Tuesday, 26 May 2015

சென்னையின் மிச்சமுள்ள ஆங்கிலேயர்களின் அடையாளங்களில் ஒன்றான மனித சித்ரவதை கூடம்

சென்னையில் இது போன்ற இடம் இருப்பது நம்மில் முக்கால்வாசிப் பேருக்கு தெரியாது. ஏன் எனக்கு கூட சில மாதங்கள் முன்பு வரை தெரியாது. என்னுடன் பணிபுரியும் சகஊழியர் சொன்ன பின்பு தான் தெரியும்.

பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில்வே ஸ்டேசனில் இறங்கியதும் நடைமேம்பாலத்தில் ஏறியதும் பெரம்பூர் செல்ல ஒரு பக்கமும் கேரேஜ் ஒர்க்ஸ் செல்ல மறுபக்கமும் இறங்க வேண்டும். இதில் நீங்கள் கேரேஜ் ஒர்க்ஸ் பக்கம் செல்லும் பாதையில் இறங்க வேண்டும். படியிறங்கியதும் இடது பக்க திருப்பத்தின் முனையில் கேள் நாயக்கர் டீக்கடை சுருக்கமாக கேஎல்லார் டீக்கடை வரும். அதற்கடுத்து ஒரு பாழடைந்த கட்டிடம் தான் இது. மிகவும் சிதிலமடைந்த பகுதி இது.
சுதந்திரத்திற்கு முன்பு வரை ரயில்வே பொருட்களை திருடிய நபர்கள் பிடிபட்டால் நிர்வாணப்படுத்தி இதில் பின்புறமாக கட்டி வைத்து சக்கரத்தை சுழற்றினால் அப்படியே இறுகி மிகுந்த வலியை கொடுக்குமாம். அதன் பிறகு பிரம்பால் பின்புறத்தில் அடிப்பார்களாம். மூன்று நாட்கள் வரை அப்படியே கட்டி வைத்து பிறகே ஜெயிலில் அடைப்பார்களாம்.

சுதந்திரத்திற்கு பின்பு இந்த கொடூர சித்ரவதை நிறுத்தப்பட்டு இப்பொழுது கவனிப்பாறின்றி இந்த இடம் பாழ்பட்டு கிடக்கிறது.

எத்தனையோ மனிதர்களின் கதறல்களையும், வலியையும் கண்ட இந்த இடம் இன்று எதற்கும் சாட்சியின்றி மெளனமாக நிற்கிறது. சென்னையின் மையப்பகுதியில் இப்படியொரு மனித சித்ரவதை கூடம் இருந்தது என்பதை நம்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் உண்மை அதுதான்.

நீங்கள் யாராவது இந்தப் பக்கம வந்தால் ஒரு முறை சென்று பாருங்கள்.

 ஆரூர் மூனா

No comments:

Post a Comment