Tuesday, 26 May 2015

கும்கி - பழசு 2012

புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதுற நானே அடுத்து செய்யக்கூடாத விஷயம் என்னன்னு முடிவு பண்ண இத்தனை நாட்களாகி விட்டது. அது என்னன்னா அடுத்தவங்க விமர்சனத்தை படித்து விட்டு போகலாமா வேண்டமா என்று முடிவு செய்வதை பற்றியது.

முதல் நாள் செல்ல வேண்டும் என்று நினைத்து தவறவிட்ட கும்கியை தக்காளி பலரும் பலமாதிரி கழுவி ஊத்தியதால் நான் போகும் எண்ணத்தையே விட்டு விட்டேன். ஆனால் வீட்டம்மாவின் இடைவிடாத நச்சரிப்பு காரணமாக போய் பார்க்க நேர்ந்தது. அதன் பிறகே நான் இத்தனை நாட்களாக பார்க்காமல் தவற விட்டது தப்பு என்று புரிந்தது.

படத்தின் கதையை எல்லாரும் பலமாதிரி சொல்லி விட்டதால் நாம் அதற்குள் போக வேண்டாம். மொத்தப் படத்தில் எனக்கு சரியில்லாத மாதிரி பட்ட விஷயங்கள் இரண்டே இரண்டு தான், ஒன்று யானைகளின் சண்டையில் சரியில்லாத கிராபிக்ஸ், அடுத்தது எல்லாம் இழந்த நாயகனுக்கு ஊர்த்தலைவர் தனது பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.
அதற்கு முன்பாக படத்தை சப்பென்று முடித்தது தான் குறையாக இருக்கிறது. சாரே உங்களுடைய எல்லாப் படத்தையும் சோகமாகவே முடிக்கனும் என்ற அவசியமில்லை. இந்தப் படத்தை சற்று மாற்றி மகிழ்வுடன் முடித்திருக்கலாம்.

இந்த இரண்டை தவிர எனக்கு சொல்கிற மாதிரி குறைகள் எதுவுமே இல்லை. அதுவும் நம்ம ஆட்களில் சிலருடைய விமர்சனத்தை பார்த்தால் படம் மரண மொக்கை மாதிரியே இருந்தது. இவற்றின் உச்சம் என்னவென்றால் இந்த படத்தை நான் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சிபி செந்தில் குமார் எழுதிய பதிவு தான். இவரெல்லாம் ஆலோசனை சொல்கிற அளவுக்கு படம் போய் விட்டதே அதனால் படம் காலி தான் என்று நினைத்தேன்.

எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் புறந்தள்ளி விட்டு படம் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்த்தது கூட வார நாட்களில் ஒரு காலைக் காட்சிதான். ஆனால் படம் ஹவுஸ்புல். இதற்கு மேல் இதற்கு சாட்சியம் வேண்டாம்.

என்னைப் பொறுத்த படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் பாடல் மற்றும் இசை. அடுத்தது யானை மாணிக்கம், அதன் பிறகு ஒளிப்பதிவு, விக்ரம் பிரபு, லட்சுமி மற்ற விஷயங்கள் வரும். எனக்கு புதிய படங்களின் பாடல்களை கேட்பது பழக்கமேயில்லை. இப்போது சில நாட்களாக வீட்டில் கும்கி பாடல்கள் தான் ஒடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் திரையில் பாடல்களை பார்க்கும் போது சந்தோஷம் கூடுதலாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

வெகு இயல்பாக முதல் படம் என்ற தடையை தாண்டி முன்னேறியிருக்கிறார் விக்ரம் பிரபு. முதல் படத்திலேயே அவங்க தாத்தாவைப் போல் நடிப்பை எதிர்பார்ப்பது அதிகப்பிரங்கித் தனம். விக்ரம் பிரபுவை எனக்கு பிடித்திருக்கிறது. நமது விமர்சனத்தையெல்லாம் தாண்டி அடுத்த கட்டத்திற்கு போய் விடுவார் என்பது நிச்சயம்.
ஒளிப்பதிவு உண்மையிலேயே அருமை. சி கிளாஸ் ரசிகனான எனக்கு ஒளிப்பதிவில் கலர்டோன், ஆங்கிள், லைட்டிங் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து அலசத் தெரியாது. பார்த்தால் பிடித்திருக்கனும் அவ்வளவு தான். அந்த வகையில் எனக்கு அந்த அருவிக் காட்சிகள் சூப்பரோ சூப்பர்.

லட்சுமி (மேனன்?) இதற்கு முன்பாக வெளிவந்த சுந்தரபாண்டியனிலேயே மனதை கவர்ந்து விட்டதால் புதிதாக நம்மை ஈர்க்க எதுவும் செய்ய வேண்டியதில்லை, திரையில் வந்தவுடனே நம்மை அந்த புடவை முடிச்சில் சேர்த்து முடிந்து வைத்து விடுகிறார்.

தம்பி ராமையா பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நமக்கு இந்தப் படத்தில் மிகப் பெரிய ரிலீஃப்பே அவர்தான். பாதிக்கும் மேல் படத்தினை அவர் தான் சுமக்கிறார். எனக்கு நேரம் செல்லச் செல்ல கடுப்பாக ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பின் அமர்ந்திருந்த ஒரு குடும்பம் தம்பிராமையாவின் ஒவ்வொரு கவுண்ட்டருக்கும் விழுந்து விழுந்து சிரிக்க இவர்களாலேயே நானும் சிரித்துத் தொலைத்தேன்.

இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால் இருக்கும் சிற்ச்சில குறைகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. நான் இதுவரை இரண்டு முறை பார்த்து விட்டேன். முக்கியமான விஷயம் பாடல்கள் தான். திரையில் பார்க்கும் போது சில வருடங்கள் பின்னோக்கி சென்று நான் காதலித்த சமயத்தில் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி இமான்.

என்னை மாதிரி கண்ட விமர்சனத்தை படிச்சிப்புட்டு பாக்கவேணாம் இருந்தீங்கன்னா உடனடியா அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டு விட்டு போய் உடனடியாக படத்தை பார்க்கவும். உங்களுக்கு கூட மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கலாம்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment