Tuesday, 26 May 2015

தமருகம் - என்னை புடிச்ச கெரகம் - பழசு 2012

வெள்ளிக்கிழமையானால் படம் பார்த்து பழகிப் போச்சு. இன்னைக்கு படம் பார்த்தாக வேண்டும் என கை அரித்தது. சொல்லிக்கிற மாதிரி ஒரு படமும் இல்லை. சரி மாற்று மொழிக்கு தாவலாம் என்று முடிவெடுத்து தேடினால் தமருகம் என்ற படம் ரிலீஸ் என்று போட்டிருந்தது.

போஸ்டரைப் பார்த்தால் நூறு அகோரிகள் நாகார்ஜூனாவையும் அனுஷ்காவையும் வெறி கொண்டு துரத்தி கொண்டு இருந்தார்கள். செம வேட்டை தான் முடிவு செய்து திரையரங்கிற்கு போனால் சிரித்து சிரித்து வாய் வலித்து ரசித்து பார்த்தேன். அப்புறம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் போனால் சிவன் கண்ணை குத்தி விடுவார்.

சத்தியமாக இந்தப்படம் தமிழுக்கு வரப் போவதில்லை என்பதால் முழு கதையையும் உங்களுக்கு சொல்லுகிறேன்.

ரவிசங்கர் ஒரு அசுரன். அதாவது பழைய காலத்தில் தேவர்கள் அசுரர்கள் என்று இருப்பார்களே அந்த அசுரன். இத்தனை காலங்கள் கழித்து அசுர குலத்தில் அவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார். ஆந்திராவில் தெலுகு பேசிக் கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் இருக்கிறான்.

பிற்காலத்தில் அந்த சிறுவன் தான் வளர்ந்து அவரை கொல்லப் போகிறான் என்று தன் குருவினால் அறியும் அசுரன் முரட்டு விலங்கு உருவம் எடுத்து அவர் குடும்பத்தில் அனைவரையும் கொல்லுகிறது. சிறுவனை கடுமையான ஆழம் இருக்கும் ஆற்றுக்குள் தள்ள அந்த ஆற்றின் அடிப்பகுதியில் நெடுநாட்களாக தவம் இருக்கும் ஒரு முனிவரின் கையில் விழுகிறான் அந்த சிறுவன்.

சிறுவனது தங்கைக்கு அடிபட்டு உணர்ச்சிகள் தலைக்கு கீழ் இல்லாமல் இருக்கிறது. சிவன் தான் தன் குடும்பம் இறந்து போனதற்கு காரணம் என்று நினைத்து சிவனே தனக்கு முதல் எதிரி என்று அறிவித்து அந்த காட்டுக்குள் இருக்கும் சிவனின் சிலை மீது தனது ருத்திராட்ச மாலையை கழற்றி வீசுகிறான்.

எல்லாரையும் அழித்து விட்டதாக குருவிடம் ரவிசங்கர் சொல்ல உனக்கு உலகம் அடிமையாக வேண்டுமென்றால் ஐந்து கிரகம் ஒன்று சேர்ந்த நேரத்தில் சிவகோத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வேண்டி சிவனை நோக்கி தவம் இருக்க சொல்லுகிறான். ரவிசங்கரும் தவம் இருக்க தொடங்குகிறார்.
பெயர் போட்டு முடித்து மெயின் லைனுக்கு இருபது நிமிடங்களுக்கு பிறகு வருகிறார்கள். ஹீரோயின் அறிமுகம். கதைப்படி அனுஷ்கா ஒரு டாக்டர். சிவன் கோயில் தேரை இழுக்க மொத்த ஊரும் முயற்சிக்க தேர் நிலையடியை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன் என்றகிறது. அனுஷ்கா வந்து இழுத்ததும் தேர் நகர துவங்குகிறது. தியேட்டரில் இருந்த 20 பேரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

அடுத்தது ஹீரோ அறிமுகம். அந்த கோயிலில் இருந்து 50 லட்சம் பணத்தை நால்வர் கொண்ட குழு வந்து கொள்ளையடித்து விட்டு செல்கிறது. போலீஸ் துரத்த தொடங்க இவர்கள் உடனடியாக ஒரு கண்டெயினர் நிரம்பியிருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள். அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

நம்மை யார் காப்பாற்றுவார் என்று ஒருவன் கேட்க கொள்ளைக்கூட்டத் தலைவன் நம்மை காப்பாற்ற ஒருவன் இருக்கிறான். அவன் வில்லனுக்கு எல்லாம் வில்லன், இப்ப வருவான் என்று சொல்ல ஹீரோ அந்த இடத்திற்கு சரியாக வருகிறார். அவர்களை தனது காரில் ஏற்றி வீலிங் செய்து காரை ஓட்டுகிறார். காரின் முன் சக்கரத்தை தூக்கி காரை எடுக்கிறார். என்ன ஒரு ஹீரோயிசம்.
ஒரு வார்த்தை கூட தெலுகு தெரியாத என் நண்பன் ஓருவன் என்னுடன் படம் பார்க்க வந்திருந்தான். இந்த காட்சியிலேயே அவனுக்கு காதில் ரத்தம் வந்து விட்டது.

20 வருடம் தவமிருந்து சிவனிடமிருந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்குகிறான் அசுரன். கிரகணம் அன்று கோயிலுக்குள் குளித்துக் கொண்டிருக்கும் அனுஷ்காவை வெறி கொண்டு பார்க்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள அடுத்த கிரகணம் வரை காத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஹீரோ ஒருநாள் குடித்து விட்டு சிவன் கோயிலி்ல் வந்து சண்டையிட்டு செல்ல சிவன் அவனை காப்பாற்ற பிரகாஷ்ராஜ் வேடம் பூண்டு வருகிறார். குடித்து விட்டு தண்டவாளத்தில் கிடக்கும் ஹீரோவை ரயிலில் அடிபடாமல் காப்பாற்றுகிறார். என் நண்பன் என்னை முறைக்க ஆரம்பித்தான்.

சிவன் ஹீரோவுக்கு ப்ரெண்ட்ஷிப் டேவுக்காக பரிசு அளிக்கிறார். ஹீரோயினும் வந்து நட்பு கயிறு கட்டி விடுகிறார். ஹீரோவுக்கு காதல் பூத்து விடுகிறது. ஒரு பாட்டு அட்டகாசமான டிஆர் டைப் செட்டில் வருகிறது.

ரொம்ப லெங்த்தா போகுதா. சரி சரி டக்குனு முடிச்சிக்கிறேன். வில்லன் அனுஷ்காவை கைப்பிடிக்க கணேஷ்வெங்கட்ராமின் உருவில் வருகிறார். சிவனை நாகார்ஜூனாவிடம் இருந்து சதி செய்து பிரிக்கிறார். அப்பாவி சிவனும் ஒன்னும் செய்யாமல் ஹீரோவை அம்போவென விட்டு செல்கிறார்.

துணையில்லாத நாகார்ஜூனா எப்படி அசுரனிடம் இருந்து அனுஷ்காவை மீட்டு டூயட் பாடுகிறார் என்பதே மீதிக் கதை.

என் நண்பன் படம் முடிந்ததும் என்ன செய்தான் என்று சொன்னால் அது என் கெளரவத்தை பாதிக்கும் என்று நான் நினைப்பதால் அதனை சென்சார் செய்து கொள்கிறேன். ஆந்திராவில் படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் இந்தப்படம்.

அவனவன் ஹாலிவுட் படங்களை பார்த்து விட்டு இன்ஸ்பிரேசன் என்ற பெயரில் காப்பியடித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இப்படியொரு படம் தெலுகு சினிமாவை இன்னும் சில படிகள் கீழிறக்கவே செய்யும்.

படத்தில் பிரம்மானந்தமும் அவரது கூட்டணியும் செய்திருப்பது எல்லாம் மொக்கை காமெடி.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் வில்லன் நாகார்ஜூனாவை தூக்கி அடிக்க வானத்தின் மேல் பிஎஸ்எல்வி ராக்கெட்டைப் போல் போய்க் கொண்டே இருக்கிறார். அப்படியே போனவர் கைலாசத்துக்கும் போய் விட அங்கு சிவனை தரிசனம் செய்து கீழிறங்க எரிபொருளை நிரப்பிக் கொண்டு புது தெம்புடன் கீழே வந்து வில்லனை துவம்சம் செய்கிறார்.

அப்படியும் வில்லன் புது ஆயுதத்தை கையில் எடுக்க கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஹீரோவுக்கு சிவன் மேலிருந்து தன்னுடைய சூலாயுதத்தை கொடுக்கிறார். அதனை கொண்டு வில்லனை கொன்று அசுர குலத்தை முற்றிலும் அழித்து 2012ல் உலகத்தை அழிக்க இருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டு உடை மாற்றிக் கொண்டு அனுஷ்காவை போட்டு பொரட்டி எடுக்கிறார். சத்தியமாக நம்புங்கள் மேலே சொன்ன க்ளைமாக்ஸ் அப்படியே படத்தில் இருந்தது.
 
முதல் பாட்டுக்கு வந்து சார்மி செம கெட்ட குத்தாட்டம் போட்டிருக்கிறார். தக்காளி நல்லா பெசஞ்சி வுட்டுருக்கானுங்க போல. கொழ கொழனு இருக்கிறார். அதுவும் பின்புறத்தை மட்டும் ஆட்டிக் கொண்டு ஆடும் அந்த ஆட்டம் இருக்கிறதே. இந்த கொடுமை படத்தை அந்த பாட்டுக்காகவும் சார்மியின் ஆட்டத்திற்காகவும் பார்க்கலாம்.

அனுஷ்கா மட்டும் இல்லையென்றால் ஒரு பயலும் தியேட்டருக்குள்ளேயே இருந்திருக்க மாட்டான். இன்னும் சொல்லாம் தான் ஆனால் இதுக்கே ஆஃப் அடிக்க வேண்டியிருக்கு இன்னும் படத்தினை ரீவைண்ட் செய்து மூளையை குழப்பினால் கூட ஒரு குவார்ட்டரை அடிக்கக் கூடிய ஆபத்தும் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment