Wednesday 14 October 2015

காலை உணவும், கட்டன் சாயாவும்

காலை உணவு என்பது எவ்வளவு முக்கியம் என்பது காலையில் 7 மணிக்கே வேலையை துவக்குபவர்களால் தான் உணர முடியும். முக்கியமா ரயில்வே தொழிற்சாலைகளில் பணிபுரிவர்கள். சென்னையின் மற்ற ஏரியாக்களில் 8 மணிவாக்கில் தான் சிறுஉணவகங்கள், கையேந்திபவன்களில் நாஷ்டா கிடைக்கும். பெரம்பூர் தொழிற்சாலைகளான கேரேஜ் ஓர்க்ஸ், லோகோ ஒர்க்ஸ், ஐசிஎப்பை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணிக்கே எல்லா வித உணவுகளும் பறிமாற தயாராக இருக்கும்.


பள்ளிக்காலம் வரை தான் நான் திருவாரூரில் இருந்தேன். 12 வது முடிந்தவுடனே சென்னைக்கு என்னை நாடு கடத்தியதால் அதன் பிறகு எப்பொழுதுமே ஹோட்டல்கள், மெஸ்கள், கையேந்திபவன்கள் தான் தான். சிலசமயம் ஆர்வக் கோளாறினால் சொந்த சமையலும் நடந்ததுண்டு. 

அம்மாவின் நிர்வாகத்தில் (எங்க அம்மா, எங்க அம்மாய்யா, என்னை பெத்தெடுத்த தெய்வம்யா) இருந்த வரை சாப்பிட்ட காலை சாப்பாடு எப்பொழுதுமே சிறந்த உணவுகளை மட்டுமே இப்ப வரை நினைவில் வைத்து இருக்கிறது. 

ஆகககா என்ன காம்பினேசன்கள், இட்லியும் சாம்பாரும், இட்லியும் கடப்பாவும். வாவ். காலை டிபனுடன் சாம்பாரை நாலு ரகமாக செய்து சாப்பிட்டது என் அம்மாவின் கையால் தான். பருப்பை வேக வைத்து மசித்து அதனுடன் மிளகு மற்றும் மசாலாக்களை வறுத்து பொடி செய்து வைக்கப்படும் நீர்த்த சாம்பார், உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை அளவான அளவில் நறுக்கி பெருங்காயம் ஏத்தமாக போட்டு வைக்கப்படும் கெட்டி சாம்பார், பருப்புடன் மஞ்சள் பூசணியை சேர்த்து வேக வைத்து மசித்து முழு சின்ன வெங்காயம் நிறைய போட்டு வேக வைத்து செய்யப்படும் கல்யாண சாம்பார், மசாலாப் பொருட்கள் அரைத்து அதனுடன் வேகவைத்த பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து வைக்கப்படும் கடப்பா  (இது தஞ்சை பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்) என வெறும் சாம்பாரில் மட்டுமே நாலு ரகமென்றால் மற்ற உணவு வகைகள் பற்றி சொல்லவா வேண்டும். 


சட்னி என்றால் தேங்காய்ச் சட்னி, வதக்கிய வெங்காய சட்னி, வதக்கா வெங்காய சட்னி, பீர்க்கங்காய் சட்னி, முள்ளங்கி சட்னி, பிரண்டை சட்னி, கொத்தமல்லி வெங்காய சட்னி, துவையல்கள் அதிலும் டூர் துவையல் என்று ஒன்று இருக்கு. திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் போது அம்மா இட்லியும் இந்த துவையலும் எடுத்து வருவார். இது கெட்டுப் போகாது. வெங்காயம் தக்காளி, புளி, உப்பு சேர்த்து அரைத்து பிறகு தாளித்து நன்றாக துவையல் பதம் வரும் வரை நன்றாக வாணலியில் வதக்கி செய்வது, டேஸ்ட் சும்மா பட்டைய கிளப்பும். இப்ப வரைக்கும் அம்மா சென்னை வந்தால் ஊருக்கு செல்லும் போது எனக்காக ஒரு டப்பா முழுக்க இந்த துவையல் செய்து வைத்து விட்டு தான் செல்வார். 

வாரத்தின் இரு நாட்கள் காலையில் ஆட்டுக்கறியில் நல்ல நெஞ்செலும்பாக மட்டும் அப்பா வாங்கி வந்து தருவார். அதனுடன் முருங்கைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய் சேர்த்து இட்லிக்கான குழம்பாக மட்டும் சற்று நீர்த்து போனது போல் அம்மா வைப்பார். நம்பினால் நம்புங்கள் அப்பவே முப்பது இட்லி வரை சாப்பிடுவேன். 

முதல் நாள் இரவு செய்த மீன் குழம்பென்றால் இட்லியின் எண்ணிக்கை இன்னும் கூட தான் செய்யும். இட்லிக்கே இப்படி என்றால் மற்ற உணவு வகைகளை பற்றி கேட்கவா வேண்டும். 


இட்லியை விட சில நாட்கள் அபூர்வமாக கிடைக்கும் தண்ணி சோறு இன்னும் சுவைக்கவே செய்யும். அதுவும் எங்க அம்மா வழித்தாத்தா பழக்கி கொடுத்த சுட்ட கருவாடு மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சட்டி தண்ணிசோறு சளைக்காமல் சாப்பிடலாம். ஆமாம் என் தாத்தா பெரும்பாலும் காலையில் தண்ணிசோறு விறகு அடுப்பில் எரியும் நெருப்பில் எதுவுமே சேர்க்காமல் அப்படியே சுட்டுத் தரப்படும் கருவாடு தான் சாப்பிடுவார். கூடுதல் சுவைக்காக என்றால் சின்ன வெங்காயம் வைத்துக் கொள்வார். 

அப்பா கூட்டுறவுத் துறையில்  வேலை செய்ததாலும் பட்ஜெட் பத்மநாபனாக இருந்ததாலும் பெரும்பாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவதை விரும்ப மாட்டார். தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லும் சமயங்களில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் அருண் ஹோட்டல், மாத்திரிச்ச பிள்ளையார் (மாற்றிஉரைத்த வினாயகர் என்பது மருவி பேச்சு வழக்கில் அப்படி ஆகிடுச்சி) கோவில் அருகில் இருக்கும் அலங்கார் ஹோட்டல் ஆகியவற்றில் தான் வாங்கி தருவார். அங்கே கிடைக்கும் தோசையும் சட்னி சாம்பார்களும் செம டேஸ்ட்டாக இருக்கும்.


பதினேழாவது வயதில் வெந்நீர் கூட வைக்கத் தெரியாத அப்பாவியாக சென்னை வந்து இறங்கினேன். அப்ரெண்டிஸ் சேர்ந்ததும் ஹாஸ்டலில் மெஸ் வசதி கிடையாது என்பதால் தட்டுமுட்டு சாமான்களுடன் எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் சமையலில் தொபுக்கடீர் என்று குதித்தேன். சில நாட்கள் கேவலமாக சமைத்து சாப்பிட்டு விட்டு பிறகு ஒரு தெய்வத் திருநாளில் கையேந்திபவன்கள் சரணம் என்று முடிவு செய்து எல்லா பாத்திரங்களையும் பரணில் ஏற்றினேன். அதன் பிறகு ஐசிஎப்பில் இருந்த அக்கா கடை தான் அட்சயபாத்திரம், கணக்கு வழக்கே இல்லாமல் சாப்பிட்டு நாங்களாக ஒரு கணக்கு வைத்து அக்காவின் லாபத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தோம்.

கேரளாவுக்கு செல்லும் வரை பெரிதான மாற்றங்கள் காலை உணவில் இருந்ததில்லை. கேரளாவில் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஒரு பெரியவர் கற்றுக் கொடுத்தார். இன்று வரை ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காலை உணவை சாப்பிட்டது அங்கு தான். 

புட்டு, கடலைக்கறி, ஒரு பழம்பூரி, தேங்காய் எண்ணெயில் பொறித்த டபுள் ஆம்லேட், அப்பளம், கட்டன் சாயா இது தான் அந்த ஒரு வருடமும் என் காலை உணவு, சில நாட்கள் மட்டும் கடலைக்கறிக்கு பதிலாக பீப் கறி. இந்த சாப்பாட்டின் முதல் விதி சாப்பாட்டின் இடையே தண்ணீர் குடிக்க கூடாது. புட்டு தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டுமென்றால் எவ்வளவு மெதுவாக சாப்பிட வேண்டும். ரசிச்சி ருசிச்சி சாப்பிட்ட தருணம் அது. ஒரு வாய் புட்டு, ஒரு கடி பழம்பூரி, அப்பளத்துடன் சேர்த்து ஆம்லெட் கொஞ்சம், ஒரு சிப் கட்டன் சாயா. சொர்க்கத்தை அந்த தருணத்தில் காணலாம்.

ஐதராபாத்தில் இருந்த காலத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். சாப்பிட்டுப் பார்த்தால் கன்றாவியாக இருக்கும். ஆனால் பெசரெட் சூப்பராக இருக்கும். சில நாட்கள் முதல்நாள் வாங்கிய பிரியாணியை வைத்து மறுநாள் காலையும் பிரியாணியாக வெளுத்ததெல்லாம் உண்டு.

மத்தியபிரதேசத்தில் பூண்டு வாங்கிய சென்னைக்கு அனுப்பிய காலத்தில் காலை உணவுக்கு படாத பாடு பட்டேன். அங்கு எந்த உணவகத்திலும் காலை உணவு கிடையாது. என்ன தான் சாப்பிடுவாங்க என்று தேடிப் பார்த்தால் அந்த ஏரியா முழுவதுமே காலையில் பொகாவும் டீயும் தான். பொகா என்றால் ஒரு ரகமான அவல் உப்புமா. இது டீக்கடையில் மட்டும் தான் கிடைக்கும். அதுவும் பேப்பரை சுண்டலுக்கு சுருட்டுவார்களே அப்படி சுருட்டி ஒரு கரண்டி பொகா வைத்து தருவார்கள். அப்படியே தின்னுட்டு ஒரு டீ மட்டும் குடித்து விட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான். 

இவ்வளவு கதை பேசுகிறேனே, இன்றைய நிலைமை என்ன தெரியுமா, ரெண்டு ரகமான சட்னியோ, கூடுதலாக ஒரு துவையலோ கேட்டால் மிக்ஸியை கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு அரைக்க சொல்கிறார் இல்லத்து அரசி. 

ம்ஹும். . பேசாம கேரளாவுலயே ஒரு வல்லிய பெண்குட்டியை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு தோணுது. புட்டும் கடலைக்கறியுமா வாழ்க்கை சந்தோசமா போயிருக்கும்.

ஓவரா ஔறிட்டோமோ, இந்த பதிவு என் தங்கமணி கண்ணில் படாம இருக்க செய் ஆண்டவா. கிடைக்கிற சோத்துக்கும் ஆப்பாகிட போகுது.

ஆரூர் மூனா

Friday 9 October 2015

மசாலா படம் - சினிமா விமர்சனம்

சில சமயம் சில வெள்ளிக்கிழமைகளில் அசூயையாக இருக்கும். எந்த முக்கியத்துவமும் இல்லாத படங்கள் வெளிவரும் தினத்தன்று அரங்கிற்கு போகலாமா வேண்டாமா என்று மனசும் மூளையும் பட்டிமன்றம் நடத்தும்.


இன்று கூட அப்படியான பட்டிமன்றம் நடக்கும் நாள் தான். ஆனால் சிவா போன் செய்து தமிழ்சினிமாவை விமர்சனம் செய்யும் நம்மளைப் போன்ற ஆட்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். கதைக்களமும் இணைய சினிமா விமர்சனம் தான் என கூறினார். 

நண்பர் ஒருவர் இன்று ஹயாத்தில் நடக்க இருக்கும் ஒரு சினிமாவின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார். பிரமாதமான லஞ்ச் என்று உசுப்பேத்தியிருந்தார்கள், போகலாம் என்ற யோசனையும் இருந்தது.

இப்போ மனசு பட்டிமன்ற தலைப்பை ஹயாத் லஞ்ச்சா அல்லது சினிமாவா என்று மாற்றிக் கொண்டது. நெடுநேர வாக்குவாதத்திற்கு பிறகு சினிமாவை ஜெயிக்க வைத்து அரங்கிற்கு கிளம்பினேன்.


ஒரு படம் வெளியானதும் நம்மைப் போல் ஒரு இணைய சினிமா விமர்சகர் அந்த படத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுகிறார். அந்த படத்தின் வசூர் பாதிக்கப்பட்டதால் கோவப்பட்ட தயாரிப்பாளர் அந்த விமர்சகரை தாக்கி காயப்படுத்துகிறார். 

பின்னர் ஒரு தொலைக்காட்சியில் நடக்கும் வாக்குவாதத்தில் விமர்சகர்களைப் பார்த்து 120 ரூவாய் கொடுத்து படம் பார்க்கும் உனக்கு, கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தை விமர்சிக்க என்ன தகுதியிருக்கு என்று கேட்க வாக்குவாதம் முற்றி அந்த விமர்சகர்கள் க்ளிஷேவே இல்லாத ஒரு மசாலாப் படத்தின் கதையை தயாரிப்பாளருக்கு கொடுப்பதாகவும், அதை அவர் தயாரிப்பதாகவும் முடிவாகிறது. நேரம் ஆறு மாத காலம். 

அந்த காலக்கட்டத்திற்குள் கதையை உருவாக்க வேண்டி அந்த விமர்சகர் குழுவினர் மிடில் கிளாஸ் இளைஞன் மிர்ச்சி சிவா, கொடூர கொலைகாரன் பாபி சிம்ஹா, பொறுப்பில்லா பணக்கார இளைஞன் கௌரவ் ஆகியோரின் வாழ்க்கையை லட்சுமி தேவியின் துணை கொண்டு தொடர்கிறார்கள். 


அவர்கள் லைப்பில் இருந்து  என்ன எடுத்தார்கள், அந்த மூவரின் நிலை என்ன, விமர்சகர்கள் க்ளிஷே இல்லாத மசாலாப் படத்தை எடுத்தார்களா என்பதே மசாலா படத்தின் கதை.

ஆரம்பம் என்னவோ சுவாரஸ்யமாக தான் இருந்தது. என்னவோ சொல்லப் போறங்க என்பது மாதிரியே காட்சிகள் ஆரம்பித்தது. ஆனால் போகப் போக நிலைமை பாதாளத்திற்கு போய் இருக்கை உறுத்தலாகி மனசு ஹயாத் லஞ்ச் நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டது.

படத்தில் நடிப்பிலும், கதாபாத்திரத்திர வடிவிலும் சுவாரஸ்யப்படுத்தும் ஒரே நபர் சிவா மட்டும் தான். டிப்பிகல் சென்னையில் லோ மிடில் கிளாஸ் இளைஞனாக நன்றாகவே செய்துள்ளார். நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட், வேலைநேரங்களில் பாஸிடம் மாட்டுவது, வீட்டில் ஒரு நவநாகரீகப் பெண் வந்ததும் காட்டும் படபடப்பு, இறுதியில் அந்த பெண் தனக்கு ஏன் செட்டாக மாட்டாள் என்று விளக்கும் விதம் என கவனம் ஈர்க்கிறார்.

கொலைகார அமுதனாக பாபி சிம்ஹா, தமிழ் சினிமாவில் இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் இடம் ரொம்பவே அதிகம் என்று நினைக்கிறேன். வில்லத்தனம் என்றால் இறுக்கமாக முறைப்பது என்று யார் இவருக்கு சொல்லிக் கொடுத்தது என்று தான் தெரியவில்லை. 

அது போல இடது கை பழக்கமுள்ளவர் போல் இருக்க இயல்பு மாறாமல் இருக்க வேண்டும். வலது கையில் அடிபட்டவன் இடது கையில் சாப்பிடுவது போல் இருக்கிறது. அது போல் காரணமேயில்லாமல் லட்சுமி தேவியிடம் நெருங்குவதும் பொருந்தவில்லை.

பணக்கார இளைஞனாக கௌரவ். அவரது பாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. டிக்கெட் எக்ஸ்ட்ரா வைத்திருந்து கொடுத்தவளிடம் காதல் வயப்படுவது என்னா கன்றாவி லாஜிக்கோ. 

ஆரம்பித்த பொழுதில் சினிமா பார்ப்பது, உடனுக்குடன் விமர்சனம் போடுவது, யூடியுபில் வீடியோ விமர்சனம், அதனால் படத்தில் வசூலுக்கு பாதிப்பு என்று கவனம் ஈர்த்தவர்கள் போகப் போக என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி படத்தை குழப்பி பார்ப்பவனையும் குழப்பி விட்டு இருக்கிறார்கள். 

படம் போட்ட 45 நிமிடத்திற்குள் இன்டர்வெல் ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கு பிறகு வரும் காட்சிகள் இன்னும் அதிர்ச்சி. நினைவுகள் எல்லாம் ஹயாத் சாப்பாட்டிற்குள் இருக்கிறது. கண்ணை சொருகுகிறது. என்னைக் கட்டுப்படுத்தி தான் மிச்சப்படத்தை பார்த்து முடித்தேன். 

மிர்ச்சி சிவா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் இல்லையென்றால் படம் பார்ப்பவர்களின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். ஹீரோயினி லட்சுமி தேவி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, பார்க்க சில காட்சிகளில் மட்டும் நன்றாக இருக்கிறார். அவ்வளவு தான்.

தியேட்டரில் போய் படம் பார்க்கும் அளவுக்கு ஒன்றுமில்லை. எப்பவாவது ஒரு விஷேச நாளில் டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா