Sunday, 24 May 2015

மெரீனா - பழசு 2012

ம்


வர வர ராக்கி தியேட்டர் காரனுங்க சதி பண்றானுங்கப்பா, அனேகமா நான் முதல்ல படம் பார்த்து விமர்சனம் எழுத கூடாதுன்னு நம்ம சிபி அண்ணன் பண்ற சதின்னு உளவுத்துறை சொல்லுது. காலையில 11.30க்கு படம்னு டிக்கெட் கவுன்டர்ல சொன்னானுங்க. படத்தின் நீளம் 2.10 மணிநேரம், இடைவேளை 20 நிமிஷம்ன்னு வச்சாக்கூட 2 மணிக்கு வந்து எழுதலாம்னு நினைச்சா கருமம் புடிச்சவனுங்க 12 மணிவரைக்கும் உள்ளேயே விடல, 12.15க்கு தியேட்டரில் உட்கார்ந்தா விளம்பரமா போட்டு கொன்னுபுட்டு படத்தைப் போட்டானுங்க. படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து பார்த்தா மணி 3.15 ஆகிடுச்சி. சே.

மெரீனா படத்தின் கதை என்ன?

ஊரில் படிக்க முடியாததால் வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம் என சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் பக்கடா பாண்டி சில நாட்கள் அலைஞ்சி திரிஞ்சி மெரீனாவுல வாட்டர் பாக்கெட் விக்கிற வேலையை தொடங்குகின்றான். அங்குள்ள மற்ற சிறுவர்களின் நட்பு கிடைத்து அவர்களுடனே தங்குகின்றான். அவன் மற்றவர்களுடன் மெரீனாவில் சுண்டல் விற்றுக் கொண்டே படிக்க துவங்குகின்றான். அவ்வளவு தான் கதை. படத்தில் கதையென்று ஒன்றும் இல்லை. பலரின் சம்பவங்களே கதை. அவற்றில் பெரும்பாலானவை நிஜம் என்று நினைக்கிறேன்.

படத்தின் கதை பக்கடா பாண்டியை சுற்றியே வருகிறது. ஆனால் படத்தில் பல கேரக்டர்கள், அவர்களுடைய லட்சியங்கள், அவர்களின் வாழ்க்கை ஆகியவை மனதை தொடுகிறது.

அம்பிகாபதி என்ற கேரக்டரில் பக்கடா பாண்டி அருமையாக நடித்துள்ளார். அவருக்கு நடிப்பு நன்றாக வருகிறது. தனக்கு சொந்தமில்லை என்ற காரணத்தால் சந்திக்கும் அனைவரையும் நட்பு வைத்துக் கொள்ளலாமா என்று கேட்பதும், பிச்சை எடுக்கும் தாத்தாவிடம் பிச்சை எடுப்பதை விட சொல்வதும், தந்தையுடன் சென்று நடனமாடி பிச்சையெடுக்கும் சிறுமியிடம் நட்பாக இருப்பதும், சிவகார்த்திகேயனிடம் கதை கேட்பதுமாக அசத்தியிருக்கிறார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன், அறிமுகமாகும் படத்திலேயே தியேட்டரில் கைதட்டல் அதிர்கிறது. மிக இயல்பாக அவர் வழக்கமாக விஜய்டிவியில் செய்யும் அதே நக்கலான கேரக்டர். தான் காதலிக்கும் ஓவியாவிடம் தவறாக பேசி மாட்டிக் கொண்டு ஒவ்வொரு முறையும் எதாவது சொல்லி சமாளிக்கும் போதும், மிகப் பெரிய பார்சலில் இரண்டு இட்லியும் கெட்டிச் சட்னியும் கட்டி காதலிக்கு பரிசாக கொடுக்கும் போதும் காதல் தோற்ற பிறகு காதலியை பழி வாங்கும் விதமாக ஆப்பு, ரிவிட்டு, பன்னாடைகளை பார்சல் செய்து சிரிக்கும் போதும் அசத்துகிறார்.

ஓவியா அப்படியே அக்மார்க் சென்னைப்பொண்ணுகளின் கதாபாத்திரம். சிணுங்கும் விதம், டக்கென காதலனை கழட்டி விடுதல், அவன் காசிலேயே செலவு செய்தல், கடைசியில் கணவனிடம் ஒன்னும் தெரியாத பெண்ணாக நடிக்கும் போதும் நன்றாக இருக்கிறது.

அந்த பிச்சை எடுக்கும் பெரியவர் நடிப்பில் கலக்கியிருக்கிறார். நானே அவர் இறந்து கிடக்கும் காட்சியில் சிறிது கண்கலங்கி விட்டேன். மற்ற சுண்டல் விற்கும் சிறுவர்கள், குதிரை ஒட்டும் தாடிக்காரன், தன் பெயர் அன்புச்செல்வன் ஐபிஎஸ் என்னும் பைத்தியக்காரன், கடைசியில் சிறுவர்களை வேலை செய்வதிலிருந்து மீட்டு வரும் அதிகாரியாக நடித்துள்ள ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அசத்தியுள்ளனர். போஸ்ட்மேனாக வரும் சித்தன் மோகன் பசங்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் போதும், தன் மகளின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைத்து கூப்பிடும் போதும் நெகிழ வைக்கிறார்.

முதல் பாதி படத்தின் கதைக்கு உள்ளே செல்லாமல் பசங்களின் ஆட்டம் பாட்டம், சிவகார்த்திகேயன் ஓவியா காதல் என கொண்டு செல்வது சற்று அயர்ச்சியை கொடுக்கிறது. இருந்தாலும் பார்க்கலாம்.

படத்தின் தத்துவ வசனம் உதாரணத்திற்கு

காதல்ங்கிறது காக்கபீ மாதிரி யார் மேல வேணும்னாலும் படும்.

பேன்டவன விட்டுப்புட்டு பீயை திட்டாத.

இது தான் கெடுக்குது. அது போல் நிறைய ஒன்னுக்கு, காட்சிகளாகவும் இருக்கிறது. இது போன்ற ஒரு சில குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு சிறுவயதில் வேலை செய்யும் பசங்களை படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்துடன் வந்துள்ள மெரீனாவை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

ஆரூர் முனா

No comments:

Post a Comment