுதுவதை உறுதி செய்கின்றன.

ஆனால் என்னைப் பற்றிய என் சுயமதிப்பீடு என்னவென்றால் நான் எழுதும் பதிவு ராவாக இருக்கிறது. அதனை மெருகூட்டினால் அதாவது எடிட் செய்தால் சிறப்பான பதிவாக அழகு பெறும் என்று தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக செய்வேன் என்று நினைக்கிறேன்.

முக்கியமான விஷயமாக டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததனால் புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணித்த நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக எந்தவித கொண்டாட்டங்களிலும் நான் இல்லாமல் அமைதியாக பிறந்த புத்தாண்டை வரவேற்கும்

ஆரூர் மூனா

எனக்கு மெடுல்லா ஆப்ளிக்கேட்டா - பழசு 2012

என்னாச்சு

கிறிஸ்துமஸ் விடுமுறை விட்டாங்க.

இம்மி அண்ணன் பார்ட்டிக்கு நைட்டு கூப்பிட்டாரு.

புல்லா சரக்கடிச்சேன், நைட்டு 11.30 ஆகிடுச்சி

வீட்டுலேருந்து போன் பண்ணி சத்தம் போட்டதும் கிளம்பினேன்

வீட்டுக்குள் நுழைய படியேறினேன். முக்கால் தூரம் ஏறியதும் தடுமாறி டமால்...

படிகளில் ரெண்டு சம்மர் சால்ட் போட்டு கீழே விழுந்தேன்

எழுந்தால் பின் மண்டையில் பயங்கர ரத்தம், பெரிய காயம்

அங்கதான் மெடுல்லா ஆப்ளிக்கேட்டா இருக்கு

ஒரு வேளை நான் எல்லாத்தையும் தற்காலிகமா மறந்துடுவேனோ

என்னாச்சு

விளையாட்டுக்கு சொல்லலை. சத்தியமா இது நேற்று முன்தினம் இரவு எனக்கு நடந்தது . கிறிஸ்துமஸ் பார்ட்டி துவங்கி நேரம் கடந்து போய்க் கொண்டே இருந்தது. மறுநாள் விடுமுறை என்பதனால் சற்று அதிமாக சாப்பிட்டு இருந்தேன். வீட்டம்மா போன் செய்து சத்தம் போடவே கிளம்பினேன்.

முதல்மாடியில் வீடு இருப்பதால் படியேற வேண்டும். வீரமாக படியேறி சத்தம் போட்டுக் கொண்டே வர கோபமடைந்த வீட்டம்மா எதிர் வீட்டில் பாக்கிறாங்க, சத்தம் போடாம வா என்று சொல்ல எவன்டா அவன் என்ன பாக்குறது என்று வீர வசனம் பேசி திரும்பிய நான் நிலை தடுமாறி விழ ரெண்டு டைவ், சில குட்டிக்கரணம் போட்டு விழ தலையில் சுவற்றில் மோதி தெரித்தது.

கடுமையான காயம், ரத்தம் கொட்டிக் கொண்டு இருக்கிறது. வீட்டம்மாவுக்கு எங்கிருந்து தான தைரியம் வந்ததோ. 62 எடையுடைய வீட்டம்மா 100+ எடையுள்ள என்னை எவ்வாறு மாடிப்படியில் தூக்கி வந்து வீட்டில் போட்டாரோ தெரியவில்லை. இப்படி ஒரு பலசாலியிடம் இப்பல்லாம் குரலை உயர்த்தி பேசவே பயமாயிருக்கிறது.

உடனே நெருங்கிய டாக்டர் நண்பனுக்கு போனைப் போட்டார் வீட்டம்மா. அவன் வீட்டிலிருந்து கிளம்பி வந்து அவன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்தி விட்டு முதலுதவியை ஆரம்பித்தான். அதற்குள் நண்பர்கள் குழாமுக்குள் போன் போக ஆரம்பித்து அனைவரும் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் தெரியாமல் நான் மட்டும் முழுப் போதையில் மயக்கத்தில் இருந்தேன். நள்ளிரவுக்கு பிறகு போதை தெளிய ஆரம்பித்தது. எழுந்து எனக்கு என்ன ஆச்சி என்று என் வீட்டம்மாவிடம் கேட்க பளாரென்று ஒரு அறை விட்டாள். சகலமும் கலங்கி விட்டது.

அதன் பிறகு நான் எங்க தூங்குறது. நினைவுகள் பயங்கரமாக சுழல ஆரம்பித்தது. எனக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல வர்ற மாதிரி அதே இடத்துல அடிப்பட்டது. ஆனால் எனக்கு காயத்தின் வீரியம் அதிகம். ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. அதனால் காலையில் விடிந்தால் சில வருடங்களுடைய நினைவுகள் மறந்து விடுமா அல்லது ஏற்கனவே மறந்து போய் விட்டதா எனவும் சந்தேகம்.

உடனடியாக எனக்கு கடைசியாக என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்று எனக்குள் ஒட்டிப் பார்த்துக் கொண்டேன். ஆனால் அது நேற்று நடந்தது என்பதை நான் எப்படி நம்புவது. பிறகு போனை எடுத்து கடைசியாக டயல் செய்திருந்த நம்பர்களை பார்த்தால் நான் பேசியது நினைவில் இருந்தது. அப்பாடா எனக்கு நினைவு தப்பவில்லை என்று சந்தோசம் வந்தாலும் போதை இறங்கியதால் தலை கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

மல்லாக்கவும் படுக்க முடியாமல் உட்காரவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். வலியால் விடிய விடிய தூங்கவில்லை. விடிய ஆரம்பித்ததும் கிறிஸ்துமஸ் கொண்டாட சர்ச்சுக்கு சென்றிருந்த நண்பர்கள் குடும்பத்துடன் காலையிலேயே வீட்டு வர ஆரம்பித்தார்கள். கன்னாபின்னா அட்வைஸ்கள் வர ஆரம்பித்தன.

எனக்கே தெரியுது நான் செய்தது தப்பென்று, ஆனாலும் அவனவன் அட்வைஸ் பண்ணது தான் எனக்கு வாங்கிய அடியை விட வலித்தது. ஒரு வழியாக நண்பர்கள் வீட்டுக்கு சென்றவுடன் தான் தப்பிச்சோம்டா என்று எண்ணினேன். இன்னும் அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. நாளை ஊருக்கு போய் தான சொல்லனும், அங்கிருந்து எந்த மாதிரியான ரெஸ்பான்சிபிள் வருமோ தெரியாது.

இன்றைக்கு ரயில்வே மருத்துவமனையில் ஒரு ஒரு டிப்பார்ட்மெண்ட்டாக பார்த்து பார்த்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து சரிபார்த்து ஒன்றும் பிரச்சனையில்லை என்று டாக்டர் சொன்னதும் தான் அப்பாடா தப்பிச்சேன் என்று தோன்றியது.

ஒரு நாள் சபலப்பட்டு அதிகம் குடிச்சது, இன்னைக்கு எனக்கே வில்லங்கமாகி இனி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு மாட்டி விட்டு விட்டது. வேறு வழியே இல்லாமல் என் மனைவிக்கு பயந்து இன்று முதல் நான் டீடோட்லர்.


ஆரூர் மூனா

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு - பழசு 2012

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ சேலை கட்டும் பெண்களைப் பற்றிய பதிவு என்று நினைத்து விடாதீர்கள். வாசனை பற்றி எனக்கு தெரிந்த சிற்சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் துவக்கியிருக்கிறேன். ஒற்றை வார்த்தையை தலைப்பாக வைக்க சற்று யோசனையாக இருந்ததால் துணைக்கு ரஜினி பாடலை சேர்த்திருக்கிறேன்.

வாசனை என்று பொதுவாக சொல்லிஅடையாளப்படுத்துவதை விட அதனை நுகர்வதால் ஏற்படும் கிளர்ச்சியை பகிர்ந்திருக்கிறேன். பிறந்ததிலிருந்து நமக்கு ஏதாவது ஒரு வாசனையுடன் ஒன்றியே வாழ்கிறோம். அது அம்மாவின் மடியிலிருந்து துவங்குகிறது.

எனக்கு கற்பூரத்தின் வாசனை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே கோயில்களில் கற்பூரம் ஏற்றி பக்தர்களுக்கு தரப்படும் ஆரத்தி தட்டில் இருந்து அனைவரும் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். நான் அப்படியே கையில் தீபத்தை ஒற்றி எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து கொள்வேன்.

அந்த வாசனை சில நிமிடங்களுக்கு எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. எந்த வயதில் இருந்து ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. ஆனால் இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.
ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் ஜாமெண்ட்ரி பாக்ஸில் ஒரு கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்வேன். அவ்வப்போது எடுத்து முகர்ந்து பார்க்கும் போது ஒரு கல்ப் அடித்த புத்துணர்வு ஏற்படும்.

அதன் பிறகு ரொம்ப நாட்களுக்கு ஒரு கற்பூரம் டப்பாவை வாங்கி எனது செல்ஃப்பில் வைத்திருந்தேன். அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் ஒரு முறை முகர்ந்து விடுவது வழக்கம். பிறகு இந்த பழக்கத்தை விட்டு விட்டாலும் கூட நண்பர்களின் கடைக்கு செல்லும் போது அவர்களில் பூஜை செல்ஃப்பில் கற்பூரம் டப்பாவை பார்த்து விட்டால் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வேன்.

இன்று கூட என் தொழிற்சாலை பிரிவில் வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து வைக்கப்படும் ஆரத்தி தட்டில் முழுவதும் கற்பூரம் எரிந்த பின் மிச்சமிருக்கும் எரிந்த பகுதியில் விரல் வைத்து தேய்த்து முகர்ந்து பார்த்தால் வாசனை என்னை கவர்ந்திருந்து இழுத்திருக்கும்.
என்னைப் போலவே என் நண்பன் ஒருவன் இருந்தான், அவன் பெட்ரோலின் வாசத்திற்கு அடிமையானவன். பள்ளி படிக்கும் காலத்தில் அவர்கள் வீட்டிற்கு யாராவது பைக்கில் வந்திருந்தால் அவர்களிடம் இருந்த சாவியை வாங்கி டேங்க்கை திறந்து முக்கை விட்டு அதன் வாசத்தை முகர்ந்து கொண்டிருப்பான்.

ரொம்ப நாட்களுக்கு அவர்கள் வீட்டில் தெரியாமல் இருந்து பிறகொரு நாள் தெரிந்து நாலு சாத்து சாத்தி மருத்துவமனையில் அனுமதித்து அவனை அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்தார்கள். இப்போது கூட அவன் வண்டியில் பெட்ரோல் இருக்கா என்று டேங்க்கை திறந்து பார்க்கும் போது ரகசியமாக முகர்ந்து கொள்வான்.

யோசித்து பார்த்தால் சிறுவயதில் இருந்தே நாம் பார்க்க பிடித்ததும் முகர்ந்து பார்க்க வாசனையாக இருந்ததும் தான் ஈர்ப்புகளுக்கு பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
என் பாட்டி ஒருவர் எப்போதும் பேரப்புள்ளைகளுக்காக தன் மடியில் கடலை மிட்டாயை முடிந்து வைத்திருப்பார். எந்த பேரப்புள்ளையை பார்த்தாலும் தன் மடியில் இருந்து அவிழ்த்து ஒரு கடலை மிட்டாயை கொடுப்பார். எனக்கு அதில் ஒரு உழைத்த பெண்மணியின் வாசம் தான் தெரியும். அதற்காகவே அவரை தினம் சென்று பார்த்து கடலை மிட்டாயை வாங்கி வருவதை பழக்கமாக வைத்திருந்தேன் அவர் இறக்கும் வரை.

பத்து வயதில் என்னுடன் விளையாடும் அபிராமியின் உடையில் முக்கியமாக பாவாடையில் இருந்து ஒரு வாசனை வரும். வியர்வையின் வாசம் அது. நீங்கள் பாட்டுக்கு எதுவும் வில்லங்கமாக கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள். பத்து வயதில் விளையாட்டு மட்டும் நமக்கு தெரியும். ஐஸ்பாய் என்றொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது அவள் எங்கு ஒளிந்திருப்பாளோ நானும் அவளுடனே ஒளிவேன், அந்த வாசத்துக்காக.

ஏன் அவள் உடையில் அந்த வாசம் வரும் என்றால் அவள் வீட்டில் எல்லா வேலைகளையும் அவள் தான் செய்வாள். அம்மா கிடையாது, சித்தியின் கொடுமை காரணமாக வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என எல்லா வேலைகளையும் அந்த வயதிலேயே செய்வாள். அது உழைத்த வியர்வையின் வாசம். இன்று யோசித்து பார்த்தால் அவள் மீது இருந்தது வாசத்தின் பிரியம் மட்டுமல்ல பப்பி லவ்வும் கூடதான் என்று.

முக்கியமாக சாப்பாட்டின் வாசம் என்பது என்னை பல வீடுகளில் மானத்தை வாங்கியிருக்கிறது. நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தால் அசைவ குழம்புகளின் வாசத்தை வைத்தே என்ன சமையல் என்று கண்டுபிடித்து விடுவேன். அப்புறம் என்ன ஒரு கட்டு கட்டிவிட்டு தான் நடையை கட்டுவேன்.

என் அம்மா கூட அப்படித்தான். அதனை ஒரு சம்பவம் மூலம் விளக்க நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு அவர் உடல் எடை அதிகரித்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். நான் அவரிடம் ஜெனரல் மோட்டார்ஸ் டயட் சார்ட்டை சொல்லி முயற்சித்தால் ஏழு நாட்களுக்குள் ஏழு கிலோ குறைக்கும் விஷயத்தை சொன்னதும் ஆர்வமாகி அன்றே துவங்கினார்.

மூன்று நாள் தாக்கு பிடித்த அவரால் அதற்கு மேல் அசைவம் இல்லாமல் முடியவில்லை. உடனே வாலை கருவாடு போட்டு குழம்பு வைத்து முட்டை அவித்து அந்த வாசத்தை முகர்ந்த பிறகே பழைய உற்சாகம் வந்தது.

ஒரு முறை கறம்பக்குடியில் என் பெரியம்மாவின் வீட்டில் அமர்ந்து தம்பிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். ஒரு வித தீய்ந்த வாசம் வந்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல துணி தீயும் வாசம் உடன் சேர்ந்து வேறு வித கெட்ட வாசம் வந்து கொண்டே இருந்தது. எல்லோரும் சுற்றிச் சுற்றி தேடிப் பார்க்கிறோம். எங்கிருந்து வாசம் வருகிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெளிச்சம் வரவே அங்கு சென்று பார்த்தால் பக்கத்து வீட்டு சாரதா அக்கா காதல் தோல்வியின் காரணமாக தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் சத்தம் போட்டால் அடுத்தவர்கள் வந்து நெருப்பை அணைத்து விடுவார்கள் என்று கடைசி வரை முனகல் கூட இல்லாமல் செத்துப் போனார். ரொம்ப நாட்களுக்கு என் மூக்கில் அந்த கெட்ட வாசம் சுற்றிக் கொண்டே இருந்தது ஏனென்றால் அவரின் காதலுக்கு நான் தான் தூதுவன்.


ஆரூர் மூனா

கும்கி - பழசு 2012

புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதுற நானே அடுத்து செய்யக்கூடாத விஷயம் என்னன்னு முடிவு பண்ண இத்தனை நாட்களாகி விட்டது. அது என்னன்னா அடுத்தவங்க விமர்சனத்தை படித்து விட்டு போகலாமா வேண்டமா என்று முடிவு செய்வதை பற்றியது.

முதல் நாள் செல்ல வேண்டும் என்று நினைத்து தவறவிட்ட கும்கியை தக்காளி பலரும் பலமாதிரி கழுவி ஊத்தியதால் நான் போகும் எண்ணத்தையே விட்டு விட்டேன். ஆனால் வீட்டம்மாவின் இடைவிடாத நச்சரிப்பு காரணமாக போய் பார்க்க நேர்ந்தது. அதன் பிறகே நான் இத்தனை நாட்களாக பார்க்காமல் தவற விட்டது தப்பு என்று புரிந்தது.

படத்தின் கதையை எல்லாரும் பலமாதிரி சொல்லி விட்டதால் நாம் அதற்குள் போக வேண்டாம். மொத்தப் படத்தில் எனக்கு சரியில்லாத மாதிரி பட்ட விஷயங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று யானைகளின் சண்டையில் சரியில்லாத கிராபிக்ஸ், அடுத்தது எல்லாம் இழந்த நாயகனுக்கு ஊர்த்தலைவர் தனது பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.
அதற்கு முன்பாக படத்தை சப்பென்று முடித்தது தான் குறையாக இருக்கிறது. சாரே உங்களுடைய எல்லாப் படத்தையும் சோகமாகவே முடிக்கனும் என்ற அவசியமில்லை. இந்தப் படத்தை சற்று மாற்றி மகிழ்வுடன் முடித்திருக்கலாம்.

இந்த இரண்டை தவிர எனக்கு சொல்கிற மாதிரி குறைகள் எதுவுமே இல்லை. அதுவும் நம்ம ஆட்களில் சிலருடைய விமர்சனத்தை பார்த்தால் படம் மரண மொக்கை மாதிரியே இருந்தது. இவற்றின் உச்சம் என்னவென்றால் இந்த படத்தை நான் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சிபி செந்தில் குமார் எழுதிய பதிவு தான். இவரெல்லாம் ஆலோசனை சொல்கிற அளவுக்கு படம் போய் விட்டதே அதனால் படம் காலி தான் என்று நினைத்தேன்.

எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் புறந்தள்ளி விட்டு படம் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்த்தது கூட வார நாட்களில் ஒரு காலைக் காட்சிதான். ஆனால் படம் ஹவுஸ்புல். இதற்கு மேல் இதற்கு சாட்சியம் வேண்டாம்.

என்னைப் பொறுத்த படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் பாடல் மற்றும் இசை. அடுத்தது யானை மாணிக்கம், அதன் பிறகு ஒளிப்பதிவு, விக்ரம் பிரபு, லட்சுமி மற்ற விஷயங்கள் வரும். எனக்கு புதிய படங்களின் பாடல்களை கேட்பது பழக்கமேயில்லை. இப்போது சில நாட்களாக வீட்டில் கும்கி பாடல்கள் தான் ஒடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் திரையில் பாடல்களை பார்க்கும் போது சந்தோஷம் கூடுதலாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

வெகு இயல்பாக முதல் படம் என்ற தடையை தாண்டி முன்னேறியிருக்கிறார் விக்ரம் பிரபு. முதல் படத்திலேயே அவங்க தாத்தாவைப் போல் நடிப்பை எதிர்பார்ப்பது அதிகப்பிரங்கித் தனம். விக்ரம் பிரபுவை எனக்கு பிடித்திருக்கிறது. நமது விமர்சனத்தையெல்லாம் தாண்டி அடுத்த கட்டத்திற்கு போய் விடுவார் என்பது நிச்சயம்.
ஒளிப்பதிவு உண்மையிலேயே அருமை. சி கிளாஸ் ரசிகனான எனக்கு ஒளிப்பதிவில் கலர்டோன், ஆங்கிள், லைட்டிங் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து அலசத் தெரியாது. பார்த்தால் பிடித்திருக்கனும் அவ்வளவு தான். அந்த வகையில் எனக்கு அந்த அருவிக் காட்சிகள் சூப்பரோ சூப்பர்.

லட்சுமி (மேனன்?) இதற்கு முன்பாக வெளிவந்த சுந்தரபாண்டியனிலேயே மனதை கவர்ந்து விட்டதால் புதிதாக நம்மை ஈர்க்க எதுவும் செய்ய வேண்டியதில்லை, திரையில் வந்தவுடனே நம்மை அந்த புடவை முடிச்சில் சேர்த்து முடிந்து வைத்து விடுகிறார்.

தம்பி ராமையா பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நமக்கு இந்தப் படத்தில் மிகப் பெரிய ரிலீஃப்பே அவர்தான். பாதிக்கும் மேல் படத்தினை அவர் தான் சுமக்கிறார். எனக்கு நேரம் செல்லச் செல்ல கடுப்பாக ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பின் அமர்ந்திருந்த ஒரு குடும்பம் தம்பிராமையாவின் ஒவ்வொரு கவுண்ட்டருக்கும் விழுந்து விழுந்து சிரிக்க இவர்களாலேயே நானும் சிரித்துத் தொலைத்தேன்.

இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால் இருக்கும் சிற்ச்சில குறைகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. நான் இதுவரை இரண்டு முறை பார்த்து விட்டேன். முக்கியமான விஷயம் பாடல்கள் தான். திரையில் பார்க்கும் போது சில வருடங்கள் பின்னோக்கி சென்று நான் காதலித்த சமயத்தில் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி இமான்.

என்னை மாதிரி கண்ட விமர்சனத்தை படிச்சிப்புட்டு பாக்கவேணாம் இருந்தீங்கன்னா உடனடியா அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டு விட்டு போய் உடனடியாக படத்தை பார்க்கவும். உங்களுக்கு கூட மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கலாம்.


ஆரூர் மூனா

கும்கியுடன் கூடிய பெரம்பூர் S2வின் அனுபவம் - பழசு 2012

சில விஷயங்களை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சொல்லி விட முடியாது. பழைய ஞாபகங்கள் என்பது என்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து நிறைந்திருக்கும் என்பது இன்று என் வாழ்வில் நான் கண்டிருக்கும் உண்மை.

பெரம்பூர் என்பது 97 - 2000 காலக்கட்டங்களில் என் ஏரியாவாக இருந்தது. அந்த நாட்களில் நான் அங்கு தான் தங்கியிருந்தேன். பிறகு படிப்பு முடிந்ததும் சென்னையை விட்டு விலகி திருவாரூருக்கு வந்து செட்டிலாகி விட்டேன்.

பிறகு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்க திரும்பவும் சென்னை வாசம். அதுவும் தென் சென்னையின் முக்கிய பகுதியான ஈக்காட்டுதாங்கலில் தான் 2001 முதல் 2010 வரை வாழ்ந்தேன். அதிலும் சில காலங்கள் வெளியூர் அதாவது கேரளா வடநாடுகள் என்று கழிந்தாலும் சென்னை தான் என் மையமாக இருந்தது.
தாறுமாறாக தோத்து 2010ல் சென்னையை விட்டு ஓட்டாண்டியாக சோகத்துடன் விலகிய பிறகு சுத்தமாக சென்னைக்கும் எனக்குமான தொடர்பு சில காலங்கள் விலகியிருந்தது. அதன் பிறகு வேலை கிடைத்து நான் மீண்டும் சென்னைக்கு வந்ததை இரண்டு புத்தகமாகவே எழுதலாம்.

ஆனால் இன்றைய பதிவு அதைப் பற்றியல்ல. சற்று ப்ளாஷ்பேக்கும் நிகழ்காலத்தையும் ஒத்தது. இன்று வேலை கிடைத்து அதே பெரம்பூருக்கு நான் வந்து விட்டேன். எதுவாக இருந்தாலும் இன்னும் 28 வருடங்களுக்கு இதே பகுதி தான்.
படிக்கும் காலத்தில் இங்கு வீனஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது. அப்பொழுது பெரும்பாலான பிட்டு படங்கள் இங்கு தான் வெளியாகும். அவற்றை ஒன்று விடாமல் பார்த்து மகிழ்ந்தவன் நான்.

அதிலும் முக்கியமாக திருட்டு புருசன் என்று ஒரு படம் வந்தது. சென்னையில் ஒரு வருடங்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்த பிட்டு படம் அது. ஜெயப்பிரதாவின் தம்பி தான் அந்தப்படத்தின் நாயகன்.

ஒரு நாயகன் பல பொய்களை சொல்லி ஒன்பது பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சல்லாபிக்கும் படம் அது. ஏகப்பட்ட பிட்டுகளை கொண்ட அந்த படம் பல நாட்கள் ஹவுஸ்புல்லானதும் உண்டு.
அப்படிப்பட்ட திரைப்படங்களை இந்த தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த காலங்கள் உண்டு. நானும் என் நண்பர்கள் நந்தா (இன்று தர்மபுரியில் பெரிய ஹார்டுவேர் கடையை நடத்தி வருகிறான்), சுரேஷ் (இன்று சாப்ட்வேர் பிஸினஸ்மேன்), சித்தப்பு என்கிற செந்தில் (இன்று போஸ்டல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்), ஆனந்த் (ஐசிஎப் ஓர்க்கர்) என பல நண்பர்களுக்கு இது தான் புகலிடம்.

குச் குச் ஹோத்தா ஹை என்ற ஹந்தி படத்தின் முதல் காட்சியை இங்கு தான் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியை கன்னாபின்னாவென்று லாட்டரியை கிழித்து எறிந்து பார்த்தவன் நான்.

இவ்வளவு சிறப்பு பெற்ற வீனஸ் திரையரங்கம் சில வருடங்களுக்கு பிறகு மூடப்பட்டது என்பதை அறிந்த பிறகு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சில நாட்கள் வருத்தப்பட்ட பின் நான் அதனை மறந்து விட்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு சத்யம் திரையரங்கு பெரம்பூரில் துவங்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்த பிறகு எங்கு உள்ளது என்பதை அறிய ஆவலாக இருந்தது. நண்பர்களிடம் விசாரித்த பிறகு அது பழைய வீனஸ் தியேட்டர் என்று அறிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் மீண்டும் அந்த திரையரங்கிற்கு செல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று கும்கி படம் பார்க்க முடிவான பிறகு பெரம்பூரில் எங்கு படம் ஓடுகிறது என்று பார்த்தால் அது S2 என்று தெரிந்தது. மிகுந்த மகிழ்வுடனே சென்றேன்.

படம் எப்படியிருந்தது என்பதை படத்தின் விமர்சனத்தில் சொல்கிறேன், ஆனால் பல நாட்களாக தொலைந்து போன நண்பன் பெரிய ஆளாக மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோசத்தை அடைவோமோ அந்த சந்தோசத்தை நேற்று அடைந்தேன்.

அப்பாடா எந்த விஷயமும் இல்லாமல் ஒரு பதிவை எழுத முடியுமா என்று யோசித்தேன். சற்று முயற்சித்தேன். அதில வெற்றியடைந்து விட்டேன் என்றே நினைக்கிறேன். இனிய வணக்கங்கள் நண்பர்களே.

ஆரூர் மூனா செந்தில்




டிஸ்கி : எனக்கு மதுரையில் சிவக்குமார் என்னும் வாசக நண்பர் உள்ளார். மிகுந்த பாசத்துடன் மரியாதையாக பழகும் உயர்தட்டு நண்பர் அவர். பல நாட்களாக தொடர்பில் இருந்த அவர் சில நாட்களாக எனக்கு போன் பேசவில்லை. இன்று போன் செய்த அவர் என் அப்பாவிற்கு உள்ள பிரச்சனையை கவனமுடன் கேட்டு அதற்குரிய தீர்வையும், மருத்துவமனையையும் சொல்லி மேலும் விவரங்கள் தருவதாக சொன்னார். இது போல் முகமறியா நண்பர்கள் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்தவனாவேன். நன்றி சிவக்குமார்.

நீ தானே என் பொன் வசந்தம் - பழசு 2012

நாம படம் பார்க்கனும்னு நினைச்சி கிளம்பினாலே அது வரலாறாகி விடுகிறது. நான் என்ன தான் செய்யும் என்று புரியவில்லை. இன்று வேலை சீக்கிரம் முடிந்து என் செக்சனில் காத்திருந்தேன். என்னுடன் படம் பார்க்க வருகிறேன் என்று சொல்லியிருந்த என் நண்பன் அசோக் வரவேயில்லை.

நானும் காத்திருந்து காத்திருந்து மணி 11.50 ஆகி விட்டது. சரி இன்றைய முதல் காட்சியை தவற விட்டு விட்டேன் என்று முடிவு செய்து பரபரப்புடன் நான் இருக்கை கொள்ளாமல் காத்திருக்கையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன் வந்தது.

நண்பர் நக்ஸ் போன் செய்து "எங்க இருக்க, எங்கிருந்தாலும் உடனடியாக உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வரவும், நானும் நீயும் உண்ணாவிரதத்தை கட் அடித்து விட்டு சத்யம் திரையரங்கில் சிவாஜி 3D போகலாம். வலைமனையில் படத்தை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். மத்த நண்பர்கள் அனைவரும் வேலையில் இருக்கிறார்கள். நீ தான் வெட்டி" என்று கூப்பிட்டார், அடப்பாவிகளா இது வேறயா என்று நினைத்துக் கொண்டு சத்யம் வெப்சைட்டை ஒப்பன் செய்து பார்த்தால் படம் ஹவுஸ்புல் என்று போட்டிருந்தது.

நல்லவேளை தப்பித்தேன் என்று நக்ஸூக்கு போன் செய்து விவரத்தை சொன்னால் அவரோ இரவுகாட்சி பார்த்து விட்டு பஸ்ஸில் போக வேண்டியிருக்குமோ என்று பினாத்த அய்யய்யோ எனக்கு கிரகம் ராத்திரி வரை விடாது என்று பயந்த நான் வேலையிருப்பதை சொல்லி ஒரு வாராக தப்பித்தேன்.
12.15 மணிக்கு அசோக் வந்து "சாரிண்ணே வேலை முடிய லேட்டாகி விட்டது" என்று சொல்ல "சரி உன்னை வீட்டில் விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்" என்று சொல்லி இருவரும் கிளம்பினேன். அவனது வீட்டு வாசலில் நிற்கும் போது சும்மா போனில் நெட்டை எடுத்துப் பார்த்து பார்த்தால் ராக்கி திரையரங்கில் கும்கியும், நீதானே என் பொன் வசந்தமும் ஒரு மணிகாட்சி இருக்கிறது என்று போட்டிருந்தது.

உடனடியாக அசோக்குக்கு போன் செய்து வெளியே வரச்சொல்லி இருவரும் ராக்கிக்கு விரைந்தோம். கூட்டம் அள்ளியது. அவனிடம் கும்கிக்கு டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வண்டியை நான் பார்க்கிங்கில் விட்டேன். டிக்கெட் வாங்கி வந்த அவன் கும்கி டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லி நீதானே என் பொன் வசந்தத்திற்கு வாங்கியதாக சொன்னான்.

உள்ளே நுழைந்தால் படத்தின் முதல் பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. அடித்துப்பிடித்து இருக்கையை ஒருவாராக கண்டுபிடித்து அமர்ந்தேன். இனி ஓவர் டூ பிக்சர்.

படத்தின் கதை என்ன? பெரிய சிக்கலான கதையெல்லாம் கிடையாது. மிகச்சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் கதாநாயகனும் கதாநாயகியும் பதிண்பருவத்தில் காதலிக்கிறார்கள். அதன் பிறகு சீசனுக்கு ஒரு முறை ஈகோவினால் சண்டை போட்டு பிரிகிறார்கள். பிறகு கடைசியில் சேர்கிறார்கள். அவ்வளவு தான் கதை.
முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். படம் மிகமெதுவாக செல்கிறது. ஆனால் எனக்கு பிடித்திருந்தது. படத்திற்கு வந்திருந்த பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. பொலம்பிக் கொண்டே இருந்து கடைசியில் படம் முடியும் முன்பே வெளியேறினார்கள்.

ஜீவா படத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார். பலபடங்களில் ரொம்ப லோக்கலாக நடித்து நம் பக்கத்து வீட்டுப் பையன் போல் இருக்கும் இவர் இந்தப் படத்தில் சற்று மேலான இடத்தில் படு டீசண்ட்டாக நடித்துள்ளார்.அழகாக இருக்கிறார். பள்ளிக்கால உடைகள் தான் சற்று ஒட்டவில்லை. மற்றப்படி படம் அவருக்கான களம் தான் புகுந்து விளையாடி இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலமே ஹீரோயின் சமந்தா தான். எனக்கு அவரை மாஸ்கோவின் காவிரியில் பிடித்திருந்தது. ப்ரெஷ்ஷான ஆப்பிள் போல் இருந்தார். அவருக்காகவே அந்த மொக்கப்படத்தை இரண்டு முறை பார்த்தேன். அதன் பிறகு தெலுகுக்கு சென்ற பின் சற்று தொய்வடைந்ததால் எனக்கு பிடிக்காமல் போனது. இந்தப் படத்தில் கூட அவரின் முதல் காட்சியில் எனக்கு பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அழகாக என் மனதில் வந்து அமர்ந்து விட்டார்.

படத்தின் கலகலப்பான பகுதிக்கு சொந்தக்காரர் சந்தானம் மட்டுமே. அவரும் அந்த குண்டு பெண்ணும் செய்யும் அபத்த காதல் கலாட்டாக்கள் திரையரங்கில் பலத்த சிரிப்பொலியை உண்டாக்குகின்றன. இன்னும் மறக்க முடியாத அவரின் வசனம் "எந்தப் பெண்ணை பார்த்தாலும் எனக்கும் தான் மச்சி அழகாயிருக்கிற மாதிரியே தோணுது, Because I am studying only in Boys Hr Sec School". எனக்கு அப்படியே பொருந்துகிறது. நானும் சென்னை வந்த நாட்களில் இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்திருந்ததே ஒரு பெண்ணுடைய காதலின் டீட்டெயிலிங் தான். எனக்கு மிகப் புதிதாக இருந்தது. பெண்ணுக்கு ஒரு காதல் தோல்விப் பாடலும் உண்டு. பெண் உணர்ச்சி வசப்படும் தருணங்கள் கூட இயல்பாகவே இருந்தது. அதை விரிவாக சொல்லலாம் தான். ஆனால் அதில் என் குட்டு கூட வெளிப்பட்டு விடக்கூடிய அபாயம் இருப்பதால் அப்படியே மேம்போக்காக கடந்து செல்கிறேன்.

இடைவேளைக்கு முன் வரும் காட்சி அப்படியே 15 நிமிடங்களுக்கு மேலாக எந்த கட்டிங்கும் இல்லாமல் இருந்தது வியக்க வைக்கும் காட்சி. கிளைமாக்ஸ் காட்சியில் இருவருக்கும் இருக்கும் அந்த நெருக்கம் எந்த நிமிடமும் உடைந்து விடக்கூடிய மெல்லிய ஈகோவுடனே பயணித்து நாம் அவர்கள் அதை உடைத்து விடுவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து ஹீரோயின திரும்பிச் செல்லும் கடைசி தருணம் வரை டென்சனை மெயிண்ட்டெயின் செய்த விதம் சூப்பர்.

எல்லாத்தையும் சொல்லிவிட்டு இசையை சொல்லாமல் போனால் எப்படி, அதுவும் நம்ம இளையராஜாவின் இசை. படத்திற்கு பொருத்தமான இடத்தில் பொருத்தமான டியுனில் இருக்கிறது. இளையராஜா மட்டும் இல்லாவிட்டால் படம் சுமாரான படமாகவே இருந்திருக்கக் கூடும். அனைத்து பாடல்களும் சூப்பர், சூப்பர், சூப்பரோ சூப்பர்.

இடைவேளைக்கு முன் ஒரு காட்சி வரும் அந்தக் காட்சியில் நீங்கள் யார் பக்கமும் நிற்க முடியாது. இருவர் செய்வதும் சரியாகத்தான் இருப்பது போலவே தோணும். ஜீவா நடுத்தர குடும்பத்து பையன், அதுவரை பொறுப்பில்லாமல் இருந்தவன் தன் குடும்பத்தின் வசதிக்காக நன்றாக படித்து பெரிய வேலைக்கு சென்று குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி விட்டு தன் காதலை தொடரலாம் என்று நினைக்கிறான்.

அதற்காக ஐஐஎம் கல்லூரியில் படிக்க வெளியூர் செல்ல நினைக்கிறான். சமந்தா ஜீவாவை காதலித்து அவருக்காகவே மேற்கொண்டு படிக்காமல் அவருடன் வாழ்வதையே தன் லட்சியம் என வாதிடுகிறாள். இந்த வாக்குவாதம் முழுவதும் எந்த எடிட்டிங்கும் இல்லாமல் 15 நிமிடங்களுக்கு மேல் வருகிறது. சூப்பர்ப் சீன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

நீ தானே என் பொன் வசந்தம் - கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம் தான். பார்த்து மகிழுங்கள்.

கடைசியில் படம் முடிந்து வெளி வந்ததும் நண்பன் அசோக் சொன்னான் "அண்ணா ரொம்ப சாரி, நான் நீதானே என் பொன் வசந்தம் பார்க்கனும்னு நினைச்சேன். உங்கக்கிட்ட சொன்னா திட்டுவீங்க. நீங்க கும்கிக்கு டிக்கெட் எடுத்து வர சொன்னீர்கள். நான் இந்தப்படத்திற்கு டிக்கெட் எடுத்து விட்டு உங்களிடம் பொய் சொன்னேன்" என்று சொன்னான். இந்த மாதிரி பயலுகள நான் என்ன தான் செய்யிறது.


ஆரூர் மூனா

சபலத்தின் உச்சம் அவமானம் - பழசு 2012

சமீபத்துல ஒரு பெரிய உறவினர் திருமணத்திற்காக புதுக்கோட்டை பக்கம் ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். வீட்டின் தலைவர் 70 வயதான பெரியவர். மற்றவர்கள் எல்லோரும் அவரைக் கண்டால் நடுங்குவார்கள்.

அந்த அளவுக்கு வீட்டில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரியவர். யாராவது தவறு செய்தால் அடிவிளாசி விடுவார். வீட்டில் உள்ள மற்ற பெண்கள் கூட அவர் எதிரில் வரத் தயங்குவர்.

அப்படிப்பட்ட வீட்டுக்கு திருமணத்திற்காக மூன்று நாட்கள் சென்று தங்க வேண்டியிருந்தது. வீட்டம்மா அவரை பற்றி எச்சரித்து அங்கே போய் எவன் கூடவாவது சேர்ந்து குடித்தால் மண்டையை உடைத்து விடுவேன், அது மட்டுமல்லாது அந்த பெரியவரிடம் போட்டுக் கொடுத்து விடுவேன் என எச்சரித்து இருந்தார்.

பொதுவா குடிகாரர்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அது எனக்கு கிடையாது. மற்றவர்கள் குடித்தால் அதனை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைப்பர். என்னைப் பற்றிய சுயஅறிமுகமே குடியைப் பற்றித்தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சிலர் அந்த சரக்கை ஏதோ விஷம் குடிப்பது போல் முகத்தை சுளித்துக் கொண்டு குடித்து விட்டு நாற்றம் தாங்காமல் மூக்கை வேறு மூடிக் கொள்வர். நான் அப்படியெல்லாம் கிடையாது. நிதானமாக ரசித்து ருசித்து மடக்கு மடக்காக குடிப்பேன்.

ஆனால் எனக்கு குடியைப் பற்றி பெருமையாக பேச மட்டுமே செய்வேனே தவிர வழக்கமான குடிகாரன் கிடையாது. என்னுடைய பதிவுகளை படித்து பலர் நான் தினமும் ஆப் அடிக்காமல் தூங்க மாட்டேன் போல என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நான் வாரம் ஒரு முறை மட்டுமே அதுவும் நண்பர்களுடன் மட்டுமே குடிப்பேன்.

யாரும் இல்லையென்றால் எனக்கு தனியாக குடிக்கத் தோணாது. இது சில பேருக்கு நம்ப சிரமமாக இருக்கும். குடிப்பது பிடிக்கும். ரசித்து செய்வேன். ஆனால் வழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சில இடங்களில் நாம் சும்மா இருந்தாலும் வேண்டுமென்றே நீ மட்டும் குடித்தால் என்று சொன்னவுடன் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். பிறகென்ன ஆப் அடித்து தான் நிறுத்த வேண்டியிருக்கும்.

அது போலவே என் மனைவியும் என்னை எச்சரித்து இருந்ததால் திருட்டுத்தனமாக குடிக்க வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டது. ஆனால் அந்த சொந்தக்காரர்கள் எனக்கு சற்று பழக்கம் குறைவானவர்கள். என் அப்பாவும் அம்மாவும் சென்றிருக்க வேண்டிய கல்யாணம், என்னை பரம்பரையின் அடுத்த தலைமுறை ஆளாக நிறுத்த வேண்டி அந்த திருமணத்திற்கு என் அப்பா அனுப்பியிருந்தார்.

நம்ம பரம்பரை தான் குடிகார பரம்பரையாச்சே, குலதெய்வத்திற்கே சாராயம் படைக்கிற வம்சமாச்சே அதனால் யாராவது கம்பெனிக்கு தோதானவர்கள் கிடைப்பார்களா என்று அந்த வீட்டை நோட்டம் விட்டதில் அந்த பெரியவரின் ஏச்சுப் பேச்சுக்கு பயந்து அனைவரும் குடிக்காதவர்கள் என்று தெரிய வந்தது. எனக்குள் பயங்கர சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த முயற்சியாக அந்த வீட்டில் வேலைக்கு இருப்பவர்கள், வந்து போகும் வெளியாட்கள் இவர்களிடம் வலியப் போய் பேசி இந்த விஷயத்திற்கு அடி போட்டால் அவர்களோ இந்த விஷயம் அந்த பெரியவருக்கு தெரிந்தால் தொலைத்து விடுவார் என்று ஒதுங்கி விட்டார்கள்.

எப்படியாவது முயற்சித்து கண்டிப்பாக சரக்கடித்து விட வேண்டும் என்று ப்ளான் பண்ண ஆரம்பித்தேன். நாம எந்த விஷயத்துல மொக்கைன்னாலும் இதில் ப்ளான் பண்ணால் தோல்வியை கிடையாது என்ற அளவுக்கு பிரபலமானவர்கள்.

இது போதாதென்று வீட்டம்மா வேறு மணிக்கொருதரம் வந்து நம்மை உற்றுப் பார்த்து விட்டு சென்று கொண்டிருந்தார். நமக்கு ஒரு பழக்கம் உண்டு. சரக்கு அடித்து விட்டால் சும்மாவே உஃப் உஃப் என்று ஊதிக் கொண்டே இருப்பேன். நெருங்கிய ஆட்கள் மட்டும் பார்த்தவுடன் கண்டுபிடித்து விடுவார்கள்.

திட்டம் தயார். ஒரு புல் பாட்டில் சரக்கை இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கலந்து வைத்து எப்படியாவது சிரமப்பட்டு கொண்டு வந்து பெட்டிக்குள் சேர்த்து விட வேண்டும். இரவு உணவை பேருக்கு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு நள்ளிரவில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு பொறுக்க சாத்த வேண்டும்.

ரீசார்ஜ் பண்ண போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு வெளியில் வந்து வாங்கி மிக்ஸ் செய்து பையில் வைத்து உள்ளே பெட்டியில் சேர்த்து விட்டேன். ராத்திரி கொஞ்சமாக சாப்பிட்டு ஏமாத்தி விடலாம் என்று பந்தியில் அமர்ந்தால் நான் அசைவம் தின்பேன் என்று எனக்கு மட்டும் ஸ்பெசலாக உடும்பு அடித்து சமைத்து வைத்திருந்தனர்.

ஆசையை அடக்க முடியாமல் ராத்திரி விஷயத்தை மறந்து விட்டு சாப்பாட்டை வெளுத்து கட்டி விட்டேன். மாட்டை முழுங்குன மலைப்பாம்பு போல உருள ஆரம்பித்தேன். விடியற்காலை வயித்தை கலக்கியது. ஆபீசுக்கு போய் விட்டு வந்து படுத்தால் சரக்கு ஞாபகம் வந்து விட்டது.

விடியற்காலை என்றும் பார்க்காமல் பாட்டிலை எடுத்துக் கொண்டு கொல்லைக்கு வந்து விட்டேன். இரண்டு சிப் தான் காலி செய்திருப்பேன். அதற்குள் விடியற்காலை கொல்லைக்கு சென்று வந்த பெரியவர் என் செய்கையை பார்த்து விட்டார்.

மகனே காலி என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா. இந்த விடியற்காலையில எங்கடா சரக்கு கிடைக்குது. எனக்கும் கொடு என்று சொல்லி வாங்கி பாதி பாட்டிலை கவிழ்த்து விட்டார். ரெண்டு பேரும் சேர்ந்து மொத்த சரக்கையும் காலி செய்து விட்டு கொல்லைப்புறத்தில் ஆட்டம் போட்டதில், மொத்த குடும்பமும் எழுந்து வந்து பார்த்து விட்டது.

இத்தனை நாட்களாக தனியாக அறையில் அளவாக குடித்து விட்டு யாருக்கும் தெரியாமல் தூங்குவார் என்ற அவருக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை மொத்த குடும்பத்திற்கும் முன்னாடி காலி செய்து விட்டேன். வீட்டில் இருந்த பொடிசுகள் எல்லாம் அவரை பார்த்து ஏளனமாக சிரிக்க குடும்பத்தின் முன் மானம் போய் தலை தொங்கி நின்றார்.


பாட்டிலுடன் நான் நிற்பதை பார்த்ததும் என்னை சத்தம் போட்டு விட்டு போயிருந்தால் கெளரவமாக இருந்திருக்கும். ஆனால் கணநேரம் சபலப்பட்டு சலனப்பட எல்லாருக்கும் முன்பாக மானம் போனது தான் மிச்சம்.

இவ்வளவுக்கும் காரணமாக எனக்கு வீட்டம்மாவிடம் இருந்து செம மாத்து கிடைத்ததை இன்னும் நீங்கள் நம்பாமல் இருந்தால் உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான். நம்புங்க எசமான் நம்புங்க இந்த பொம்புளைங்க நெசமா வலிக்கிற மாதிரியே அடிக்கிறாங்க.

ஆரூர் மூனா

நிலை கொள்ளா மனது - பழசு 2012

தலைப்பை பார்த்ததும் ஏதோ ராணி முத்து, கண்மணி போன்ற இதழ்களில் வரும் குடும்ப நாவல் என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. ஏற்கனவே கவிதை எழுதுகிறேன் என்று முயற்சித்து எதைப் பேசினாலும் எதுகை மோனையாகவே வருகிறது. இதில் குடும்ப நாவல் வேறயா என்று நினைக்க வேண்டாம் மக்களே.

சனியன்று திருப்பூர் செல்ல பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது. மெட்ராஸ் பவன் சிவா பேருந்து நிலையத்தில் காத்திருக்க நான் கிளம்ப நேரமாகி விட்டது. குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்ற பதட்டம் கூட ஆரம்பித்தது. வண்டியை வேகப்படுத்தி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பியது. ஏறி அமர்ந்து விட்டேன். அன்று ஆரம்பித்த பதட்டம், இன்று வரை குறையாமல் இருந்து என்னை இது போன்ற தலைப்புகளில் எல்லாம் எழுத வைத்து விட்டது.

ஞாயிறு மட்டும் திருப்பூரில் நண்பர்களுடன் மகிழ்வாக சென்று விதிவிலக்காக அசத்தியது. நண்பர்கள், வீடு சுரேஷ், இரவுவானம் சுரேஷ், சசிமோகன் குமார், நா. மணிவண்ணன் ஆகியோருடன் மாலை மகிழ்வுடனே எங்களுக்கு கடந்தது.

திங்கள் அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். அவரை எங்கும் தனியாக அனுப்புவதில்லை. ஏப்ரலில் பெருங்குடலில் புற்றுநோய்க்கட்டி அகற்றிய பிறகு, சில மாதங்கள் கீமோதெரபி சிகிச்சை கொடுத்த பிறகு அவருக்கு உடலில் பலம் சுத்தமாக குறைந்து விட்டது.

கூட்டுறவுத்துறையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தவர், ஓய்வு பெற்ற பிறகும் கூட சும்மா இருக்கக்கூடாது என்று நினைத்து ஜெராக்ஸ், டைப்பிங் கடை வைத்து நடத்தியவர். இன்று தனியாக எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை.

கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது. இந்த எலும்புக்கிடையில் ஒரு நரம்பு உராய்வதால் கை கால்கள் எந்நேரமும் மரத்து போய் இருக்கின்றன. தனது சட்டையின் பொத்தானை தானே கழற்ற முடியாது, மற்றொருவர் துணையுடன் தான் கழற்ற முடியும்.

இன்று ரயில்வே மருத்துவமனைக்கு சென்று ஆர்த்தோ, நியுரோ மற்றும் பிஸியோதெரபி துறை வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து வந்தோம். அவர்கள் விஹெச்எஸ் மருத்துவமனைக்கு சென்று நியுரோ சர்ஜனை கலந்தாலோசிக்கும்படி ரிப்போர்ட் தந்தார்கள். நாளை அவருக்கு ஊரில் வேலை இருந்ததால் அடுத்த வாரம் தான் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.

இன்று ஊருக்கு திரும்பி சென்றார். பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் சிறுநீர் கழிக்க வேண்டுமென்று கழிப்பறைக்கு சென்று வந்தவர், கை மரத்து போனதால் பேண்ட்டின் ஜிப் எங்கு இருக்கிறது என்று உணர முடியாமல் பேண்ட்டில் கை வைத்து நீண்ட நேரம் ஜிப் போட முயற்சித்து கொண்டு இருந்தார். அவருக்கு ஜிப் தொடும் உணர்வே இல்லை.

இதற்கு போய் மகனிடம் உதவி கேட்க வேண்டுமா என்ற கூச்சம் இருந்ததனால் அவராகவே பத்து நிமிடத்திற்கு மேலாக முயற்சித்தும் முடியவில்லை. எனக்கு போய் கேட்க தயக்கமாக இருந்தது. பிறகு ஒருவழியாக போட்டு விட்டு பேருந்தில் ஏறினார். எனக்கு வீட்டுக்கு வரும் வழியெங்கும் கலக்கமாகவே இருந்தது.

கண்டிப்பாக இதனை சரிசெய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குள் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.

இப்படியே பதிவு நெஞ்ச நக்குற மாதிரி போயிக்கிட்டு இருந்தா எனக்கே கடுப்பாகுது. அதனால் விஷயத்தை இத்துடன் விடுங்க. இத உங்களுடன் பகிர்ந்து கொண்டால் சற்று லேசாகும் என்று தோன்றியது. செய்து விட்டேன்.

ஆனால் இதற்கு எவனாவது வந்து செண்ட்டிமெண்ட்டா பின்னூட்டம் போட்டு நெஞ்ச நக்க பார்த்தா உடனடியாக நான் எழுதிக் கொண்டு இருக்கும் மரபுக்கவிதையின் திருத்தப்படாத பதிப்பை தங்களுக்கு மின்னஞ்சல் செய்து விடுவேன் என்று எச்சரிக்கிறேன்.

ஏற்கனவே புதுக்கவிதை எழுதி கவிஞனாகிவிட்ட நான் அடுத்த முயற்சியாக மரபுகவிஞனாகப் போகிறேன். பனைஓலையும் எழுத்தாணியும் கூட வாங்கி விட்டேன். இனி எழுத வேண்டியது தான்.

சாம்பிள் வேணுமா.

யாதுமார்க்கி யறிவில்லா செய்துணர்ந்து
மாமாங்கமாகி - சங்கடகரன் வீணென்று
செய்துணர்வான் செந்திலாண்டவன்

எப்பூடி

விரைவில் மரபுக்கவிதை வெளிவரப்போகிறது. அதற்கு விளக்கம் கொடுக்கும் அறிவாளிக்கு ஆலயமணி படத்தில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்புடப்பா கூரியர் அனுப்பி வைக்கப்படும். விதிவிலக்காக பட்டிக்காட்டானுக்கு மட்டும் ஊசிப் போன ஒயின் தரப்படும் என்பதை கம்பெனி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆரூர் மூனா

ஒரு கவிஞனின் அரங்கேற்றம் - பழசு 2012

நாலு வரி சேர்ந்தா மாதிரி எழுதிபுட்டு நடுவுல ரெண்டு எண்டர் தட்டி கவிதைங்கிறான். நாமளும் எத்தனை நாள் தான் வேடிக்கை பாக்குறது. அதான் நானும் தொபுக்கடின்னு களத்துல குதிச்சிட்டேன். இந்த கவிதை தொகுப்பை படிங்க, படிங்க கொமட்டிக்கிட்டு வர்ற வரைக்கும் படிங்க, புரியலைன்னா ஒரு பின்னூட்டம் அனுப்புங்க. நான் பின் நவீனத்துவ கவிஞனாகிட்டேன் என்பதை புரிஞ்சிக்கிறேன்.

தனிமையில் எப்போதும் பேசுகிறேன் நிலவோடு
என் தவம் அறிந்து இறங்கி வா என்னோடு
தனிமையில் செலவழிக்க நேரமில்லை உன்னோடு
உன்னிடம் கவிதை என்ற பெயரில்
மொக்கை போடும் நான் ஒரு கறுப்பாடு

--------------------------------------------------


மனதிற்கினிய பாடல் கேட்கும் போதெல்லாம்
உன் நினைவே என்னை தாலாட்டுகிறது
மறந்து விட்டு பணியில் கவனம் செலுத்த நினைக்கிறேன்
பேருந்தில் பாடல் வந்து தாலாட்ட கவனம் சிதறி
பேருந்து நிறுத்தம் கடந்து போகின்றேன்
பாடல் முடிந்த பின்னே உன்னை நினைத்து சிரித்து
இறங்கி வந்த வழியே நடக்கின்றேன்

-------------------------------------------------------

அன்பே நேசிக்க தகுதி வேணுமா
உன்னை நேசிக்க அழகன் எனும் தகுதி வேணுமா
உன் அருகில் அமர்ந்ததனால்
அழகாகி விட்டதாக உணர்கிறேன்
தெம்பான இளமையும் சேர்ந்திருக்கிறது
உன்னால் கிடைத்த ரெண்டையும் கொண்டு
மன்மதன் அம்பை உன் மீதே வீசுகிறேன்

-------------------------------------------------------

உரசத்தான் நினைக்கிறேன்
நினைத்துன்னை தொடர்கிறேன்
சற்றே தூரம் சென்று
விட்டு விலகி விலகி உன்னை
என் கண்முன்னே காணவில்லையே
அன்பே இன்றென்ன அமாவாசையா

---------------------------------------------------------

ஒன்று சேரும் நாளது வரும் என்று
இந்த கருமேகம் காத்திருக்கிறது
நிலாவின் தயக்கம் தாண்டி
என்னை அடையும் நாளோ பெளர்ணமி

-----------------------------------------------------------

உன்னை நிலவென்று நினைத்திருந்தேன்
சூரியனாய் சுள்ளென்று சுடுகிறாயே,
தெர்மிகூல் வாங்கி தடவிக்கிட்டேன்
வெயிலாவது வியர்வையாவது
சுட்டுப்பார் பொசுங்கிப் போவாய்

----------------------------------------------------------

நெடுந்தூரம் சென்றாலும் என் நினைவெல்லாம் நீதான்
பார்க்க முடியாவிட்டாலும் கண்ணுக்குள் உன் முகம் தான்
உன்னிடம் நேரில் பேசியது கொஞ்ச நேரம் தான்
இன்றும் என் காதுகளில் உன் ஒலிதான்
என்ன மாயம் செய்தாய் என் மனதை கலைத்தாய்

----------------------------------------------------------

உங்களது பொன்னாடைகளை வைத்து தான் இன்னும் மெகா கவிஞனாகி உங்களை வதைக்கலாமா, இல்லை போதும்டா சாமி என்று விலகலாமா என்று முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன்

ஆரூர் மூனா

திருவாரூரில் பறந்த நீர்ப்பறவை - பழசு 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் முடிந்து நேரே பழைய பேருந்து நிலையம் உள்ளே இருந்த பாருக்கு சென்றேன். பயலுவோ நல்ல மப்புல இருந்தானுங்க. இது மாதிரி சமயங்களில் நாம் படக்கென போதையாகி விட வேண்டும். இல்லையென்றால் நாம சிக்கிக்கிட்ட மாதிரி ஆகிடுவோம்.

பேசி சலம்பிக்கிட்டே இருந்தா மணி 09.30 ஆகிடுச்சி. அப்ப ஒரு நண்பன் நாம எல்லாம் படத்துக்கு போகலாம் என்று அடுத்த படி எடுத்து வைத்தான். ஏற்கனவே நான் படம் பாத்துட்டு தான் வந்தேன் என்று சொன்னால் ஏன் நான் கூப்பிட்டா வர மாட்டியா என்று அடுத்தவன் சீறிக் கிளம்ப சரி என்று முடிவாகி நீர்ப்பறவைக்கு செல்வது உறுதியானது.

உடனே கிளம்பி பார்வதி பாஸ்ட் புட் சென்று அவனவன் புடிச்சத சாப்பிட்டு விட்டு தியேட்டருக்கு கிளம்பினோம். கூடுதல் சரக்கு, புகைபோக்கி, பாக்கு போன்ற இத்யாதிகளை அவசர அவசரமாக ஷாப்பிங் முடித்து விட்டு திரையரங்கிற்குள் போனால் படத்தை போட்டிருந்தான்.

நந்திதா தாஸ் சோகமாக திரையை பார்த்து பேசிக் கொண்டு இருந்தார். இருக்கையில் அமர்ந்து ரெண்டு ரவுண்டு விட்டு படத்தை உற்று நோக்கினால் நம்ம ஹீரோ நமக்கு போட்டியாக சரக்கடித்து கொண்டு இருந்தார்.

படத்தின் ஸ்பெசலாக நான் கவனித்தது நேட்டிவிட்டி குறையாமல் எடுத்தது தான். நான் தூத்துக்குடி பக்கம் நான் முன்னர் பணிபுரிந்த நிறுவனம் 12 உயர் மட்ட நீர் நிலை தேக்கத் தொட்டி கட்டிய போது அதன் நிர்வாக அதிகாரியாக இருந்தவன்.

அந்த பகுதி மீனவ மக்களின் பழக்க வழக்கம், பேச்சு, சாப்பாடு வகைகள், சரக்கடிக்கும் முறை, மீன் பிடிக்க செல்லும் முறை, காதல்கள், திருட்டு சாராயம் விற்கும் இடம் என அனைத்தும் அறிந்து ஒரு வருடம் அவர்களுடனே வாழ்ந்தவன்.

எனக்கு ஒரு மிகப்பெரிய வீக்னஸ் உண்டு. யார் வீட்டிலாவது விருந்துக்கு அழைத்தால் கெளரவத்திற்கு கூட மறுப்பு சொல்லாமல் உக்கார்ந்து ஒரு கட்டு கட்டி விட்டு தான் நிமிர்வேன். அது போல் தூத்துக்குடி பகுதி மக்களின் எல்லா வகை சாப்பாடு, சரக்குக்கான சைட்டிஷ் என எல்லாத்தையும் அறிந்தவன்.
அந்த விஷயங்கள் அப்படியே படத்தில் அச்சு பிசகாமல் காட்டியிருந்தது என்னை படத்துடன் இயல்பாக ஒன்ற செய்தது. அந்த சுடுகாட்டில் சாராயம் விற்கும் இடத்தில் போதையை போடடு சலம்புவது, அங்கேயே தூங்குவது என எல்லாம் நமக்கு முன்னர் நடந்தது அப்படியே திரையில் பார்க்கும் போது புல்லரிக்க ஆரம்பித்தது. சொறிந்து கொண்டே படத்தை உற்று நோக்க ஆரம்பித்தேன்.

அது போல் அந்த ஹீரோயினின் வடிவமைப்பு. எப்படி வம்சம் படத்தில் எங்கள் ஊர்பக்கத்து பெண்ணாக இயல்பாக நடித்து என் மனதை அள்ளினாரோ அதே போல் கடற்கரை ஊதக்காத்தில் சற்று கருத்திருக்கும் மீனவ கிராமத்து பெண் போல இயல்பாக வந்து அள்ளுகிறார்.

வம்சம் படத்தில் ஒரு காட்சி வரும் ஜெயப்பிரகாஷை செருப்பால் அடித்து விட்டு வீட்டுக்கு கோபமும் வேகமுமாக நடந்து வருவார். அப்போது ரப்பர் செருப்பு போட்டுக் கொண்டு பாவாடையை சற்று தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கையில் பக்கெட்டுடன் வரும் போது என் மாமன் மகளைப் போலவே இருக்கும்.

அவரும் அப்படித்தான் வயல் வேலைகளை முடித்து விட்டு வருவார். சாதாரணமாக 75 கிலோ அரிசி மூட்டையை தூக்கி இடம் மாற்றுவார். நமக்கே பயமாக இருக்கும். என்னை விட 2 வயது பெரியவளாக இருந்ததால் நான் தப்பித்தேன். இல்லையென்றால் எனக்கு கட்டி வைத்திருப்பார்கள். பிறகு ஏதாவது சண்டை வந்தால் என்னையும் அலேக்காக தூக்கி பரணில் வைத்து மிரட்டியிருப்பார்.

அப்பாடா நீர்ப்பறவையை பற்றி எதுவும் சொல்லாமல் நீர்ப்பறவை என்று பெயர் போட்டுக் கொள்ள இரண்டு சம்பவங்களை பற்றி விவரித்து விட்டேன். பிறகென்ன படம் பார்த்து சில நாட்கள் கழித்து விமர்சனம் எழுத வேண்டுமென்றால் படத்தின் காட்சிகள் நினைவுக்கே வர மாட்டேன் என்கிறது. அதான் மேம்போக்காக கடந்து விட்டேன்.

நீர்ப்பறவை நேட்டிவிட்டியுடன் இணைந்த தமிழ் திரைப்படம். பார்த்து உணர்ச்சி வசப்பட வைக்கும் திரைப்படம். நேரம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா

திருவாரூரும் நடுவுல காணாம போன கொஞ்சம் பக்கமும் - பழசு 2012

கடந்த சில நாட்களாக வேலையும் அதிகமாகி ஊருக்கு செல்வதும் அதிகமாகி விட்டதனால் கண்டினியுட்டியாக எழுத முடியவில்லை. இணையத்திலும் புழங்க முடியவில்லை. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப பழைய பதிவுகளை எடுத்து விட்டால் தெரியாது என்று புத்திசாலித்தனமாக யோசித்ததில் நிறைய நண்பர்களிடம் திட்டுடன் பல்பும் வாங்கியது தான் மிச்சம். சரக்கு தீரத்தொடங்கியிருப்பதை கண்டுபிடித்த நண்பர்களுக்கு நன்றி.

சென்ற வார இறுதியில் திருச்சி, வயலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சித்தப்பா மகன் திருமணத்திற்காக சென்று விட்டு விட்டு வார இறுதியை திருவாரூரில் செலவிட்டு வந்தேன். கோயில்களில் நடைபெறும் திருமண சடங்குகளில் வயலூர் சற்று வித்தியாசமானதாக தெரிகிறது.

வடபழனி போன்ற கோயில்களில் திருமணம் தனியாக ஒரு புரோகிதர் வைத்து மண்டபத்தில் நடைபெறும். ஆனால் வயலூர் முருகன் கோயிலில் புரோகிதர் இல்லாமல் நேரடியாக மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் சன்னதிக்கு சென்றதும் அங்குள்ள அர்ச்சகரே மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். உடனே வெளியில் வந்து விட வேண்டும்.
இதற்காகவே கோயிலைச் சுற்றி திருமண மண்டபங்கள் மட்டுமே அதிகம் இருக்கின்றன. காலையில் திருமணத்திற்கு வந்தவர்களை கோயிலின் எதிரில் இருந்த மண்டபத்தில் வரவேற்று காலை சிற்றுண்டிக்கு பிறகு முகூர்த்த நேரத்தில் பத்து உறவினர்களும் மணமக்களும் கோயிலுக்குள் சென்று பத்து நிமிடத்தில் தாலி கட்டி வந்து விட்டனர்.

அதன் பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள், உறவினர்களுடன் புகைப்படம் எடுத்தல், மதிய உணவு எல்லாம் மண்டபத்தில் நடைபெற்றது. எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது. ஏனெனில் வடபழனி கோயிலில் நடைபெற்ற நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். கடைசி வரை அவர்கள் திருமணம் நடைபெறும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி போய் வெளிவந்தேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏகப்பட்ட வித்தியாசங்கள். சில ரசிக்கத்தக்கதாகவும் இருந்தன.
திருமணம் முடிந்து திருவாரூருக்கு திரும்பியதும் சினிமா பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நடேஷ் திரையரங்கத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திற்கு நண்பனுடன் சென்றேன். திரையரங்கில் மொத்தமே 12 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

இது மாதிரி வித்தியாசமான சூழலில் படம் பார்க்கும் போது சில சிரமங்கள் இருக்கும். என்னவெனில் திரையரங்கில் உடன் பார்ப்பவர்களின் ரியாக்ஷனை பார்த்தே படத்தின் ரிசல்ட்டை கணித்து விட முடியும். பத்து பேர் அமர்ந்திருக்கும் சூழலில் என்னத்தை ரியாக்சன் பார்ப்பது, நாமே கணித்து தான் முடிவெடுக்க வேண்டும்.

படத்தின் கதை நமக்கு வேண்டாம். படம் எப்படியிருந்தது என்பதை மட்டும் பார்த்து விடுவோம். படத்தின் பலமே படத்தில் வைக்கும் காட்சிகளுடன் இயக்குனர் எப்படி ஒன்றியிருந்தார் என்பதில் அடங்கி இருக்கிறது. அது இந்த படத்தில் கிரிக்கெட் காட்சியில் அப்படியே தெரிகிறது.

நான் கூட இது போல் நான்கு பேருடன் ஆளில்லாத மைதானத்தில் மொட்டை வெயிலில் விளையாடி இருக்கிறேன். அது போன்ற சமயங்களில் எப்படி விளையாட்டு இருக்குமோ அப்படியே இயல்பு மாறாமல் எடுத்து இருக்கின்றனர். அதனால் அந்த காட்சியில் இருந்தே நான் படத்துடன் ஒன்றி விட்டேன்.

மருத்துவமனையில் பஜ்ஜிக்கு பக்ஸ் இந்த வியாதி வந்தவர்களுக்கு நடக்கப் போவதை விவரிக்கும் காட்சியில் என்னை மறந்து சிரித்துக் கொண்டு இருந்தேன். பக்ஸ் விவரிக்க பஜ்ஜி அவஸ்தையுடன் சரஸ்ஸை எதிர்பார்த்து எட்டிப் பார்க்கும் போது மொக்க நண்பர்களுடன் இது போல் தனிமையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்ட என் அனுபவம் போலவே இருந்தது.

மண்டப காட்சிகளும் நண்பர்கள் மட்டும் ஒருவருக்கு ஒருவர் திருட்டு முழி முழித்து பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சிகளும் சிரிப்பை வரவழைத்தன. சரஸ் என்ன சொன்னாலும் ஹீரோ கேட்பதை பார்த்து பஜ்ஜியும் அது போல் செய்ய முற்பட்டு திட்டு வாங்கும் காட்சியில் சத்தமாகவே சிரித்தேன்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் தவற விட்டு விட்டேன். மற்ற நண்பர்கள் பாரில் உக்கார்ந்துக் கொண்டு போன் அடித்துக் கொண்டே இருந்ததால் ஹீரோவுக்கு நினைவு திரும்பும் காட்சியுடன் திரையரங்கை விட்டு வெளியேறி விட்டேன்.

மொத்தத்தில் படம் நல்லாயிருக்கு, இல்லை என்ற விமர்சனத்தை தாண்டி எனக்கு பிடித்திருக்கிறது. என் அலைவரிசையில் ஒத்துப் போனவர்களுக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.



ஆரூர் மூனா

தமருகம் - என்னை புடிச்ச கெரகம் - பழசு 2012

வெள்ளிக்கிழமையானால் படம் பார்த்து பழகிப் போச்சு. இன்னைக்கு படம் பார்த்தாக வேண்டும் என கை அரித்தது. சொல்லிக்கிற மாதிரி ஒரு படமும் இல்லை. சரி மாற்று மொழிக்கு தாவலாம் என்று முடிவெடுத்து தேடினால் தமருகம் என்ற படம் ரிலீஸ் என்று போட்டிருந்தது.

போஸ்டரைப் பார்த்தால் நூறு அகோரிகள் நாகார்ஜூனாவையும் அனுஷ்காவையும் வெறி கொண்டு துரத்தி கொண்டு இருந்தார்கள். செம வேட்டை தான் முடிவு செய்து திரையரங்கிற்கு போனால் சிரித்து சிரித்து வாய் வலித்து ரசித்து பார்த்தேன். அப்புறம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் போனால் சிவன் கண்ணை குத்தி விடுவார்.

சத்தியமாக இந்தப்படம் தமிழுக்கு வரப் போவதில்லை என்பதால் முழு கதையையும் உங்களுக்கு சொல்லுகிறேன்.

ரவிசங்கர் ஒரு அசுரன். அதாவது பழைய காலத்தில் தேவர்கள் அசுரர்கள் என்று இருப்பார்களே அந்த அசுரன். இத்தனை காலங்கள் கழித்து அசுர குலத்தில் அவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார். ஆந்திராவில் தெலுகு பேசிக் கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் இருக்கிறான்.

பிற்காலத்தில் அந்த சிறுவன் தான் வளர்ந்து அவரை கொல்லப் போகிறான் என்று தன் குருவினால் அறியும் அசுரன் முரட்டு விலங்கு உருவம் எடுத்து அவர் குடும்பத்தில் அனைவரையும் கொல்லுகிறது. சிறுவனை கடுமையான ஆழம் இருக்கும் ஆற்றுக்குள் தள்ள அந்த ஆற்றின் அடிப்பகுதியில் நெடுநாட்களாக தவம் இருக்கும் ஒரு முனிவரின் கையில் விழுகிறான் அந்த சிறுவன்.

சிறுவனது தங்கைக்கு அடிபட்டு உணர்ச்சிகள் தலைக்கு கீழ் இல்லாமல் இருக்கிறது. சிவன் தான் தன் குடும்பம் இறந்து போனதற்கு காரணம் என்று நினைத்து சிவனே தனக்கு முதல் எதிரி என்று அறிவித்து அந்த காட்டுக்குள் இருக்கும் சிவனின் சிலை மீது தனது ருத்திராட்ச மாலையை கழற்றி வீசுகிறான்.

எல்லாரையும் அழித்து விட்டதாக குருவிடம் ரவிசங்கர் சொல்ல உனக்கு உலகம் அடிமையாக வேண்டுமென்றால் ஐந்து கிரகம் ஒன்று சேர்ந்த நேரத்தில் சிவகோத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வேண்டி சிவனை நோக்கி தவம் இருக்க சொல்லுகிறான். ரவிசங்கரும் தவம் இருக்க தொடங்குகிறார்.
பெயர் போட்டு முடித்து மெயின் லைனுக்கு இருபது நிமிடங்களுக்கு பிறகு வருகிறார்கள். ஹீரோயின் அறிமுகம். கதைப்படி அனுஷ்கா ஒரு டாக்டர். சிவன் கோயில் தேரை இழுக்க மொத்த ஊரும் முயற்சிக்க தேர் நிலையடியை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன் என்றகிறது. அனுஷ்கா வந்து இழுத்ததும் தேர் நகர துவங்குகிறது. தியேட்டரில் இருந்த 20 பேரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

அடுத்தது ஹீரோ அறிமுகம். அந்த கோயிலில் இருந்து 50 லட்சம் பணத்தை நால்வர் கொண்ட குழு வந்து கொள்ளையடித்து விட்டு செல்கிறது. போலீஸ் துரத்த தொடங்க இவர்கள் உடனடியாக ஒரு கண்டெயினர் நிரம்பியிருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள். அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

நம்மை யார் காப்பாற்றுவார் என்று ஒருவன் கேட்க கொள்ளைக்கூட்டத் தலைவன் நம்மை காப்பாற்ற ஒருவன் இருக்கிறான். அவன் வில்லனுக்கு எல்லாம் வில்லன், இப்ப வருவான் என்று சொல்ல ஹீரோ அந்த இடத்திற்கு சரியாக வருகிறார். அவர்களை தனது காரில் ஏற்றி வீலிங் செய்து காரை ஓட்டுகிறார். காரின் முன் சக்கரத்தை தூக்கி காரை எடுக்கிறார். என்ன ஒரு ஹீரோயிசம்.
ஒரு வார்த்தை கூட தெலுகு தெரியாத என் நண்பன் ஓருவன் என்னுடன் படம் பார்க்க வந்திருந்தான். இந்த காட்சியிலேயே அவனுக்கு காதில் ரத்தம் வந்து விட்டது.

20 வருடம் தவமிருந்து சிவனிடமிருந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்குகிறான் அசுரன். கிரகணம் அன்று கோயிலுக்குள் குளித்துக் கொண்டிருக்கும் அனுஷ்காவை வெறி கொண்டு பார்க்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள அடுத்த கிரகணம் வரை காத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஹீரோ ஒருநாள் குடித்து விட்டு சிவன் கோயிலி்ல் வந்து சண்டையிட்டு செல்ல சிவன் அவனை காப்பாற்ற பிரகாஷ்ராஜ் வேடம் பூண்டு வருகிறார். குடித்து விட்டு தண்டவாளத்தில் கிடக்கும் ஹீரோவை ரயிலில் அடிபடாமல் காப்பாற்றுகிறார். என் நண்பன் என்னை முறைக்க ஆரம்பித்தான்.

சிவன் ஹீரோவுக்கு ப்ரெண்ட்ஷிப் டேவுக்காக பரிசு அளிக்கிறார். ஹீரோயினும் வந்து நட்பு கயிறு கட்டி விடுகிறார். ஹீரோவுக்கு காதல் பூத்து விடுகிறது. ஒரு பாட்டு அட்டகாசமான டிஆர் டைப் செட்டில் வருகிறது.

ரொம்ப லெங்த்தா போகுதா. சரி சரி டக்குனு முடிச்சிக்கிறேன். வில்லன் அனுஷ்காவை கைப்பிடிக்க கணேஷ்வெங்கட்ராமின் உருவில் வருகிறார். சிவனை நாகார்ஜூனாவிடம் இருந்து சதி செய்து பிரிக்கிறார். அப்பாவி சிவனும் ஒன்னும் செய்யாமல் ஹீரோவை அம்போவென விட்டு செல்கிறார்.

துணையில்லாத நாகார்ஜூனா எப்படி அசுரனிடம் இருந்து அனுஷ்காவை மீட்டு டூயட் பாடுகிறார் என்பதே மீதிக் கதை.

என் நண்பன் படம் முடிந்ததும் என்ன செய்தான் என்று சொன்னால் அது என் கெளரவத்தை பாதிக்கும் என்று நான் நினைப்பதால் அதனை சென்சார் செய்து கொள்கிறேன். ஆந்திராவில் படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் இந்தப்படம்.

அவனவன் ஹாலிவுட் படங்களை பார்த்து விட்டு இன்ஸ்பிரேசன் என்ற பெயரில் காப்பியடித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இப்படியொரு படம் தெலுகு சினிமாவை இன்னும் சில படிகள் கீழிறக்கவே செய்யும்.

படத்தில் பிரம்மானந்தமும் அவரது கூட்டணியும் செய்திருப்பது எல்லாம் மொக்கை காமெடி.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் வில்லன் நாகார்ஜூனாவை தூக்கி அடிக்க வானத்தின் மேல் பிஎஸ்எல்வி ராக்கெட்டைப் போல் போய்க் கொண்டே இருக்கிறார். அப்படியே போனவர் கைலாசத்துக்கும் போய் விட அங்கு சிவனை தரிசனம் செய்து கீழிறங்க எரிபொருளை நிரப்பிக் கொண்டு புது தெம்புடன் கீழே வந்து வில்லனை துவம்சம் செய்கிறார்.

அப்படியும் வில்லன் புது ஆயுதத்தை கையில் எடுக்க கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஹீரோவுக்கு சிவன் மேலிருந்து தன்னுடைய சூலாயுதத்தை கொடுக்கிறார். அதனை கொண்டு வில்லனை கொன்று அசுர குலத்தை முற்றிலும் அழித்து 2012ல் உலகத்தை அழிக்க இருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டு உடை மாற்றிக் கொண்டு அனுஷ்காவை போட்டு பொரட்டி எடுக்கிறார். சத்தியமாக நம்புங்கள் மேலே சொன்ன க்ளைமாக்ஸ் அப்படியே படத்தில் இருந்தது.
 
முதல் பாட்டுக்கு வந்து சார்மி செம கெட்ட குத்தாட்டம் போட்டிருக்கிறார். தக்காளி நல்லா பெசஞ்சி வுட்டுருக்கானுங்க போல. கொழ கொழனு இருக்கிறார். அதுவும் பின்புறத்தை மட்டும் ஆட்டிக் கொண்டு ஆடும் அந்த ஆட்டம் இருக்கிறதே. இந்த கொடுமை படத்தை அந்த பாட்டுக்காகவும் சார்மியின் ஆட்டத்திற்காகவும் பார்க்கலாம்.

அனுஷ்கா மட்டும் இல்லையென்றால் ஒரு பயலும் தியேட்டருக்குள்ளேயே இருந்திருக்க மாட்டான். இன்னும் சொல்லாம் தான் ஆனால் இதுக்கே ஆஃப் அடிக்க வேண்டியிருக்கு இன்னும் படத்தினை ரீவைண்ட் செய்து மூளையை குழப்பினால் கூட ஒரு குவார்ட்டரை அடிக்கக் கூடிய ஆபத்தும் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆரூர் மூனா

துப்பாக்கி - பழசு 2012

இந்த தீபாவளி வித்தியாசமாகத்தான் இருந்தது. இதுவரை எந்த தீபாவளியன்றும் காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் வெளியில் வந்ததில்லை. இந்த ஆண்டு தான் இந்தப்படத்தை பார்ப்பதற்காக காலை மூணரை மணிக்கு எழுந்து பல்துலக்கி முகத்தை கழுவி அரக்க பரக்க கிளம்பி தியேட்டருக்கு சென்றால் என்னை விட மோசமான நிலையில் பல பேர் இருந்தனர். கும்பலோடு கோயிந்தா போட்டு திரையரங்கிற்குள் நுழைந்தேன்.

கடந்த சில மாதங்களாக வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து நொந்து போய் இருந்த காரணத்தால் இந்த படமாவது சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். வேண்டுதல் நிறைவேறியதா என்பதை விமர்சனத்தில் பாருங்கள்.

விஜய்(ஜெகதீஷ்) மிலிட்டரியில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட ஆள் விஜய்யிடம் சிக்குகிறான்.

அவனை தனியறையில் வைத்து விசாரணை செய்யும் போது இரண்டு நாட்களில் மும்பையில் 12 இடங்களில் குண்டுவெடிக்கப்போவதை அறிகிறார். எந்த விதமான துப்புகளும், குறிப்புகளும் கிடைக்காமல் இருக்கும் போது தனது புத்திசாலித்தனத்தால் அவனை தப்ப விட்டு தன் மிலிட்டரி டீமுடன் பின்தொடர்ந்து சென்று 12 இடத்திலும் குண்டுவைக்க சென்ற மனிதவெடிகுண்டுகளை ஒரே சமயத்தில் சுட்டுக் கொல்கிறார்.
இதனை அறிந்த வில்லன் மும்பைக்கு வந்து விஜய் பற்றிய விவரங்களை கண்டறிந்து டார்கெட் செய்கிறார். க்ளைமாக்ஸில் வில்லனை சுட்டுக் கொன்று விட்டு மீண்டும் மிலிட்டரிக்கு வேலைக்கு செல்கிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

ஒரு படம் அதுவும் தீபாவளிக்கு வரும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். பக்கா எண்டர்டெய்னர் மூவி. ஒரு இடத்தில் கூட தொய்வு விழவில்லை. படம் துவங்கி அரைமணிநேரத்திற்குள் நாம் படத்தினுடன் ஒன்றி விடுவோம். அதன் பிறகு படம் முடிந்ததும் தான் மீள்கிறோம்.
மாஸ் எண்டர்டெய்னர் இப்படித்தான் இருக்க வேண்டும். அதுவும் சமீப காலங்களில் சகுனி, தாண்டவம், மாற்றான் போன்ற படங்களை முதல் நாள் பார்த்து நொந்து போன எனக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது. இது விஜய் வழக்கமான படமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் டாகுடர் நடித்துள்ளார்.

விஜய் படத்தில் அழகாக இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உதவியுடன் ஜம்மென்று வருகிறார். இயல்பாக நடிக்கிறார். நடனம் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன. குறுந்தாடி பக்காவாக பொருந்துகிறது. இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.

தமிழ் சினிமாவின் இலக்கணம் மாறாத லூசுப் பெண் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால். அழகாக இருக்கிறார். குத்து சண்டை வீராங்கனையாம். விஜய்யின் மீதுள்ள கோவத்தில் ஒரே குத்தில் எதிரியை வீழத்தி நாக்அவுட் செய்கிறார். விஜய்யை காதலிக்க வீட்டு பால்கனி வழியாக ஏறி வீட்டுக்குள் குதிக்கிறார். இதனை மீறி இன்னும் சொல்லலாம் தான். நம்ம பதிவுலகத்திலேயே அதிகமான காஜல் ரசிகர்கள் இருக்கிறார். அவர்கள் வர்ணித்துக் கொள்வார்கள்.

சத்யன் விஜய் நண்பராக மும்பையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறார். விஜய் நடத்தும் ஆபரேசனில் உதவுகிறார். முதலில் ராணுவத்தை விட போலீசே புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்னும் அவர் படத்தின் முடிவில் ராணுவம் தான் உயர்ந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

ஜெயராம் சிறு கேரக்டரில் படத்தில் கதையின் ஓட்டத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத கதாபாத்திரத்தில் வருகிறார். இருக்கிறார் செல்கிறார். அவ்வளவே. படத்தில் வில்லன் பாத்திரம் அமைதியாக வந்து கடைசியில் விஜய்யை இரண்டு அடி அடித்து பிறகு அடிவாங்கி செத்துப் போகிறார்.

அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல, விஜய்க்கு இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும். ஏற்கனவே பத்திரிக்கைகளில் படித்தும் நண்பர்கள் மூலம் சில விஷயங்கள் படத்தை பற்றி கேள்விப்பட்டும் எதிர்ப்பார்ப்பை சற்று குறைவாக வைத்துக் கொண்டே சென்றேன். அதனை மீறி அசத்தி ஜெயித்து விட்டார்கள்.

படத்தில் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் தினத்தன்று ஒரு வில்லனின் கையாளை தப்ப விட்டு அவனை தன் 12 படை வீரர்களுடன் பின் தொடர்ந்து சென்று அவர்கள் பிரிந்து செல்லும் போது விஜய் டீமும் பிரிந்து சென்று ஒரே நேரத்தில் 12 பேரையும் சுட்டுக் கொல்லும் காட்சி பெரியதாக பேசப்படும்.

அது போல 5 வீரர்களின் பெண் உறவினர்களை கடத்தி சென்று விஜய்யை கண்டுபிடிக்க வில்லன் முயற்சி செய்யும் திட்டத்தில் புத்திசாலித்தனமாக தன் தங்கையை நுழைத்து தன் வீட்டு நாய் உதவியுடன் கண்டுபிடிக்கும் காட்சியும் அசத்தலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட வேண்டும். காலையில் 4 மணிக்கு காட்சிக்கு செல்லும் போது வெளியில் இருந்த கட்அவுட், பேனர் எதையும் கவனிக்காமல் அவசர அவசரமாக பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே சென்று விட்டேன். படம் முடிந்து திருப்தியான மனநிலையில் வெளியே வந்தால் பயங்கர கூட்டம் நின்று கொண்டிருந்தது அடுத்த காட்சிக்காக.

அதில் ஒரு புத்திசாலி ரசிகன் அங்கு இருந்த ஒரு சிறு கட்அவுட்டுக்கு ஆயிரம் வாலா வெடியை மாலையாக போட்டு பற்ற வைத்து விட்டான். தியேட்டர்காரர்கள் வந்து நெருப்பை அணைத்து விட்டு அவனை துரத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்திசாலி ரசிகனின் செயலை நினைத்து வரும் வழியெல்லாம் சிரித்துக் கொண்டே வந்தேன். இவர்களை நம்பி கட்சியை ஆரம்பித்தால் பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம்.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. இருந்தாலும் நல்ல மாஸ் எண்டர்டெயினர் படத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லை. படத்திற்கு பெண்களின் ஆதரவும் இருக்கிறது. இன்று எங்கள் தெருவில் உள்ள முக்கால்வாசி குடும்பத்தினர்கள் இன்று படத்திற்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.



ஆரூர் மூனா

மனம் கவர்ந்த தீபாவளி - பழசு 2012

சிறுவயதில் இருந்தே தீபாவளி என்றால் ஒரு சந்தோஷம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. தீபாவளிக்கான முதல் சந்தோஷம் எங்கள் வீட்டு பலகாரம். என் அம்மா 20க்கும் மேற்பட்ட பலகாரங்களை செய்வார். சாப்பிட்டு மகிழ்வதே முதல் காரியமாக இருந்தது.

தீபாவளியன்று விடியற்காலை எண்ணெய் தேய்ப்பது நாங்கள் இருந்த வீட்டுக்கும் வீட்டு ஓனர் வீட்டுக்கும் ஒரே கொல்லை தான். அவர்கள் வீட்டில் ஆட்கள் அதிகம் இருப்பார்கள். விடியற்காலையில் அப்பா எழுப்பி விடுவார். புலம்பிக் கொண்டே எழுந்திரிப்பேன். எண்ணெய் தேய்த்ததும் கொல்லையில் வெந்நீர் போடும் அடுப்பின் அருகில் அமர்ந்து கொள்வேன்.

பக்கத்து வீட்டு ஆட்களும் கொல்லையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் பேசி கலாய்த்துக் கொண்டு அடுப்பில் இருக்கும் நீர் சுட்டதும் குளியல். அதன் பிறகு அப்பா பூஜையறையிலிருந்து எடுத்து கொடுக்கும் புதுத்துணிகளை போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விடுவேன்.

அடுத்ததாக பட்டாசுகள். என் அப்பா சிறுவயதில் இருநூறு ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்குவார். அதில் எனக்கென பிரிக்கப்பட்ட பங்கை எடுத்து வெயிலில் காயவைப்பது, இரண்டு மூன்று பிஜிலி வெடிகளை பிரித்து அதில் உள்ள வெடிமருந்தை ஒருவெடியாக செய்து வெடிப்பது. வெடிக்காமல் போன வெடிகளை பிரித்து வெடிமருந்தை நேரடியாக புஸ் கொளுத்தி விளையாடுவது என அனைத்தும் அருமையான நினைவுகள் தான்.

தீபாவளிக்கென புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது முதல்காட்சி பார்க்கும் சுகம் இருக்கிறதே. அப்பப்பப்பா, அதனை வார்த்தைகளில் அடக்க முடியாது. நான் முதல் முதலாக நண்பர்களுடன் தீபாவளியன்று சென்ற திரைப்படம் அவசர போலீஸ் 100. அந்த சமயத்தில் எனக்கு பத்து பதினொரு வயது இருக்கும். தனியாக சென்று படம் பார்த்ததில் பெரியமனுசனாகி விட்ட நினைப்பு.

பள்ளிப்படிப்பு முடிந்து சென்னைக்கு படிக்க வந்ததும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பட்ட சிரமங்கள் கொடுமையாக இருக்கும். 1998 தீபாவளிக்கு நான் திருவாரூர் செல்ல பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். நின்று நின்று பார்த்து கடைசி வரை பேருந்து கிடைக்கவில்லை. நடுராத்திரிக்கு பிறகு ஒரு கட்டத்தில் பேருந்துகளே இல்லை.

தீபாவளிக்கு மறுநாள் திரும்பவும் சென்னை வந்தாக வேண்டும். அழுகையே வந்து விட்டது. விடியற்காலை 2 மணிக்கு பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறி பாண்டி சென்று அங்கிருந்து மாறி மாறி காலை 9 மணிக்கு திருவாரூர் சென்றேன். தீபாவளியை தவற விட்டது போன்ற உணர்வே இருந்தது.

சென்னையில் படிக்கும் காலத்தில் திரையரங்கிற்கு சினிமா பார்க்க செல்லும் போது தான் என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களையே பார்க்க முடியும். அனைவரும் கல்லூரிப் படிப்புக்கு வெளியூரில் இருந்தார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் வெகு சொற்பம் தான். நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வருவேன்.

வீட்டுக்கு வந்ததும் நல்லி எலும்பு அதிகம் போட்டு மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல் உடன் தோசை பிரமாதமான சாப்பாடு. மறுபடியும் வெடி வெடிக்க வேண்டும் என்பதற்காகவே அரக்கபரக்க தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவிடுவேன்.

இந்த காலத்து பசங்களுக்கு இது போன்ற சந்தோசங்கள் குறைந்து விட்டது. காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது. பட்டாசை வெடிப்பதை குறைத்துக் கொண்டு விட்டனர்.

இந்த ஆண்டு எனது பாட்டி காலமான காரணத்தால் தீபாவளி கிடையாது. எனவே பிறந்ததிலிருந்து முதல் முறையாக இந்த தீபாவளியன்று என் பெற்றோரை பிரிந்து இருக்கிறேன். அதுவே பெரிய வருத்தமாக இருக்கிறது. அடுத்த முறை சேர்த்து கொண்டாடி விட வேண்டியது தான்.

நாளை சென்னையில் இருப்பதால் முதல் காட்சி துப்பாக்கி பார்க்க இருக்கிறேன். காட்சி காலை நான்கு மணிக்கு எனவே நம் வலைதளத்தில் 8 மணிக்கே துப்பாக்கி விமர்சனம் எதிர்பார்க்கலாம்.

என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் இனிய இனிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுங்கள்.


ஆரூர் மூனா

சட்டையில்லாமல் கடுப்புடன் பார்த்த முகமூடி - பழசு 2012

மன்னிக்கனும். இது மூணு மாசத்துக்கு முன்னமே எழுதியிருக்க வேண்டிய பதிவு. கொஞ்சம் வேலை இருந்ததால் சில நாள் தள்ளிப் போச்சு. அதன் பிறகு சோம்பேறித்தனத்தால் எழுத தோணவில்லை. இப்பொழுது எழுத வேண்டும் என்று முடிவு செய்து வலுக்கட்டாயமாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

நினைவுகளை பின்னோக்கி தள்ளி நடந்த சம்பவங்களை அசை போட்டு எழுத வேண்டியிருக்கிறது. பார்ப்போம். எந்த அளவுக்கு சாத்தியம் என்று.

என் அப்பாவுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக ஏப்ரல் மாதத்தில் 25 நாட்களுக்கு மேல் திருவாரூரில் தங்கியிருந்ததாலும் வேலையில் சேர்ந்து சில மாதங்கள் வரை லீவு எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததாலும் கொஞ்ச நாட்களுக்கு ஊருக்கு செல்லாமல் இருந்து செப்டம்பர் மாதம் தான் சென்றேன்.

வெள்ளியன்று ஊருக்கு கிளம்பியதால் முகமூடி சென்னையில் பார்க்க முடியவில்லை. சனி இரவு திருவாரூர் நடேஷ் திரையரங்கில் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்து நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தால் ஒருத்தனும் ஊருக்குள் இல்லை. சரியென்று நீண்ட நாட்களுக்கு பிறகு திருவாரூரில் தனியாக சினிமாவுக்கு சென்றேன்.

ஆனால் நான் செய்த தவறு ஒன்று என்னவென்றால் நீ்ண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு செல்கிறோமே, அங்கும் தண்ணியடித்தால் அப்பா வருத்தப்படுவார் என்று நினைத்து அந்த ட்ரிப் முழுவதும் தண்ணியடிக்கவில்லை. ஆனால் அது மகா தவறென்று படம் தொடங்கியதும் தான் தெரிந்தது.
டிக்கெட் எடுக்கும் போதே நண்பன் ராஜி, அவன் தம்பிகள் முத்து, பிரமையா சகிதம் வந்தான். கையில் பாலிதீன் கவர் இருந்தது. என்னிடம் சில நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பையில் சரக்கு என்று சொல்லி கண்ணடித்து விட்டு சென்றான்.

நானும் பால்கனி உள்ளே சென்று ஒரு ஓரமாக மின்விசிறிக்கு கீழ் அமர்ந்தேன். இத்தனைக்கும் அது குளிரூட்டப்பட்ட திரையரங்கு. படம் போட்டதும் எனக்கு முதல் வரிசையிலிருந்து ஒரு கும்பல் சரக்கை ஊத்தி திரையரங்கின் உள்ளேயே அடிக்க ஆரம்பித்தது.

சரக் சரக்கென்று சத்தம் சற்று எட்டிப் பார்த்தால் உள்ளேயே பத்து குரூப்புக்கு மேல் தண்ணியடித்துக் கொண்டு இருந்தது. வெளியில் அடித்து விட்டு வந்தவர்களோ சலம்பிக் கொண்டு இருந்தார்கள். எனக்குள் ஒரு மணி டொய்ங் என்று அடித்தது. நம்முடைய திட்டம் ஊத்திக் கொண்டதே, பேசாம நாமும் கூட சரக்கடித்து விட்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. வீட்டை நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.

படம் போட்டு அரைமணிநேரத்தில் ஏசியை நிறுத்தி விட்டார்கள். அரங்கம் முழுவதும் சரக்கு வாசனை மிதக்க ஆரம்பித்தது. நான் மின்விசிறிக்கு கீழ் அமர்ந்திருந்ததால் காற்று வந்தது. தப்பித்துக் கொண்டேன் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்புக்கும் மண் விழுந்தது.

சற்று நேரத்தில் மற்றுமொரு குரூப் உள்ளே நுழைந்தது. அவர்களுக்கு இடமில்லாததால் என்னை இருக்கை மாறி அமரச் சொல்லி கேட்டார்கள். நானோ கடுப்பில் மறுக்கவே அவர்கள் கெஞ்சினார்கள். சரியென்று அதே வரிசையில் கடைசி இருக்கைக்கு வந்து அமர்ந்தேன்.

இவர்களும் உட்கார்ந்ததும் கையில் கிளாஸை பிடித்து செல் வெளிச்சத்தில் சரக்கை ஊத்தி அடிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு நெடி மூக்கில் ஏறியதும் இன்னும் கடுப்பானது. சற்று நேரத்தில் பரோட்டாவை பிரித்து அந்த இருட்டிலேயே தின்றார்கள். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து விசிலடிக்க ஆரம்பித்தார்கள்.

நானோ கடுப்பின் உச்சத்தில் இருந்தேன். அவர்கள் செய்த அலம்பலுக்காக அல்ல. நிர்வாண ஊரில் ஒருவன் மட்டும் ஜட்டியுடன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி. அதுவும் இயலாமையின் கடுப்பு இருக்கிறதே, அதை சொல்லி புரியவைக்க முடியாது.

இன்டர்வெல் விட்டதும் அரங்கின் உள்ளே ஏகப்பட்ட தெரிந்த நண்பர்கள் இருந்தாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் தனியே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது மூர்த்தி என்ற ஒரு தெரிந்த பையன் போதையில் வந்து என் முன்னே தம்மடித்துக் கொண்டு அப்புறம்ணே எப்ப ஊர்லேர்ந்த வந்தீங்க என்றான்.

அவனுக்கு பதினேழு அல்லது பதினெட்டு தான் வயது இருக்கும். நான் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து திருவாரூரை விட்டு கிளம்பிய பிறகு பிறந்த பையன் அவன். என் முன்னே புகையை விட்டுக் கொண்டு அதுவும் முகத்திலேயே விட்டுக் கொண்டு பேசினான். மொத்த கடுப்புக்கும் சேர்த்து ஒரே அறை விட்டேன். அறையை வாங்கிக் கொண்டு அழுதுக் கொண்டே சென்றான்.

இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் இன்னும் மோசமாக வேர்க்கத்துவங்கியது. பொறுத்து பார்த்த நான் ஒரு கட்டத்தில் சட்டை, பனியனை கழற்றி வைத்து விட்டு வெற்றுடம்புடன் படத்தை பார்த்தேன். இதுக்கு மேல ஒருத்தனுக்கு வெறுப்பின் உச்சக்கட்டம் வரமுடியாது என்று தானே நினைக்கிறீர்கள்.

எனக்கு வந்ததே பக்கத்தில் சரக்கடித்த பசங்களில் ஒருத்தன் டபக்கென்று என் காலின் அருகிலேயே வாந்தியெடுத்தான். எடுத்து முடித்ததும் அதன் மேலேயே படுத்து மட்டையானான். அவன் கூட வந்தவர்கள் யாரும் அதனை பற்றி கவலைப்படாமல் படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

சுற்றி சரக்கு வாசனை, காத்து இல்லாமல் சட்டையை வேறு கழட்டியிருந்தேன். போதாத குறைக்கு என் காலின் அருகிலேயே வாந்தி வேறு. அந்த இடத்தில் மட்டும் நானும் போதையில் இருந்தேன் என்றால் கலாட்டா வேறு மாதிரி இருந்திருக்கும்.

படம் முடிந்ததும் எல்லோரும் கத்திக் கொண்டும் தம்மடித்துக் கொண்டும் சென்றார்கள். நான் மட்டும் கொலை காண்டுல வெளியில் வந்தேன். இரவு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு தான் படுத்தேன்.

அதனை போக்க மீண்டும் சென்னை வந்ததும் ஒரு முக்கால் பங்கை உள்ளே விட்டதும் தான் வெறுப்புகள் அனைத்தும் வடிந்தது. சரக்கடித்த மற்றவர்களின் சலம்பலுக்கு இடையே சரக்கடிக்காமல் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே அய்யகோ. மெட்ராஸ் பவன் சிவக்குமாரே உமக்கு கோயில் கட்டித்தான்யா கும்பிடனும்.


ஆரூர் மூனா