Sunday 24 May 2015

நாட்டுப்புறக் கலைஞர்கள் - பழசு 2012

சிறுவயதில் இருந்தே நாட்டுப்புறக் கலைகளின் மீது ஆர்வம் உண்டு. என் அம்மாவழிப் பாட்டி ஊரான ஆதனூர் மண்டபத்திற்கு மே மாதம் முழுவதும் என் குடும்பத்தார் மற்றும் சித்தி குடும்பத்தார், நான்கு மாமா குடும்பத்தார் அனைவரும் வருவது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கம். சுற்றுப்புற ஊர்களில் கோடை திருவிழாக்களில் இரவு முழுவதும் நாடகங்கள் நடைபெறும்.

பவளக்கொடி, அல்லி அர்ஜூனா மற்றும் ப நாடகங்கள் மூன்று இரவுகள் நடைபெறும். கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உட்பட அனைத்து நாட்டுப்புறக் கலைகளும் உண்டு. விடாமல் என் ஆத்தா வீட்டிலிருந்து தாத்தா, ஆத்தா உட்பட சின்டு, சிமிழு, மரக்கா உட்பட அனைத்து வானரங்களும் (வேற யாரு, நாங்க தான்) வண்டிக்கட்டிக் கொண்டு செல்வோம்.

முழு இரவும் விழித்திருந்து நாடகம் பார்ப்பது, இரண்டு ரூபாய் கண்ணாடி மாட்டிக் கொண்டு திருவிழா முழுவதும் சுற்றி வருவது, மாவிளக்கு போடுபவர்களிடம் சென்று ஒரு கை வாங்கித் தின்பது, சின்னப்புள்ளைங்க ஜடைய புடிச்சு இழுப்பது என 12 வயது வரை அழகான நாட்கள் நிரம்பிய டைரி இன்னும் என் மனதில் இருக்கிறது.

12 வயதிற்கு பிறகு ஆத்தா வீட்டிற்கு செல்வது குறைந்ததாலும், திரை கட்டி படங்கள் போடுவது அதிகரித்து நாடகங்கள் நடைபெறுவது குறைந்ததாலும், மீசை முளைக்க ஆரம்பித்ததாலும் தஞ்சை மண்ணில் நாடங்கள் பார்ப்பது நின்றே போனது.

அதன் பிறகு மற்றொரு சீசன் அது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்த என் பெரியம்மாவின் வீட்டிற்கு சென்ற போதிலிருந்து துவங்கியது. அந்தப்பக்கம் கரகாட்டம் கொஞ்சம் கிளுகிளுப்பு மிக்கதாகவும், நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இதற்கெனவே கோடை காலங்களில் கறம்பக்குடியில் டேரா போட ஆரம்பித்தேன். அங்கு ஒரு நண்பர்கள் குழு சேர்ந்தது. அவர்களுடன் சேர்ந்து சுற்றுப்புறங்களில் நடைபெறும் கரகாட்டம், கிளப் டான்ஸ் ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்தேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னைக்கு படிக்க வந்து விட்டதால் அதன் பிறகு கறம்பக்குடி செல்வது மிகவும் குறைந்து போனது.

இது வரை நான் சொன்னது நாட்டுப்புறக் கலைஞர்கள் எவ்வாறு மகிழ்வித்தார்கள் என்பதை வெளியில் இருந்து பார்த்ததைத் தான். மற்றொரு முகம் அவர்களுக்கு உண்டு என்பதை மற்றொரு இடத்தில் தான் கண்டு கொண்டேன்.

தஞ்சாவூர் நகரத்தில் கீழஅலங்கத்தில் பீரங்கி மேடு அருகில் என் பெரிய அத்தை வீடு இருக்கிறது. அங்கு செல்லும் சமயங்களில் என் மாமா பையனுடன் கிரிக்கெட் விளையாட செல்வேன். அங்கு விளையாட வருபவர்கள் பற்றிய அறிமுகம் கிடைத்த பிறகு தான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் நாட்டுப்புறக் கலைஞர்களின் பிள்ளைகள் என்று. பீரங்கிமேடு எதிர்ப்புறம் உள்ள குடியிருப்பு முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டும் தான் குடியிருக்கிறார்கள்.

அதன் பிறகு அந்தப்பக்கம் செல்லும் போது அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது சாயங்கால நேரங்களில் நாட்டுப்புறக் கலைகளை பயிற்சியில் ஈடுபடுவதை பார்ப்பதற்கு அவர்கள் குடியிருப்புக்கு செல்வேன். அங்கு கண்ட ஒரு காட்சி என் மனதை என்னவோ பண்ணியது.

புதுக்கோட்டை பக்கம் கரகாட்டத்தில் அதிகமான ரசிகர்களை கொண்ட கரகாட்ட சரசா அள்ளி முடிந்த கூந்தலுடன் முகத்தில் கரி அப்பிக் கொண்டு மண் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். சரசா ஆடும் போது அதன் ரவிக்கையில் நூறு ஐம்பது என ரூபாய் நோட்டுக்களை குத்துவதற்கே கூட்டம் வரிசையில நிற்கும்.

அந்த சம்பவத்தினை மட்டுமே நினைவில் கொண்டுள்ளவர்களுக்கு இந்தக் காட்சியைப் பார்த்தால் தான் தெரியும். அவர்களது சிரமம். ஏனென்றால் அவர்களது சம்பாத்தியம் எல்லாம் அந்த ஒரு மாதம் மட்டும் தான், அந்த ஒரு மாத சம்பாதியத்தை வைத்துக் கொண்டு குடும்பமே ஒரு வருடத்தை ஒட்ட வேண்டியிருக்கும். வேலையில்லாத நேரங்களில் பயிற்சி மட்டுமே.

அதன் பிறகு கரகாட்டம் பார்க்கும் காலங்களில் அவர்களது படும் சிரமம் மட்டுமே எனக்கு முன்னாடி தெரிந்ததால் கரகம் பார்ப்பதை குறைத்துக் கொண்டேன். பிறகு இல்லாமலே போனது. சென்னை வந்த பிறகு தஞ்சாவூர் செல்வதும் குறைந்ததால் அவர்களுடன் பழக்கமே இல்லாமல் போனது.

17 வருடங்களுக்கு பிறகு என் அப்பாவின் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூரில் 20 நாட்கள் தங்க நேர்ந்தது. பீரங்கி மேடு வழியாக செல்லும் போது ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆள் குடித்து விட்டு ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். காரை நிறுத்தி கவனித்தால் சிறு வயதில என்னுடன் கிரிக்கெட் விளையாடிய என்னை விட வயதில் சிறியவனான ரமேசு.

அப்புறம் நானே முன் சென்று சண்டையை நிறுத்தி அவனை தனியே அழைத்து வந்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிறிது நேரம் யோசித்தவன் பிறகு ஞாபகம் வந்த பிறகு என்னைக் கட்டிக் கொண்டு அழுதான். அவனது அப்பாவுக்கு பிறகு அவனே கரகம் ஆடுவதாகவும் இப்பொழுதெல்லாம் வாய்ப்புகள் மிகவும் குறைந்து போய் பயிற்சியை நிப்பாட்டி விட்டு கூலி வேலைக்கு போய்க் கொண்டிருப்பதாகவும் கூறினான். முடியெல்லாம் நரைத்துப் போய் ஆளே ஒடுங்கிப் போயிருந்தான்.

அவனிடம் இரவு நான் வருகிறேன். நாம் இருவரும் உட்கார்ந்து சரக்கடிப்போம் என கூறிவிட்டு மருத்துவமனைக்கு வந்தேன். இரவு அவனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் கூறிய அனைத்து விஷயங்களும் என் மனதை கலக்கி விட்டது. அது வேண்டாம் மிகவும் பர்சனல். இன்னும் ஒரு தலைமுறை மட்டுமே நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபடும் என்பதும் அடுத்த தலைமுறை படித்து வேலை பார்க்க கிளம்பி விட்டது என்பது மட்டும் புரிந்தது.

கண்முன்னே அழிந்துக் கொண்டிருக்கும் நம் கலைகளை நம் வம்சாவழிகளுக்கு காட்ட முடியாது என்பது மட்டும் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment