Thursday, 12 January 2017

பைரவா - சினிமா விமர்சனம்

படம் விமர்சனம் பண்ணி ரொம்ப நாளானதால் இப்ப டைப் பண்ணும் போது கையெல்லாம் குதூகலிக்குது.


கம்ப ராமாயணத்துல கண்டேன் சீதையைனு சொன்ன மாதிரி படத்தின் விமர்சனத்தை முதல் பாரவுலயே சொல்லிடுறேன், என்னடா இவன் கம்பராமாயணமெல்லாம் படிச்சிருப்பானோன்னு நினைக்க வேண்டாம், ஏதோ ஒரு கம்பர் கழக விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னது மனதில் பச்சக் கென்று ஒட்டிக்கிட்டது, அனுமன் சீதைய பார்த்த பின் ராமரை சந்திக்க சென்று சந்திக்கும் போது, போன விஷயம் வந்த விஷயம் எல்லாம் சொல்லி அவர் ஆர்வத்தை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று எடுத்ததும் கண்டேன் என்று சொல்லி பிறகு தான் சீதைன்னு சொல்லுவாராம், அந்த மாதிரி தான் இந்த விமர்சனத்தின் கடைசி பாராவை முதலிலேயே சொல்லி விடுகிறேன், 


படம் பக்கா தெலுகு மசாலா ஆக்சன் படம். லெஜண்ட், டெம்பர், தூக்குடு மாதிரி ஒரு படம். திருப்பாச்சி, சிவகாசி வரிசையில் இந்த படம் ஓடிவிடும். கலெக்சன் 100 கோடியை தொட்டு விடும். ஏன் எதற்கு என்று லாஜிக்கெல்லாம் இந்த படத்தில் பார்க்க கூடாது. விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழிப்பார்கள். 

இந்த படத்தை துப்பாக்கி, கத்தி வரிசையில் வைத்தால் சாமி வந்து கண்ணை குத்தி விடும். சரி இனி விமர்சனத்திற்கு போய் விடுவோம்.

ஸ்பாய்லர் இருக்கும் அதனால் படம் பார்த்து பிறகு படிக்க நினைக்கும் கண்மணிகள் ஜுட் விட்டு விடவும்.

--------------------------------------

சென்னையில் இருக்கும் விஜய், நெல்லையிலிருந்து சென்னை வரும் கீர்த்தியை பார்த்ததும் காதலிக்கிறார். பிறகு அவருக்கு படாபடா வில்லனான ஜெகபதிபாபுவினால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்ளும் விஜய், தனியாளாக நெல்லை சென்று எல்லாப் பிரச்சனைகளையும் டபக்கு டபக்கு என்று தீர்த்து வைத்து ஜெகபதி பாபுவையும் தீர்த்து வைத்து படத்தை முடித்து வைக்கிறார். 


இது என்ன மாதிரியான படம் என்பது முதல் சண்டைக்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் பேட் பால் வைத்து முதல் வில்லனை பழி தீர்த்து அறிமுகமாகும் போதே நம் காதில் ரத்தம் வழிகிறது. விஜய் ரசிகன் என்னும் கண்ணாடி அணிந்து பார்ப்பவன் கும்மாளமிடுகிறான். 

கலர் கலரா உடைகளை அணிந்து க்ளைமாக்ஸுக்கு முன் ஹீரோ, ஹீரோயின் மற்றும் குடும்பங்களே ஆடும் குத்தாட்டம், லாஜிக் என்ற வஸ்து இல்லாத ஹீரோ ஓர்க்ஷிப் காட்சிகள், செம த்ரிலிங்கான இன்டர்வெல் ப்ளாக், கொஞ்சம் கூட சிரிப்பே வராத சதீஷின் காமெடி, பகுதி வில்லன் மைம் கோபி, மீடியம் வில்லன் டேனியல் பாலாஜி என அக்மார்க் தெலுகு படம் இது. டப்பிங் செய்து வெளியிட்டாலேயே போதும், தெலுகில் ஒரு 100 கோடி கலெக்சன் பார்த்து விடலாம்.விஜய், சில வருடங்களாக மசாலா கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து நம்மை பாதுகாத்து வைத்திருந்த விஜய், மீண்டும் அதே மசாலாவை அண்டா அண்டாவாக அள்ளி தெளித்து வைத்து மீண்டும் பல வருடங்கள் பின்னே சென்று விட்டார். படத்தில் மைனஸ் கதை திரைக்கதையை விட பெரியது விஜய்யின் ஹேர்ஸ்டைல் தான். சகிக்கல.

கீர்த்தி சுரேஷ் வந்து டங்கு டங்கு என்று குதித்து விட்டு போகாமல் பெர்பார்ம் பண்ணும் படியான கதாபாத்திரம், கவனிக்கும் படி செய்கிறார். க்ளைமாக்ஸ்க்கு முந்தைய குத்தாட்டத்தில் 3 கலர்ல பாவாடை தாவணி கட்டி பார்ப்பவர்களை கண்ணு வழியே ஜொள்ளு விட வைக்கிறார்.

படத்தில் மொக்க காமெடி போடும் சதீஷ், எதுக்கென்றே தெரியாமல் மொட்டை ராஜேந்திரன், இரண்டாம் பாதியில் கழுத்தறுக்கும் தம்பி ராமையா எல்லா காமெடிக்கான எல்லாம் பார்ட்ஸும் படு வீக்கு.


டேனியல் பாலாஜி நன்றாக பெர்பார்ம் செய்துள்ளார். கவனிக்க வைக்கும் நடிப்பு. ஜெகபதிபாபு லெஜண்ட் படத்தில் செய்துள்ளதை ரிபீட் செய்துள்ளார். 

இவ்வளவு கொடுமைகள் இருந்தும் படம் நல்லாயிருக்கு சீன் பார்மேட் சரியாக வைத்துள்ளார்கள், சில இடங்களை தவிர. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றுகிறது. 

கீர்த்தி சுரேஷின் ப்ளாஷ்பேக் முடிந்ததும் வரும் சண்டைக்காட்சியும் அதன் பின்னான பஞ்ச் வசனங்களும் செம செம, பொங்கல் போன்ற விழா சமயங்களில் இந்த மாதிரியான படங்கள் வெளி வந்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

ப்ளாஷ்பேக் வரும் வரையான காட்சிகள், இரண்டாம் பாதியில் அரைமணிநேரம் காட்சிகள் கடுப்படிக்கிறது, மிச்சமிருக்கும் இரண்டரை மணி நேரத்தை விசிலடித்து கொண்டாடி விட்டு தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் மறந்து விட்டால் இது பொங்கல் கொண்டாட்டத்திற்கான படமே. 

ரொம்ப நாளைக்கு பிறகு 
திருவாரூரிலிருந்து ஆரூர் மூனா

Friday, 19 August 2016

தர்மதுரை - சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை படத்தின் விமர்சனம்


ஆரூர் மூனா

Friday, 12 August 2016

ஜோக்கர் - சினிமா விமர்சனம்

ராஜு முருகனின் இயக்கத்தில் சோமசுந்தரம் நடித்து வெளிவந்துள்ள ஜோக்கர் படத்தின் விமர்சனம்

தமிழில் அரசியல் நையாண்டி படம் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக சொல்லிக் கொள்வது போல் ஒன்றும் வரவில்லை. வந்தது கூட ஆட்சியாளர்களுக்கு மயிலிறகை தடவுவது போலவே வந்திருக்கின்றன. கடைசியாக வந்த உண்மையான பொலிட்டிகல் சட்டையர் படம் அமைதிப்படை.


பெரிய கதையமைப்பு, நெக்குருகும் திருப்பங்கள், அடல்ட் காமெடி எல்லாம் படத்தில் கிடையாது. சாதாரண கதை தான், சொன்ன விதத்தில் சிக்ஸர் அடித்து இருக்கிறார் ராஜு முருகன்.

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், சொற்ப சம்பளத்தில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டு இருக்கிறார். ரம்யா பாண்டியனை பெண் பார்க்க வந்து தகையாமல் இருக்கிறது.

பார்க்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் காதலுடன் நெருங்குகிறார் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு ஒரு கண்டிசன் போடுகிறார். பிறந்த வீட்டிலும் சொந்தகாரர்கள் வீட்டிலும் கழிவறை இல்லாமல் சிரமப்படும் அவர் கல்யாணம் செய்து போகும் வீட்டில் கழிவறை இருக்க வேண்டும் என.

ரம்யாவை திருமணம் செய்து கொள்வதற்காக கழிவறை கட்டும் முயற்சியில் இறங்குகிறார் சோமசுந்தரம். அவரது முயற்சியை பார்த்து காதல் வயப்படும் ரம்யா கழிவறை கல்யாணத்திற்கு பிறகாவது கட்டித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்.


அரசாங்கம் கழிவறை கட்ட காசு தரும் விஷயம் கேள்விப்படும் சோமசுந்தரம் கவுன்சிலரை அணுகுகிறார். மந்திரி முதல் கவுன்சிலர் வரை கமிஷன் சென்ற பிறகு அவருக்கு வெறும் டாய்லட் பேசின் மட்டுமே கிடைக்கிறது. 

அதனால் ஏற்படும் பிரச்சனையில் ரம்யா பாதிக்கப்படுகிறார். அவரால் சோமசுந்தரமும் மனநிலை தவறுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.

சோமசுந்தரம் என்ற நடிப்பு பிசாசை இத்தனை நாள் ஏன் தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை என்ற கோவம் ஏற்படுகிறது. மனிதன் பிச்சி உதறியிருக்கிறார். மூக்கை உறிஞ்சி அவர் பேசும் இயல்பு, கலெக்டர் வரை மிரட்டும் தொனி, ரம்யாவை நெருங்கும் கிராமத்து வாலிபம் என எல்லா ஏரியாவிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.

உங்களுக்கு பிரமாதமான எதிர்காலம் தமிழ்சினிமாவில் காத்திருக்கிறது சோமசுந்தரம். கேரக்டர் ரோல், கதாநாயகன் என எல்லா ஏரியாவிலும் மனிதன் ஸ்கோர் செய்வார்.

ரம்யா பாண்டியன் கிராமத்து பெண்ணின் வெகுளித்தனம், கழிவறைக்காக ஆசைப்படும் வெள்ளந்தித்தனம், சோமசுந்தரத்தின் வீட்டை பார்க்க வரும் போது செய்யும் அதிகாரம் என அசத்தியிருக்கிறார். 

பவா செல்லத்துரை அருமையான கதாபாத்திரத்தில் சில மணித்துளிகள் மட்டும் வந்து செல்கிறார். ஆனால் கவனிக்க வைக்கிறார். இனி நடிப்பிலும் பிஸியாகி விடுவார்.

படத்தின் ஆகச்சிறந்த பலம் வசனம் தான். எல்லா இடங்களிலும் கைத்தட்டல்களை அள்ளியிருக்கிறது. அதுவும் தமிழக அமைச்சர்களை கலாய்க்கும் வசனத்தில் தியேட்டரே கைதட்டுகிறது.

பாடல்கள் கூட கவனிக்க வைக்கிறது. என்னங்க சார் உங்க சட்டம், ஜாஸ்மின் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

படத்தின் குறை என்றால் வலிந்து திணிக்கப்பட்ட சோகமான க்ளைமாக்ஸ் தான். எனக்குள் அந்த சோகம் கடத்தப்படவில்லை. இப்படி தான் முடிவு இருக்கும்னு முன்பே தெரிந்து விடுவதால் நம்மால் அதனுள் ஒன்ற முடியவில்லை. 

மற்ற படி படம் அருமை. தவற விடாதீர்கள், கண்டிப்பாக திரையரங்கில் போய் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த ஜோக்கர்

ஆரூர் மூனா