Tuesday 26 May 2015

கும்பகோணம் டிகிரி காபியின் தில்லுமுல்லு - பழசு 2012

சென்ற வாரம் காரில் திருவாரூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். வரும் வழியில் திண்டிவனத்தை தாண்டியதும் செங்கல்பட்டு வரை 8க்கும் மேற்பட்ட கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயரில் கடைகள் இருந்தன. ஒரு கடையில் காபி குடித்துப் பார்த்தால் கன்றாவியாக இருந்தது. கும்பகோணத்திலேயே டிகிரி காபி பல இடங்களில் வாயில வைக்க சகிக்காது. கும்பகோணம் டிகிரி காபி என்று பெயர் வைத்தால் என்று வியாபாரம் நன்றாக நடக்கும் என்று எவன் கண்டுபிடித்தானோ அவனை கல்லால் தான் அடிக்க வேண்டும். டீக்கடையின் பரப்பளவை விட பெயர்ப்பலகையின் பரப்பளவு பெரியதாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒரு செட்டிநாட்டு கடையின் வாசலிலும் கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயர்ப்பலகை இருந்தது. என்ன கொடுமைடா சாமி.

இவ்வளவு தான் விஷயம், இதனை பஞ்சேந்திரியாவில் ஒரு பகுதியாக போட தட்டச்சு செய்தேன். என் நண்பன் ஒருவன் சீனாவிலிருந்து போன் செய்தான். நான் எழுதும் பதிவுகள் ராவாக இருப்பதாகவும், அதனை சற்று கற்பனை கலந்து எழுதிப் பார் என்று சொன்னான். அதற்கான முயற்சி தான். இது சற்று நீட்டி முழக்கி ஒரு பதிவாக தயார் செய்து விட்டேன். நன்றாக இருந்தால் ரசியுங்கள். மொக்கையாக இருந்தால் காறித்துப்புங்கள். நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.
----------------------------------------


எங்கள் வீட்டில் நடந்த விசேசத்திற்காக வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் மழைக்கிடையே ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நானும் சென்னை திரும்ப பேருந்து இருக்கையை முன்பதிவு செய்ய பேருந்து நிலையம் வந்தேன். நான் பார்த்த நாள் முதலே தைலம்மை திரையரங்கின் எதிர்புறம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவனை காணும். அடுத்த வாரிசு வரும் வரை இடம் காலியாக இருக்கும் என நினைக்கிறேன். நல்ல வியாபார இடம். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ.

பேருந்து நுழையும் இடத்தில் அதே பழைய மூத்திர வாசனை. அதை தாண்டி வந்து முன்பதிவு கவுண்ட்டருக்கு முன் நின்றேன். ஆள் அரவமின்றி இருந்த கவுண்ட்டரில் ஓட்டை ஃபேனுக்கு முன்னாடி அமர்ந்திருந்தவன் சுகமாக காது குடைந்து கொண்டிருந்தான். நான் வந்து அவன் சுகத்தை கெடுத்த கடுப்பில் முன்பதிவு செய்ததும் பத்து ரூபாய் குறைந்ததற்கு டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு என்னை சில்லறை வாங்கி வரச் சொன்னான். பத்து ரூபாய்க்காக ஒரு குங்குமம் புத்தகத்தை வாங்க வைத்து புண்ணியம் தேடிக் கொண்டான்.

டிக்கெட்டை பெற்றுக் கொண்டதும் மீண்டும் அதே மூத்திர வாசனை இடத்தை கடந்து தைலம்மை திரையரங்கின் முன் காலியாக இருந்த இடத்தை பெருமூச்சு விட்டு பொறாமையாக பார்த்துக் கொண்டே வண்டியை கிளப்பி வீடு வந்தடைந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் மாமா ஒருவர் அப்பாவுக்கு போன் செய்து நான் சென்னை செல்கிறேன், என்னுடன் வரச் சொல்லுங்கள் என்று சொல்லவே மீண்டும் அதே வழிப் பயணத்தில் சென்று காது குடைந்த புண்ணியவானிடம் டிக்கெட் கான்சல் என்று சொல்லவே முணுமுணுத்துக் கொண்டே பணத்தை திருப்பிக் கொடுத்தான்.

மதியம் வீட்டுக்கு கார் வந்தது.

நிற்க. . இந்த இடத்திலிருந்து திண்டிவனம் வந்தது வரை நான் சொல்ல வேண்டுமானால் நாவல் தான் போட வேண்டும். எனவே கார் திண்டிவனம் வரும் வரை படிக்கும் அனைவரும் தூங்கி விடவும்.

எழுந்திருக. வண்டி பாண்டி வழியாக திண்டிவனத்தை வந்தடைந்தது. கண்ணாடி முழுவதும் ஏற்றி விட்டிருந்தாலும் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. எப்படி என விழிக்க கூடாது. ஏசி ஓடிக் கொண்டிருந்தது. திண்டிவனத்தை கடந்து ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது.

மேல்மருவத்தூர் வந்தது. ஊரில் ஒரே சிவப்பு உடை தரித்து மக்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கம்யூனிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டம் போல. மாநாடு நடக்கும் பகுதியை தாண்டியதும் ஒரே இருட்டு காரின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம் எதிரில் வந்த வண்டிகளும் விளக்கை எரியவிட்டுக் கொண்டே சென்றன. மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இந்த மாநிலத்தில் இதெல்லாம் தேவையா.

ஒரு மேம்பாலத்தில் ஏறிய போது மதுராந்தகம் ஏரி இடது பக்கம் வந்தது. ஏரியில் தண்ணியே இல்லை. வலது பக்கம் ஊர் இருந்தது, அதுதான் மதுராந்தகம். ஆனால் அந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. பின்னே கார்களில் செல்பவர்கள் விளக்கை எரிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நகருக்கு மின்சாரம் கிடைக்கும். அவர்களை விட்டுவிடுவோம். பாவம் அவர்கள் விபரமில்லாதவர்கள்.

மதுராந்தகம் தாண்டியதும் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஏற்கனவே இரண்டு கும்பகோணம் டிகிரி காபி கடையை தவற விட்டு வந்த அடுத்த கடையில் கண்டிப்பாக குடித்து விட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். அதன்படி அடுத்ததாக மிகப்பெரிய பெயர்ப்பலகையை உடைய கும்பகோணம் டிகிரி காப்பி கடையை கண்டோம்.

வண்டியை இடம் பக்கம் ஒடித்து திருப்பி வண்டியை நிப்பாட்டினால் அடப்பாவிகளா அது டீக்கடை. பெயர்ப்பலகையை பாதியாக உடைத்து வைத்தால் கூட உள்ளே வைக்கமுடியாது. அந்த கடையில் பாதி பங்க்கு கடை.

டீக்கிளாஸில் காபியை கொடுத்தார்கள். கருமம் நாலாவது முறை வடிகட்டிய டிக்காசனாக இருக்கும் போல இருக்கிறது. அதற்கு மேல் கசப்புக்கு ஏதோ புளியங்கொட்டையை அரைத்து போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். பாதி குடித்து விட்டு கிளாஸை அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.

நானெல்லாம் குடித்து மட்டையானாலும் மிச்சமிருக்கும் சரக்கை குடிப்பதற்காக வாந்தியெடுத்து விட்டு வந்து முழுவதும் சரக்கடித்து விட்டு மட்டையாகும் ஆள். நானே பாதி கிளாஸ் காபியை வைத்து விட்டு வந்து விட்டேன் என்றால் அது எந்த அளவுக்கு கன்றாவியாக இருக்கும் என்பதை நீங்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பகோணம் காபி கடை என்று பெயர் போட்டால் காபி விற்கும் என்ற ட்ரிக்கை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் மூஞ்ச தார்ரோட்டில் வச்சி தேய்ச்சிப்புட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.

அதற்கு அப்புறம் வண்டி கிளம்பியது. சென்னை வரும் வரை நடந்தை சொல்ல வேண்டுமென்றால் நான் நாவலின் இரண்டாம் பாகம் போட வேண்டி வரும் எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

ஆரூர் மூனா

No comments:

Post a Comment