Saturday 20 December 2014

பிகே படம் பார்க்க விரும்பிய கதை

பிசாசு படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் பிகேவும் பிசாசுவும் ஒரே நேரத்தில் ரிலீசாகப் போகிறது என்றதும் என் முதல் சாய்ஸ் பிகே என்று ஆனது, காரணம் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.


2003 காலக்கட்டத்தில் நான் வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த திட்டத்தின் ப்ராஜக்ட் இன்சார்ஜ் ஆக ஒரு மராத்தி இணைந்தார்.

அடுத்த சில மாதங்களில் ப்ராஜக்ட்டின் பெரும்பாலான பதவிகளில் மராத்தியர்களே இருந்தனர். அதற்கு முன்னரே இந்தி பேச ஒரளவுக்கு கற்றுக் கொண்டதால் நான் தப்பித்து விட்டேன். விடாப்பிடியாக கற்றுக் கொள்ளாத தமிழர்கள் ஆலந்துர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றி விடப் பட்டனர்.

அந்த சமயம் முன்னாபாய் எம்பிபிஎஸ் படம் வெளியானது. படத்தின் பெரும்பகுதி மும்பையில் இருப்பது போல் இருந்ததால் என்னுடன் பணிபுரிந்த சீனியர் மராத்தியர் ஒருவர் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து கிளம்பினார். லோக்கல் கார்டியனாக நானும் படத்திற்கு சென்றேன்.


படம் பார்த்து முடித்த பிறகு தான் தெரிந்தது, இருட்டில் கல் என்று எடுத்தது வைரம் என்று ( ஆஹா என்ன ஒரு உவமை, எழுத்தாளன்டா நீ) இரண்டு நாள் படத்தின் பிரமிப்பிலிருந்து நான் விலகவேயில்லை. அதன் பிறகு சில நாட்கள் இரவுக்காட்சிக்கு முன்னாபாயுடனே இருந்தேன்.

ராஜ்குமார் ஹிரானி என் விருப்ப இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார். 

அடுத்த படமான லகே ரகோ முன்னாபாய் வெளியாகும் முன் எனக்கு டவுட்டை கொடுத்தது. காரணம் அது முன்னாபாயின் இரண்டாம் பாகம் என்பதால். இந்திய சினிமாக்களில் அதுவரை இரண்டாம் பாகமாக வந்த படங்கள் எல்லாமே மொக்கையாகத்தான் இருந்தன.


அதனால் முதல் காட்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அந்த படத்தின் ரிசல்ட் கேள்விபட்டவுடன் இரவுக்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்து படையை திரட்டிக் கொண்டு கிளம்பினால் சத்யம் ஹவுஸ்புல். அடுத்ததாக சென்றது மெலோடி என்று நினைக்கிறேன் நினைவில் இல்லை, அங்கும் ஹவுஸ்புல். அண்ணாவில் முதல் வரிசையில் தான் இடமிருந்தது. அண்ணா திரையரங்கம் எனக்கு தெரிந்து ஹவுஸ்புல்லானது அன்று தான்.

முன்னாபாய் படத்தை விட லகே ரகோ முன்னாபாய் படம் ட்ரிபுள் ஹிட். காட்சியமைப்பிலும். அப்படித்தான். கிட்டத்தட்ட காலாவதியாகி விட்டது என்று நினைத்த காந்தியிசம் இந்த காலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பக்காவான திரைக்கதையில் சொல்லி அசத்தியிருந்தார். மதிப்பில் மேலும் சில படி உயர்ந்தார் இயக்குனர்.


அதன் பிறகு இரண்டு படத்தையும் டிவிடியில் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே நினைவில் இல்லை.

பிறகு நான் திருவாரூரில் இருந்த காலக்கட்டத்தில் 2009ல் த்ரி இடியட்ஸ் படம் ரிலீசானது. நம்மூரில் இந்திப் படங்கள் ரிலீசாகாது என்பதால் காத்திருக்க நேரிட்டது. ஆனால் சில நாட்களிலேயே தஞ்சாவூர் வந்து படத்தின் டிவிடியை வாங்கி படத்தை பார்த்து மகிழ்ந்தேன். இன்று வரை அந்த படத்தின் காப்பி என் ஹார்ட்டிஸ்க்கில் இருக்கிறது. நான் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

அவரின் படங்கள் பார்த்து பார்த்து நான் பரம ரசிகனாகி விட்டேன். உண்மையில் எந்த சமரசத்திற்கும் உட்படாமல் உயரிய கருத்துக்களோடு நினைத்ததை படமாக எடுக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது.

முன்னாபாய் படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் உளவியல் சிக்கல்களை சொல்லி அப்ளாஸை அள்ளியது. லகே ரகோ முன்னாபாய் படத்தில் காந்திய கருத்துக்களை இன்றைய காலக்கட்டத்திற்கு எப்படி பயன்படுத்த முடியம் என்பதை காண்பித்து வசூலை அள்ளியது. த்ரீ இடியட்ஸ் படம் கல்வித்துறையில் நடக்கும் குறைபாடுகளை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியது.

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாய் வந்துள்ளதே இந்த பிகே படம். மதங்களில் விரவிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை தைரியமாக வெளியில் சொல்லி சாதி மத நம்பிக்கைகள் அதிகமுள்ள, பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதை பெருமையாக போட்டுக் கொள்ளும் மக்கள் நிறைந்த வடஇந்தியாவில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது தான் ஆச்சரியம்.

தமிழில் வந்திருந்தால் கூட இது இன்னுமொரு நல்லபடம் என்ற பெயரையே சம்பாதித்து இருக்கும். ஆனால் இந்தியில் வந்திருப்பது தான் இதன் ஆகப் பெரும் பலம்.

இந்தப் படம் தமிழில் ரீமேக்காகி வந்தால் கண்டிப்பாக பலத்த வரவேற்பை பெறும். மக்களே படத்தை தவற விடாதீர்கள். உங்களுக்காக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் வெளியாகியுள்ளது. படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை. வயிறு வலிக்க சிரித்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா

Friday 19 December 2014

PK - சினிமா விமர்சனம்

அமீர்கான் இன்றைய நடிகர்களுக்கெல்லாம் இளமையை தக்க வைப்பதில் சவால் விடுகிறார். கண்டிப்பாக இந்த படம் இந்த கூட்டணியின் முந்தைய சாதனையான த்ரீ இடியட்ஸை விஞ்சும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


இந்த பால்வெளியில் இந்த சூரிய மண்டலத்தைப் போல் பல உள்ளது. அது போல் ஒரு சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு கிரகத்தில் இருந்து நம் பூமிக்கு வரும் ஏலியன் அமீர்கான்.

ராஜஸ்தானில் விண்கலத்தில் இருந்து இறங்கியதும் அதீதி தேவோ பவ என்னும் இந்திய கொள்கையின் படி அந்த விண்கலத்தை கண்ட்ரோல் செய்யும் ரிமோட்டை ஒரு இந்தியனிடம் பறி கொடுக்கிறார்.

ரிமோட் பறிபோனதால் மீண்டும் தனது கிரகத்திற்கு செல்ல முடியாமல் இங்கேயே ரிமோட்டை தேடியலையும் அமீர்கானுக்கு பெல்ஜியத்தில் பாகிஸ்தான் வாலிபனுடன் காதல் தோல்வியில் சிக்கி டெல்லியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் அனுஷ்கா ஷர்மாவின் நட்பு கிடைக்கிறது. 


தனது ரிமோட் இந்தியாவின் பெரும் சாமியார்களில் ஒருவரான சௌரப் சுக்லாவிடம் இருக்கிறது என்பதை அறியும் அமீர்கான் அனுஷ்கா ஷர்மாவின் உதவியுடன் அந்த ரிமோட்டை பெற்று தனது கிரகத்திற்கு திரும்புவதே பிகே படத்தின் கதை.

முதல் காட்சியிலேயே நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார் இயக்குனர்.  விண்கலத்தில் இருந்து நிர்வாணமாக இறங்கும் அமீர்கானிடம் டாலர் செயின் வடிவில் இருக்கும் ரிமோட் அறிமுக காட்சியிலேயே பறி போகிறது. அங்கேயே அடுத்தது என்ன என்று யோசிக்க வைத்து இருக்கிறார்கள்.


படம் முழுவதுமே மதத்திற்கும் போலி சாமியார்களுக்கும் சவுக்கடிகள் நீக்கமற நிறைந்திருக்கிறது. கடவுளை மற, மனிதனை நினை என்ற பெரியாரின் வரிகளே படத்தின் சாராம்சம்.

இந்தியில் கவிதை பாடி அறிமுகமாகும் சுஷாந்தை விரும்ப தொடங்கும் அனுஷ்கா, அவர் பாகிஸ்தானி என்று தெரிந்ததும் அவரை விட்டு விலகுவதும் பிறகு காதல் கொள்வதும் பிரமாதமான கேரக்டரைசேசன்.

அதே போல் சுஷாந்தும் அனுஷ்காவும் ஒரு காரணத்தால் பிரிவதும், பிரிவில் ஒரு ட்விஸ்ட்  வைத்திருப்பதும் சுவாரஸ்யத்திற்காக. ஆனால் நான் அந்த ட்விஸ்ட்டை ஆரம்பித்திலேயே கணித்து விட்டேன். 


ஒரு படத்திற்கு சுவாரஸ்யமான காட்சிகள் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கும். துப்பாக்கியில் அந்த பதினாறு தீவிரவாதிகளை ஒரே நேரத்தில் சுடும் காட்சி, நாயை வைத்து தங்கையை கண்டுபிடிக்கும் காட்சி போல.

இந்த படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் இருக்கிறது. 

காணாமல் போனவர்கள் பற்றிய பிட்நோட்டீஸ் ரயில்களில் வினியோகிப்பார்கள் அல்லவா. அது போல வினாயகர், சரஸ்வதி போன்ற கடவுள்களை காணவில்லை என்று அமீர்கான் பிட்நோட்டீஸ் வினியோகிப்பது. 

எப்போதும் மஞ்சள் ஹெல்மெட் போட்டிருப்பதற்கான விளக்கம்,

கோயில் உண்டியலில் சாவகாசமாக பணத்தை லவட்டுவது, மழை பெய்யும் காலங்களில் எங்கு தங்குவாய் என்ற அனுஷ்காவின் கேள்விக்கு டெமோ காட்ட போலீஸ் ஜீப் முன்னாலேயே ஒன்னுக்கடித்து ஜெயிலுக்கு போவது 

என நிறைய இருக்கிறது.

பசிக்கிறது சாப்பாடு வேணும் என தான் வாங்கிய சாமி சிலையிடம் அமீர்கான் வேண்ட ஒரு அம்மா சம்சா வழங்க பிரமித்துப் போய் ரிமோட் வேணும் என வேண்ட, கிடைக்காமல் சிலை கொடுத்தவனிடம் சண்டை போட, அவனோ கோயிலுக்குள் சென்று பிரார்த்தித்தால் கிடைக்கும் என சொல்ல, அங்கும் ரிமோட் கிடைக்காமல் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணுவது என மனுசன் பின்னுகிறார்.

கோயில் ஏமாற்றியதால் தேங்காய், பூ, பழம் சகிதம் சர்ச்சுக்கு போய் பூஜை செய்வதும், சர்ச்சில் இருப்பவர்கள் விரட்டும் போது, சர்ச்சில் ஒயினை பிரசாதமாக வழங்குகிறார்கள் என்று அறிந்ததும், ரெண்டு ஒயின் பாட்டிலுடன் மசூதிக்கு செல்வது என அதகளம் பண்ணுகிறார் அமீர்.

வெள்ளைப் புடவை கட்டிய பெண்ணிடம் கையைப் பிடித்து விவரம் விசாரிக்க அருகில் இருப்பவர்கள் விதவையிடம் வம்பு பண்ணாதே என்று விரட்ட, சர்ச்சுக்கு வெள்ளை உடையுடன் திருமணத்திற்கு செல்லும் பெண்ணிடம் விதவையா என விசாரிக்க, அவர்களோ கருப்பு உடை அணிந்தவர்கள் தான் விதவைகள் என்று விரட்ட, பர்தா அணிந்த பெண்களிடம் நீங்கள் விதவையா என்று குசலம் விசாரிப்பது என விலா நோக சிரிக்க வைக்கிறார் அமீர்.

மிகச்சிறிய வேடத்தில் சஞ்சய்தத் வந்து காரணமே இல்லாமல் செத்துப் போகிறார். 

மனிதனில் இவன் இந்து, இவன் முஸ்லீம், இவன் கிறிஸ்துவன் என ஸ்டாம்ப்பா குத்தியிருக்கிறது என்று மூட நம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறார் இயக்குனர்.

மொழி தெரியாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு புரியும், படத்தை மட்டும் தவற விடாதீர்கள்.

கண்டிப்பாக தமிழில் ரீமேக் செய்யப்பட வேண்டிய திரைப்படம் இது.

ஆரூர் மூனா

Thursday 11 December 2014

ரஜினியின் லிங்கா - சினிமா விமர்சனம்

மற்ற நடிகர்களின் படங்களுக்கு சூப்பர் ஹிட், ஹிட், அபொவ் ஆவரேஜ், ஆவரேஜ், பிலோ ஆவரேஜ், சுமார், மொக்கை, சூர மொக்கை என ரகம் ரகமாக பிரிக்கலாம். ஆனால் ரஜினி படங்களில் சூர மொக்கையாக இருந்தால் சுமார் படம் எனவும், மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் எனவும் ரெண்டே ரகம் தான். லிங்கா சந்தேகமே இல்லாமல் சூப்பர் ஹிட் படம் தான்.

லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல, ரஜினி ரஜினி ரஜினி மட்டும் தான் படமே. இந்த ஒரு வார்த்தை போதும் மனம் மகிழ. மூளைக்கு தெரிகிறது இதெல்லாம் அதிகம் என. ஆனால் என்ன செய்ய மனது இதைத்தான் விரும்புகிறது.


ரஜினி சந்தானம் அன் கோவுடன் சென்னையில் திருட்டு தொழில் செய்து வருகிறார். தாத்தா ராஜா லிங்ககேஸ்வரன் சொத்துக்களை இழந்து குடும்பத்தை நிர்க்கதியில் விட்டு விட்ட கோபத்தில் இருக்கிறார் பேரன் லிங்கா. 

ஆனால் தாத்தா கட்டிய கோயிலை அவர் தான் திறக்க வேண்டும் என ஊர்க்காரர்கள் விரும்பி அனுஷ்கா மூலம் ரஜினியை ஊருக்கு அழைத்து வருகின்றனர். அங்கு மரகதலிங்கத்தை திருட முயற்சிக்கும் போது தாத்தாவின் கதை தெரிய வருகிறது.


ஆங்கிலேயர்களின் மறைமுக எதிர்ப்பை மீறி தன் சொத்து முழுவதையும் இழந்து மக்களுக்காக அணையை கட்டும் தாத்தா ஐசிஎஸ் லிங்கேஸ்வரன் சூழ்ச்சியால் மக்களாலேயே அந்த ஊரை விட்டு விரட்டப்படுகிறார். பின்னர் உண்மை அறிந்து மனம் திருந்தும் மக்கள் அழைத்தும் அந்த ஊருக்கு வர மறுத்து விடுகிறார்.  

விவரம் தெரிய வந்ததும் பேரன் ரஜினி அந்த அணைக்கு தற்காலத்தில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே லிங்காவின் கதை.

ரஜினியின் அறிமுக காட்சியில் விசில்கள் பட்டையை கிளப்புகின்றன. மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் படம் வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு. திகட்ட திகட்ட விருந்து படைத்து அனுப்பியிருக்கிறார் இயக்குனர்.


கிராபிக்ஸ் என்று தெரிந்தும் ரயில் பைட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த நடையிலும் உடையிலும் ஸ்டைலிலும் ரஜினி எல்லா நடிகர்களின் அந்தஸ்துக்கும் மேலே சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்.

படத்தின் ஆகப்பெரும் பலம் ப்ளாஷ்பேக் காட்சிகள் தான். பேரன் ரஜினியை விட தாத்தா ரஜினிதான் அதிகம் கவர்கிறார். தலைவா, தலைவா என்று பெரும்குரலெடுத்து அழைக்கத் தோன்றுகிறது.


வயசானாலும் தலைவனின் அழகும் ஸ்டைலும் என்னைக்கும் மாறாது. டைட் குளோப் மட்டும் தான் சற்று உண்மையை சொல்கிறது. அப்பவும் தலைவனுக்கு வயசாகி விட்டதே என்று வருந்தத்தான் தோன்றுகிறது. ஆனாலும் தலைவன் தலைவன் தான்.

ரஜினிக்கு அடுத்து கைத்தட்டல் பெறுபவர் சந்தானம் தான். எல்லா ரஜினியின் டயலாக்குக்கும் கவுண்ட்டர் கொடுத்து அப்ளாஸை அள்ளுகிறார். கருணாகரன் வருகிறார் அவ்வளவு தான்.

அனுஷ்கா சும்மா கும்மென்று இருக்கிறார். சோனாக்ஷியும் அப்படித்தான். ரஜினி படத்தில் அவரைத் தவிர மற்றவர்களை புகழ்வது தலைவனுக்கு செய்யும் இழுக்கு. அதனால் இவ்வளவு தான் சொல்ல முடியும்.

வில்லன்கள் தான் சற்று கவலையை ஏற்படுத்துகின்றனர். பலம் குறைந்த வில்லன்கள் எடுபடாமலேயே போகின்றனர். லெஜன்ட் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு முன் கம்பீரமாக நின்று பெயர் வாங்கிய ஜெகபதிபாபு தலைவன் முன்னால் எடுபடாமலேயே போகின்றார். 

வெள்ளைக்கார வில்லனும் அப்படித்தான். நயவஞ்சகனாக வரும் சுந்தரராஜன் மட்டும் ஓகே. ரகுவரன் இல்லாத குறை இப்போது தான் தெரிகிறது. பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

முதல் ஒரு மணிநேர காட்சிகள் ரொம்பவும் லைட்டாக இருப்பது போல் எனக்கு படுகிறது. இருந்தாலும் தலைவனுக்காக ஓகே.

ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினிக்காக மட்டுமே படத்தை எந்த வித சங்கடங்களும் இன்றி சந்தோஷமாக பார்க்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்து.

என்னடா படத்தில் குறைகளே இல்லையா என்று யோசிக்க வேண்டாம். அது இருக்கு ரெண்டு பக்கத்துக்கு. ரசிகனாக என்னதான் கைதட்டி விசிலடித்து படத்தை ரசித்து பார்த்தாலும் விமர்சகன் அவ்வப்போது எட்டிப் பார்த்து ரசிப்புத்தன்மையை குறைத்துக் கொண்டே வந்தான். அவன் கொன்றுதின்று ரசிகனின் பார்வையில் அமைந்த விமர்சனம் இது.

இன்று இன்னும் ஒரு காட்சி பார்க்க வேண்டியிருக்கிறது. அதனை பார்த்து விட்டு ரசிகனை உள் தள்ளி விமர்சகனாய் ஏகப்பட்ட சர்ச்சைகளோடு நாளை பதிவிடுகிறேன்.

இந்த ஒரு காட்சி பார்க்க 1200 ஓவா செலவு பண்ணது ஜீரணிக்க முடியவில்லை. ரூம் போட்டு மகாதியானத்துடன் புலம்பி விட்டு நாளை வருகிறேன்.

ஆரூர் மூனா

Wednesday 3 December 2014

ஒரு விபத்தும், 23ம் புலிகேசி படமும்

இந்த பாழாப் போன மகாதியானத்துனால கல்யாணத்திற்கு முன்பு வரை நான் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சொல்வதற்கு நிறைய சம்பவங்கள் இருக்கிறது. அதில் ஒன்று இது.


2005-06 சமயத்தில் நான் வேலை பார்த்த கட்டுமான கம்பெனி விருதுநகரிலிருந்து கயத்தாறு வரை ஆறுவழிப்பாதை தேசிய நெடுஞ்சாலை போடுவதற்கான டெண்டர் எடுத்து வேலையும் துவங்கியது. இதற்கென அலுவலகம் விருதுநகர் சாத்தூர் இடையே உள்ள சிலுக்குவார்பட்டியில் அமைக்கப்பட்டது.

நான் அந்த சமயம் சென்னை மண்டல அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். சென்னை மண்டலத்துக்குட்பட்ட எந்த திட்டத்தில் விபத்துகள் நடந்தாலும் நான் தான் அதனை கவனித்து பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி முதல் கம்பெனியிலிருந்து நிவாரண நிதி வரை வாங்கித் தர வேண்டும்.



ஒரு முறை பிக்ஸட் அசெட் ரிஜிஸ்டரை சோதனை செய்வதற்காக சிலுக்குவார்பட்டிக்கு சென்றிருந்தேன். முதல் நாள் வேலையை முடித்து விட்டு விருதுநகருக்கு சென்று அய்யா காமராஜர் வாழ்ந்த வீட்டை பார்த்து விட்டு உற்சாகமாகவே மகாதியானத்தை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.

நிற்க.

இந்த இடத்தில் ஒரு விளக்கம். நான் அதுவரை தென்பகுதிகளுக்குட்பட்ட சிறுநகரங்களுக்கோ கிராமத்திற்கோ சென்றதில்லை. மதுரை, நெல்லை, கன்னியாக்குமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் இங்கெல்லாம் நல்ல பரிட்சயம் உண்டு. திருவனந்தபுரத்தில் 2004-05ல் இதே நிறுவனத்தின் வேறொரு புராஜெக்ட்டில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து இருக்கிறேன்.

விளக்கம் முடிந்தது. பின்னாடி உபயோகப்படலாம் உங்களுக்கு.


நான் ஒரு தேசாந்திரி. எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள சந்து பொந்து வரை சென்று வந்து விடுவேன். முதல் நாள் விருதுநகர் சென்று விட்டதால் மறுநாள் சாத்தூர் என்று முடிவு செய்து விட்டோம்.

மறுநாள் மதியம் இரண்டு மணியளவில் அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. எங்கள் அலுவலத்திலிருந்து 2 கிமீ தொலைவில் எங்கள் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றிய ஒருவர் சாலை விபத்தில் சிக்கி விட்டதாக கூறினர்.

அந்த ப்ராஜட் மேனேஜர் விவரத்தை சென்னை மண்டல பொது மேலாளருக்கு தெரிவிக்க அவரோ "செந்தில் அங்கு தான் இருக்கிறான். அவனிடம் பொறுப்பை விட்டு விடுங்கள் அவன் பார்த்துக் கொள்வான்" என்று கூறியது மட்டுமில்லாமல் என்னிடமும் விவரம் தெரிவித்து கவனிக்கச் சொன்னார்.



உடனே அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன். நான் போய் சேரும் சமயம் விருதுநகரிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து விட்டது. அந்த மெக்கானிக் கம்பெனியின் பஜாஜ் எம்80 வண்டியில் சென்று ஒரு பொக்லைனின் பழுது பார்த்து விட்டு திரும்பி வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றிருக்கிறது. தலையில் பலத்த காயம்.

அடிபட்ட வண்டியை ஒரு அலுவலக உதவியாளரிடம் கொடுத்து அலுவலகத்திற்கு எடுத்து செல்ல சொல்லி விட்டேன். வண்டி ஓட்டும் கண்டிசனில் இருந்தது.

ஆம்புலன்ஸில் ஏற்றி அவன் தலையில் துணியை சுற்றி என் மடியில் வைத்துக் கொண்டேன். அவனுக்கு நினைவு இருந்தது. ஆந்திரா பையன் எப்படி விபத்து நடந்தது என்று தெலுகில் என்னிடம் கூறிக் கொண்டே வந்தான். ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை உள்ளே நுழையும் போது சிறு விசும்பலுடன் தலை தொங்கியது.

மருத்துவர்கள் சோதித்து அவன் இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள். உடல் மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவன் குடும்பம் பற்றி விசாரித்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். விருதுநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

அந்த பெண்ணிடம் விஷயத்தை சொல்ல முடியாது. எனவே ஊரில் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவளது கணவன் அவசர வேலையாக கேரளா சென்று விட்டதால் அவளை காரில் ஊருக்கு போகச் சொன்னதாகவும், அவன் கேரளாவிலிருந்து நேரடியாக ஊருக்கு வந்து விடுவான் எனவும் அந்த பெண்ணிடம் சொல்லி காரில் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த இரண்டு பெண்களை துணைக்கு அமர்த்தி அனுப்பி வைத்தாயிற்று.

அதன் பிறகு தான் கவனித்தேன், என் சட்டை, பேண்ட் ரத்தமாக இருந்தது- பிறகு அங்கேயே கடையில் வேட்டி சட்டை வாங்கி மாற்றிப் போட்டுக் கொண்டேன்.

அதற்குள் போலீசில் இருந்து ஆள் வந்து விடவே விவரம் தெரிவித்து, கவனித்து மற்ற பார்மாலிட்டிஸை பார்க்கச் சொன்னேன். மருத்துவமனையில் கேட்டால் பிரேத பரிசோதனை பண்ணும் டாக்டர் நாளை தான் வருவார். பிறகு தான் பாடி கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள்.

அவர்களையும் கவனித்து 6 மணிக்குள்ளாகவே பிரேத பரிசோதனை முடித்து போலீசில் டாக்குமெண்ட் வேலைகளை முடித்து ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றி அனுப்பி வைத்தேன். இவ்வளவும் முடிந்து அரைமணி கழிந்தே நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.

மண்டல பொது மேலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு ஜீப் நேராக மகாதியான கூடாரத்திற்குள் புகுந்தது. பிறகென்ன சாப்பிட அரைக்கல்லு, பார்சல் அரைக்கல்லு வாங்கிக்கிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சிலுக்குவார்பட்டி வந்தோம்.

மற்ற நண்பர்கள் படுக்க சென்று விட நான் மட்டும் செக்யூரிட்டியிடம் பேசிக் கொண்டு இருந்தேன். சிவகாசியில் ஒரு தியேட்டரில் 23ம் புலிகேசி வெளியாகியிருப்பதாகவும் பகல் காட்சியே பார்த்து விட்டதாகவும் படம் பிரமாதம் என்றும் கூறினார்.

அப்போது எனக்குள் இருந்த அரக்கன் விழித்துக் கொண்டான்.

அப்போது மணி எட்டரை. மற்ற நண்பர்களை கூப்பிடலாம் என்று போனால் எல்லாம் மட்டையாகி தூங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் மட்டும் கிளம்புவது என்று முடிவெடுத்தேன். செக்யுரிட்டியிடம் சிவகாசிக்கு வழி கேட்டேன்.

திருநெல்வேலி பக்கம் சாலையில் சென்றால் கொஞ்ச துரத்தில் ஒரு நாலு வழி சந்திப்பு இருக்கும். அதில் இடது பக்கம் சாத்தூர் செல்லும் வழி எனவும் வலது பக்கம் சிவகாசி  செல்லும் வழி எனவும் போட்டு இருக்கும் அதில் வலது பக்கம் திரும்பினால் அரைமணியில் சிவகாசி வந்து விடும் என்றார். வாசலில் இருந்த ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மிச்சமிருந்த அரைக்கல்லை அரைலிட்டர் பெப்ஸியில் கலந்து இடுப்பில் சொருகி கொண்டு புறப்பட்டேன்.

சொன்னவழியே சென்று வலது பக்கம் திரும்பினேன். போகும் வழியில் அரைக்கல்லை சாப்பிட்டுக் கொண்டே சென்று படமும் பார்த்து விட்டு சரியான வழியில் எங்கள் ஆபீசுக்கும் வந்து அறைவாசலில் வண்டியை நிறுத்தி விட்டு என் அறையில் உறங்கியும் விட்டேன்.

காலையில் எழுந்து பார்த்தால் நேற்று விபத்துக்குள்ளான வண்டி வாசலில் இருந்தது.

ஆரூர் மூனா

Monday 1 December 2014

பஞ்சேந்திரியா - வீரவன்னியர், வீரதேவர், வீரகவுண்டர் தேவையா?

ரெண்டு நாளைக்கு முன்னாள் நான் பகிர்ந்திருந்த பேஸ்புக்  ஸ்டேட்டஸ் இது.

அது என்னங்கடா வீர வன்னியன், முரட்டு தேவன், வீர கவுண்டன், தெறி வீர மறவன்னு அடைமொழி, அதுவும் பேஸ்புக்ல. நீங்கள்லாம் அரிவாள்ல பல்லு தேய்ச்சி கத்தியால காலை டிபன் சாப்பிடுறவனுங்களா. 

ஏன், நான் வீரன்டான்னு சொல்லி ஒரு அய்யர் ஓட்டல்ல போய் காசு கொடுக்காம சாப்பிட்டு பாரு. நிஜமாவே ஒரு வீர அய்யரை அங்க பாப்ப.
நிஜத்துக்கு பக்கத்துல வாழப் பழகுங்கடா வெங்காயங்களா. 

# அடச்சே நம்மளை காலையிலேயே டென்சனாக்கி உட்டுட்டாய்ங்களே

அந்த பொங்கலுக்கு காரணம்
ஒரு நாள் காலையில் ஊர்ப்பக்கத்தை சேர்ந்த ஒருத்தர் உள்டப்பியில் வந்து நீங்க எங்க சாதி தானே, அதனால் பின்னாடி வீர .............................. அப்படின்னு போட்டுக்கங்க. அப்பத்தான் கெத்தா இருக்கும்ன்னார். அவரை அப்படியே நட்பு வட்டத்துல இருந்து அலேக்கா நகர்த்திட்டேன். இவனுங்க சகவாசம் தான் ஆபத்து.

--------------------------------------------------------

குழல் இனிது, யாழ் இனிது என்போர் மழலைச் சொல் கேளாதவர்

எல்லையில்லாமல் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

--------------------------------------------------------

சரோஜா தேவி டைப் புத்தகங்களில் கில்மா டைப் கதைகளுக்கென்றே சில டெம்ப்ளேட்கள் இருக்கும். மழைக்கு மரத்தில் ஒதுங்கிய போது, பேருந்தில் இரவுப் பயணத்தில், எதிர்த்த வீட்டு ஆண்ட்டி என. அதில் ஒரு டெம்ப்ளேட் லிப்டில் பயணத்தில் அப்படியே... . நானும் யோசிப்பது உண்டு, எப்படி சாத்தியம் இது, எழுதுவது கற்பனை கதை என்றாலும் ரியாலிட்டிக்கு பக்கத்தில் இருக்க வேண்டாமா என.

அயனாவரம் ரயில்வே ஜாயிண்ட் ஆபீஸில் ஒரு லிப்ட் இருக்கிறது. வெறும் இரண்டு மாடிக்கு மட்டும் தான் லிப்ட். அதன் வேகம் இருக்கே. அந்த நினைப்புடன் இருவர் தரைத்தளத்தில் ஏறினால் இரண்டாம் மாடி போவதற்குள் எல்லாத்தையும்..... ம். அப்புறம் சாவகாசமாகவே லிப்ட்டை விட்டு வெளிவரலாம்.

மங்கள்யானை விட படுவேகம். நடத்துங்கடா டேய்.

-------------------------------------------------------

ஒரு ப்ளாஷ்பேக்


-------------------------------------------------------------

இன்று பேப்பரில் ஐ படத்தின் விளம்பரத்தை பார்த்தேன். சென்னையின் மிகப் பெரும்பான்மையான அரங்குகளில் ஐ படம் தான் வெளியாகப் போகுது போல. சத்யம்ல 3 அரங்கு, எஸ்கேப்ல 8 அரங்கு, ஐநாக்ஸ்ல 4 அரங்கு, பெரம்பூர்ல எஸ்2ல 4 அரங்கு, தேவில 3 அரங்கு, சாந்தில 2 அரங்கு, ஆல்பர்ட்ல 2 அரங்கு, அபிராமில 3 அரங்கு, பிவிஆர்ல 3 அரங்கு, ஈகாவுல 2 அரங்கு, உதயம்ல 2 அரங்கு, லக்ஸ்ல 6 அரங்கு, இன்னும் மிச்சம் மீதி இருக்கும் அரங்குலயும் ஐ படம் தான் வரப்போகுதாம்.

அப்ப அஜித்தின் என்னை அறிந்தால் படத்துக்கு குறைவான அரங்குகளே கிடைக்கப் போகிறது. அதையும் தாண்டி விஷாலின் ஆம்பள படத்துக்கு டூரிங் டாக்கீஸ் கூட கிடைக்காது போல இருக்கே.

அப்ப இந்த வருட பொங்கலுக்கு டாப் ஸ்டார் ச்சீயான் விக்ரம் தானா

வெள்ளியன்று  ஏகப்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதுவும் லோ பட்ஜெட் படங்கள். அதுக்கு அப்புறம் கிறிஸ்துமஸ்க்கு தான் மற்ற படங்கள் வெளியாகும் போல. இடைப்பட்ட அனைத்து நாட்களையும் லிங்கா எடுத்துக் கொள்ளப் போகின்றது.

தலைவர் ராக்ஸ்.

ஆரூர் மூனா

Sunday 30 November 2014

காவியத்தலைவன் படம் பார்த்த / பார்க்க விரும்பிய கதை

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தின் முதல் காட்சிக்காக அடித்துப் பிடித்து 09.30 மணிக்கே கிளம்பியது காவியத்தலைவன் படத்திற்காகத்தான். 


 இப்பொழுது வீட்டில் பாப்பா இருப்பதால் முன்பு போல் நினைத்தவுடன் கிளம்புவது எல்லாம் நடக்காத காரியம். காலையிலேயே எழுந்து வீட்டம்மாவுக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுத்து விட்டு தாஜா பண்ணி சினிமாவுக்கு கிளம்பினேன்.

திரையரங்கில் முதல் வண்டியை நான் தான் பார்க் பண்ணினேன். அதுவே மிகவும் சந்தேகத்தை கிளப்பியது. அது போல என்னுடன் காலை 10மணிக்காட்சி படம் பார்த்தவர்கள் 20 பேர் தான் இருக்கும்.

ஆனால் வசந்தபாலனின் டச் தான் படத்தின் ஸ்பெஷலாக இருந்தது.

---------------------------------------------------------------------------

வசந்தபாலன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் தோத்தவனை நாயகனாக வைத்து அவர் இயக்கிய வெயில் எனக்கு மிக மிக நெருக்கமான படம். அந்த படத்தில் வரும் பசுபதி கேரக்டர் கிட்டத்தட்ட நானே தான். பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் அந்த படத்தின் க்ளைமாக்ஸ் நேரத்தில் நான் அழுத அழுகைக்கு தியேட்டரில் அமர்ந்திருந்த எல்லோரும் என்னை ஆறுதல்படுத்தினர். காருக்குள் கில்மா பண்ணிக்கிட்டு இருந்த ஜோடிகள் உள்பட.

 
அங்காடி தெரு படமும் அப்படித்தான். நான் படம் பார்த்து ஓவராக உணர்ச்சி வசப்பட்டு சேர்மக்கனி ரொம்ப கஷ்டப்படுறா, நானே கட்டிக்கிறேன்னு என் வீட்டம்மாக்கிட்டயே சொல்லி டின்னர் சாப்பிடும் போது நடுமுதுகிலேயே மிதி வாங்கினேன்

காவல் கோட்டம் நாவலை முன்பே படித்திருந்ததால் அரவாண் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முடிவு நேர்மாறாக இருந்தது. இருந்தாலும் வசந்தபாலனின் மீதான ரசிப்புத்தன்மை கொஞ்சம் கூட குறையவில்லை.

----------------------------------------------------------

படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு எனக்கான மிக முக்கிய காரணம் நாடகம். என் வயதையொத்த பலபேருக்கே தெருவோர நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. நான் சொல்வது எஸ். வி. சேகர், கிரேஸி மோகன் வகையறா நாடகங்களை அல்ல.

நான் வளர்ந்த திருவாரூர் பகுதிகளிலேயே 80களின் இறுதியில் நாடகம் வழக்கொழிந்து விட்டது. அப்படியே சில இடங்களில் நடந்திருந்தாலும் எனக்கு சிறு வயது என்பதால் அனுமதிக்க மாட்டார்கள்.

என் அம்மா வழி பாட்டி வீடு இருக்கும் நீடாமங்கலம் பகுதிகளிலும், என் பெரியம்மா வீடு இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதிகளிலும் நடக்கும். சித்திரை திருவிழா காலங்களில் தவறாமல் எல்லா சுற்றுவட்டார கிராமங்களிலும் நடக்கும் நாடகம், கரகாட்டம் எல்லாவற்றையும் பார்ப்பேன்.

இரண்டு இரவுகள் முழுக்க நடைபெறும் நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நாடகங்களுக்கு இடையே வரும் பபூன் காமெடிகள் இன்று அபத்தமாக தெரிந்தாலும் அன்று ரசித்து கைதட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கேன்.

இன்று அந்த மாதிரி நாடகங்கள் காணாமல் போய் விட்டன. முழு ராத்திரி கண்விழித்து பார்க்கும் பொறுமையும் மக்களுக்கு இல்லாமல் போய் விட்டது. என்னைப் போன்ற நாடக ஆர்வலர்களுக்கு உள்ளுக்குள்ளேயே அந்த நாடக கலாரசிகன் உறங்கிப் போய் விட்டான்.

ஆரூர் மூனா

Saturday 29 November 2014

நாத்திகன் கோவிலுக்கு செல்லக் கூடாதா

ஒரு பதிவர் அவர், பெயர் வேண்டாமே. அவ்வப்போது வந்து என்னிடம் வாலன்டியராக சாட் பண்ணுவார். நான் ப்ரீயாக இருக்கும் போது பதிலளிப்பேன். நான் திருவாரூர்க்காரன் என்று அறிந்ததும் தேர் பற்றியும் மும்மூர்த்திகள் பற்றியும் விவாதிப்பார். எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுவேன். தல புராணம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.


திருவாரூர் பெரியகோவில் பற்றி ஆர்வத்துடன் நான் விவரித்ததை கவனித்த அவர் ஆன்மீக விஷயங்களை என்னிடம் சொற்பொழிவாக ஆற்றத் தொடங்கினார்.

அய்யா நான் நாத்திகன். இது பற்றி விவாதித்து, அதை நான் மறுத்து பேசி நமது நட்பு கெட்டு விடும், வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, என் நம்பிக்கை எனக்கு. அப்படியே விட்டு விடுவோம். உலகத்தில் பேசுவதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது வாருங்கள் விவாதிப்போம் என்றேன்.

உடனே என்னிடம் சண்டையிட தொடங்கி விட்டார். நம்பிக்கையில்லாத நீ எப்படி கோவிலுக்குள் நுழையலாம். என்ன அருகதை இருக்கு உனக்கு, நல்ல குடும்பத்தில் பிறந்தவங்க சாமி கும்பிடுவாங்க, அப்படி இப்படியென்று இன்னும் சொல்ல முடியாத நிறைய வார்த்தைகளை விட்டார்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக கோவிலுக்குள் போக கூடாது என்றால் எப்படி. அது கோவில் மட்டுமல்ல, என் பயிற்சிக்களம். நான் கிட்டிபுள், கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டது அங்கு தான். 

ஒவ்வொரு வருடமும் முழு பரிட்சை காலத்தில் நண்பர்களுடன் குரூப் ஸ்டடி பண்ணியது அங்கு தான். தனியாக படிப்பதை காட்டிலும் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது நிறைய பலனை தரும் என்பதை அறிந்ததும் அங்கு தான்.

நான் சைட் அடிக்கத் தொடங்கியது அங்கு தான். ஒரு தாவணி அணிந்த பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்கியதும் அங்கு தான். திருவாரூர் போன்ற சிறு நகரங்களில் பெண்களை கண்ட இடத்திலும் காண முடியாது. ஒரு பார்க், பீச் போன்ற பொழுது போக்கு இடங்களும் கிடையாது. பெண்களை காண வேண்டுமென்றால் சாயரட்சை நடைபெறும் நேரத்திற்கு கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

இன்றும் கூட நான் திருவாரூரில் இருந்து மனசு சரியில்லாவிட்டால் கோவிலுக்கு சென்று என் நண்பர்களுடன் பொழுதை  செலவிட்ட பகுதியில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டால் போதும். என் எனர்ஜி லெவல் ஜிவ்வென்று ஏறி விடும்.

இப்படி என்னுடன் என் பால்ய வயதில் இணைபிரியாமல் இருந்த திருவாரூர் கோவிலை இது போன்ற அரைகுறைகளின் பேச்சை கேட்டு புறந்தள்ள முடியுமா என்ன.

ஆரூர் மூனா

Friday 28 November 2014

காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சினிமா விமர்சனம் எழுதுகிறேன்.

1930களில் நாசரின் நாடக குழுவில் சித்தார்த்தும் பிரித்விராஜ்-ம் சைடுபார்ட்டாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் இலக்கு ராஜபார்ட்டாக இருக்கிறது. ஆனால் அவர்களின் வழிமுறையில் வித்தியாசம் என்னவென்றால் பிரித்விராஜ் ரஜினியாக நினைக்கிறார். சித்தார்த் கமல்ஆக நினைக்கிறார்.



 ஒரு சமயத்தில் சித்தார்த் ராஜபார்ட்டாக நடிக்கத் துவங்கும் போது பிரித்விராஜ் பொறாமை கொள்கிறார். சித்தார்த்தின் ஜமீன்தாரின் மகளுடனான காதலை நாசரிடம் போட்டுக் கொடுக்கிறார். அதனால் கம்பெனியை விட்டு துரத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

நாடககுழுவில் ஸ்திரீபார்ட்டாக நடிக்க வேதிகா வருகிறார். பிரித்விராஜ் வேதிகாவை விரும்ப வேதிகாவோ சித்தார்த்தை விரும்புகிறார். இதனால் சித்தார்த் மீது மேலும் வன்மம் கொள்கிறார் பிரித்விராஜ்.

நாசரின் மறைவுக்கு பிறகு நாடககுழு பிரித்விராஜ் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. சித்தார்த்தை நாடககுழுவை விட்டே துரத்துகிறார். பிறகு நாடககுழுவுடன் சித்தார்த் சேர்ந்தாரா வேதிகாவின் காதல் என்னவானது என்பதே காவியத்தலைவன்.
எதிலும் நல்லதே காணும் மனோபாவம் கொண்ட கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக சித்தார்த். சிறப்பாக நடித்துள்ளார். ராஜபார்ட் தேர்வுக்காக சூரபத்மனாக நடிக்கும் போது பிரமாதப்படுத்தி விடுகிறார். கண்டிப்பாக இந்தப்படம் அவரின் மார்க்கெட்டை இரண்டு படி உயர்த்திவிடுகிறது.

பிரித்விராஜ் கூட சித்தார்த்துக்கு கொஞ்சம் கூட சளைத்தவரில்லை. க்ளைமாக்ஸில் சித்தார்த்தின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தான் தோல்வியினால் பட்ட அவமானத்தை கண்ணீர் மல்க சொல்லும் போது தியேட்டரில் எழுந்து நின்று கைத்தட்ட தோன்றியது. நீர் நடிகனய்யா.
வேதிகா புராண பாத்திரங்களில் பின்னி எடுக்கிறார். சித்தார்த்துக்காக காத்திருந்து அடையும் காட்சியிலும் பிரித்விராஜை புறம் தள்ளும் காட்சியிலும் அட போட வைக்கிறார்.

நாசர் பற்றி சிறப்பாக சொல்லாவிட்டால் தான் தப்பு. கண்டிப்பாக குறிப்பிட வேண்டியது பொன்வண்ணனின் நடிப்பை தான். ராஜபார்ட்டுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார்.

காஸ்ட்யூம்கள் கனகச்சிதமாக இருக்கிறது. இயக்குனரின் மெனக்கெடல் தெரிகிறது.

எனக்கு பெரிய ஆச்சரியம் இசை தான். எந்த இடத்திலும் கம்ப்யூட்டர் கம்போசர் ஏஆர் ரஹ்மான் என்ற அடையாளம் தெரியவேயில்லை. அந்த கால இசை, இசைக்கருவிகள் என பின்னி பெடலெடுத்து இருக்கிறார். 

நெருடலான ஒரு விஷயம் லொகேஷன்கள். சுமாரான மசாலா இந்தி படமான ஆக்சன் ரீப்ளே படத்துக்கே 80களின் மும்பைக்கு மெனக்கெட்டு இருந்தார்கள். மதராஸபட்டிணம் படத்துக்கும் அப்படிதான் செய்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் படக்குழுவினர் மெனக்கெடவேயில்லை. காரைக்குடி பக்கம் செட்டியார் வீடுகளே போதும் என நினைத்து விட்டார்கள். 

ஐமீன் தங்குமிடம் மட்டும் தான் லொகேஷனுக்கு பொருந்துகிறது. கரண்ட் இல்லாத கிராமங்களில் லாந்தர் விளக்குகளை வைத்து மேடைக்கு வெளிச்சம் தரும் இடமும் சூப்பர். மற்ற இடங்கள் எல்லாம் சுமார் தான். அதே போல் சுதந்திர போராட்டம் கூட. பொருந்தவில்லை.

மற்றபடி படத்தில் தமிழகத்தின் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் உள்ள நாடககலையினை மேக்கப், நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் பகீர். 

பார்த்து ரசியுங்கள்.

ஆரூர் மூனா