Wednesday, 22 July 2015

பஜ்ரங்கி பாய்ஜான்

பொதுவா ஒரு படம் ரிலீசாகி முதல் நாள் பார்ககவில்லையென்றால் அதற்கப்புறம் அந்த படத்திற்கு போக மாட்டேன். இந்த படம் ரிலீசான அன்று மாரி பார்த்து விட்டதால் இதனை பார்க்கும் எண்ணமே இல்லை. ஜில்மோர் தளமும் பெரிசாக எழுதவில்லை. அதனால் விட்டுவிட்டேன். நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். இந்த படம் பார்த்து விட்டு ஒரு குழந்தை தேம்பி தேம்பி அழும் காட்சி. 


உடனே முடிவு செய்து கிளம்பி விட்டேன். எனக்கும் சல்மான் கானுக்கும் பெரிதாக கெமிஸ்ட்ரி கிடையாது. அவரது படங்களை நான் விரும்பி பார்த்ததே கிடையாது. சின்ன வயதில் மைனே பியார் கியா. பதின்ம வயதில் ஹம் ஆப்கே ஹெயின் கோன். இப்போ பஜ்ரங்கி பாய்ஜான். சிடில பார்த்ததும், டிவியில் பார்த்ததும் இதில் கணக்குல வராது.

அதென்னவோ ஷாருக், அமீர், சையிப் பிடித்த அளவுக்கு சல்மான் பிடிக்காது. அவரது நெகட்டிவ் இமேஜ் தான் காரணம் என்று நினைக்கிறேன். எல்லா எண்ணத்தையும் இந்த படம் மாற்றி விட்டது.


கதை ஒன்னும் பெர்சா இல்லை. வழி தவறிய குழந்தையை அதன் அம்மாவிடம் சேர்ப்பிக்கும் வழக்கமான கதை தான். ஆனால் அதில் இந்துத்வா, ஜெய்ஸ்ரீராம், இந்தியா - பாகிஸ்தான் என வண்ணம் சேர்த்து கவனிக்க வைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் செண்ட்டிமெண்ட் தான். மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு வெற்றிக் கனியை பறித்து இருக்கிறார்கள். எனக்கு பக்கத்து சீட்களில் ஒரு சேட்டு குடும்பம் அமர்ந்து படம் பார்த்தது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் அந்த குடும்பத்திலேயே சற்று பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரியதாக இருந்த அம்மணி மேரே பச்சோ என்று கதறிக் கதறி அழுதுக் கொண்டு இருந்தார். 

அதை விட கொடுமை அந்த குழந்தை தாயுடன் சேரும் காட்சியில் நானே குமுறிக் குமுறி அழுதேன். கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ஜீன்ஸ் அம்மணி என்னை கவனிப்பது தெரிந்ததால் வெக்கம் வந்து தலையை குனிந்து கொண்டேன். 

என் நண்பன் ஒருத்தன் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருக்கிறான். அவனிடம் பேசிய போது தான் தெரிந்தது, அங்கும் இதே கதை தானாம். மக்கள் தியேட்டருக்கு வந்து குடும்பம் குடும்பமாய் அழுது செல்கிறார்களாம். இணைய பத்திரிக்கைகளில் படித்ததும் தான் தெரிந்தது, வடஇந்தியாவிலும் இதே நிலைமை தான். தக்காளி இந்தியனோட வீக் பாயிண்ட்ல குறி வச்சி அடிச்சி ஜெயிச்சிட்டானுங்க.

சல்மானுக்கும் அவரது அப்பாவுக்குமான புரிதல் சிறப்பாக இருந்தது, எனக்கும் எங்கப்பாவுக்கும் இருந்ததைப் போல. அதனாலேயே என்னால் படத்துடன் முதல் காட்சிகளிலேயே ஒன்ற முடிந்தது.

பாகிஸ்தான் குழந்தையாக வரும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா சரியான தேர்வு. முக அசைவுகளிலேயே மிக அனாயசமாக எக்ஸ்பிரசன்களை வெளிப்படுத்துகிறார். லட்சணமான களையான முகம். ஒவ்வொரு இடத்திலும் தன் பெயர் பவன், தான் இந்தியன் என்று உண்மையை சொல்லி சல்மான் கான் பிரச்சனையில் சிக்குவார். அதனை சொல்லவேண்டாம் என்று ஹர்ஷாலி ஜாடையிலேயே சொல்லும் காட்சிகளில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அது போல தன் வீட்டை கண்டவுடன் அவரது முகம் மலரும் பாருங்கள். காண கண்கோடி வேண்டும்.


நவாஸுதீன் சித்திக் பாகிஸ்தான் ரிப்போர்ட்டராக வருகிறார். எத்தனையோ படங்களில் அவரது நடிப்பை சிலாகித்து இருப்போம், அவருக்கே இந்த படத்தின் தீனி குறைவு தான். சல்மானுடன் நடந்து ஒரு செக் போஸ்ட்டை கடக்க போலீஸின் ஜீப் சைலன்சரில் வாழைப்பழத்தை வைத்து மடக்கும் போதும், ஹர்ஷாலி வாழைப்பழத் தோலை கீழே போட அதனை சமாளித்து எடுக்கும் போதும், ஒரு வீட்டில் வாசலில் முதியவரிடம் போலீஸை சமாளிக்க போலியாக சண்டை போடும் போதும் கவனிக்க வைக்கிறார்.

கரீனா கபூர் கான். கல்யாணமாகிடுச்சில. அதனால கான் போட்டு தான் ஆகனுமாம். முதல் பாதியில் நாகரீகமாக வந்து, பிரச்சனைகளின் போது சல்மானுக்கு துணை நிற்கிறார். இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் தலை காட்டுகிறார் அவ்வளவே.

சல்மான்கான் தன் மீதுள்ள சர்ச்சைகளையும் வழக்குகளையும் புறந்தள்ளி ரசிகர்கள் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கதைகளை கவனமாக தேர்ந்தெடுக்கிறார். நடிப்பெல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியில்லை. ஆனால் படத்தில் கவனம் செலுத்தியிருப்பதற்காகவே பாராட்டலாம்.

படத்தில் பெரிதும் கவர்ந்தது பாகிஸ்தான் பஸ் கண்டக்டராக வரும் கதாபாத்திரம் தான். இயல்பாக பிரச்சனைகளை புரிந்து கொண்டு வரம்பு மீறாமல் உதவும் அந்த கேரக்டர் என்னை ரொம்பவே கவர்ந்தது. அதற்கடுத்த இடம் ஓம்புரிக்கு.

என்னதான் பெரிசா படத்தை கொண்டாடினாலும் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நன்றாக மசாலாவை நொறுங்க அரைத்து மணக்க மணக்க நம் காதுகளில் தடவி விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களை குறைத்து இருந்தால் விமர்சகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டுகள் வந்து சேர்ந்து இருக்கும்.

இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் எல்லோருமே இந்துத்வாக்கள் என்றும், அனைவருமே ஜெய்ஸ்ரீராம் என்று தான் வணக்கத்தை சொல்வார்கள் என்றும் காட்சிப்படுத்தப் பட்டு இருப்பது கூட ஓவர்டோஸ் தான்.

படத்தில் பாகிஸ்தான் பகுதியாக வரும் பகுதிகள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த பாகிஸ்தான் மதரஸா, பாகிஸ்தான் வீட்டு கதவுகள், பஸ்கள் என பலவும் கவனிக்க வைத்தன. 

சந்தேகமில்லாமல் பஜ்ரங்கி பாய்ஜான் சல்மான்கானுக்கு மிகப் பெரிய சூப்பர் ஹிட் படம் தான்.

ஆரூர் மூனா

12 comments:

  1. நானும் பார்க்கலாம்ன்னு பார்த்தா...டிக்கட் விலை குண்டக்க மண்டக்க இருக்கு, ம்ம்ம் பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்க, நல்லாவே இருக்கு.

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். விமர்சனத்தை படித்து முடித்தவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. குடும்பஸ்தன் இப்படியா குமுறிக் குமுறி அழுவது...?

    ReplyDelete
    Replies
    1. உணர்ச்சி வசப்படுவது இயல்பாக நடக்கும் அல்லவா

      Delete
  5. அப்படியே பிக்கெட் 43 பாருங்க...மலையாளம். சூப்பர் படம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பார்த்துடுவோம்

      Delete
  6. படம் நல்லாயிருக்கு ஏக் தா டைகர் வெர்ஷன்2

    ReplyDelete