Sunday, 24 May 2015

எந்த கடையில அரிசி வாங்குற - பழசு 2012

"எந்த கடையில அரிசி வாங்குற" இந்த வார்த்தை யாருக்கு அதிக பரிட்சயமாகியிருக்கோ தெரியாது ஆனால் எனக்கு அதிக பரிட்சயமான வார்த்தை இது தான். பிறந்ததிலிருந்தே குண்டாக இருப்பதனால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த ஒரு வாக்கியத்தில் அடைத்து விடலாம்.

மற்றவர்களை பட்டப்பெயர் வைத்தே அழைக்கும் தஞ்சை ஜில்லாவில் பிறந்த எனக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே பள்ளியில் நண்பர்களால் சூட்டப்பட்ட பட்டப்பெயர் "தடியன்". என்னை பெயர் சொல்லி அழைத்தவர்களை விட தடியன் என்று சொல்லி அழைத்தவர்கள் தான் அதிகம். ஆனால் நான் அந்த அளவுக்கு குண்டு கிடையாது என்பது அந்த காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை தற்போது பார்த்தால் தெரிகிறது.

சிறு வயதிலிருந்தே பெற்றோர்களால் அதிகம் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி விட்டேன். மற்றக் குழந்தைகளை எல்லாம் பெற்றோர்கள் சாப்பிட வைக்க மிகுந்த பிரயத்தனப்பட்டு கொண்டிருக்கும் போது நான் மட்டும் அசைவ உணவுகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பேனாம். அப்புறம் எப்படி உடம்பு ஏறாமல் இருக்கும்.

ஆனால் அந்தளவுக்கு சாப்பிட்டு வலுவாக இருந்ததனால் தான் என்னால் உற்சாகமாக விளையாடவும் ஸ்டாமினா குறையாமல் வேலை செய்யவும் முடிந்தது. மற்ற நண்பர்கள் திருவாரூர் கமலாலய குளத்தை இரண்டு சுற்று மட்டுமே ஒடிக் கடக்க முடிந்த போது என்னால் ஆறு சுற்றுகள் ஒடிக் கடக்க முடிந்தது.

நான் பலசாலி என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்த போது 16 வயது வந்து சைட் அடிக்க தொடங்கிய போது தான் என்னுடைய நிறையாக நான் நினைத்து கொண்டிருந்தது குறையாக மாறிப்போனது. ஏதாவது ஒரு பொண்ணை நான் பார்த்தால், நண்பர்களே "நீ குண்டாக இருக்கிறாய் எனவே அவள் உன்னைப் பார்க்க மாட்டாள்" என்று சொல்லி சொல்லி என் மனது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நான் குண்டு எனவே விலகிப் போ என்று சொல்ல ஆரம்பித்தது.

என்னை ஒரு பெண் மிகவும் விரும்பி காதலித்து இலைமறை காயாக என்னிடம் சொல்லியும் நான் மரமண்டையாக இருந்ததால் காதல் கை கழுவிப் போனது பின்னாளில் தெரிய வந்த போது வருத்தமாகத்தான் இருந்தது. அது போல் என் முறைப் பெண்ணொருத்தி என்னை விரும்பி நானாக வந்து காதலை சொல்லும் வரை காத்திருப்பேன் என்று இருந்திருக்கிறாள். அதுவும் என் தயக்கம் காரணமாக பறிபோனது.

பள்ளி முடிந்து கல்லூரிக்கு படிக்க வந்த போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் பெரியப்பா. எல்லாப் பெண்களும் என்னை பெரியப்பா என்று கூப்பிடும் போது எந்தப் பெண்ணை நான் காதலிக்க முடியும்.அப்படியும் ஒரு பெண்ணின் மீது எனக்கு ஈர்ப்பு வந்து சில காலம் தயக்கத்தி்ல் இருந்து பிறகு சொல்லலாம் என்று நினைக்கும் முன்பே வேறொருவன் தட்டிக் கொண்டு சென்று விட்டான்.

காதலில் நான் குண்டாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஏகப்பட்ட பல்புகள் வாங்கியிருந்தாலும் என்னுடைய 27 வயதில் அழகினை முன்னிலைப்படுத்தாமல் நல்ல குணம் மற்றும் ஆளுமைத்திறன் காரணமாக என்னுடன் பணிபுரிந்த பெண்ணின் மீது காதல் வந்து அவரையே திருமணம் செய்து கொண்டது அனைத்து சொதப்பல்களுக்கு விடிவுகாலமாக அமைந்து விட்டது.

குண்டாக இருந்ததனால் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருந்தாலும் பதின் வயது சைட் அடிக்கும் சிரமங்களை மட்டும் தனிப்பதிவாக இடலாம் என்று தோன்றியதால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

பெற்றோர்களே இனியாவது குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணித்து திணித்து அவர்களுக்கு இதுதான் ஆரோக்கியம் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மையை குழந்தைகளுக்கு உண்டாக்காதீர்கள். பின்னாளில் உங்கள் குழந்தையும் ஒரு நாள் இது போல் உங்களைத் திட்டி பதிவெழுதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment