பாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார்த்தைகள் மாறியிருக்கலாம்.) அது போல் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு லட்சணம் வைத்துள்ளோம்.
படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடம் நாயகன் அறிமுகப் பாடல். பிறகு சண்டை, அடுத்து என்ன நடக்கும் என்று பதைபதைக்க வைக்கும் இடைவேளை, இடைவேளை முடிந்து பத்து நிமிடத்தில் ஒரு மொக்கை மெலோடி பாட்டு, பரபர க்ளைமாக்ஸ் என்பதே சினிமா என்பதற்கு நாம் வைத்துள்ள அளவுகோல்.
இந்த சமாச்சாரங்கள் எல்லாத்தையும் அப்புறப்படுத்தியிருக்கிறது படம். படம் ஓடும் நேரம் ஒரு மணி நாற்பது நிமிடங்கள். முதல் அரைமணிநேரம் முடிந்ததுமே இடைவேளை. அடுத்து என்ன என்று எண்ண வைக்கும் இடைவேளை, அதிரடி சண்டைகள், சீட் நுனிக்கு வர வைக்கும் காட்சிகள், அறிமுகப் பாடல், ரெட்டை அர்த்த காமெடி, நெகிழ்வான க்ளைமாக்ஸ் என ஒன்றுமே இல்லை.
ஆனாலும் எனக்கு படம் மிகவும் பிடித்து இருந்தது. என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. சில காட்சிகளில் என்னையும் என் அப்பாவையும் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. சில காட்சிகளில் கண்கலங்க முடிந்தது. வேறென்ன வேண்டும் இது போன்ற படத்திற்கு.
ஆம்புலன்ஸில் டிரைவராக இருக்கிறார் ஆறுமுகம் பாலா. EMT (Emergency Medical Technician )ஆக இருக்கிறார் ரமேஷ் திலக். கைலாசம் என்ற பெரியவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தகவல் வருகிறது. இவர்கள் அழைக்க செல்கிறார்கள். அதகளம் பண்ணும் அவரை அழைத்து வந்து மருத்துவனைக்கு விடுகிறார்கள். அந்த நேரத்திற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
எல்லாருக்கும் அப்பாவைப் பற்றிய பீல் இருக்கும். நாம் வெளியில் காட்டிக் கொண்டு இருக்க மாட்டோம். பாசமெல்லாம் அம்மாவிடம் மட்டும் தான் பகிர்வோம். ஆனால் அவர் போனதுக்கு அப்புறம் வருத்தப் படுவோம். ஆனால் அவர் இருக்கும் போதே அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாமே புரிந்து கொள்ளும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
தனிமை ஒரு முதியவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதையும், வயதானால் ஏற்படும் குழந்தைத்தனத்தையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.
தன் மகனுடன் சண்டை, காரணம் கேட்டால் தான் எதனைப் பிடித்து ஒன்னுக்கு அடிக்கனும் என்று என் மகன் சொல்லக் கூடாது என்று வீம்பு பிடித்து அலையும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. சிறப்பாகவே செய்துள்ளார். தான் நினைத்ததை செய்யும் அடமெண்ட் பெரியவராக அதகளம் பண்ணுகிறார்.
நடுராத்திரி ஆட்டோவில் போகும் போது திடீரென்று ஆட வேண்டும் என்று அடம் பிடித்து ரோட்டில் தையதக்கா என்று குதித்து நடனமாடும் போது சிரிக்க வைக்கிறார்.
ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை ரமேஷ் திலக்கிற்கு காரில் பாடம் எடுக்கும் போது நெகிழ வைக்கிறார். படத்தில் நடித்ததற்காகவும் துணிந்து தயாரித்ததற்காகவும் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.
படத்தில் அவருக்கான குறை என்று பார்த்தால் வயதான பாத்திரம் செட்டாகவில்லை. வெறும்நரை முடி வைத்து, தொப்பை வைத்துக் கொண்டால் வயதானவருக்குரிய பீல் வந்து விடும் என்று நினைத்து இருக்கிறார்கள்.
ரமேஷ் திலக் சிறப்பாக நடித்துள்ளார். அவரை பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி கனா காணும் காலங்கள் நாடகத்தில் பார்த்துள்ளேன். இவரெல்லாம் எதுக்கு நடிக்கனும், ஆளும் சரியில்லை, முகமும் சரியில்லை என்று நினைத்துள்ளேன். ஆனால் எல்லாத்தையும் தவிடு பொடியாக்கியுள்ளார். இந்த படத்திற்கு அப்புறம் இவரை எனக்கு பிடிக்கிறது.
ஆச்சரியமான அறிமுகம் ஆறுமுகம் பாலா. அவரது டயலாக் டெலிவரியும் முகபாவங்களும், உடல்மொழியும் பிரமிக்க வைக்கின்றன. முதல் படம் என்றே தெரியவில்லை. சரியான வாய்ப்புகள் கிடைத்தால் நல்ல இடத்திற்கு செல்வார். அந்த ஸ்லாங்கில் அவர் பேசுவது வெகு இயல்பாக இருக்கிறது.
இடையிடையே வரும் கதாபாத்திரங்கள் கூட சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. காதல் தோல்வி குடிகாரன், ரமேஷ் திலக்கின் காதலி, அவரது அப்பா, சசிகுமார் ரசிகரான ஆட்டோ டிரைவர் எல்லாருமே கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் குறை என்றால் படம் சரியான விகிதத்தில் இல்லை. படம் கதையின் போக்கில் செல்கிறது. சுவாரஸ்யத்திற்காக மசாலா காட்சிகள் சேர்க்கப்பட வில்லை. அதனால் பி அண்ட் சி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.
பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் தான்.
ஆரூர் மூனா
ஆக மொத்தத்தில் மிட்டாய் இனிக்கிறது... நன்றி... ரசித்து விடுவோம்...
ReplyDelete(Mobile No. மாற்றி விட்டீர்களா...?)
நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியது மகிழ்வாக இருந்தது. நன்றி டிடி.
Deleteவிமர்சனம் தித்திக்கிறது
ReplyDeleteநன்றி நண்பா
Delete//படம் கதையின் போக்கில் செல்கிறது. சுவாரஸ்யத்திற்காக மசாலா காட்சிகள் சேர்க்கப்பட வில்லை.// nice!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteகண்டிப்பா பார்த்துடுவோம்
ReplyDeleteபாருங்கள் ரசிக்கவே செய்யும். நன்றி ராஜா
Deleteபடம் எனக்கும் புடிச்சிருந்தது...,
ReplyDelete"ஆரஞ்சு மிட்டாய்"ன்ற பேருக்கு ஏதாவது குறியீடு இருக்கான்னு யோசிச்சா ஒன்னும் வெளங்கல..!!
அவனது வாழ்க்கையில் சந்தோசமும் வருத்தமும் மாறி மாறி வருவது தான் பெயர்க்காரணம், அடுத்த காரணம் விஜய் சேதுபதி படம் முழுக்க ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடுகிறார்.
Delete