Sunday, 24 May 2015

நானும் எனது ஊரும் (தொடர் பதிவு)

)

(கோயிலின் எழில்மிகு தோற்றம்)
நானாகவே எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சங்கவி அழைத்ததனால் உடனே எழுத துவங்குகிறேன். சங்கவிக்கு நன்றி. எனது ஊர் திருவாரூர். இன்று அது மாவட்ட தலைநகர், நகரில் மத்திய பல்கலைக்கழகம், அரசு மருத்துவக்கல்லூரி என ஏகமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனால் நான் வளர்ந்த காலத்தில் அது மிகச்சிறிய நகரம் அவ்வளவே.

திருவாரூர் என்பது அதனை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் சந்தை என்றளவில் வளர்ந்த பெரு கிராமம். இங்கு வர்த்தகமோ, தொழிற்சாலைகளோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே கிடையாது. இது விவசாயப்பகுதி. விவசாய செய்பொருட்களின் சந்தையாக திகழ்கிறது. என் அப்பாவும் அது போன்ற அரசின் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் என்ற விவசா உதிரி பொருட்கள் மொத்த விற்பனையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். நீங்கள் எல்லாம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெல் விளையும் பெரும்பாலான நிலங்கள் தற்போதைய திருவாரூர் மாவட்டத்திலேயே உள்ளன.
(அப்பா, அம்மாவுடன் நானும் தம்பியும் திருவாரூரில் உள்ள மூர்த்தி ஸ்டுடியோவில் எடுத்தது)
திருவாரூர் சோழ அரசின் புராதன தலைநகர். பசுவின் கன்றை அறியாமல் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிசோழன் தலைநகராக ஆண்ட ஊர் இது. இன்றும் அந்த சம்பவம் நடந்த இடத்தில் நினைவுச்சின்னம் இருக்கிறது. நான் படித்த காலத்தில் பள்ளியில் ஒரு கட்டிடமாக இருந்தது அரண்மனை. தற்போது இடிக்கப்பட்டு விட்டது. பழைய நகராட்சி அலுவலகமும் அரண்மனையின் ஒரு கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது.
(எங்கள் ஊரின் பெருமக்குரிய ஆழி்த்தேர்)
அது போல் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோயில். இந்து மதத்தில் பெரிய கோவில் என்ற சொல்லுக்குரிய கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முன்பே கட்டப்பட்ட கோயில் இது. அப்பொழுதெல்லாம் கூட்டம் மிகக்குறைவாக இருக்கும். நாங்கள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை கோயிலின் உள்ளே கிரிக்கெட் விளையாடியோ பட்டம் விட்டோ தான் கழிப்போம். அது போல் நவக்கிரகங்களும் ஒரே திசையை நோக்கி உள்ள கோயிலும் இது தான். எவ்வளவோ எழுத்தாளர்கள் தனிமையில் சிந்தித்து எழுத கோயிலையே பயன்படுத்தி வந்தனர். தற்போது சர்வதோஷ பரிகாரஸ்தலம் என்ற பெயரில் வியாபார நோக்கில் பிரச்சாரம் செய்யப்படுவதால் கூட்டம் அதிகமாகி விட்டது. எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வந்து தங்கள் தோஷத்திற்கு பரிகாரம் செய்து விட்டு செல்வதால் நவக்கிரக பகுதி மட்டும் நல்ல கூட்டமாகவே இருக்கிறது.
(நான் ஊரில் ஒரு தருணத்தில்)
அடுத்தது திருவாரூர் ஆழித்தேர். இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர். தேர்த்திருவிழா நடக்கும் கால கட்டம் தான் எங்கள் ஊருக்கு திருவிழா. எவ்வளவு மக்கள் இழுத்தாலும் தேரை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. பின்பக்கமிருந்து புல்டோசர் தள்ளினால் தான் தேர் நகர ஆரம்பிக்கும். பழங்காலங்களில் தேர்த்திருவிழா 10 நாட்கள் வரை நடக்குமாம். 1950களில் ஒரு பெரிய தீவிபத்து ஏற்பட்டு பெரிய தேர் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தற்போதுள்ள பெரிய தேர், கமலாம்பாளுக்குரியது. இந்தத்தேரை 1990களில் நிலையடியிலிருந்து இழுத்து சென்று நான்கு வீதியும் சுற்றிய பின் நிலையடிக்கு வந்து சேர இரண்டு நாள் ஆகும். இரண்டு நாட்களும் மனது நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கும். நண்பர்கள் குழு ஒன்று சேர்ந்து தேர் இழுப்போம். சிறிது தூரம் இழுத்த பின்பு கிடைக்கும் கால இடைவெளியில் ஒருவனை பத்து பேர் சேர்ந்து தூக்கிப் போட்டு பிடிப்போம். ஒரு முறை சண்முகம் என்ற நண்பனை தூக்கிப் போட்டு பிடிப்பதற்கு முன் பச்சைக் கொடி என்று அறிவிப்பு வந்ததால் அவனை அப்படியே விட்டு விட்டு வடம் பிடித்து விட்டோம். தொப் என்று கீழே விழுந்தான். பிறகு அவனை சமாதானப்படுத்தியதெல்லாம் பெரிய கதை. இரண்டு நாட்களும் சுற்று கிராமப்பகுதியிலிருந்து பெண்கள் தேர் வருவதை பார்த்துக் கொண்டிருக்கும் போது வடம் பிடிக்கும் பகுதியிலிருந்து பேப்பர் ராக்கெட்டுகள் விடுவோம். அங்கிருந்து பெண்கள் பறக்கும் முத்தம் தனக்கு பிடித்த ஆண்களைப் பார்த்து தருவர். ஆனால் தற்போதெல்லாம் போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாகி இந்த சீண்டல்கள் குறைந்து விட்டன. இன்றும் சரி என்றும் சரி, எப்பொழுது தேர்த்திருவிழா நடந்தாலும் நான் எந்த ஊரில் இருந்தாலும் ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எங்கள் ஊரின் கெளரவம் அது.

எனது காலத்தில் திரையரங்குகள் தைலம்மை, சோழா, நடேஷ், செங்கம், பேபி மற்றும் புலிவலத்தில் இருந்த கருணாநிதி என மொத்தம் ஆறு இருந்தன. அவற்றில் செங்கம், பேபி, கருணாநிதி மூடப்பட்டு பாக்கியுள்ளவை மட்டுமே உள்ளன. அவையும் ஏனோ தானோ வென்று தான் நடந்து கொண்டிருக்கின்றன. நான் பள்ளியில் படித்த காலத்தில் தியேட்டர்களுக்கு செல்வது மட்டுமே பொழுதுபோக்கு. மதிய வேளை பெரும்பாலும் ஏதாவது ஒரு தியேட்டரில் தான் இருப்போம்.

கலைஞர் அவர்கள் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் நானும் படித்தேன். பள்ளியைப் பற்றி நான் தனித் தொடராக வெளியிட்டுக் கொண்டிருப்பதால் பள்ளி விவரங்கள் மட்டும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கலைஞரை அவரின் தற்போதைய அரசியல் காரணமாக எனக்கு பிடிக்காமல் போனாலும் அவரால் தான் எனது ஊர் இந்தளவுக்கு வளர்ந்தது என்பதால் அவரை தலை குனிந்து வணங்குகிறேன். என்ன வருத்தம் என்றால் ஊர் பழைய அமைதியை இழந்து பரபரப்புக்குள் தலையை விட்டுக் கொண்டுள்ளது.

1997ல் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு ஊரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று வலுக்கட்டாயமாக சென்னைக்கு பஸ் ஏற்றப்பட்டேன். அதிலிருந்து ஊருக்கு செல்வது வாரம் ஒரு முறை என்று இருந்தது. பிறகு மாதம் ஒரு முறை என்று மாறி இப்பொழுது இரு மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. இப்பொழுது ஊருக்கு சென்றாலும் கிளம்பி சென்னைக்கு வரும் அன்று மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment