Tuesday, 26 May 2015

சபலத்தின் உச்சம் அவமானம் - பழசு 2012

சமீபத்துல ஒரு பெரிய உறவினர் திருமணத்திற்காக புதுக்கோட்டை பக்கம் ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். வீட்டின் தலைவர் 70 வயதான பெரியவர். மற்றவர்கள் எல்லோரும் அவரைக் கண்டால் நடுங்குவார்கள்.

அந்த அளவுக்கு வீட்டில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரியவர். யாராவது தவறு செய்தால் அடிவிளாசி விடுவார். வீட்டில் உள்ள மற்ற பெண்கள் கூட அவர் எதிரில் வரத் தயங்குவர்.

அப்படிப்பட்ட வீட்டுக்கு திருமணத்திற்காக மூன்று நாட்கள் சென்று தங்க வேண்டியிருந்தது. வீட்டம்மா அவரை பற்றி எச்சரித்து அங்கே போய் எவன் கூடவாவது சேர்ந்து குடித்தால் மண்டையை உடைத்து விடுவேன், அது மட்டுமல்லாது அந்த பெரியவரிடம் போட்டுக் கொடுத்து விடுவேன் என எச்சரித்து இருந்தார்.

பொதுவா குடிகாரர்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அது எனக்கு கிடையாது. மற்றவர்கள் குடித்தால் அதனை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைப்பர். என்னைப் பற்றிய சுயஅறிமுகமே குடியைப் பற்றித்தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சிலர் அந்த சரக்கை ஏதோ விஷம் குடிப்பது போல் முகத்தை சுளித்துக் கொண்டு குடித்து விட்டு நாற்றம் தாங்காமல் மூக்கை வேறு மூடிக் கொள்வர். நான் அப்படியெல்லாம் கிடையாது. நிதானமாக ரசித்து ருசித்து மடக்கு மடக்காக குடிப்பேன்.

ஆனால் எனக்கு குடியைப் பற்றி பெருமையாக பேச மட்டுமே செய்வேனே தவிர வழக்கமான குடிகாரன் கிடையாது. என்னுடைய பதிவுகளை படித்து பலர் நான் தினமும் ஆப் அடிக்காமல் தூங்க மாட்டேன் போல என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நான் வாரம் ஒரு முறை மட்டுமே அதுவும் நண்பர்களுடன் மட்டுமே குடிப்பேன்.

யாரும் இல்லையென்றால் எனக்கு தனியாக குடிக்கத் தோணாது. இது சில பேருக்கு நம்ப சிரமமாக இருக்கும். குடிப்பது பிடிக்கும். ரசித்து செய்வேன். ஆனால் வழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சில இடங்களில் நாம் சும்மா இருந்தாலும் வேண்டுமென்றே நீ மட்டும் குடித்தால் என்று சொன்னவுடன் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். பிறகென்ன ஆப் அடித்து தான் நிறுத்த வேண்டியிருக்கும்.

அது போலவே என் மனைவியும் என்னை எச்சரித்து இருந்ததால் திருட்டுத்தனமாக குடிக்க வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டது. ஆனால் அந்த சொந்தக்காரர்கள் எனக்கு சற்று பழக்கம் குறைவானவர்கள். என் அப்பாவும் அம்மாவும் சென்றிருக்க வேண்டிய கல்யாணம், என்னை பரம்பரையின் அடுத்த தலைமுறை ஆளாக நிறுத்த வேண்டி அந்த திருமணத்திற்கு என் அப்பா அனுப்பியிருந்தார்.

நம்ம பரம்பரை தான் குடிகார பரம்பரையாச்சே, குலதெய்வத்திற்கே சாராயம் படைக்கிற வம்சமாச்சே அதனால் யாராவது கம்பெனிக்கு தோதானவர்கள் கிடைப்பார்களா என்று அந்த வீட்டை நோட்டம் விட்டதில் அந்த பெரியவரின் ஏச்சுப் பேச்சுக்கு பயந்து அனைவரும் குடிக்காதவர்கள் என்று தெரிய வந்தது. எனக்குள் பயங்கர சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த முயற்சியாக அந்த வீட்டில் வேலைக்கு இருப்பவர்கள், வந்து போகும் வெளியாட்கள் இவர்களிடம் வலியப் போய் பேசி இந்த விஷயத்திற்கு அடி போட்டால் அவர்களோ இந்த விஷயம் அந்த பெரியவருக்கு தெரிந்தால் தொலைத்து விடுவார் என்று ஒதுங்கி விட்டார்கள்.

எப்படியாவது முயற்சித்து கண்டிப்பாக சரக்கடித்து விட வேண்டும் என்று ப்ளான் பண்ண ஆரம்பித்தேன். நாம எந்த விஷயத்துல மொக்கைன்னாலும் இதில் ப்ளான் பண்ணால் தோல்வியை கிடையாது என்ற அளவுக்கு பிரபலமானவர்கள்.

இது போதாதென்று வீட்டம்மா வேறு மணிக்கொருதரம் வந்து நம்மை உற்றுப் பார்த்து விட்டு சென்று கொண்டிருந்தார். நமக்கு ஒரு பழக்கம் உண்டு. சரக்கு அடித்து விட்டால் சும்மாவே உஃப் உஃப் என்று ஊதிக் கொண்டே இருப்பேன். நெருங்கிய ஆட்கள் மட்டும் பார்த்தவுடன் கண்டுபிடித்து விடுவார்கள்.

திட்டம் தயார். ஒரு புல் பாட்டில் சரக்கை இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கலந்து வைத்து எப்படியாவது சிரமப்பட்டு கொண்டு வந்து பெட்டிக்குள் சேர்த்து விட வேண்டும். இரவு உணவை பேருக்கு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு நள்ளிரவில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு பொறுக்க சாத்த வேண்டும்.

ரீசார்ஜ் பண்ண போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு வெளியில் வந்து வாங்கி மிக்ஸ் செய்து பையில் வைத்து உள்ளே பெட்டியில் சேர்த்து விட்டேன். ராத்திரி கொஞ்சமாக சாப்பிட்டு ஏமாத்தி விடலாம் என்று பந்தியில் அமர்ந்தால் நான் அசைவம் தின்பேன் என்று எனக்கு மட்டும் ஸ்பெசலாக உடும்பு அடித்து சமைத்து வைத்திருந்தனர்.

ஆசையை அடக்க முடியாமல் ராத்திரி விஷயத்தை மறந்து விட்டு சாப்பாட்டை வெளுத்து கட்டி விட்டேன். மாட்டை முழுங்குன மலைப்பாம்பு போல உருள ஆரம்பித்தேன். விடியற்காலை வயித்தை கலக்கியது. ஆபீசுக்கு போய் விட்டு வந்து படுத்தால் சரக்கு ஞாபகம் வந்து விட்டது.

விடியற்காலை என்றும் பார்க்காமல் பாட்டிலை எடுத்துக் கொண்டு கொல்லைக்கு வந்து விட்டேன். இரண்டு சிப் தான் காலி செய்திருப்பேன். அதற்குள் விடியற்காலை கொல்லைக்கு சென்று வந்த பெரியவர் என் செய்கையை பார்த்து விட்டார்.

மகனே காலி என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா. இந்த விடியற்காலையில எங்கடா சரக்கு கிடைக்குது. எனக்கும் கொடு என்று சொல்லி வாங்கி பாதி பாட்டிலை கவிழ்த்து விட்டார். ரெண்டு பேரும் சேர்ந்து மொத்த சரக்கையும் காலி செய்து விட்டு கொல்லைப்புறத்தில் ஆட்டம் போட்டதில், மொத்த குடும்பமும் எழுந்து வந்து பார்த்து விட்டது.

இத்தனை நாட்களாக தனியாக அறையில் அளவாக குடித்து விட்டு யாருக்கும் தெரியாமல் தூங்குவார் என்ற அவருக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை மொத்த குடும்பத்திற்கும் முன்னாடி காலி செய்து விட்டேன். வீட்டில் இருந்த பொடிசுகள் எல்லாம் அவரை பார்த்து ஏளனமாக சிரிக்க குடும்பத்தின் முன் மானம் போய் தலை தொங்கி நின்றார்.


பாட்டிலுடன் நான் நிற்பதை பார்த்ததும் என்னை சத்தம் போட்டு விட்டு போயிருந்தால் கெளரவமாக இருந்திருக்கும். ஆனால் கணநேரம் சபலப்பட்டு சலனப்பட எல்லாருக்கும் முன்பாக மானம் போனது தான் மிச்சம்.

இவ்வளவுக்கும் காரணமாக எனக்கு வீட்டம்மாவிடம் இருந்து செம மாத்து கிடைத்ததை இன்னும் நீங்கள் நம்பாமல் இருந்தால் உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான். நம்புங்க எசமான் நம்புங்க இந்த பொம்புளைங்க நெசமா வலிக்கிற மாதிரியே அடிக்கிறாங்க.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment