Tuesday, 26 May 2015

பஞ்சேந்திரியா - கடுப்பேற்றிய அரசியல் கட்சியினர் - பழசு 2012

விடுதலை சிறுத்தைகளுக்கு யாரும் முடிவு கட்ட வேண்டியதில்லை. அவர்களே தனக்குத் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வார்கள். நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு திருமாவளவன் வந்திருந்தார். எனவே அவரது அடிப்பொடிகள் எல்லாம் திருவாரூருக்கு படையெடுத்தார்கள்.

நான் மாலை 5 மணிக்கு நான் மாயவரத்திலிருந்து குடும்பத்தினர் சகிதம் திருவாரூரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்பு ஒரு பேருந்தில் வந்து கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆ ஊ என்று கூச்சலிட்டுக் கொண்டே எவ்வளவு ஹாரன் அடித்தும் வழி விடாமல் வந்தனர்.

அவர்களில் ஒருவன் குடித்து விட்டு பீர் பாட்டிலை மேலே எறிந்தான். என் காருக்கு நேரே வந்தது. நான் சற்று விலகியிக்காவிட்டால் பாட்டில் பேனட்டில் வந்து விழுந்திருக்கும். சிறிது நேரம் கழித்து பேருந்து போகும் போதே ஒருவன் படியிலிருந்தே ஒன்னுக்கடித்தான். நான் விலகி அப்படியே வண்டியை நிறுத்தி விட்டேன்.

என்னுடன் என் அம்மா, மனைவி, அக்காள் மற்றும் அக்காள் குழந்தைகள் ஆகியோர் வண்டியில் அமர்ந்திருந்தனர். அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். இவனுங்களை நான் மட்டும் காறித்துப்பவில்லை. இவர்களுடயை செயலால் நேற்று மட்டும் குறைந்தது 2000 பேர் அதிருப்தி அடைந்து இருப்பர். எனக்கு இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

----------------------------------------

தத்ரூபமான மெழுகு சிலை


-----------------------------------------------------

இன்று மதியம் திருவாரூர் பெட்ரோல் பங்க்கில் காருக்கு டீசல் போட்டுக் கொண்டு இருக்கும் போது "டேய் செந்தில்" என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் என்னுடைய பள்ளிக் கால நண்பன் அரவிந்த் பைக்கில் நின்று கொண்டிருந்தான். கூலிங்கிளாஸ், பர்முடாஸ், காதில் கடுக்கண் என திருவாரூருக்கு சம்பந்தமில்லாத கெட்அப்பில் இருந்தான்.

"என்னடா மாப்ள" என்று அருகில் சென்றால் என்னை ஏளனமாக பார்வை பார்த்தான். நான் நெற்றியில் பட்டையை போட்டுக் கொண்டு வேட்டியில் இருந்தேன். சற்று அலட்சியமாக சிரித்தப் படி "என்னடா நான் உனக்கு பேஸ்புக்கில் மட்டும் தான் நண்பனா" என கூறினான். "ஏன்டா என்ன ஆச்சு" என்று கேட்டேன்.

"நான் பேஸ்புக்கில் எப்படியெல்லாம் கலக்கி வருகிறேன் தெரியுமா, நீ என்னுடைய போட்டோவையெல்லாம் பார்ப்பதில்லையா" என்று கேட்டான். நான் சற்று நேரம் ப்ளாஷ்பேக்கிற்கு சென்றேன். சில மாதங்களுக்கு முன்பு அவன் எனக்கு பேஸ்புக்கில் ப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் கொடுத்தான். நானும் அதனை அக்செப்ட் செய்தேன்.

அதிலிருந்து தினமும் வித்தியாசமான சில சமயத்தில் கிறுக்குத்தனமாக எடுத்த எதாவது ஒரு போட்டோவை அப்டேட் செய்து அவனே அதனை ரசித்து கமெண்ட்டும் போட்டுக் கொண்டு இருந்தான். பையன் சரியான விளம்பரப் ப்ரியன். நமக்கு பந்தாவைக் கண்டால் ஆகாது. எனவே பேஸ்புக்கில் இருந்து அவனை விட்டு விலகினேன். ப்ளாஷ்பேக் ஓவர்.

"நீயெல்லாம் இணையம் பக்கமெல்லாம் வருவதில்லையா" என்று கேட்டான். நானும் இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் "எனக்கு அந்த வேலை இல்லைடா மச்சான். நான் ரயில்வேயில் மெக்கானிக்காக குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு அதனைப் பற்றிய அனுபவமில்லை" என்று கூறினேன்.

அதற்கு அவன் "பரவாயில்லைடா மச்சான் நான் பேஸ்புக்கில் உலகளவில் பேமசாகி விட்டேன். இப்பொழுது கூகிள் ப்ளஸ்ஸில் இணையப் போகிறேன். அடுத்த மாதம் இணையத்தில் ப்ளாக் என்று ஒன்று இருக்கிறது. அதில் நான் கதையெல்லாம் எழுதப் போகிறேன். நீ என்னுடைய பேஸ்புக் மேட்டரையெல்லாம் லைக் செய்து கமெண்ட் போட்டால் உன்னையும் நிறைய பேருக்கு தெரிந்து பிரபலமாவாய்" என்று கூறி விட்டு ஏதோ இங்கிலீஷ் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.

எனக்குத்தான் இவனையெல்லாம் சந்தித்ததற்கு எதனால் என்னை அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை. எல்லாம் கலிகாலம்டா சாமி. கடவுளே இந்த மாதிரி அரவேக்காட்டு பசங்ககிட்டயிருந்து என்னைக் காப்பாற்று.

-----------------------------------------

நம்ம ரயில்வேல தான் இப்படியெல்லாம் நடக்கும்


---------------------------------------------------

சென்னையிலிருந்து திருவாரூருக்கு நேற்று முன்தினம் ஆம்னி பேருந்தில் வந்தேன். 10 மணிக்கு கோயம்பேட்டில் பேருந்தை எடுத்தவன் 11.30க்கு திருவான்மியூர் வந்தான். அதன் பிறகு அவன் எடுத்தது அசுரவேகம். காலை நாலரை மணிக்கெல்லாம் திருவாரூரில் எங்களை இறக்கி விட்டான். 300 கிலோமீட்டரை 5 மணிநேரத்தில் கடந்திருந்தால் என்ன வேகத்தில் வந்திருப்பான். கண்டிப்பாக அடுத்த பெரிய பேருந்து விபத்து எங்கள் பகுதியிலிருந்து காத்திருக்கிறது.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment