Friday 18 March 2016

புகழ் - சினிமா விமர்சனம்

படத்தின் முதல் காட்சியிலேயே நான் யுகித்த விஷயம் இது நெடுநாள் கிடப்பில் இருந்த படம் என்பது தான். அதை நேக்கா மறைத்து படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி முகம் பிஞ்சாக இருக்கிறது என்பதை வைத்தே படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை அனுமானிக்கலாம்.

முழு வீடியோ விமர்சனம் பார்க்க 



ஒரு சாமானிய இளைஞனுக்கும் ஒரு அமைச்சருக்கும் மைதானத்தை அபகரிப்பது தொடர்பாக ஏற்படும் மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே புகழ் படத்தின் ஒன்லைனர்.

வாலாஜாபேட்டை என்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். அங்குள்ள வாலிப பசங்களுக்கு ஒரு மைதானமே பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. அந்த இடத்தில் பயற்சி செய்து அதன் மூலம் அரசு வேலை கிடைக்கப் பெற்றவர்கள் அனேகம் பேர்.


அந்த இடத்தை உள்ளூர் நகர மன்ற சேர்மன் உதவியுடன் வளைத்து போட நினைக்கிறார் அமைச்சர். அதனை தடுக்கிறார் ஜெய். உள்ளூர் மக்களிடையே நல்லபெயர் இருக்கும் ஜெய்க்கு வாலிப பசங்க பட்டாளமே பின்நிற்கிறது. 

மைதானத்தை யார் கைப்பற்றினார்கள் என்பதே புகழ் படத்தின் கதை.

இதே ப்ளாட்டில் தெலுகில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் 10 வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது. ஷை என்ற அந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி, இன்று வரை நான் பார்த்த மிகச் சிறந்த ஸ்போர்ஸ் மூவிகளில் இதுவும் ஒன்று.

சிறு நகரங்களுக்கு இது போன்ற பொழுதுபோக்கு இடங்கள் ஊருக்கு ஒன்று தான் இருக்கும் திருவாரூரில் பெரிய கோவில், மன்னார்குடியில் பின்லே மைதானம் என எங்கள் ஏரியாவில் கூட இது மாதிரி செண்ட்டிமெண்ட் இடங்கள் உண்டு.


படத்தின் குறையே மைதானத்திற்கும் நாயகனுக்குமான பிணைப்பை காட்சிப் படுத்த தவறி விட்டார். சும்மா உட்கார்ந்து கதையடிக்கவும் ராத்திரிக்கு சரக்கடிக்கவும் மட்டுமே நாயகன் அந்த இடத்தை பயன்படுத்துகிறார். இன்னும் சற்று நம்பகத்தன்மையுடனும் நெகிழ்ச்சியுடனும் காட்சி அமைத்திருந்தால் நாமும் படத்துடன் பயணித்து இருப்போம். 

ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதை செவ்வனே செய்து முடித்து இருக்கிறார். சில இடங்களில் மட்டும் அட போட வைக்கிறார். சுரபிக்கும் அவருக்கும் காதல் மலரும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்.

சுரபி படத்திற்கு உண்மையிலேயே மைனஸ் தான். இவன் வேற மாதிரி படத்திற்கும் இந்த படத்திற்கும் கம்பேர் செய்தோமானால் கன்றாவியாக இருக்கிறார். நம்ம ஆட்களுக்கு சற்று ச்சப்பியாக இருந்தால் தான் பிடிக்கும். உடலை குறைக்கிறேன் என்று கன்னத்தை டொக்கி வைத்திருக்கிறார். ஹீரோயின் லுக்கே வரமாட்டேன் என்கிறது.


கருணாஸ் சிடுசிடுவென விழுந்து கொண்டே இருக்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். எப்பொழுதும் தம்பியை கண்ட்ரோலில் வைத்து அடக்கிக் கொண்டே இருப்பவர் ஒரு காட்சியில் மாரிமுத்து ஜெய்யை கொன்று போட்டு விடுவதாக மிரட்ட ஜெய்யை முன் இழுத்து விட்டு முடிந்தால் வெட்டிப் பார் என்று பொங்கும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார்.

வழக்கம் போலவே ஒன்லைனர்களில் ஆர்ஜே பாலாஜி கவனம் ஈர்க்கிறார். ஜெய்யின் நண்பர்களாக வருபவர்களில் சிலர் கவனிக்க வைக்கின்றனர் .முக்கியமாக அந்த கவுன்சிலர் நண்பர். 

கவனிக்க தக்க அறிமுகம் கவிஞர் பிறைசூடன், கம்யுனிஸ்ட்டாக வருகிறார். எல்லா ஊர்களிலும் ஊருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் வறுமையில் வாடும் வயதான கம்யுனிஸ்ட்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளார்.

படத்தின் பெரும்குறை முதிர்ச்சியில்லாத இயக்கம் தான். காட்சிக்கும் காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஜம்ப் அடிக்கிறது. அது போல் ஒரு காட்சிக்கும் நிறைவு இல்லை, எல்லாமே தொங்கலில் இருக்கிறது. படத்தில் நிறைய ஏன்கள் தொக்கி நிற்கிறது. 

ஒன்னும் அவசரமே இல்லை, என்றாவது டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி

ஆரூர் மூனா

Tuesday 15 March 2016

ஒரு நாயகன் உருவாகிறான்

போன வருசம் ஊருக்கு போயிருந்தப்போ ஒரு நண்பனின் கேமராவை வைத்து விருச்சிககாந்த் அப்படினு ஒரு குறும்படத்தின் முழு படபிடிப்பையும் முடிச்சிட்டு வந்தோம்.

வீடியோவின் லிங்க். முழுதாக பார்க்கலைனாலும் பரவாயில்லை. சப்ஸ்கிரைப்பாவது பண்ணுங்கள். (தட் படுத்தே விட்டான்யா மொமண்ட்)


பணக்கார நபரை ஏமாத்தி, நடிப்பு ஆசை காட்டி நாலு காலேஜ் பசங்க குறும்படம் எடுத்து தர்றேன் என்ற பெயரில் தினமும் அவர் காசில் தண்ணியடித்து வருகிறார்கள். ஒரு நாள் உண்மை தெரிய அவர் அந்த பசங்களை கடைக்குள் வச்சி வெளுத்தெடுக்கிற மாதிரி கதை. 

நான் ஒரு விஷயத்தில் உறுதியா இருந்தேன். இது ஜீரோ பட்ஜெட்டில் தான் எடுக்கப்படனும். எந்த தொழில்நுட்பத்துக்காகவும் வெளியில் போக கூடாது என முடிவெடுத்து விட்டேன். ஆனால் எனக்கு எடிட்டிங் தெரியாது. 

ரெண்டு நாள்ல எடிட்டிங் கத்துக்கலாம்னு நினைச்சேன். படம் பிடிச்சிட்டு வந்து எடிட்டிங் பண்ணலாம்னு உக்கார்ந்தா எடிட்டிங் சுலபம் கிடையாதுன்னு தெரிஞ்சிப் போச்சி. அந்த புட்டேஜ்களை அப்படியே எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டேன். 

ஒரு வருசமாச்சி. கம்ப்யூட்டரில் இருந்து தேவையில்லாத பைல்களை கழிச்சி கட்டலாம்னு அலசும் போது இந்த பைல் கண்ல மாட்டுச்சி. வீடியோக்களை பார்வையிட்டால் சில வீடியோக்கள் சுவாரஸ்யமா இருந்தது. 

அந்த படத்தின் சமயம் எடுக்கப்பட்ட காட்சிகள் தவிர பிற காட்சிகளை எடுத்துப் பார்த்தால் படு மொக்கையாக இருந்தது. ஆனால் ஒரு நக்கல் தெரிந்தது. அதனை எடுத்து சின்ன வீடியோவாக மாத்தி விட்டேன். 

இது டப்பிங், ரீரெக்கார்டிங் எல்லாம் சரியாக செய்யப்பட்ட முழு படமல்ல. ஸ்பூப் மூவி மாதிரியான வீடியோ தான். பாருங்கள், பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

இந்த பதிவை படிப்பவர்கள் பட்டியல் நாலாயிரம் ஐந்தாயிரம் என காட்டுகிறது. ஆனால் சப்ஸ்கிரைப் ஒன்றோ இரண்டோ தான் வருகிறது. பார்ப்பவர்கள் சப்ஸ்கிரைப் செய்தால் தானே அது என்னை மேம்படுத்திக் கொள்ள ஊக்கமாக இருக்கும்.

நன்றி 

ஆரூர் மூனா

Saturday 12 March 2016

ஆட்டு ரத்தப் பொறியலும், ஆத்தாவின் மரணமும்

நான் எப்படிப்பட்ட ஆளுங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு நண்பனின் வீட்டில் கறி விருந்து நடந்து கொண்டு இருந்தது. இலையை போட்டாச்சி. நான் லைட்டா ஒரு கட்டிங் போட்டு பந்தியில் உக்கார்ந்து விட்டேன். பிரியாணி பக்கத்து இலையில் போட்டுக்கிட்டு இருக்காங்க. அடுத்தது எனக்கு தான், அப்ப பார்த்து எனக்கு போன் வந்தது.

ஆட்டு ரத்தப் பொறியல் செய்முறை


போனை எடுத்து பார்த்தேன், அப்பாவின் கால். எடுத்து பேசுகிறேன். அப்பா கதறி அழுகிறார். ஒரு நிமிடம் படபடப்பாகி விட்டது. ஆத்தா செத்துட்டாங்கடான்னு அழுகிறார். 

அதாவது என் அப்பாவின் அம்மா இறந்து விட்டார். துக்கம் தொண்டையை அடைக்கிறது. உடனே தஞ்சாவூர் கிளம்ப வேண்டும். நான் தான் நெய் பந்தம் எடுக்க வேண்டிய ஆள். அந்த நிமிடம் . . . . . 

என் இலையில் பிரியாணி பறிமாறப்பட்டது. இறப்பு நடந்தால் 16ம் நாள் வரை அசைவம் சாப்பிடக் கூடாது என்பது குடும்ப நடைமுறை. வாசனை மூக்கை துளைத்தது. அடுத்த போன் வந்தது. 

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்முறை


பெரியப்பா கூடுவாஞ்சேரியில் இருந்து பேசினார். ஆத்தாவின் மூத்த மகன். நீ அனிதாவை அழைச்சிக்கிட்டு இங்க வந்துடு. எல்லோரும் சேர்ந்தே போயிடுவோம் என்றார். இலையில் சிக்கன் 65 வைத்தார்கள். அடுத்த போன் வந்தது. 

தங்கமணி தான் அழைத்தார். துணிமணி எல்லாம் எடுத்து வச்சாச்சி. இன்னும் வரலையா என்றார். அவருக்கு பதிலளித்து இலையை நோக்கினால் வஞ்சிரம் மீன் துண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தது. 

என்னுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் பால்ய நண்பர்கள். விவரம் சொன்னால் உடனே அனுப்பி வைத்து விடுவார்கள். போன் வேறு தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. மனசை கல்லாக்கிக் கொண்டு. . . . 

செல்லை ஆப் பண்ணி வைத்தேன். ஆத்தாவை நினைவில் மட்டும் நிறுத்தி விட்டு பிரியாணியுடன் கோதாவில் குதித்து ஏப்பம் வரும் வரை மல்லுகட்டி வீழ்த்தினேன். 

பிறகு நண்பர்களிடம் விவரம் சொன்னால் கலாய்த்து தள்ளி விட்டார்கள். வெக்கப்பட்டுக் கொண்டே போனை ஆன் செய்து பெரியப்பாவிடம் மேல் விவரம் விசாரிக்க போன் செய்தேன். அவர் எடுத்து பேசும் போது கூடவே டிங்கு டிங்குனு சத்தம் கேட்டது. 

என்ன பெரியப்பா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே சொன்னார். இன்னும் 16 நாளைக்கு கறிகஞ்சி அடிக்க முடியாது. அதான். . . . . ஹிஹி னு.

அப்படியாப்பட்ட பரம்பரையாக்கும் நான். 

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆட்டு ரத்தப் பொறியல்  எனக்கு மிகவும் பிடித்த சைட்டிஷ்ஷாகும். இந்த சுவை எந்த ஹோட்டலிலும் அனுபவித்ததில்லை. கால் கிலோ கறியும், ரத்தமும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தால் போதும். கோலா உருண்டை குழம்பும் ரத்தப் பொறியலும் செய்து 40 பேருக்கு கூட பறிமாறுவார். 

நீங்கள் கூட முயற்சித்து பாருங்கள். அந்த அனுபவத்தை அனுபவியுங்கள்.

ஆரூர் மூனா

Friday 11 March 2016

காதலும் கடந்து போகும்

நளன் குமாரசாமி, விஜய்சேதுபதி காம்பினேசன் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு அரங்கை நிறைத்திருந்தது. வண்டி பார்க்கிங் பண்ணுவதே பெரும்பாடாகி போனது, ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ததா படம்.


விழுப்புரத்தில் இருந்து ITயில் வேலை கிடைத்து சென்னை வருகிறார் மடோனா செபாஸ்டியன். சென்னை வாழ்க்கையில் குதூகலமாக இருக்க ஒரு நாள் வேலை பறிபோகிறது. பெற்றோருக்கு விஷயத்தை மறைத்து சென்னையில் வேலை தேடுகிறார். 

ரிட்டையர்டு ரவுடியான விஜய்சேதுபதி வீட்டிற்கு எதிர் வீட்டில் குடிபோகிறார் மடோனா. ஆரம்பத்தில் இருவருக்கும் ஒத்து போகாமல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பின்னர் படிப்படியாக இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. கெமிஸ்ட்ரி வேலை செய்கிறது. மனதிற்குள் காதலை வைத்துக் கொண்டு தயக்கம் காட்டுகின்றனர் இருவரும். மடோனாவிற்கு வேலை கிடைத்ததா, அவர்கள் காதல் என்னவானது என்பதே காதலும் கடந்து போகும் படத்தின் கதை.


விஜய் சேதுபதி வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார். ஒயின்ஷாப் பாரில் நாலு அடியாட்களிடம் அடிவாங்கி கெத்தை குறைக்காமல் எழுந்து கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு வரும் தியேட்டர் கரவொலியில் குலுங்குகிறது. இது போலவே படம் முழுக்கவும் விஜய்சேதுபதி அதகளம் பண்ணியிருக்கிறார். 

அழகு சுந்தரி மடோனா செபாஸ்டியன் ஜொள்ளு விட வைக்கிறார். கோயிலே கட்டலாம். திருத்தப்பட்ட புருவம், தீட்டப்பட்ட மை, ரோஸ் கலர் உதடு என அணு அணுவாய் ரசிக்க வைக்கிறார். வெறும் அழகு பதுமையாக வந்து போகாமல் பெர்பார்மன்ஸும் பண்ணுகிறார். 


படமே இவர் பார்வையில் தான் இயங்குகிறது. பெரம்பூரில் மடோனா செபாஸ்டியன் ரசிகர் பேரவை ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். ரெண்டு கண்ணும் பத்தலை மடோனாவை ரசிக்க.

படம் மிக மெதுவாக நகர்கிறது. ஆனாலும் போரடிக்கவில்லை. படத்தின் தன்மையே மெதுவாக நகர்வதாக இருக்கிறது. ஆனால் ரசிச்சி ரசிச்சி எடுத்திருக்கிறார் இயக்குனர். 

காவல் நிலையத்தில் தனக்காக ஒருத்தனை விஜய் சேதுபதி அடித்தார் என்று தெரிந்து பிறகு ஏற்படும் நெருக்கம், பின்பு எடுக்கப்படும் செல்பியில் அவ்வளவு கெமிஸ்ட்ரி.

ரொம்ப வருடமாக கவனிக்கப்படாமலே இருந்த சுந்தர் இனியாவ கவனிக்கப்படுவார் என நினைக்கிறேன். சத்யா படத்தில் கமலுக்கு நண்பராக வந்து செத்துப் போவார். எப்படியும் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் லைம் லைட்டுக்கு வராமலே போனவர் ரீஎன்ட்ரியாகி இருக்கிறார். 

ஆரம்பத்தில் படம் ரொம்ப ஸ்லோவாக போனது சற்று உறுத்தியது. ஆனால் நேரம் போகப் போக அதனை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். 

காதலும் கடந்து போகும் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் தான்.

வீடியோ விமர்சனத்திற்கு





ஆரூர் மூனா

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்

ட்ரெய்லரை பார்க்கும் போது மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா சாயலில் இருந்தது. அந்த படங்கள் சுமாராக இருந்தாலும் காமெடி நல்லாயிருக்குமே என்ற ஆவல் தான் இந்த படத்தை தேர்வு செய்ய காரணம்.


ஆனால் நடந்தது. 

தமிழகத்தின் எந்த பகுதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு பேரூராட்சி. அங்கு இரண்டு ஆதிக்க சாதிகள் இடையே எப்பொழுதும் பகை இருக்கிறது. 20 வருடங்களாக தேர் இழுக்க முடியாமல் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வரும் கலெக்டரையே மண்டையை உடைத்து அனுப்பும் அளவுக்கு பிரச்சனை.


ஒரு சாதி தலைவரான ராதாரவியின் தம்பி மகன் விமல். சாதி பாசத்தில் ஊரில் கலப்பு காதலில் இருக்கும் ஜோடிகளை பேசியே பிரித்து வைத்து விடுகிறார். ராதாரவியின் மகளை எதிர்சாதியில் உள்ள ஒருத்தன் காதலிக்கிறான். 


அங்கு பிரச்சனைக்கு போனால் அஞ்சலியை சந்திக்கிறார் விமல். கண்டதும் காதலாகிறது. அஞ்சலி மீதுள்ள காதலால் காதல் ஜோடியை சேர்க்க நினைக்கிறார். சாதி பெரியவர்கள் எதிர்ப்பையும் மீறி காதலை சேர்த்து வைத்தாரா, அஞ்சலியை காதல் மணம் புரிந்தாரா, தேர் இழுக்கப்பட்டதா என்பதே படத்தின் கதை.

இந்த படத்தில்விமலை எனக்கு பிடித்ததற்கு ஒரே காரணம் அவர் என் மச்சான் சதீஷ் போலவே தான் இருக்கிறார். என் வயதுடைய என் மச்சான் மன்னார்குடி பக்கம் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கிறான். 

இந்த படத்தில் விமல் எப்படி காதல் பஞ்சாயத்துக்கு போகிறாரோ, எப்படி அவர் கூட நான்கு அல்லக்கைகள் இருக்கின்றனரோ, எப்படி மொட்டை மாடியில் குடிப்பதற்கென்று ஒரு இடம் அமைத்து குடிக்கிறாரோ, எப்படி தங்கமணியிடம் பம்முகிறாரோ அப்படியே என் மச்சானை கண்முன்னே நிறுத்தி விட்டார்.


நான் கூட வருடத்தில் சில நாட்கள் மச்சான் கூட்டத்தில் இணைந்து மகாதியான ஜோதியில் கலப்பதுண்டு. செம என்ஜாயாக இருக்கும். நமக்கு வேலை சென்னையில் இருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் தான் இந்த அனுபவம் நமக்கு கிட்டும்.

மற்றபடி விமல் எல்லாபடங்களிலும் எப்படி ரியாக்சன் காட்டுவாரோ அப்படியே தான் இந்த படத்திலும். மாற்றி நடியுங்கள் பாஸு, பாக்குற எங்களுக்கு கண்ணை கட்டுது.

அஞ்சலி இதற்கு முந்தைய படத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ஆனால் எடையை குறைத்து வயித்தில் பாலை வார்த்து இருக்கிறார். அஞ்சலி வரனும், பழைய பன்னீர்செல்வமா வரனும்.


சூரி மொக்கை போடுகிறார். அவரது காமடி பெரிதாக சொல்லிக் கொள்வது போல் ஒன்னுமில்லை. சிறு நகைப்பு கூட வர மாட்டேன் என்கிறது. இப்படியே போய்க்கிட்டு இருந்தால் சிரமம் தான் சூரி.

காளி கொஞ்சம் இன்னொசண்ட் காமெடியில் புன்னகைக்க வைக்கிறார். முனிஸ்காந்த் படத்தின் ஆரம்பத்தில் காமெடியில் கவனிக்க வைத்தாலும் போகப் போக வலுவிழந்து போகிறது. 

எதிர்சாதிகாரன் நம்ம பொண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டால் நாம் உடனே அவன் சாதிகாரன் பொண்ணை கூட்டியாந்துடனும் என்கிறதே படத்தின் மையக்கரு. இதெல்லாம் எப்படி வௌங்கும்.

படத்தில் இரண்டு சாதிகளை இலைமறை காயாக காட்டுகிறார்கள். நாயகன் முறுக்கு மீசையும் முரட்டுத்தனமாகவும் இருப்பதையும் பார்த்தால் தேவர் இனத்தையும், நாயகி வீட்டில் மட்டும் தெலுகில் பேசுவதை பார்த்தால் நாயக்கர் இனத்தையும் குறிப்பது போல்  தெரிகிறது. 

ஆனால் படத்தில் பேசுபவர்கள் ஸ்லாங் எல்லாம் கொங்கு மண்டலத்தில் பேசுவது போல் இன்னும் குழப்புகிறது.

படம் 15 வருடத்திற்கு முன்பு வந்தால் ஓடியிருந்தாலும் ஓடியிருக்கும். இப்போ முதல் வார இறுதி நாட்களை தாண்டுவது சந்தேகம் தான்.

ஆரூர் மூனா

Monday 7 March 2016

பள்ளிப்பாளையம் சிக்கன்

வீட்டில் தங்கமணி ஊருக்கு போயிருந்த சமயம் ஜப்பானிலிருந்து பிரபாவின் நண்பர் கொண்டு வந்திருந்த மகாதியான நீர் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு பிலாசபி பிரபாகரனும் அஞ்சா சிங்கமும் முகாமிட்டார்கள். 

வித்தியாசமான சைட் டிஷ் செய்கிறேன் என்று செல்வின் சிக்கனும் வெங்காயமும் வாங்கி வரச் சொன்னார். நானும் வாங்கி வந்தேன். அதுநாள் வரை நாங்கள் பார்த்து பழகிய மசாலாப் பொருட்களை புறந்தள்ளி விட்டு வெறும் வெங்காயம், காய்ந்த மிளகாயை மட்டும் வைத்து ஒரு சிக்கன் அயிட்டம் செய்து வந்தார். 

எந்த நிறமும் இல்லை. பார்வைக்கு வசீகரமும் இல்லை. தயக்கத்துடன் தான் முதல் துண்டை எடுத்து வாயில் வைத்தேன். உச்சி மயிர் நட்டுக்கிட்டது. சுவையில் இது ராஜ சுவை என்பது மட்டும் புரிந்து போனது. செய்து வந்த சிக்கனில் பெரும் பகுதி நான் மட்டும் தான் சாப்பிட்டேன். 

பிறகு எப்ப வீட்டில் சமைக்க சிக்கன் வாங்கினாலும் கூடுதலாக கால்கிலோவாவது வாங்குவேன் இந்த பள்ளிப்பாளையம் சிக்கனுக்காக. சுவையில் இதை அடிச்சிக்கவே முடியாது. 

அந்த ரெசிபியை உங்களுக்காக பகிர்ந்து இருக்கிறேன், அனுபவியுங்கள் ராஜசுவையை.



ஆரூர் மூனா