Thursday 12 January 2017

பைரவா - சினிமா விமர்சனம்

படம் விமர்சனம் பண்ணி ரொம்ப நாளானதால் இப்ப டைப் பண்ணும் போது கையெல்லாம் குதூகலிக்குது.


கம்ப ராமாயணத்துல கண்டேன் சீதையைனு சொன்ன மாதிரி படத்தின் விமர்சனத்தை முதல் பாரவுலயே சொல்லிடுறேன், என்னடா இவன் கம்பராமாயணமெல்லாம் படிச்சிருப்பானோன்னு நினைக்க வேண்டாம், ஏதோ ஒரு கம்பர் கழக விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னது மனதில் பச்சக் கென்று ஒட்டிக்கிட்டது, அனுமன் சீதைய பார்த்த பின் ராமரை சந்திக்க சென்று சந்திக்கும் போது, போன விஷயம் வந்த விஷயம் எல்லாம் சொல்லி அவர் ஆர்வத்தை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று எடுத்ததும் கண்டேன் என்று சொல்லி பிறகு தான் சீதைன்னு சொல்லுவாராம், அந்த மாதிரி தான் இந்த விமர்சனத்தின் கடைசி பாராவை முதலிலேயே சொல்லி விடுகிறேன், 


படம் பக்கா தெலுகு மசாலா ஆக்சன் படம். லெஜண்ட், டெம்பர், தூக்குடு மாதிரி ஒரு படம். திருப்பாச்சி, சிவகாசி வரிசையில் இந்த படம் ஓடிவிடும். கலெக்சன் 100 கோடியை தொட்டு விடும். ஏன் எதற்கு என்று லாஜிக்கெல்லாம் இந்த படத்தில் பார்க்க கூடாது. விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழிப்பார்கள். 

இந்த படத்தை துப்பாக்கி, கத்தி வரிசையில் வைத்தால் சாமி வந்து கண்ணை குத்தி விடும். சரி இனி விமர்சனத்திற்கு போய் விடுவோம்.

ஸ்பாய்லர் இருக்கும் அதனால் படம் பார்த்து பிறகு படிக்க நினைக்கும் கண்மணிகள் ஜுட் விட்டு விடவும்.

--------------------------------------

சென்னையில் இருக்கும் விஜய், நெல்லையிலிருந்து சென்னை வரும் கீர்த்தியை பார்த்ததும் காதலிக்கிறார். பிறகு அவருக்கு படாபடா வில்லனான ஜெகபதிபாபுவினால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்ளும் விஜய், தனியாளாக நெல்லை சென்று எல்லாப் பிரச்சனைகளையும் டபக்கு டபக்கு என்று தீர்த்து வைத்து ஜெகபதி பாபுவையும் தீர்த்து வைத்து படத்தை முடித்து வைக்கிறார். 


இது என்ன மாதிரியான படம் என்பது முதல் சண்டைக்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் பேட் பால் வைத்து முதல் வில்லனை பழி தீர்த்து அறிமுகமாகும் போதே நம் காதில் ரத்தம் வழிகிறது. விஜய் ரசிகன் என்னும் கண்ணாடி அணிந்து பார்ப்பவன் கும்மாளமிடுகிறான். 

கலர் கலரா உடைகளை அணிந்து க்ளைமாக்ஸுக்கு முன் ஹீரோ, ஹீரோயின் மற்றும் குடும்பங்களே ஆடும் குத்தாட்டம், லாஜிக் என்ற வஸ்து இல்லாத ஹீரோ ஓர்க்ஷிப் காட்சிகள், செம த்ரிலிங்கான இன்டர்வெல் ப்ளாக், கொஞ்சம் கூட சிரிப்பே வராத சதீஷின் காமெடி, பகுதி வில்லன் மைம் கோபி, மீடியம் வில்லன் டேனியல் பாலாஜி என அக்மார்க் தெலுகு படம் இது. டப்பிங் செய்து வெளியிட்டாலேயே போதும், தெலுகில் ஒரு 100 கோடி கலெக்சன் பார்த்து விடலாம்.



விஜய், சில வருடங்களாக மசாலா கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து நம்மை பாதுகாத்து வைத்திருந்த விஜய், மீண்டும் அதே மசாலாவை அண்டா அண்டாவாக அள்ளி தெளித்து வைத்து மீண்டும் பல வருடங்கள் பின்னே சென்று விட்டார். படத்தில் மைனஸ் கதை திரைக்கதையை விட பெரியது விஜய்யின் ஹேர்ஸ்டைல் தான். சகிக்கல.

கீர்த்தி சுரேஷ் வந்து டங்கு டங்கு என்று குதித்து விட்டு போகாமல் பெர்பார்ம் பண்ணும் படியான கதாபாத்திரம், கவனிக்கும் படி செய்கிறார். க்ளைமாக்ஸ்க்கு முந்தைய குத்தாட்டத்தில் 3 கலர்ல பாவாடை தாவணி கட்டி பார்ப்பவர்களை கண்ணு வழியே ஜொள்ளு விட வைக்கிறார்.

படத்தில் மொக்க காமெடி போடும் சதீஷ், எதுக்கென்றே தெரியாமல் மொட்டை ராஜேந்திரன், இரண்டாம் பாதியில் கழுத்தறுக்கும் தம்பி ராமையா எல்லா காமெடிக்கான எல்லாம் பார்ட்ஸும் படு வீக்கு.


டேனியல் பாலாஜி நன்றாக பெர்பார்ம் செய்துள்ளார். கவனிக்க வைக்கும் நடிப்பு. ஜெகபதிபாபு லெஜண்ட் படத்தில் செய்துள்ளதை ரிபீட் செய்துள்ளார். 

இவ்வளவு கொடுமைகள் இருந்தும் படம் நல்லாயிருக்கு சீன் பார்மேட் சரியாக வைத்துள்ளார்கள், சில இடங்களை தவிர. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றுகிறது. 

கீர்த்தி சுரேஷின் ப்ளாஷ்பேக் முடிந்ததும் வரும் சண்டைக்காட்சியும் அதன் பின்னான பஞ்ச் வசனங்களும் செம செம, பொங்கல் போன்ற விழா சமயங்களில் இந்த மாதிரியான படங்கள் வெளி வந்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

ப்ளாஷ்பேக் வரும் வரையான காட்சிகள், இரண்டாம் பாதியில் அரைமணிநேரம் காட்சிகள் கடுப்படிக்கிறது, மிச்சமிருக்கும் இரண்டரை மணி நேரத்தை விசிலடித்து கொண்டாடி விட்டு தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் மறந்து விட்டால் இது பொங்கல் கொண்டாட்டத்திற்கான படமே. 

ரொம்ப நாளைக்கு பிறகு 
திருவாரூரிலிருந்து ஆரூர் மூனா