Friday 28 April 2017

பாகுபலி 2 - சினிமா விமர்சனம்

கண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல போய் பரவசத்தை அனுபவித்து விட்டு வாருங்கள். 


2009ல் இருந்து சினிமா விமர்சனம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ரொம்ப வருடமாக வெள்ளிக்கிழமை சினிமாவுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஆனால் அயனாவரத்துக்கு வீடு மாறிய பிறகு நேரமும் இடமும் தகையாமல் சினிமாவுக்கு போக முடியவில்லை, விமர்சனமும் எழுத முடியவில்லை. 

பைரவாவில் இருந்து விட்டுப் போனதை தொடரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்த படத்தில் இருந்து விமர்சனத்தை தொடர நினைக்கிறேன், பார்ப்போம் முடியுமா என்று. 

படத்தின் சுவாரஸ்ய முடிச்சுகள் என்னையறியாமல் நான் சொல்லி விடும் வாய்ப்பு இருப்பதால் சுவாரஸ்யத்துடன் பார்க்க நினைப்பவர்கள் இத்துடன் கழண்டு கொள்ளலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் துவங்குகிறது.


பிரபாஸை அரசனாக அறிவித்த பிறகு முடிசூட்டிக் கொள்ள நாடும் நாயகனும் தயாராகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாஸ் அனுஷ்காவை சந்திக்கிறார். அவரிடம் காதல் வயப்பட்டு மன்மத சாகசங்கள் புரிந்து கொண்டு இருக்கும் வேலையில் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக பிரபாஸ்க்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடைவெளி ஏற்படுகிறது.

அதை பயன்படுத்தி ராணா அரசனாகிறார். மக்கள் பிரபாஸ் பக்கம் நிற்க வெறுப்படையும் ராணா சூழ்ச்சி செய்து பிரபாஸை கொல்கிறார் (தட் பாகுபலியை கட்டப்பா எந்துக்கு சம்ப்பயாடு மொமண்ட்), மகன் சரத் குமார் ச்சே (அப்பா மகன் கதையென்றாலே சரத்குமார் தான் நினைவுக்கு வருகிறார்) பிரபாஸ் பழிக்கு பழி வாங்குவதே பாகுபலி 2 படத்தின் கதை.

முதல் பாதி பரபரவென எங்கும் தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கிறது. அதுவும் இடைவேளையில் பதவியேற்கும் நிகழ்வும் மக்களின் எதிர்வினையும் சிலிர்க்கிறது, வேறென்ன மயிர் தான். 

இன்டர்வெல் விட்டதும் ஒன்னுக்கு அடிக்க செல்பவன் கூட கக்கத்தில் கட்டி வந்தவன் போல் கையை அகட்டிக் கொண்டே செல்கிறான். அந்தளவுக்கு மக்கள் படத்துடன் ஒன்றியிருந்தார்கள்.


அதன் பிறகு சில காட்சிகள் லேக் ஆகிறது. அதுவும் க்ளைமாக்ஸ் ரொம்ப ஓவர்ர்ர்ரு. மேன் ஆப் ஸ்டீல் (படத்தின் பேரு அதுதான) படத்தில் வரும் ரோபோ சண்டை போல் ஆகிறது. இரும்பால் அடித்துக் கொள்கிறார்கள், கருங்கல்லால் அடித்துக் கொள்கிறார்கள். பனைமரத்தை ப்ளெக்ஸிபிலாக்கி 100 அடிக்கு கும்பலாக பறக்கிறார்கள். எப்படா படம் முடியும் என்பது போல் ஆகி விட்டது.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தின் ஆக்கத்திற்காக கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் இது. என்ன மாதிரியான காட்சிகள், என்ன மாதிரியான நுண்ணுழைப்புகள், நம்ம ஊரு சினிமாடா என்று காலரை தூக்கி விட்டுக்கலாம்.

படம் முழுக்க வருகிறார் சத்யராஜ், படத்தின் நாயகன் இவரோ என்று நமக்கு சந்தேகமே வருகிறது. சிறந்த பண்பட்ட நடிப்பு, காலம் கொடுத்த கொடை இப்படத்தில் பிரதிபலிக்கிறது. நாசர் அந்த நயவஞ்சகம், மகன் மீதான பாசம், குறுக்குபுத்தி, இறுதியில் எல்லாம் இழந்து அவமானத்தில் குறுகி சபையில் நிற்கும் போது அனுபவத்தை கொட்டியிருக்கிறார்.


நாயகனின் அறிமுக காட்சியில் மதம்பிடித்த யானை ஒரு  பக்கம் ஓடி வருகிறது, எதிரில் ரம்யா கிருஷ்ணன் நடந்து வர, கதவை உடைத்து நாயகன் என்ட்ரி, நான் கூட பயந்துட்டேன். முதல் பாகத்தில் காட்டெருமையை வில்லன் அடக்கி மண்டையில் மடாரென அடித்து வீழ்த்துவது போல் பிரபாஸ் ஒரே கொட்டுல யானையை வீழ்த்திடுவாரோ என, நல்ல வேளை அப்பயெல்லாம் ஒன்று நடக்க வில்லை, கோட்டான கோடி நன்றி ஏசப்பா, கோட்டான கோடி நன்றி.

அனுஷ்காவிடம் காதல் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவியாக நடித்து விட்டு ஒரு எதிர்பாராத சமயத்தில் கத்துக்கிட்ட எல்லா வித்தையையும் இறக்கி அனுஷ்காவை கவரும் காட்சியில் மூளையை கழட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

அனுஷ்கா, பிரபாஸ், ராணா பற்றி என்ன சொல்ல, படத்திற்காக 5 வருடம் உழைத்து உடம்பை ஏற்றி இறக்கி பாடுபட்டு இருக்கிறார்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள். ராஜமௌலியின் முத்திரை படம் நெடுக இருக்கிறது. 

யார் என்ன சொன்னாலும், யார் இழந்து பேசினாலும், யார் கழுவி ஊத்தினாலும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தயவு செய்து படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். ஒரு நல்ல அனுபவம் காத்திருக்கிறது. 

ஆரூர் மூனா