திருமணத்திற்கு முந்தைய ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுகளில் அண்ணன் தங்கை, அக்கா தம்பி பாசம், முறைப் பொண்ணு முறைப் பையன் காதல் மாதிரியே நெகிழ்ச்சியான உறவு ஒன்னு இருக்கு. இதுக்கு உருவமோ வரையறையோ தர முடியாது.
றெக்க படத்துல சின்ன வயசு விஜய் சேதுபதிக்கும் மாலாக்காவுக்கும் ஒரு நட்பு பூக்கும்ல, மத்த பசங்க ஏத்தி விட்டதும் விஜய் சேதுபதியா நடிக்கும் பையன் “மாலாக்கா ஐ லவ் யூ” ன்னு சொல்வான்.
மாலா அக்கா வெக்கப்பட்டு “வாடா அடிக்கிறேன்”னு பாய்வா, அந்த நட்பு தான் நான் சொல்ல வர்றதும்.
அக்கா அக்கா னு நாம அவ கூட தான் சுத்துவோம், அவ நமக்கு கத்தும் கொடுப்பா, அடியும் கொடுப்பா, நம்ம கூட தான் கோயில் குளம் பம்புசெட்டு னு அலைவா, யாரையும் மறைமுகமா லவ் பண்ணும் போது கடிதங்கள் கொடுக்கவும் வாங்கவும் நம்மளைதான் அனுப்புவா.
கொஞ்ச காலம் கழிச்சி அவளுக்கு சம்பந்தமேயில்லாத வேற ஊர்ல இருக்கும் ஒரு கோவக்கார அம்மாஞ்சிக்கு கல்யாணம் பண்ணிக் அனுப்பி வச்சிருவானுங்க. கொஞ்ச நாள் என்ன செய்றதுனு தெரியாம அக்காவின் இழப்பை நினைச்சி வருந்திக்கிட்டு இருப்போம்.
சில நாட்களிலேயே மாலா போனா நீலா ன்னு இன்னொரு அக்கா பின்னாடி சுத்துவோம், அந்தக்காவும் கோயில் குளம் பம்புசெட்டு னு நம்ம கூட தான் சுத்தும். அதையும் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு நம்மை தாடி முளைக்காத தேவதாஸா மாத்தி வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை.
இந்த அனுபவத்தை கடந்து வராதவர்கள் வாழ்க்கையில் வெகு சொற்பமே, குறைந்தபட்சம் ஒரு மாலாக்காவையாவது நாம கடந்து வந்திருப்போம். அந்த மாதிரி ஒரு செட்டு அக்காகள் பற்றிய நினைவுத் தொகுப்பு தான் இது.
இந்த கட்டுரையின் முக்கிய சிக்கலே ஊர்ப் பெயரையும் உண்மையில் குறிப்பிட முடியாது. நாம ஊர்ப்பெயர் சொன்னா நிறைய பேருக்கு விவரம் தெரிய வரும். அதனால் பூடகமாவே பேசிக்குவோம்.
என் உறவுக்கார கிராமம் அது. மாமா வீட்டுக்கு பக்கத்துல இரண்டு அக்காகள் இருந்தாங்க. எப்பவும் ஒன்னு மன்னா தான் திரியுங்க. குளிக்க போகும் போதும் சரி, வயலுக்கு போகும் போதும் சரி, கடலை ஆயும் போதும் சரி, தேங்கா உரிக்கப் போகும் போதும் சரி. ஒன்னாத்தான் போவாங்க, வருவாங்க.
நான் முழு ஆண்டு விடுமுறையில் அந்த கிராமத்தில் பத்து நாட்கள் தங்குவதுண்டு. எனக்கு ஏழு எட்டு வயசு இருக்கும் போது நடந்தது இது. எப்ப ஊருக்கு போனாலும் என்னையும் அவங்க கூட சேர்த்துக்குவாங்க. பம்புசெட்டுல குளிக்கப் போகும் போது என்னை பெரிய கிணத்துல தள்ளி விட்டு திணறும் போது பாவாடை கட்டியபடி கிணற்றில் குதித்து அசால்டா தலைமயிரை புடிச்சி நாலு லாட்டு லாட்டி நீச்சலடிக்க கத்துக் கொடுத்தா ஒரு அக்கா.
தலைக்கு எண்ணெய் தேய்ச்சிக்கிட்டு பம்புசெட்டுல வந்து கையாந்திரை இலைய பறிச்சி அதை அங்கே கல்லைக் கொண்டு அரைச்சி தலைக்கு பூசி குளிப்பாங்க. எனக்கும் தேய்ச்சி விடுவாங்க. அப்படி குளிச்சிட்டு வரும் போது முடியெல்லாம் பட்டு மாதிரி பளபளக்கும், ஷாம்புலாம் பத்தடி தள்ளி தான் நிக்கனும்.
செடியில் இருந்து கடலைய பிரிக்கும் வேலைய செய்யும் போது என்னைய கூட்டிக்கிட்டு போவாங்க. நான் அவங்க கடலைய உருவி எடுக்க நான் பேசிக்கிட்டே கடலைய உடைச்சி சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்.
அந்த கூட்டத்துல ஒரு அண்ணன் என்னை கூப்பிட்டு பால்பன்னு வாங்கிக் கொடுத்து “அக்காகளுடன் சேர்ந்து சாப்பிடுடா” னு அனுப்புவார். அந்த ஊர்ல ஒரு பால்பன் சும்மா அரைக்கிலோவுக்கு மேல இருக்கும்,
விகல்பமே இல்லாம போய் அக்கா சாப்பிடுவோமா, “அந்த அண்ணன் வாங்கிக் கொடுத்துச்சி” என்பேன். மடேர்னு மண்டைல கொட்டிட்டு “யார் கொடுத்தாலும் வாங்கிடுவியா” னு திட்டும், அப்புறம் ரகசியமா அந்த அண்ணன் பாக்காத மாதிரி திங்கும்.
வேலைய முடிச்சிட்டு குளிச்சிட்டு வந்தவுடன் அவங்க வீட்டு வாசல்ல உக்காந்து பல்லாங்குழி, ராஜா ராணி, நொண்டி, பரமபதம்லாம் ஆடுவோம். செம ஜாலியா இருக்கும். சாப்பிடுற நேரத்துக்கு ஆத்தா வந்து கத்திட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்.
நடந்தே ஆறு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அய்யனார் கோயிலுக்கு போய் விளக்கு போட்டு வருவோம். வரும் போது காலெல்லாம் வலிக்கும். வலிக்குதுக்கா ன்னு சொன்னா, என்னை வழியில் வரும் மாட்டுவண்டியில் உக்கார வச்சி ரெண்டு பேரும் நடந்துகிட்டே வருவாங்க. வழியில் இருக்கும் கரும்பு கொல்லையில் இருந்து கரும்பை உடைச்சிட்டு வந்து தின்னுக்கிட்டே ஊருக்கு வந்து சேருவோம்.
அந்த இருவரின் புரிதல் எனக்கு ஆச்சரியமாவே இருக்கும். இவ என்ன நினைக்கிறா ன்னு அவ சொல்லுவா, அவ கோச்சுக்குவாளே ன்னு இவ சில காரியத்தை செய்ய மாட்டா, அவளுக்காக பக்குவமா சமைச்சி இவ எடுத்துட்டு வருவா, விளையாடும் போது இவளுக்காக அவ விட்டுத்தருவா.
அந்த அக்காக்களில் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாச்சி, கல்யாண தினத்தப்போ நானெல்லாம் கறிசோறு ஆர்வத்திலேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருந்தேன். அந்த ஊர்ல பெரும்பாலான கல்யாணங்கள் வீட்ல தான் நடக்கும்.
கல்யாணம்லாம் முடிஞ்சி பொண்ணு மாப்பிள்ளை கூட மாட்டு வண்டில போகுது. வீட்ல இருந்த இன்னொரு அக்காவுக்கு திடீர்னு ஒரு வீரம் வந்து என்னையும் அழைச்சிட்டு ஓடுறா, வயல் பாக்கல, வாய்க்கால் பாக்கல விழுந்து எந்திரிச்சி ஓடுனோம். அரைமணி நேரத்துல அவங்க போறது தெரிஞ்சது.
அந்தக்கா பேரைச் சொல்லி இங்கிருந்து கத்த வண்டி நின்னுடுச்சி, அங்கிருந்து அவள் ஓடி வர இவள் ஓடிப் போக கட்டிபுடிச்சி அழுது தீர்த்தாங்க. அந்த வயசுல எனக்கு விவரம் புரியல. தேமே ன்னு நின்னுக்கிட்டு இருந்தேன்.
இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா அந்த அக்காகள் இருவரிடமும் இருந்த பாசம் என்ன, நட்பு என்ன ஒரே நாள்ல வெட்டி விட்டு பிரியிறது என்பது உயிரையே பிச்சித் தர்ற மாதிரில னு புரிஞ்சது.
சமாதானப்படுத்தி இருவரையும் பிரிச்சி விட்டு மாட்டு வண்டி போகப் போக நின்னுக்கிட்டே இருந்தோம். வண்டி கண் மறைஞ்சதும் நாங்க திரும்பி நடந்து வந்தோம். அப்போ அந்த அக்கா சொன்னுச்சி, “பொண்ணுங்க வாழ்க்கையே அவ்வளவு தாண்டா, இனிமே அவள் வட்டமே வேற, அவளை என்னால் பார்க்கவே முடியாது” என.
நான் கூட விளையாட்டுத்தனமா தான் சொல்றாளோ ன்னு நினைச்சேன், ஆனால் அவள் சொன்னது தான் நடந்தது. கல்யாணமாகிப் போன பெண், மாசமாகி வளைகாப்பு முடிஞ்ச பிறகு பிரசவத்துக்கு தான் தாய் வீட்டுக்கு வந்தா.
அதுக்கு சில மாதம் முன்பு இந்த அக்கா கல்யாணமாகி சென்னைக்கு போயிட்டா, எனக்கு விவரம் தெரிஞ்சி பதினைந்து வருடங்கள் வரை அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திச்சிக்கவே இல்லை. அதுக்கப்புறம் நான் அந்த ஊருக்கு போகவே இல்லை,
இருவரின் கல்யாணத்துக்கு பிறகு இவ தாய் வீட்டுக்கு போனா அவ வீட்டுக்கு போய் விவரம் விசாரிச்சிட்டு வருவா, அதே மாதிரி அவ வந்தா இவ வீட்ல போய் விவரம் விசாரிச்சிட்டு வருவா.
அந்த வயசுல எனக்கு, எங்களுக்கிடையே இருந்த நட்பின் ஆழம் புரியல, விவரம் புரிந்த வயசுல நட்பை பேணிக்காக்கவும் முடியல. கல்லூரி காலங்களில் தூக்கம் வராத இரவுகளில் நிறையவே வருந்தியிருக்கிறேன், இந்த அழகான நாட்கள் நம்ம வாழ்க்கையில் திரும்ப வராதா ன்னு.
எத்தனை எத்தனை கிராமத்து பெண்களின் நட்புகள் இப்படி கதறக் கதற மறுக்கப்பட்டு இருக்கும்னு யோசிச்சி பார்த்தா துக்கம் தொண்டய அடைக்குது.
அந்த பாசமே தனி தான்...
ReplyDeleteDomain கிடைத்து விட்டதா...? ரைட்டு...
ReplyDelete#tccontest2020 tag-லே போடணும்ன்னு நினைக்கிறேன்... சேர்த்திடுங்க...
தமிழ்ச்சரம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள். நட்பின் ஆழத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். மனதை தொட்ட பதிவு. வாழ்த்துகள்.
ReplyDeleteஏற்கனவே படித்து விட்டேன். இர்ண்டாம் பரிசு பெற்றாஅமைக்கு வாழ்த்துகள் செந்தில் . செந்திலுக்கே உரித்தான ரைட் அப் சிறப்பு
ReplyDeleteஅய்யா சாமி ராசா, ரொம்ப வருஷம் கழிச்சு உங்க எழுத்தை படிக்கிறது (நோட் தி பாயிண்ட் படிக்கிறது-கேக்கிறது இல்லை) உண்மையாவே ரொம்ப ரொம்ப சந்தோஷம்! வளர நன்னி!
ReplyDelete