Tuesday, 26 May 2015

சாட்டை - பழசு 2012

ம்

 
உண்மைத் தமிழன் அண்ணனுடைய ப்ளஸ்ஸை பார்த்ததும் நேற்றே முடிவு பண்ணியாச்சி, படத்தை பாக்கணும்னு. அதுக்காக காலையில் திட்டங்கள் தீட்டி கிளம்பும் போது நண்பன் ஒரு அலைபேசினான். இன்றிரவு நடக்க இருக்கும் மற்றொரு நண்பனின் திருமண வரவேற்பிற்கு கலந்து கொள்வதைப் பற்றி.
திருமணமாகப் போகும் நண்பன், என்னுடன் 16 ஆண்டுகாலமாக நெருங்கிய நட்பில் இருப்பவன். எனவே நாங்கள் இரவு செய்யப் போகும் அலப்பறை, கலாட்டா பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது இப்போது எங்கிருக்கிறாய் என அவன் கேட்டான். நான் சினிமா செல்லவிருப்பதை கூறியதும் நானும் உன்னுடன் வருகிறேன். ஏஜிஎஸ் திரையரங்குக்கு போவோம் என கூறினான்.
அவன் பேச்சைக் கேட்டு காத்திருந்தால் தக்காளி 11.30 அவனே அழைத்து வரமுடியாத சூழ்நிலையென்றும் மாலையில் வரவேற்பில் சந்திப்பதாகவும் கூறினான். ஏற்கனவே சுந்தர பாண்டியன் படத்தின் துவக்கத்தை தவற விட்டு விட்டதால் இந்த படத்தை தவற விடக்கூடாது என்று முடிவு செய்து ரயில்வே குவாட்டர்ஸ் பக்கம் வந்தால் போஸ்டரில் கோபிகிருஷ்ணா தியேட்டர் என்றும் காலைக் காட்சி 12 மணி என்றும் போட்டிருந்ததால் அதற்கே செல்லலாம் என முடிவு செய்து கிளம்பினேன்.
திரையரங்கில் இருந்தவர்கள் மொத்தம் 5 பேர். டிக்கெட் ரூபாய் 50. எனக்கோ ஆச்சரியம் சிட்டியின் நடுவில் அயனாவரத்தில் 50 ரூபாய்க்கு முதல் காட்சி. மற்ற திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் ஏமாளிகள் என நினைத்துக் கொண்டு உள்ளே சென்றால் ஆப்பு எனக்கே திரும்பியது தான் கொடுமை. படத்தில் வெளிச்சமே இல்லை. புரொஜக்டரில் கார்பன் குறைந்தால் அரையிருட்டில் படம் தெரியுமே, அது போல் தான் படம் முழுவதையும் பார்த்தேன். இதுக்கு 20 ரூபாயே அதிகம்.
அதிகமா புலம்பியாச்சு. படத்திற்கு வருவோம். படத்தின் கதை, உருப்படாமல் இருக்கும் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக வரும் ஆசிரியர் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் திருத்தி பள்ளியை மாவட்டத்திலேயே முதல் இடத்திற்கு கொண்டு செல்கிறார்.
கேட்பதற்கு சுவாரஸ்யமான கதை தான். ஆனால் எடுத்த விதத்தில் தான் படுஅமெச்சூர்த்தனம். என்னடா இவனுக்கு படம் எடுப்பதைப் பற்றி எதுவுமே தெரியாமல் இப்படி விமர்சனம் பண்ணுறானே என்று நினைக்க வேண்டாம். C கிளாஸ் ரசிகனான எனது பார்வையில் உறுத்தியது, பகிர்ந்து கொள்கிறேன்.
படத்தின் துவக்கம் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளிலும், தம்பிராமையாவின் அதிகப்படியான நடிப்பிலும், அந்த பழநி, அறிவு காதல் சொல்லப்பட்ட விதத்திலும், ஒரே பாட்டில் சாம்பியன்ஷிப் ஆவதிலும் இயக்குனரின் குறைகள் அப்பட்டமாக தெரிகிறது.
படத்தின் பலங்கள் இரண்டு. ஒன்று சமுத்திரகனியின் நடிப்பு, மற்றொன்று வசனம். டீசர்களில் வந்த சமுத்திரகனியின் நடிப்பை பார்த்து தான் நல்லாயிருக்கும் போல என்று முடிவு செய்திருந்தேன். அதை பிசகாமல் செய்திருக்கிறார்.
படம் ரொம்ப நாளைக்கு முன்பே ஷூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படத்தில் ப்ளாக் பாண்டி ரொம்ப சின்னப்பையனாக இருக்கிறார். படத்தில் தம்பி ராமையாவின் காட்டுக் கத்தல் தான் ரொம்ப படுத்தி எடுத்திருக்கிறது.
படத்தின் ஹீரோ ஒரு ஆசிரியர். ஒரு பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார். திருத்தி விட்டு திரும்ப செல்கிறார். யார் அவர், எப்படிப்பட்டவர், குடும்பத்துடன் உள்ள பிணைப்பு என்ன ஒன்றுமே தெரியவில்லை.

இதுக்கும் மேலே சொல்லி படத்தை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சாட்டை சினிமாவாக எடுக்கப்பட்ட 7C (விஜய்டிவியில் வரும் நாடகம்.)

ஆரூர் மூனா

No comments:

Post a Comment