Tuesday 26 May 2015

பதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும் - பழசு 2012

பதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் பதிவெழுதி பொங்கலிட்டு விட்டார்கள். நாம் இனிமேல் சொல்ல புதுசா என்ன இருக்கு. ஆனா ஒன்னு இருக்கு. யாருக்கும் தெரியாமல் என் பொருளை காப்பாற்ற நான் செய்த தில்லாலங்கடி தான்.

பதிவர் சந்திப்புக்கு என்னிடமிருந்த கதர் வெள்ளைச் சட்டையை போட்டுக் கொண்டு போவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் பாருங்க, முதல் நாள் இரவு முழுவதும் கடும் மழை பெய்து சென்னையில் எங்கும் சேறும் சகதியுமாகி விட்டது.

சட்டையை போட்டுக் கொண்டு அம்பத்தூர் எஸ்டேட் வழியாக லூகாஸ் செல்லும் சாலையில் நாம் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் எவனாவது டபக்கென்று சாலையில் இருக்கும் சேற்றை எடுத்து சட்டையில் கோலம் போட்டு விடுவான்.

என் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.

காலையில் 8 மணிக்கு மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கதர் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் பட்டை, கூலிங்கிளாஸ், ஹெல்மெட்டுடன் ரெயின் கோட்டையும் போட்டுக் கொண்டு மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.

தஞ்சை குமணன் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு ஜெமினி சர்க்கஸ்ஸில் சாகசம் செய்யும் பைக்காரனைப் போல சாகசங்கள் செய்து ஒரு வழியாக பதிவர் சந்திப்பு திருவிழா நடக்கும் மண்டபத்தை அடைந்தேன்.

அப்பாடா ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்ற இறுமாப்பை அடைந்தேன். வெளியிலேயே வேஷத்தை கலைத்து விட்டு காவி உடை தரித்த நல்லவனைப் போல மண்டபத்தில் உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் அமரும் போது கூட பார்த்து பார்த்து அமர வேண்டியதாயிற்று. என்னா கஷ்டம்டா.

பதிவர் சந்திப்பு சிறப்பாக துவங்கி நடைபெற்று மதிய இடைவேளை வந்தது. மற்றவர்கள் உணவருந்திய பின்பே விழா ஏற்பாட்டாளார்கள் சாப்பிட வேண்டுமென கலந்தாய்வில் கேட்டுக் கொண்டதால் கடைசி பந்தியில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.

இலை வந்தவுடன் தண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன். ஹி ஹி ஹி சாரி என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

பறிமாறியவர்களில் ஒருவர் ஐஸ்கிரீம் டம்ளரில் கிரேப் ஜூஸை வைத்து விட்டு சென்றார். பின்னாடியே சாம்பார் சாதம் பரிமாறியவர் என் இலைக்கு பரிமாறும் போது சிறிது சாதம் டம்பளரில் உள்ள கிரேப் ஜூஸில் விழுந்தது. கிரேப் ஜூஸ் சில்லென்று சட்டையில் தெளித்தது. விதி மீண்டும் சிரித்தது.

அதன் பிறகு பரிமாற வந்தவர்களை முன்பே மெதுவாக பறிமாறும்படி எச்சரித்து அரைகுறையுடனே சாப்பிட்டு எழுந்தேன். சட்டையை சுத்தம் செய்து காய்ந்ததும் கறை தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது. இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கியது திருவிழா.

பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் விழா களை கட்ட துவங்கியது. கடைசி நேரத்தில் போண்டா வந்தது. நான் இப்பொழுது பரிமாற துவங்க வேண்டாம். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேசி முடித்ததும் போண்டாவை கொடுக்கலாம் என்று கூறினேன். அதற்கு மறுத்த பதிவு நண்பர் ஒருவர் போண்டா சூடு ஆறிவிடும். நாம் தட்டில் வைத்து அனைவரிடமும் சென்று கொடுப்போம் என்றார்.

நானே சட்டையில் சட்னி பட்டு விடும் என்று பயந்து போண்டாவை வேண்டாம் என்று ஒதுக்கினால் விதி தேடி வந்து தள்ளுதே என்று புலம்பியபடியே தட்டில் வைத்து கொடுக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் போண்டா கொடுக்கும் இடத்தில் கூட்டம் சேர ஆரம்பிக்கவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சுரேகா அவர்கள் அனைவரையும் அமரும்படியும் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அழைக்க அனைவருக்கும் கொடுத்து மட்டுமே கொண்டிருந்த நான் வழிந்து கொண்டே அமர வந்தேன்.

என்னை போண்டா கொடுக்கும்படி பணித்த நண்பர் பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டே போண்டா தின்று கொண்டிருந்தார். என் கெரகம் அப்படினு நினைத்துக் கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தேன்.

விழா இனிதே நிறைவடைந்தது. வெற்றிகரமாக நடந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. முடிந்து செல்லும் போது முக்கால்வாசி நண்பர்கள் நடத்திக் காட்டியதற்கு நன்றி தெரிவித்து சென்றனர். நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை நடத்திய நண்பர்கள் மற்றும் சில சீனியர் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி சிறு மீட்டிங் போட்டோம். அதுவும் முடிந்து 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். வரும்வழியெங்கும் சட்டையில் எதுவும் படக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒட்டி வந்தேன்.

வீட்டின் அருகில் வந்ததும் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்தேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது பாழாய்ப்போன ஆப்பாயில் வரும் வரை. ஆர்வத்தில் ஆப்பாயிலை எடுத்து வாயில் போட முயற்சிக்கும் போது வழியில் உடைந்து சட்டையில் மஞ்சள் கரு கொட்டியது.

இதன் பிறகு வீட்டில் நடந்ததை சொன்னால் உலகம் என்னை வெளியில புலி வீட்ல எலி என்று பரிகாசம் செய்து கைகொட்டி சிரிக்கும். தலையில் வாங்கிய அடி புடைத்துக் கொண்டு வலித்தது. சத்தியமாக விதி வலியது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment