Tuesday 26 May 2015

மாற்றான் - பழசு 2012

மாற்றானுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு கூடியிருந்ததால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏற்கனவே சிக்கல் இருந்தது. இருந்தாலும் காலையில் வேலைக்கு செல்லும் முன்பே நண்பன் சத்யாவிடம் முருகன் தியேட்டரில் டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வேலைக்கு சென்றேன். வழக்கம் போல் நமக்கு சீக்கிரம் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் வரும் தாமதம் இன்றும் வந்தது.

சத்யாவை தனியாக படம் பார்க்கச் சொல்லி விட்டு வேலையை முடித்து விட்டு பார்த்தால் மணி 12 ஆகி விட்டிருந்தது. வழக்கம் போல் ஏஜிஎஸ்க்கே போவோம் என்று முடிவு செய்து நண்பன் அசோக்குடன் தியேட்டருக்கு சென்றேன். கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக அலைமோதியது.

அசோக்கை டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வெளியில் காத்திருந்தால் டிக்கெட் 12.45 காட்சிக்கு கிடைத்தது. ஆனால் கவுண்ட்டரில் டிக்கெட் விலை ரூ.200 என்று சொன்னான். என்னவென்று விசாரித்தால் டிக்கெட்டுடன் பாப்கார்ன் கோக்குக்கும் சேர்த்து டோக்கன் கொடுத்திருந்தார்கள்.

டிக்கெட் எடுத்து விட்டதால் ஒன்றும் சொல்லமுடியாமல் வண்டியை பார்க்கிங்கில் போட்டு விட்டு நின்றால் கவுண்ட்டரில் ஒரு பெண்மணி கூடுதல் பணம் பெற்றதற்காக சண்டையிட்டு கொண்டிருந்தார். நமக்கு தான் கொடுப்பினையில்லை ஒரு பெண்மணியாவது சண்டையிடுகிறாரே என்று சந்தோஷம்.
நேரமானாலும் உள்ளே விடாமல் தாமதித்துக் கொண்டே இருந்தார்கள். அப்பொழுது ஒரு சேட்டுப்பெண் அந்த ஆட்களை சத்தம் போட்டு உள்ளே விடச் சொன்னார்கள். அப்போது என் நண்பன் நாமும் சுடிதார் போட்டு வந்திருந்தால் கேட்டது எல்லாம் கிடைத்திருக்கும் என்று சொன்னான்.

டிக்கெட் கிழிப்பவரிடம் யார் அந்த பெண் அவர் சொன்னதும் உடனே உள்ளே விடுகிறீர்களே என்று கேட்டால் அவர் தான் ஓனர் என்று சொன்னான். கல்பாத்தி வகையறாவில் யாராவது ஒருத்தராக இருக்கக்கூடும். எல்லா களேபரமும் முடிந்து திரையரங்கின் உள்ளே சென்று அமர்ந்ததுமே படத்தை போட்டு விட்டான். முன்கதை சுவாரஸ்யம் முடிந்து விட்டதா. படத்தின் கதைக்கு செல்வோம்.

தாராவுக்கும் ஒரு ஜெனிட்டிக் இன்ஜினியருக்கும் ஒட்டிக்கொண்டு விமல், அகில் ஆண்குழந்தைகள் பிறக்கிறது. அது வளர்ந்ததும் டபுள் சூர்யா என்று நான் சொல்லவா வேண்டும். இருவருக்கும் அனைத்து உறுப்புகளும் தனித்தனியாக இருந்தாலும் இதயம் மட்டும் ஒன்று தான் இருக்கிறது. அது விமலின் உடம்பில் இருக்கிறது.
விமல் நல்ல குணங்கள் கொண்டவராகவும் படிப்பில் வல்லவராகவும் வளர்கிறார். அதற்கு நேர் மாறான குணத்தோடு அகில் இருக்கிறார். ஒரு வெளிநாட்டுப் பெண் மூலம் தங்கள் அப்பாவின் கம்பெனியில் தயாரிக்கப்படும் குழந்தைகள் ஊக்கப்பானத்தில் தவறு நடப்பதை அகில் போதையில் இருக்கும் போது விமல் அறிந்து கொள்கிறார். அதனால் அந்த வெளிநாட்டுப் பெண்ணும் விமலும் கொள்ளப்படுகிறார்கள்.

விமலின் உடம்பில் உள்ள இதயம் அகிலுக்கு பொருத்தப்படுகிறது. இடைவேளை. அகில் விமலின் நினைவுகளால் நல்லவனாக மாறுகிறார். பிறகு உண்மைகள் விமலுக்கு தெரியவர அதன் ஆதாரங்களை தேடி காதலி காஜலுடன் வெளிநாடு போகிறார். அங்கிருந்து கொண்டு வந்த சாட்சியங்களை வைத்து இந்தியாவில் ஊக்கப்பானத்தை தடை செய்கிறார். இந்தியாவை காப்பாற்றுகிறார். அவ்வளவு தான் கதை. போதுமா.

கேட்கும் போது படுசுவாரஸ்யமாக போகும் கதை எடுத்த விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறது. அந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விஷயம் இந்த படத்திற்கு தேவையே இல்லை. ஏன் இதனுள் நுழைத்தார்கள் என்றே புரியவில்லை.
அயன் படத்தில் அந்த காங்கோவில் வைரம் வாங்க போகும் காட்சி, காங்கோவில் தெருக்களில் ஒட்டமான சண்டைக் காட்சி எனவும், கோ படத்தில் பாங்க் ராபரி, கோட்டா சீனிவாசராவின் திருட்டு கல்யாணத்தை படம் பிடித்தல் என்ற துவக்கக் காட்சிகள் படம் தொடங்கிய உடனே நம்மை படத்தின் உள்ளே இழுத்து அடுத்தது என்ன என்ற ஆர்வத்திற்கு கொண்டு செல்லும், அது போன்ற காட்சி இந்தப் படத்திற்கு இல்லாதது பெரிய மைனஸ்.

அதன் காரணமாகவே என்னால் படத்துடன் இடைவேளை வரை ஒன்ற முடியவில்லை. அது போல் இரட்டையர்களை இயல்பாக காட்ட முயற்சிக்க வைக்கும் கிராபிக்ஸ் வேலைகள் படு சுமார். விமல் கேரக்டரில் படத்தில் வேறொருவர் இருப்பதும் முகத்தை மட்டும் சூர்யாவை ஒட்ட வைத்திருப்பது என்னைப் போன்ற சாமான்ய ரசிகனுக்கே தெரிய வருகிறது என்றால் புரோபசனல் விமர்சகர்கள் என்ன சொல்வார்கள் என்றே தெரியவில்லை.

சூர்யாவைப் பற்றி நான் தனியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இரண்டு கேரக்டர்களுக்கும் உரிய வித்தியாசத்தை முகத்தில் மிக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார். இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் அந்த பார் டான்ஸ் மற்றும் எம்ஜிஎம்மில் நடக்கும் சண்டைக் காட்சியிலும் மிகுந்த உழைப்பை கொடுத்து இருக்கிறார்.

காஜல் அகர்வால் படத்தில் ரஷ்ய மொழிப் பெயர்ப்பாளராக வருகிறார். படத்தில் சும்மா வந்து போகும் நாயகியாக இல்லாமல் படம் முழுக்கவே வருகிறார். சும்மா இல்லென்று இருக்கிறார். வசீகரமான முகம். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது தியேட்டரில் தெளிவாக தெரிகிறது. அவர் வரும் போதெல்லாம் விசில் பறக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தாரா தமிழில் நடித்திருக்கிறார். பெர்பார்மர் என்று சொல்வார்கள். அதற்கு தகுதியானவர் அவர் தான். அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

நான் இதற்கு முன் பாடல்களை கேட்டதேயில்லை. முதல் முறை கேட்பதால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. படத்தில் காமெடிக்கு என்று தனியாக யாருமில்லை. என்ன தான் வில்லன் அப்பா என்றாலும் மகனையே கொல்வது எல்லாம் ரொம்ப ஓவர். படம் ஒரு சில விஷயங்களில் 7ம் அறிவை நினைவுபடுத்துகிறது.

ஒரு ராணுவ மேஜர் ஒரு சுமோ போன்ற வாகனத்தில் வெறும் இரண்டு பாதுகாவலர்களோடு வெளியில் செல்வதும் வெளிநாடுகளில் ஒரு இந்தியர் சர்வசாதாரணமாக ராணுவ மேஜரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சிப்படும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். இன்னும் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது ஆனால் பார்ப்பவர்களின் சுவாரஸ்யத்திற்காக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அதற்காக படம் சுமார் பார்க்கவே வேண்டாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. பார்க்கலாம் தான். ஆனால் அயன், கோ படத்தை கொடுத்த குழுவின் அடுத்த படம் என்ற எதிர்ப்பார்ப்போடு போனால் சற்று வருத்தமாக இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் பார்க்கக்கூடிய படம் தான்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment