Sunday 24 May 2015

தண்ணீர் தண்ணீர் - பழசு 2012

சின்ன வயதில் இருந்தே என் மாமாக்கள் மற்றும் சித்தப்பாக்கள் தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி சிலாகித்து சொல்வார்கள். அது போல் பல பத்திரிக்கைகளின் கட்டுரைகளிலும் தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி படித்துள்ளேன். ஆனால் அந்தப் படத்தை நான் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு காட்சி கூட பார்த்தது கிடையாது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு என்ன படம் என்று தெரியாமல் விஜய் டிவியில் சில காட்சிகள் பார்த்து விட்டு சென்று விட்டேன். ஆனால் இன்று விஜய் டிவியில் சரியாக படம் துவங்கும் நேரமான 02.30 மணிக்கு படம் பெயர் போடும் போதே பார்த்து விட்டதால் இன்று படத்தை முழுவதும் பார்த்து விடுவது என்று படம் முடியும் வரை அதிசயமாக விளம்பர இடைவெளியிலும் மற்ற சேனல்கள் மாற்றாமல் பார்த்தேன்.

இந்தப் படத்தை எப்படி இத்தனை நாள் தவற விட்டேன் என்று எனக்குள் கோவமாக வந்தது. இந்திய அரசியலமைப்பை முக்கியமாக தமிழ்நாட்டு அரசியல் கூத்தை 1980களிலேயே இந்த அளவுக்கு சாடி வந்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது வரை நான் பார்த்த அரசியல் சார்பு படங்களிலேயே மிகச்சிறந்த படம் இது தான்.

இதுவரை இந்திய சினிமாக்களில் அதிகம் பேசப்பட்டு நான் பார்க்காத விஷயம் தண்ணியில்லாத காடு. எந்த ஒரு நேர்மையான அரசு அதிகாரியையும் தமிழ் சினிமாவில் தண்ணியில்லா காட்டுக்கு மாத்தி விடுவேன் என்று கடமைக்கு மிரட்டுவதோடு சரி. அப்படிப்பட்ட தண்ணியில்லா காடு தான் படத்தின் கதை களம்.


படத்தின் கதை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் அத்திப்பட்டி. (மக்களே இது அதுவல்ல, சிட்டிசன் படத்தில் வந்தது நாகப்பட்டினம் அருகில் உள்ள அத்திப்பட்டி, இது வேற. கதையில் கான்சன்ட்ரேசன் வேணும்) பல வருடங்களாக மழை பொய்த்துப் போனதால் ஊரில் உள்ள அனைத்து ஏரி கண்மாய்களும் நீரின்றி வறண்டு விட வாழ்ந்த மக்களில் பாதிப் பேர் ஊரை விட்டு போய் விடுகின்றார்கள்.

பிறந்த ஊரை விட்டு போக விரும்பாத 300 பேர் மட்டும் சிரமப்பட்டு அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பிறந்து பக்கத்து ஊரில் போலீஸ்காரனான ராதாரவிக்கு வாக்கப்பட்டு பிரசவத்திற்காக சொந்த ஊரில் இருக்கிறார். தன் வீட்டுக்கு மட்டும் கைக்குழந்தையுடன் 10 மைல் சென்று தேனுத்தில் இருந்து தினமும் சிரமப்பட்டு எடுத்து வருகிறார்.


திருநெல்வேலியில் ஒரு எம்எல்ஏவின் மகனை பெயில் செய்ததற்காக தண்ணியில்லாக் காடான அத்திப்பட்டிக்கு மாற்றலாகி மூன்று வருடங்களாக வசிக்கிறார் ஒரு ஆசிரியர். விவசாயம் பொய்த்துப் போனதால் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் அடுத்த ஊரில் உள்ள ஒரு நாயக்கரின் தோப்புக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

அந்த ஊருக்கு வரும் நாடோடியான வெள்ளைச்சாமி தண்ணியில்லாது தவிக்கும் அந்த ஊரினை பார்த்து இரக்கப்பட்டு அந்த ஊர் பஞ்சாயத்தை கூட்டி தான் தினமும் 10 மைல் தள்ளி உள்ள ஊற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதாகவும் அதற்காக தனக்கு வண்டியும் மாடும் கொடுத்தால் போதும் என்று சொல்கிறான். அதன்படி ஊரார் அவனுக்கு வண்டியும் மாடும் கொடுக்க தினமும் தண்ணியெடுத்து வந்து அந்த கிராமத்தின் தாகத்தை தணிக்கிறான் வெள்ளைச்சாமி.

பிறகு ஒருநாள் வெள்ளைச்சாமி கொலைகாரன் என்பது அந்த ஊருக்கு தெரிய வர பஞ்சாயத்து கூடுகிறது. விசாரித்ததில் அவன் பக்கம் நியாயம் இருப்பது தெரிய வர மக்கள் அவனை போலீசிடம் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று பஞ்சாயத்தில் சத்தியம் செய்கின்றனர்.

பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊற்றிலிருந்து அத்திப்பட்டிக்கு தண்ணீர் எடுத்து வர 10 மைல் வாய்க்கால் தங்களின் சொந்த முயற்சியிலேயே வெட்டுகின்றனர். முடியும் தருவாயில் போலீசுக்கு வெள்ளைச்சாமி அங்கிருப்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர்கள் வெட்டிய வாய்க்காலுக்கு அனுமதியில்லை என்று மூடச் சொல்கின்றனர். பெரும் கலவரம் மூண்டு போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி ஏகப்பட்ட பேரை கொல்கின்றனர்.

ஊருக்கே தண்ணீர் தாகம் தீர்த்த வெள்ளைச்சாமி தாகத்தால் இறக்கிறான். எஞ்சிய மக்கள் இந்த ஊரே வேண்டாம் என்று ஊரை காலி செய்து போவது போல் படம் முடிகிறது.

இந்தப்படம் கோமல் சுவாமிநாதன் அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். கதை வசனம் இரண்டும் கோமல் தான். இயக்கம் பாலச்சந்தர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் எம்ஜியார் முதல்வராக இருந்த காலத்திலேயே இவ்வளவு சூடாக படம் எடுத்த பாலச்சந்தரின் துணிச்சல் தான்.

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் அரசின் முகத்தில் பொளேரென அறைகிறது. தலைச்சுமையை தூக்கி வரும் பூவிலங்கு மோகனும் மற்றொருவனும் தாகம் தாங்காமல் குட்டையில் எஞ்சியுள்ள நீரை உறிஞ்சி குடிப்பது மனதை நெருடுகிறது.

சேரி வீட்டு பெண்ணுக்கும் நாயக்கர் வீட்டு பையனுக்கும் காதல் ஏற்படுகிறது. அந்த பையன் குளிக்க வேண்டும் என்று பெண்ணிடம் சொல்ல அவள் சேரிப் பகுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் இரண்டு பானை தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க அவன் குளிப்பது ஆதிக்க சாதியினரின் ஜாதிவெறியை துகிலுரித்து காட்டும். அதே பெண் பிற்காலத்தில் கால்கள் செயலிழந்து போவதும் இறுதியில் அந்த இளைஞன் நக்சலைட் ஆவதும் இறுக்கமான முடிவாக இருக்கிறது.

துணிச்சலான பெண்ணாக வரும் சரிதாவின் கதாபாத்திரம் புதுமைப் பெண்ணாக படைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாத கைக்குழந்தையுடன் மொட்டை வெயிலில் தலையில் ஒன்றும் இடுப்பில் இரண்டு குடத்துடன் வரும் காட்சியில் உண்மையில் அந்த காலத்தில் பெண்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இந்த காலத்தில் துணி துவைத்து சமைப்பதற்கே கடுமையான வேலையென்று அலுத்துக் கொள்ளும் பெண்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. (சத்தியமா என் பொண்டாட்டியை சொல்லலைங்க).

சாதியையும் அரசியல் கட்சிகளையும் நேரடியாக குற்றம் சாட்டும் படமாக இது இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்றால் ஊரே தேர்தல் புறக்கணிப்பில் இருக்கும் போது பூவிலங்கு மோகன் மட்டும் ஊராரின் எதிர்ப்பையும் மீறி ஒட்டுச்சாவடிக்கு ஒட்டுப் போடுவது போல் சென்று தண்ணீர் குடித்து வரும் காட்சி தான்.

என் வயதையொத்தவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஆனால் அவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment