Sunday 24 May 2015

டிராபிக்னு சொல்லி எனக்கு நானே வச்சிக்கிட்ட ஆப்பு - பழசு 2012

முதல்ல ரயில்வே மொழியில டிராபிக் அப்படினா என்னன்னு சொல்லிடுறேன். அப்பத்தான் இந்த சம்பவம் புரியும்.

ஒரு ரயில்பெட்டி சென்னையில் உள்ள ஐசிஎப்பிலோ அல்லது பஞ்சாப் கபுர்தலாவில் உள்ள ஆர்சிஎப்பிலோ தயாராகிறது. அப்படி வெளி வரும் ரயில்பெட்டி மூன்று வருடங்களுக்கு பிறகு பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸூக்கு சர்வீஸ்க்காக வரும். அனைத்து ரயில்களும் இங்கு வராது. தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வண்டிகள் மட்டும் இங்கு அனுப்பி வைக்கப்படும்.

அந்தந்த ரயில்வேக்களில் இது போல் ஒரு கேரேஜ் ஒர்க்ஸ் ஒன்று இருக்கும். அந்தந்த ரயில்வேக்களிலும் காலக்கெடுவிற்கு ஏற்றாற் போல் வண்டிகளை சர்வீஸ் செய்ய இது போலவே கேரேஜ்க்கு அனுப்பி வைப்பர். அங்கு வரும் ரயில்பெட்டியை ஆய்வு செய்து அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டறிந்து ஒரு சார்ட் தயார் செய்வார்கள்.

அதன் பிறகு அந்த வண்டிக்குரிய எண்ணுடன் குறைபாடுகள் அடங்கிய சார்ட் தயாராகி அந்தந்த செக்சனுக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பிறகு அந்த குறைபாடுகள் பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு வண்டி கடைசியாக டிஎல்டி (TLD) ஷாப்பிற்கு வரும்.

அங்கு பேசின்பிரிட்ஜ் அலுவலகத்திலிருந்து வரும் அதிகாரிகள் வண்டியை ஆய்வு செய்து சார்ட்டில் ஒகே என்று கையெழுத்திட்ட பிறகு வண்டி அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வழக்கமாக ஒடிய எக்ஸ்ப்ரஸில் இணைக்கப்பட்டு விடும். பிறகு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு வந்து கோளாறுகள் சரி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

சரியாக வண்டி தயாரானதிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டு ஸ்க்ராப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு வண்டி கண்டமாக்கப்படும். இது தான் ஒரு ரயில்பெட்டியின் வரலாறு. இதில் அதிகாரிகள் வண்டியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது டிராபிக் என்று அழைக்கப்படும்.

முதல் நாள் பலகையில் வண்டி எண்கள் மறுநாள் டிராபிக்குக்கு உரியவை எவை என்று எழுதி வைக்கப்படும். அந்த இறுதிக்கட்டத்தில் அந்தந்த பிரிவு அதிகாரிகள் தொழிலாளர்களை விரைவாக முடுக்கி விட்டு வேலை வாங்கி தங்கள் செக்சனுக்குரிய வேலையை முடித்து விடுவர்.

எனது செக்சன் என்பது வெஸ்டிபுள் பகுதியாகும். ஒரு பெட்டியின் கடைசியில் அதாவது டாய்லெட்டிற்கு பிறகு அடுத்த கோச்சுக்கு செல்வதற்காக வழி இருக்குமே அந்த பகுதி தான் வெஸ்டிபுள் என்றழைக்கப்படுகிறது. கடைசிப்பகுதியில் கதவு உண்டு. அது ரோலிங் ஷட்டராக இருக்கும் அல்லது ஸ்லைடிங் டோராக இருக்கும். அதில் ஏதும் குறைபாடு இருந்தால் சரி செய்வது என்னுடைய குழுவின் பணி.

மொத்த வெஸ்டிபுள் செக்சனில் 38 பேரும் என் குழுவில் மட்டும் என்னுடன் சேர்த்து 4 பேர் உள்ளனர். ஒரு செக்சனுக்கு உயரதிகாரி SSE (Senior Section Engineer) ஆவார். அவருக்கு அடுத்த நிலையில் JE (Junior Engineer) அல்லது சார்ஜ்மேன் ஆவார். அதன் பிறகு உள்ள மற்றவர்கள் என்னைப் போன்ற தொழிலாளிகள் தான்.

பொதுவாக மதியம் வேலை முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். நேற்றும் அதே போல் வீட்டுக்கு சென்றதும் ஒரு உறவினரைப் பார்க்க வேண்டி இல்லாளை அழைத்துக் கொண்டு அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது என் JEயிடம் இருந்து போன் வந்தது. அவர் 5 நாட்கள் விடுமுறை எடுத்து விசாகப்பட்டினம் சென்றிருந்தார்.

இது வரை ரயில்வே பற்றி தெரியாதவர்களுக்காக சீரியஸாக சொல்லிக் கொண்டிருந்தேன். இனி நம்ம மொழியில் பதிவு மாறுகிறது.

போனை அட்டென்ட் செய்து அவருடன் பேசினால் அவர் பேசிய தொணி புதிதாக படம் இயக்க விரும்பும் உதவி இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளரிடம் சென்று கதையை சொல்வது போலவே இருந்தது. படத்தின் க்ளைமாக்ஸ்ஸூக்கு முன்பு வில்லன்கள் எல்லோரும் சேர்ந்து ஹீரோவின் தாயை கொன்று விடுகிறார்கள், ஹீரோவின் தங்கையை கதறக் கதற கற்பழித்து விடுகிறார்கள் (ஏம்ப்பா சரியாத்தான் சொல்றேனா).

கடைசியாக கற்பழித்த ஒருவன் எழுந்து பேண்ட்டின் ஜிப்பைப் போடும் போது ஹீரோ உள்ளே வருகிறார். எல்லாவற்றையும் பார்க்கிறார். அந்தக் கோலத்தில் அண்ணனை காண விரும்பாத தங்கை டபக்குன்னு அழுக்கு கூடையில் இருந்த ஜமுக்காளத்தை சுத்திக் கொண்டு படியில் மூணுமாடி ஏறிச் சென்று வீல் என்று கத்திக் கொண்டு குதித்து விடுகிறார்.

ஹீரோ தங்கையின் சடலத்தை எடுத்துக் கொண்டு அம்மாவின் சடலத்துடன் வைத்து வலது தோளில் அம்மாவையும் இடது தோளில் தங்கையையும் வைத்துக் கொண்டு கதறுகிறார்.
அது போலவே என் JE "செந்தில், இன்று ஒரு வண்டி டிராபிக்கில் இருக்கிறது, அதில் ரோலிங் ஷட்டர் சரிவர லாக் ஆகவில்லையாம். SSE TLD ஷாப்பில் வண்டியருகே இருக்கிறார். வண்டி போன மாதம் 5ம் தேதியே உள்ளே வந்தது. உன் குழுவில் உள்ள மற்றவர்கள் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. நீ மட்டும் சென்று கோளறை சரி செய்யவில்லை என்றால் அதிகாரிகள் வண்டிய டிராபிக்கில் க்ளியர் செய்ய மாட்டார்கள். அப்படி நடந்து விட்டால் SSEக்கும், JEயாகிய எனக்கும் மற்றும் உன் குழுவில் உள்ள எல்லோருக்கும் மெமோ கொடுத்து விடுவார்கள். நீ உடனே போ" என்றார்.

கதையை கேட்டு மனமிறங்கி இந்தப் படத்தை எடுத்தால் தெலுகு டப்பிங் வரைக்கும் சம்பாதித்து லாபம் பார்த்து விடலாம் என்ற பேராசையுடன் கூடிய நப்பாசையில் அட்வான்ஸ் செக்கை கொடுத்த தயாரிப்பாளரைப் போலவே நானும் இன்று எப்படியாவது அவசர வேலையை செய்து கொடுத்தால் பின்னாளில் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டு " சரி சார். நான் வந்து விடுகிறேன். வந்து சரி செய்து தருகிறேன்" என்று கூறி விட்டுப் பார்த்தால் என் வீட்டம்மா கண்களில் நெருப்புடன் முறைத்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் "மருத்துவமனையில் உறவினரைப் பார்த்த பிறகு அங்கிருந்து கிளம்பி ஸ்கைவாக் செல்லலாம், உனக்கு வேண்டிய உடைகளை வாங்கிக் கொள்" என்று வீட்டம்மாவிடம் சொல்லியிருந்தேன்.

பிறகு அவரை தாஜா பண்ணி அடுத்த வாரம் கூடுதலாக ரெண்டாயிரம் ஷாப்பிங்க்கு தருவதாக உறுதி கூறி அங்கிருந்து கிளம்பி அண்ணாநகர் ரவுண்டானா அருகில் வந்ததும் அவரை வீட்டுக்கு ஆட்டோவில் அனுப்பி விட்டு அவசர அவசரமாக பெரம்பூர் கேரேஜ் உள்ளே சென்றேன். என் செக்சனில் யாருமில்லை. சரி ரெயில்பெட்டியின் அருகில் சென்று பார்ப்போம் என்று TLD ஷாப்பிற்கு சென்றேன். அங்கு வண்டியருகே யாருமில்லை. சரிதான் வண்டியை டிராபிக்கில் நிப்பாட்டி விட்டார்கள் போல நமக்கு ஆப்பு தான் என்று நினைத்துக் கொண்டு SSE எங்காவது தென்படுகிறாரா என்று தேடினேன். ஆளைக் காணவில்லை.

பிறகு அடுத்த ஷாப்பான LBRல் தேடினேன். அங்கும் காணவில்லை. பிறகு JEக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. செக்சனுக்கு வந்தேன். SSE அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். "சார் வண்டியை சரி பண்ணிடட்டுமா" என்று கேட்டால் "வேண்டாங்க செந்தில் வண்டி இன்னைக்கு டிராபிக் கிடையாதாம். நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் நாளைக்கு வந்து சரி பண்ணிக்கலாம்" என்றார்.

கடைசியில் அடாசு படமெடுத்து தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளரைப் போல் நான் காணப்பட்டேன் என்று சொல்லவும் வேண்டுமோ. அட போங்க சார். போய் புள்ளக் குட்டிங்கள படிக்க வையுங்க சார்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment