Sunday 24 May 2015

காதலின் தூதுவர்கள் - பழசு 2012

சிறுவயதில் அனைவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். அது என்னவோ தெரியவில்லை. காதலிக்கும் அனைத்து மாமாக்களும், அத்தைகளும், சித்தப்பாக்களும், சித்திகளும் 10 வயதிற்குட்பட்ட பையன்களையே காதல் தூதுவன்களாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

எனக்கு நினைவு தெரிந்து நான் முதல் காதல் தூது போனது என் தாய்மாமனுக்கு தான். அம்மாவின் தம்பியான அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது அத்தை பெண்ணான வேம்பு மீது காதல், வேம்புவுக்கும் தான். இவர் ராணுவத்திலிருந்து விடுமுறையில் இருந்து வந்ததும் வேம்பு அத்தையின் ஊரான நார்சிங்கம்பேட்டைக்கு என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார்.

குடவாசலில் நான்கைந்து சாக்லேட்டுகளை வாங்கும் மாமா என்னிடம் கொடுக்காமல் ஊர் வரை அழைத்து செல்வார். மாமா வேம்பு அத்தையின் வயலுக்கு அருகில் உள்ள சாமியார் மடத்தில் இருந்து கொண்டு என் பாக்கெட்டில் சாக்லேட்டை வைத்து வேம்புவிடம் சென்று "பாக்கெட்டில் சாக்லேட் இருக்கிறது என்று சொல். அவர் எடுத்து பிரித்து தருவார்" என்று சொல்வார்.

இது அவர்களுக்குள் கோர்ட்வேர்ட், வேம்பு அத்தையும் அதனைப் புரிந்து கொண்டு சாக்லேட்டை பிரித்து கொடுத்து விட்டு பாட்டியிடம் வயலுக்கு போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு சாமியார் மடத்திற்கு வருவார். அங்கு இருவரும் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பர். நான் அங்குள்ள பசங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன்.

திரும்பவும் வீட்டுக்கு செல்லும் போது என்னை அழைத்துக் கொண்டு திருவாரூர் வருவார். ஒவ்வொரு விடுமுறையின் போதும் இந்த சம்பவம் நடக்கும். ஒரு முறை என்னிடம் சாக்லேட்டை கொடுத்து அனுப்பிவிட வீட்டிற்கு சென்றால் வேம்பு அத்தை பக்கத்தில் எங்கோ சென்றிருக்க உடனே சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் வேம்பு அத்தையின் குஞ்சிதபாதம் தாத்தாவிடம் சென்று பாக்கெட் சாக்லேட் இருக்கிறது என்று நான் கூற அவர் அதை ஏண்டா என்னிடம் சொல்கிறாய் என்று சொல்ல நான் நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி விட பிறகு நடந்த சண்டையை சொல்லவும் வேண்டுமோ. ஆனால் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர்.

அடுத்த தூது நாங்கள் திருவாரூரில் என் சிறுவயதில் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் பெண்ணான பானுமதி அக்காவுக்கு. பானுமதி அக்கா அப்பொழுது பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடவாகனத்தெருவில் இருந்த தையற்கடையில் பணிபுரிந்த சங்கையாவை காதலித்து வந்தார்.

அவர் பள்ளியில் இருந்து வந்ததும் பள்ளி நோட்டில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்து அதில் இங்க்கு பேனாவில் தமிழில் தப்பும் தவறுமான எழுத்துப்பிழையுடன் கூடிய ஒரு கடிதத்தை எழுதி ரோட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் என்னிடம் கொடுத்தனுப்புவார். நான் அந்தக் கடித்தை சங்கையா அண்ணனிடம் கொடுத்ததும் அதனை அவர் படித்து விட்டு பதில் கடிதத்தை அந்த கடிதத்தின் பின்பக்கம் எழுதித்தருவார்.

அதனை எடுத்துச் சென்று பானுமதி அக்காவிடம் கொடுத்து விடுவேன். சிலமாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்தக் காதல் ஓரு அவசரத்தில் மாட்டிக் கொண்டது. ஒரு முறை கடிதத்தை கொடுக்க நான் இல்லாமல் போகவே பானுமதி அக்கா மூக்கொழுவி மகேஷிடம் கொடுக்க அவன் பயந்து போய் கடிதத்தை கொண்டு போய் பானுமதியின் அண்ணனிடம் கொடுத்து விட்டான். அவர் இந்த ஏரியாவின் கவுன்சிலர்.

பிறகென்ன திருவாரூரின் அருகில் உள்ள மாங்குடியில் இருந்து வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த சங்கையா கட்டி வைத்து வெளுக்கப்பட்டு இனி திருவாரூருக்கு திரும்ப வரவே கூடாது என்ற நிபந்தனையுடன் திருப்பி அனுப்பப்பட்டார். உடனடியாக பானுமதி அக்காவுக்கும் திருச்சியில் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என் சித்தப்பாவும் வேம்பு அத்தையின் தம்பியுமான முருகானந்தம் அவர் நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் கரையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான் என் அம்மாவுடன் திருவாரூரிலிருந்து வந்து இறங்க என் சித்தப்பா என் அம்மாவிடம் "செந்தில் என்னுடன் இருக்கட்டும். நான் வரும்போது அழைத்து வருகிறேன்" என்று சொன்னதால் அம்மா மட்டும் வாய்க்கால்கரை தாண்டி நார்சிங்கம்பேட்டை சென்றுவிட்டார்.

அது அபூர்வ சகோதரர்கள் படம் வெளியாகியிருந்த சமயம். எனக்கு 9 வயதிருக்கும். முருகானந்தம் சித்தப்பா என்னை பள்ளி முடிந்து ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த அவரின் சகவகுப்பு பெண்களிடம் சென்று "என் சித்தப்பாவுடன் திருவாரூருக்கு சென்று அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்க வருகிறீர்களா" என்று கேட்க சொன்னார்.

நான் சென்று அவ்வாறே கேட்டுத் தொலைய அந்தப் பெண்கள் என்னை கன்னாப் பின்னாவென்று திட்டிவிட்டனர். நான் கடுப்பாகி நேரே தாத்தா வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி சத்தம் போட தாத்தா முருகானந்தம் சித்தப்பாவை அடிக்க கிளம்பிப் போய் விட்டார்.

அப்பொழுதும் எனக்கு கோவம் அடங்காமல் முருகானந்தம் சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த எல்லா நண்பர்களின் வீட்டுக்கும் போய் அவர்களின் அப்பா, அக்கா மற்றும் கண்ணில் மாட்டியவர்கள் எல்லோரிடமும் சொல்லி விட ஊரே ஒவ்வொரு பையனையும் அடிக்க கட்டை, கம்பு, விளக்கமாறு, அருவாள் சகிதம் கிளம்பி விட்டது.

ஏனென்றால் அப்பொழுதெல்லாம் பெண்களுடன் பையன் பேசுவதும், காதலும் கடுமையான குற்றம் என்று பெரிசுகள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு சில வருடங்களுக்கு நான் நார்சிங்கம்பேட்டையில் எங்குமே தனியாக செல்வதில்லை. தனியாக சென்று மாட்டினால் என் சித்தப்பாவின் நண்பர்களிடம் நான் அடிவாங்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment