Sunday 24 May 2015

சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம் - பழசு 2012

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 3மணிக்கு ஒரு நபரை அயனாவரம் அருகில் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அலுவலகம் சென்ற பின் தான் அவர் தாமதமாக மதிய உணவு சாப்பிட சென்றிருக்கிறார் என்றும் 4 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் தெரிந்தது.

நேரத்தை கடத்தலாம் என்னடா செய்யலாம் என்று யோசித்து சரி ஐசிஎப் கிரவுண்ட் சென்று உட்கார்ந்தால் கேலரியின் இருக்கைகள் கொதிக்கிறது. முடியவில்லை. எனவே எழுந்து வந்து வண்டியை எடுத்து அயனாவரம் பக்கம் விட்டேன். கோபிகிருஷ்ணாவில் இஷ்டம் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. சரி நேரத்தை கடத்த சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியை திரையரங்கத்திற்கு விட்டேன்.

திரையரங்க வளாகத்தில் கோபிகிருஷ்ணா, ராதா, ருக்மணி என மூன்று திரையரங்கங்கள் உள்ளன. இஷ்டம் படம் அடுத்த வாரம் தான் ரிலீஸ் என்று போட்டிருந்தது. கோபிகிருஷ்ணாவில் கண்டதும் காணாததும் என்ற படமும், ராதாவில் கலகலப்பும், ருக்மணியில் சிங்காரியின் கதை என்ற படமும் ஒடியது.

கலகலப்பு ஏற்கனவே பார்த்தாகி விட்டது. கண்டதும் காணாததும் பார்க்கக் கூடிய படமே இல்லை என முத்துராமலிங்கம் அவர்கள் ஓஹோ புரொடக்ஷன்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். நமக்கும் ஒரு மணிநேரத்தில் திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் சிங்காரியின் கதை படத்துக்கு டிக்கெட் எடுத்தேன். கில்மா படம் தியேட்டரில் பார்க்க வேண்டியது அவசியமானதில்லை. நமக்குத்தான் கம்ப்யூட்டரும் இணையமும் இருக்கிறதே, இருந்தாலும் ஒரு மணிநேரத்தை ஒட்ட வேண்டுமே என்பதற்காக தான் உள்ளே சென்றேன். இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.

நான் அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டிருந்த 1997, 98 காலக்கட்டங்களில் கி்ல்மா படம் பார்க்க வேண்டுமென்றால் பெரம்பூர், ஐசிஎப், அயனாவரம் பகுதியில் உள்ளவர்களுக்கு உள்ள ஒரே தியேட்டர் அயனாவரம் ராதா தான். பிட்டுக்கு பயங்கர பேமஸ். நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒரு முறை சினிமாவுக்கு வந்து விடுவேன். பலமுறை நான் மொட்டை மாடியில் 10 மணிக்கெல்லாம் படுத்து தூங்கி விடுவேன். சில நாட்கள் தூங்கிய பின் திடீரென்று வந்து நண்பர்கள் எழுப்புவார்கள்.

ராதாவுக்கு படம் பார்க்கலாம் வா என்று அழைப்பார்கள். கீழே சென்று சட்டையை எடுக்க முடியாது. எனவே மொட்டை மாடியில் யார் சட்டை காய்ந்தாலும் எடுத்து மாட்டிக் கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன். ஒரு முறை மொட்டை மாடியில் துணிகளே காயவில்லை. பரவயில்லை என்று வெறும் லுங்கி மற்றும் உள்பனியனுடன் சென்ற காலமும் உண்டு. படிப்பு முடிந்த பிறகு நான் அந்த ஏரியாவை விட்டு சென்று விட்டபடியால் ராதா திரையங்கையே மறந்து விட்டேன். பிளாஷ்பேக் முடிந்து விட்டது.

டிக்கெட் எடுத்த பிறகு திரையரங்கினுள் சென்று அமர்ந்தால் என்னுடன் சேர்த்து படம் பார்த்தவர்கள் பத்து பேர் மட்டுமே. அனைத்தும் 50 வயதை கடந்த பெரிசுகள் தான். டீன்ஏஜ் பசங்கள் எல்லாம் இன்டர்நெட், செல் என ஏகமாய் வளர்ந்து விட்டதால் இந்த பக்கமே வருவதில்லை போல.

அப்பொழுது எல்லாம் இன்டர்வெல் முடிந்த பின் வரும் பிட்டு பயங்கர பேமஸ். இப்பொழுது என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை என்று ஆர்வத்துடனே உட்கார்ந்தேன். படம் துவங்கியது.

படத்தின் ஒன்லைன் என்ன? அம்மாவைத் தொடர்ந்து பொண்ணும் விபச்சார தொழிலுக்கு வரக்கூடாது என்பதை பல கூடாதுக்கு பிறகு முடிக்கிறார்கள்.

படத்தின் கதை என்ன? ஒரு விபச்சார விடுதியில் பலபெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் கீதா. அவருக்கு வயதாகி விட்டதால் விடுதியின் ஒனர் கீதாவின் மகளை இத்தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். கீதா தடுக்கவே அவரை இன்ஸ்பெக்டரின் உதவியுடன் கொலை குற்றத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார். அம்மா இல்லாததால் பொண்ணை தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் அம்மா சிறையில் இருந்து தப்பி வந்து விடுதியின் ஒனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை போட்டுத்தள்ளி விட்டு பொண்ணை அவளது காதலனுடன் அனுப்பி வைக்கிறார். உஸ் அவ்வளவு தாங்க கதை.

படத்தில் கில்மா காட்சிகளே இல்லை. இதுக்கு பேசாம SJ சூர்யாவின் நியு அல்லது அஆ பார்த்திருந்தாலே சற்று கூடுதலான கில்மா காட்சிகள் இருந்திருக்கும். ஒருமணிநேரம் நேரத்தை கடத்தியதை தவிர படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

இந்தப் படத்தின் வசனங்களை அப்படியே சொல்வதற்கு நமக்கு ஞாபக சக்தியில்லை. இயக்குனருக்கு ஆலோசனைகளை சொல்லுமளவிற்கு அருகதையும் இல்லை. எனவே விமர்சனத்தை இத்துடன் முடிக்கிறேன்.

நான் உங்களுக்கு சொல்ல வரும் நீதி என்ன? இதுக்கு பேசாம இன்டர்நெட் சென்டருக்கே போய்விடுங்கள். பத்துரூபாயுடன் செலவு முடிந்து விடும்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment