Friday, 15 May 2015

புறம்போக்கு - சினிமா விமர்சனம்

மலைமுழுங்கிகள் சிறியவர்களை காலி செய்து விடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்று தெள்ளத் தெளிவாக தெரிந்தது. எங்கு நோக்கினும், எந்த டிவியைப் பார்த்தாலும், எந்த திரையரங்கிற்கு சென்றாலும் 36 வயதினிலே தான் ஆக்கிரமித்து நிற்கிறது. புறம்போக்கு என்ற பொதுவுடமை படத்தின் புரோமோ வெளியில் தெரியவே இல்லை.


காரணம் ஸ்டுடியோ கிரீன். ஆனால் இத்தனை சங்கடங்களையும் தாண்டி மிகப் பிரம்மாண்டமாய் அசுர பலத்துடன் வெற்றியை பதிவு செய்துள்ளது புறம்போக்கு.

இன்று அரங்கம் ஹவுஸ்புல். படத்தின் கடைசி ஒரு மணிநேரம் அரங்கமே பின்ட்ராப் சைலன்ஸ். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து ஒருசேர கைத்தட்டினர். வெளியில் வரும்போது தான் பார்த்தேன். அனைவரின் கண்களிலும் கண்ணீர். இதை விட இந்த படத்திற்கு வேறு பெரிய விளம்பரமா தேவை. 

முதல்காட்சி படம் பார்த்தவர்களின் வாய் வழி விளம்பரமே அடுத்தடுத்த காட்சிக்கு மக்களை வரவழைக்கப் போகிறது.


ஜனநாதன் படங்களின் கதையை படபிடிப்பு சமயத்திலேயே சொல்லி விடுவார். கேட்கும் போது இது ஓடுமா, மக்கள் ஏத்துக்குவாங்களா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் படம் பார்க்கும் போது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விடுவார். அதே தான் இந்த படத்திற்கும் நடந்துள்ளது.

படம் என்னவாக இருக்கும் என்பதை ஒரு காட்சி சொல்லி விடுகிறது. 12 வருடம் தண்டனை அனுபவித்த ஒரு குற்றவாளி நீதிபதியிடம் குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக்கொண்டு "எப்படி குற்றத்தை செய்தேன் என்பதை இங்கு செய்து காட்டவா" என்று கேட்பதும் அதற்கு நீதிபதி "நீ இந்த குற்றத்தை செய்யவேயில்லை, உன்னை விசாரித்த இன்ஸ்பெக்டர் இந்த உண்மையை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் நீ விடுதலை செய்யப்படுகிறாய்" என்றதும், "ப்ளாட்பாரத்தில் படுத்திருந்த என்னை எழுப்பி அடிச்சி கட்டாயப்படுத்தி இதில் சிக்க வைச்சிட்டாங்க, என் குடும்பமே தற்கொலை செஞ்சிக்கிச்சி. இனிமே நான் எங்க போவேன். என்னை இங்கேயே இருக்க விட்டுடுங்க" என்று அழுவது இந்திய தண்டனை சட்டங்களின் லட்சணத்தை புட்டுப் புட்டு வைத்து விடுகிறது.

கம்யூனிச கொள்கை கொண்ட தீவிரவாதி ஆர்யா. போலீசிடம் சிக்கிக் கொள்கிறார். அவருக்கு இந்திய அரசாங்கம் தூக்கு தண்டனை விதிக்கிறது. நாள் குறிக்கப்பட்டு விடுகிறது. ஜெயில் துறை ஏடிஜிபி ஷாமிடம் தூக்கிலிடும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. ஆர்யா சார்ந்த தீவிரவாத குழு அவரை தப்ப வைக்க முயற்சிக்கிறது. 


தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நபராக விஜய்சேதுபதி. அவருக்கு மட்டுமே இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய அனுபவம் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு தூக்கு தண்டனையை நிறைவேற்றியதால் சில வருடங்கள் மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகி உள்ளார். அவர் இந்த வேலையை செய்ய விரும்பவில்லை. தீவிரவாத குழுவும் அவரை அணுகி ஆர்யாவை தப்ப வைக்க உதவ கோருகிறது.

அரசாங்கம் அவரை தூக்கு போட கட்டாயப்படுத்துகிறது. இந்த போட்டியில் ஷாம் தண்டனையை நிறைவேற்றினாரா, தீவிரவாத குழு ஆர்யாவை காப்பாற்றியதா, விஜய்சேதுபதி என்னவானார் என்பதே புறம்போக்கு படத்தின் கதை.

 படத்தின் பலமே யதார்த்தம் தான். படத்தில் மூன்று நாயகர்கள் இருந்தும் யாருமே ஹீரோயிசத்தை காட்டவில்லை. அவரவர் பாத்திரத்தை இயல்பு மாறாமல் செய்துள்ளார்கள். 


தீவிரவாதி பாலுச்சாமியாக ஆர்யா. பெரிய ஆக்சன் இல்லை. கலாய்த்தல் இல்லை. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்து கடைசி நிமிடத்தில் அரங்கையே கண் கலங்க செய்து விடுகிறார். வாழ்த்துக்கள் ஆர்யா.

ஏற்கனவே சிறு வயதில் தூக்கு தண்டனையை நிறைவேற்றி அதனால் மனநல பாதிப்புக்குள்ளாகி அந்த நினைவை தவிர்க்க தினமும் குடித்து விட்டு கூத்தடிக்கும் கலகல வேடம் விஜய்சேதுபதிக்கு. 

அவ்வப்போது ஒன்லைனர் காமெடியில் அரங்கை சிரிக்க வைப்பதும், கடைசி நிமிடத்தில் தூக்கு போடப் போகும் நிமிடத்தில் படபடப்புமாக தவிக்கும் போதும் மனிதர் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

க்ளைமாக்ஸில் எனக்கு முன்னால் இருந்த பெண்மணி விஜய்சேதுபதியின் நிலையை பார்த்து வாய் விட்டு கதறி அழுததை பார்த்தேன். அதுதான் அந்த கேரக்டரின் வெற்றி.

ஜெயில் அதிகாரி மெக்காலேவாக ஷாம். அவரின் பெயரே அவரது கேரக்டரைசேஷனை சொல்லி விடுகிறது. அவர் வில்லனும் இல்லை. நல்லவனும் இல்லை. சட்டத்தின் படி செயல்படும் நேர்மையான அதிகாரி. அவர் பார்வையில் அவர் செய்வது சரியே. ஆர்யா தப்பிக்க முயற்சிக்கும் காட்சியில் கண்ட்ரோம் ரூமில் கண்டறிந்து அதை தடுக்கும் காட்சியில் மனிதர் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

போராளி குயிலியாக கார்த்திகா, சொல்வதற்கு ஒன்றுமில்லை. கொடுத்த கேரக்டரை ஒழுங்காக செய்திருக்கிறார். கடைசியில் எல்லாவற்றிலும் தோற்று படகில் போகும் போது கவனிக்க வைக்கிறார். 

படத்தில் குறையென்று சொன்னால் ஆர்யா போராளி என்று சொல்கிறார்கள். அதற்காக காட்டப்படும் காட்சிகள் சற்று அமெச்சூர்த்தனமாக அவசரகதியில் எடுத்தது போல் இருப்பது மட்டுமே.

மற்றபடி படம் ஒன்னாங்கிளாஸ். அதிரடி ஆக்சன் செய்து படத்தை மசாலாவாக்கி சொதப்ப ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் இயல்பாக நடப்பதை நிஜத்துக்கு அருகில் காட்டியிருப்பதே படத்தின் வெற்றி.

இந்த படத்தை நாம் பார்த்து ஒடவைத்தால் தான் இது போன்ற படங்கள் தைரியமாக தமிழுக்கு வரத் தொடங்கும்.

கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய மிகச்சிறந்த படம் . தவற விடாதீர்கள். 

ஆரூர் மூனா

9 comments:

  1. Im going tonight. With high hopes

    ReplyDelete
    Replies
    1. பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள் நன்றி

      Delete
  2. அருமையான சினிமா விமர்சனம்...! விமர்சனமே படத்தை ஓட வைத்துவிடும் போல இருக்கிறது..!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நன்றி பழனி

      Delete
  3. சொதப்பாமல் ஒரு வெற்றி...! ரைட்டு... பார்த்துடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. பார்த்து மகிழுங்கள் டிடி

      Delete
  4. பார்ப்போமோ எப்படி எனறு?,,,,,,,, தங்கள் விமர்சனம் சூப்பர். நன்றி.

    ReplyDelete
  5. அய்யா, கண்டு புடிச்சாச்சு. நீங்க நடிகர் மீசை ராஜேந்திரன் (Meesai Rajendran) சொந்தக்காரர்தானே?!

    ReplyDelete