Sunday 24 May 2015

கோபல்ல கிராமம் - கி. ரா - பழசு 2012

இது புத்தக விமர்சனமும் அல்ல, நான் விமர்சனம் எழுதும் அளவுக்கு பெரிய ஆளும் அல்ல. ஒரு புத்தகத்தை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட மகிழ்வையும், ஆர்வத்தையும், படித்து முடித்தவுடன் ஏற்படும் திருப்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த பதிவர் சந்திப்புக்கு சென்ற போது கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் என்ற புத்தகங்களை வாங்கினேன். இதில் கோபல்லபுரத்து மக்கள் புத்தகம் சாகித்ய அகாடமி விருது பெற்றதாகும்.

வாங்கிய தினங்களிலிருந்து புத்தகங்களை படிக்க முடியவில்லை. இன்று சீக்கிரமாக வேலை முடித்து வீடு திரும்பினால் வீட்டில் கரண்ட் இல்லை. இன்று ஷட்டவுனாம். சரி ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுவோம் என்று முடிவு செய்து கோபல்ல கிராமம் புத்தகத்தை எடுத்தேன்.

புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே தமிழின் மிகச்சிறந்த முதல் பத்து நாவல்களில் முதன்மையான நாவல் என்று போட்டிருந்தது வேறு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படித்து முடித்ததும் எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன. இதோ உங்களுக்காக.

நாவலில் அடிப்படை கருத்தாக இருப்பது முன்பு கம்மாவார்கள் என்றும் தற்போது கம்மா நாயுடு என்றும் அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் எப்படி, எதற்காக தெலுகு பேசும் விஜயநகர பகுதிகளிலிருந்து புறப்பட்டு முன்பு அரவ தேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறினார்கள் என்பதை மிகத்தெளிவாக, நாட்டுப்புற வழக்கு நடையில் நாவலை அடித்து நகர்த்தியிருக்கிறார் கி.ராஜநாராயணன்.

நவாப் காலத்திற்கு அடுத்து கும்பெனியார் என்றழைக்கப்படும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன் ராஜங்கம் இல்லாத காலம் தான் நாவலின் களம். கொள்ளையும், கொலையும் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலத்தில் கம்மாவார்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நடைபெற இருந்த கொள்ளையையும், நடைபெற்ற கொலையையும் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை கோட்டையார் என்ற குடும்பத்தாரின் மூலமாக விவரிக்கிறது நாவல்.

இதன் முன்கதையை சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த 138 வயதான பூட்டி (பாட்டியின் அம்மா) தான் பழங்கால வரலாற்றின் பிரதிநிதி. அவளுக்கு 9 வயதாகும் போது நடந்த நிகழ்ச்சிகளை ஒரு பகுதி மறதியிலும், ஒரு பகுதி கற்பனையிலும் ஆழ்ந்து கூறுகிறாள்.

மங்கத்தாயரு அம்மாள் என்ற அந்த பூட்டியின் அக்கா சென்னாதேவி. பேரழகியான அவர் குடும்பத்துடன் விஜயநகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தேவராயர் அரசினை வீழ்த்திய முகமதியர்களின் அரசன் சென்னாதேவியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இதனை விரும்பாத அந்த குடும்பத்தார்கள் 80க்கும் மேற்பட்டோர் இரவோடிரவாக அந்த பகுதியை விட்டு வெளியேறுகின்றனர்.

பலகாலம் நடந்தே தெற்கு நோக்கி நகரும் அவர்கள் பல வருடம் கழித்து வருசநாட்டு பக்கம் வந்து ஒரு காட்டுப் பகுதியை அழித்து குடியேற்றம் செய்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் பல்கிப் பெருகி தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் வியாபித்து வாழ்கிறார்கள்.

கதை நடக்கும் காலத்தில் அவர்கள் வந்து குடியேறிய கோபல்ல கிராமத்தில் கோட்டையார் குடும்பம் தான் ஊர்ப் பெரியவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் ஒரு கொலை நடக்கிறது. கொலையை விசாரிக்கும் அவர்கள் கொலையாளியை கழுவில் ஏற்றுகிறார்கள்.

அது போல் ஒரு இரவில் தங்களது கிராமத்திற்கு கொள்ளையர்கள் வரப்போவதாக துப்பு கி்டைக்கிறது. இரவு முன்னேற்பாடுகள் செய்து சாதுர்யமாக கொள்ளையடிக்க வரும் 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்களை கல்லை கொண்டு அடித்தே துரத்துகிறார்கள்.

இவற்றிற்கு பிறகு கும்பெனியார்கள் என்றழைக்கப்படும் வெள்ளையர்கள் அந்த ஊரினை நிர்வாகத்தில் எடுத்துக் கொள்வதில் இந்த நாவலின் அடுத்த பாகமான கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்கு அடிகோலிட்டு நாவல் நிறைவு பெறுகிறது.

நாவலில் மண்ணின் வாசம் இழையோடுகிறது. அந்த காலக்கட்டத்தில் விவசாய முறைகள், மருத்துவ முறைகள், சமையல், கால்நடைகள் பராமரிப்பு போன்றவற்றை நாம் அந்த காலக்கட்டத்துடன் பயணிக்கும்படி நாவலை எழுதியிருக்கிறார்.

நாவலில் காணக்கிடைக்கும் கருத்துக்கள்.

நிலம், குடம்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அதிகமாகவோ, குறைவாகவோ, தனிமையுடமையாக இருந்தது. காட்டுப்பகுதியை விளைநிலங்களாக்க காட்டுப்பகுதியை பிரித்து மூன்று வண்டிப்பாதைக்கு அகலம் விட்டு உள்ளடங்கிய பகுதிக்கு தீ வைத்தார்கள். தீ எரிந்து சாம்பலான இடம் கரிசல் நிலமாகியது.

வறுமை காலத்தில் சோற்றுக் கத்தாழைகளை உரித்து நீரில் அலசி கசப்பை நீக்கி உண்டார்கள். அவசியமானால், அது சகல நோய்களையும் போக்கக்கூடியது என்ற புனைக்கதையும் படைத்து நம்பிக் கொண்டார்கள்.

அது போல மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் மங்கம்மா சாலையில் தான் இந்தக் கதையில் வரும் கொலை நடக்கிறது. இந்த மங்கம்மா சாலை காவல் கோட்டம் நாவலிலும் வரும். காவல் கோட்டம் நாவலில் மங்கம்மா சாலை கொள்ளையர்கள் மிகுந்த சாலையாகவும் இரவில் செல்ல முடியாத சாலையாகவும் சித்தரிக்கப்படும். வெள்ளையர் காலத்தில் தான் திருட்டைப் போக்க மங்கம்மா சாலையை தவிர்த்து வைகை ஆற்றை ஒட்டி தற்போதுள்ள மதுரை - ராமநாதபுரம் சாலை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மரியாதை படத்தில் ஆற்றுக்கு அருகே வரும் ரஞ்சனியிடம் இருந்து கல்லுக்குள் ஈரம் ராமநாதன் (சிவாஜியின் மாப்பிள்ளையாக நடித்திருப்பவர்) காதில் உள்ள தங்கட்டியை பறித்து அவரை தண்ணீருக்குள் அமிழ்த்தி கொல்வார். அப்போது ரஞ்சனி ராமநாதனின் கால் கட்டை விரலை வாயில் கடித்து துண்டாக்கியிருப்பார். இந்த சம்பவம் அப்படியே இந்த நாவலில் இருந்து கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்படாமல் எடுக்கப்பட்டது தான்.

கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய நாவல் தான். படித்துப் பார்த்து தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment