Sunday 24 May 2015

பொன்னியின் செல்வன் - பழசு 2012

நான் ஒரு புத்தகக் காதலன். டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடும் பேப்பர் முதல் பெரிய புத்தகங்கள் வரை படிப்பதில் ஒரு ஆசை கொண்டவன். சிறுவயதில் குமுதம், ஆனந்த விகடன் மற்றும் நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தவன். சென்னை வந்த பிறகே புகழ்பெற்ற நாவல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படிக்க ஆரம்பித்து வருடா வருடம் குறைந்தது 50 புத்தகங்களையாவது வாங்கி விடுவேன்.

பொதுவாக புத்தக விமர்சனம் எழுதும் பழக்கம எனக்கில்லை. நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததால் எழுதவில்லை. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிகவும் ஆசைப்பட்டு வாங்கியது பொன்னியின் செல்வன் நாவலும் காவல் கோட்டம் நாவலும் தான். ஏற்கனவே காவல் கோட்டத்தை படித்து முடித்து விட்டேன்.

20 நாட்களுக்கு முன்பு தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆரம்பித்தேன். LKM பப்ளிகேசனின் 5 பாகங்களும் அடங்கிய தொகுதி இது. மொத்தம் 850 பக்கங்களை கொண்டது. பொதுவாக சரித்திர நாவல்கள் கொஞ்சம் போரடிப்பது போல் எனக்கு தோன்றும். ஆனால் இதற்கு முன் படித்த பார்த்திபன் கனவு தான் போரடிக்காமல் படித்த சரித்திர நாவல்.

இந்த முறை பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்ததும் நானும் வல்லரையன் வந்தியத் தேவனுடன் குதிரையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பப்பப்பா என்ன வகையான நாவல் இது. கொஞ்சம் கூட போரடிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மனதோடு ஒன்றி விட்டது.

எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள். வந்தியத்தேவனில் தொடங்கி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், பெரிய சம்புவரையர், கந்தன்மாறன், சேந்தன்அமுதன், கருத்திருமன், ஆழ்வார்க்கடியான், பார்த்திபேந்திரன், நந்தினிதேவி, குந்தவை நாச்சியார், பூங்குழலி, வானதி தேவி, மணிமேகலை மற்றும் பலப்பல கதாப்பாத்திரங்கள். அவற்றிற்கான சிறப்பான குழப்பமில்லாத பாத்திரவடிவமைப்புகள் அசத்துகின்றன.

அதன் கதை சுருக்கம் இது தான். தஞ்சாவூரில் சோழ அரசர் சுந்தர சோழன் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரி்ன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் அரண்மனை கட்டி வடபகுதியில் மற்ற படைகள் வந்துவிடாதபடி அரணாக இருக்கிறார். இளையமகன் அருள்மொழிவர்மன் (பின்னாளில் ராஜராஜ சோழன்) இலங்கையில் படையெடுத்து சென்றுள்ள சோழப்படைக்கு தலைமையேற்று இருக்கிறான். ஒரே மகளான குந்தவை நாச்சியார் பழையாறை அரண்மனையில் இருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் தன் தந்தைக்கு அந்தரங்க நண்பனும் வாணர் குல வீரனுமான வல்லரையன் வந்தியத்தேவன் மூலமாக தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு ரகசிய செய்தி அனுப்புகிறான். ஆனால் தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பு ஏற்றிருக்கும் சின்னப் பழுவேட்டரையரிடம் பல பொய்களைச் சொல்லி அரசரை சந்தித்து ஒலையை கொடுக்கிறார்.

வந்தியத்தேவன் பொய் சொல்லியிருப்பது சின்ன பழுவேட்டரையருக்கு தெரிய வரவே வந்தியத்தேவனை சிறைப்பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பித்து குந்தவை நாச்சியாரை சந்திக்கிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. குந்தவையிடம் பெரிய பழுவேட்டரையரும் அவரது இளம் மனைவியான நந்தினி தேவியும் சேர்ந்து அரசரின் பெரியப்பா மகன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்ட சிற்றரசர்களை திரட்டும் விஷயத்தை சொல்கிறான்.

குந்தவை பழுவேட்டரையர்களுக்கு தெரியாமல் இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனிடம் இந்த செய்தியைச் சொல்லி அழைத்து வருமாறு கூறுகிறார். பல எதிர்ப்புகளை மீறி பூங்குழலி என்ற பெண்ணின் உதவியுடன் படகில் இலங்கை சென்று அருள்மொழிவர்மனை சந்தித்து விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறான். வழியில் புயலை கடந்து வருகிறார்கள்.

அதற்குள் பாண்டிய அரசினைச் சேர்ந்த நந்தினி தேவி மேலும பல பாண்டிய ஒற்றர்கள் மூலம் சோழ அரசை கவிழ்க்கவும் சோழ அரசரையும் அவரது மகன்களையும கொல்ல திட்டமிடுகிறார். நந்தினி தேவி திட்டமிட்டபடி நடந்ததா? யார் அடுத்த அரசாக பதவியேற்றார்கள்? குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை கைப்பிடித்தாரா? அரசரையை கைப்பிடிப்பேன் என்று சபதம் செய்த சாதாரண குலப்பெண் பூங்குழலி சபதத்தை நிறைவேற்றினாரா? அருள்மொழிவர்மனை திருமணம் செய்தாலும் சிங்காதனம் ஏறமாட்டேன் என்று சபதம் செய்த வானதி தேவியின் நிலை என்ன? மற்றும் பலப்பல என்ற கேள்விகளுக்கு விடை நாவலில் உள்ளது.

20 நாட்களும் சற்று போரடித்தால் உடன் சுறுசுறுப்பாக நாவலை படித்தாலே போதும் என்ற நிலை இருந்தது. தற்போது படித்து முடித்து விட்டதால் சற்று சோகம் வந்ததென்னவோ நிஜம். நீங்களும் என்னைப் போல் நாவலைப் படித்து பரவசமடையுங்கள்.

இது நன்றாக வந்திருக்கிறது என்று விமர்சனம் வந்தால் மேலும் 500 புத்தக விமர்சனங்கள் உறுதி. சற்று போரடிப்பதாக படிப்பவர்கள் நினைத்தால் இத்துடன் நிறுத்தப்படும்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment