Tuesday 26 May 2015

சரக்கில்லாமல் பிறந்த 2013 புத்தாண்டு - பழசு 2013

வணக்கம் நண்பர்களே, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வாரத்திற்கும் மேல் இணையம் பக்கம் வராமல் இருந்தேன். இதுவே பெரிய சாதனை.

இதற்கு முன்பு எந்த ஊருக்கு சென்றாலும் எப்படியும் தினம் ஒரு முறையாவது இணையத்தில் உலாவுவது வழக்கம். இந்த முறை தான் இணையம் பக்கமே வராமல் இருந்தேன். ஒரு வாரமாக நடந்த சம்பவங்கள் பஞ்சாயத்துகள் எல்லாம் இனிமே தான் விசாரித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மெடுல்லா ஆப்ளிக்கேட்டா சம்பவத்திற்கு பிறகு கசாயத்தை தொடவேயில்லை. தொடவும் முடியாது என்பது வேறு விசயம். ஊருக்கு சென்றதும் வீட்டம்மா எல்லா மேட்டரையும் அப்பா, அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட சென்னையில் வாங்கிய வசவுகள் தாண்டி திருவாரூரில் அதிகம் கிடைத்தது.
சென்னை வந்ததுக்கு பிறகு எதையாவது எழுதலாம் என்று காலையிலிருந்து மேட்டர் தேடிக் கொண்டு இருக்கிறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. அதுக்காக பதிவப் போடலன்னா நாமெல்லாம் அப்புறம் எப்படி சீனியர்னு சொல்லிக்கிறது. அதனால கவலைப்படாதீங்க, எப்படியும் சுவையான பதிவா இத தேத்திடுவேன்.

எப்பொழுதும் புத்தாண்டை கொண்டாட்டங்களுடனே கழிப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான கொண்டாட்டங்கள். ஒரு வருடம் அண்ணா சாலையில் ஒவர் களேபரம் செய்து காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தது வரை உண்டு. எல்லாவற்றிற்கும் மாற்றாக இந்த வருடம் எந்த வாழ்த்தும் சொல்லாமல், பெற்றுக் கொள்ளாமல் சென்னை வரும் ரயிலில் தூக்கத்திலேயே நமக்கு தெரியாமல் புத்தாண்டு பிறந்து விட்டது.
இந்த ஆண்டுக்கான சபதம் எடுக்க வேண்டுமென்று யாரைப்பார்த்தாலும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சாமி கண்ண குத்திவிடும் என்ற மிரட்டலோடு. ஒரு விபத்து காரணமாக கெட்ட பழக்கம் எல்லாத்தையும் விட்டாச்சி. இல்லன்னா அதை காரணம் காட்டி தப்பிச்சிருப்பேன்.

யோசிக்கிறேன். ஒன்னும் புடிபடல. சரி உபயோகமா யோசிச்சதுல, இருக்கும் ரூபாய் 5 லட்சம் கடனை இந்த ஆண்டுக்குள் அடைத்து விட வேண்டுமென்று சபதம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவேனா என்பதை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது போல காலண்டர் துரதிஷ்டம் என்று ஒன்று என்னை துரத்தும். ஒவ்வொரு ஆண்டும் ஏதோவொரு தொழிலில் மும்முரமாக இருப்பேன், ஆண்டு முழுவதும் நன்றாக போகும் அது கடைசியில் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும். அதனால் என்னால் எனது நிறுவனத்திற்கான காலண்டரை அடிக்க முடியாமல் போய் விடும். இந்த ஆண்டு அரசு வேலையில் சேர்ந்து விட்டதால் நிரந்தரமாக அந்த ஆசை நிராசையாகி விட்டது.
பதிவு எழுதுவதில் என்ன சபதம் எடுப்பது என்று யோசித்ததில் நிறையவே இருக்கிறது என்று தெரிகிறது. இந்த ஆண்டு வெற்றியாக நான் நினைப்பது யார் சாயலும் இல்லாமல், எந்த கட்டுரையிலிருந்தும் மூலம் எடுக்காமல் நானே எழுத வேண்டுமென்று நினைத்தது முக்கால் வாசி நடந்தது தான்.

அது போல் தேவையில்லாத ஒரு பிரச்சனையில் நம்ம பேர இழுத்து விட்டனர். பிறகு நான் அளவுக்கு அதிகமாக பொங்கி எழுந்தது எல்லாம் அனைவரும் அறிந்தது. பிறகு யோசித்துப் பார்த்தால் ரொம்ப சின்னப்புள்ளத்தனமாக இருந்தது. இனி எங்கேயும் பொங்கல் வைக்க மாட்டேன். இதற்காக ஸ்பெசல் அட்வைஸ் பண்ணிய உண்மைத்தமிழன் அண்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் அந்த சண்டை சரியா தவறா என்று தெரியாமல் என் பெயர் சம்பந்தப்பட்ட காரணத்தால் நிபந்தனையில்லா ஆதரவு தந்த நண்பர்களுக்கு ஸ்பெசல் நன்றிகள். அவற்றில் முக்கியமானது பல உள்ளது. ஒரு உதாரணம் ஜெர்மனியிலிருந்து ஒரு ஈழத்தமிழ் நண்பர் முதல் முறையாக போன் செய்து வழக்கமாக தோத்தவண்டா வலைத்தளத்தை படித்து வருவதை கூறி ஆதரவாக பேசிய போது ரொம்பவே நெகிழ்ந்து போனேன்.

ஆரம்பகாலங்களில் எது பதிவின் தரம், எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரியாமல் நானும் பதிவில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்து முடிந்த அளவுக்கு எழுதினேன். அதற்கு இரண்டு பாரா கூட வரவில்லை என்பதற்கு நான் முதன் முதலில் எழுதிய டீஸ்மார்கான் என்ற இந்திப்படத்தின் விமர்சனம் உதாரணம்.

பிறகு காப்பி பேஸ்ட் தவறென்று தெரியாமல் ரெண்டு மூணு செய்தேன். பிறகு சில பல காயங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்து இன்று கண்டெண்ட்டே இல்லாமல் கூட பதிவெழுதுகிறேன். நண்பர்களின் சம்பிரதாய பாராட்டுகளை மீறி அறிமுகமில்லாத நண்பர்களின் பாராட்டுகள் தான் நான் நன்றாக எழுதுவதை உறுதி செய்கின்றன.

ஆனால் என்னைப் பற்றிய என் சுயமதிப்பீடு என்னவென்றால் நான் எழுதும் பதிவு ராவாக இருக்கிறது. அதனை மெருகூட்டினால் அதாவது எடிட் செய்தால் சிறப்பான பதிவாக அழகு பெறும் என்று தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக செய்வேன் என்று நினைக்கிறேன்.

முக்கியமான விஷயமாக டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததனால் புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணித்த நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக எந்தவித கொண்டாட்டங்களிலும் நான் இல்லாமல் அமைதியாக பிறந்த புத்தாண்டை வரவேற்கும்

ஆரூர் மூனா

No comments:

Post a Comment