Tuesday 26 May 2015

கும்கியுடன் கூடிய பெரம்பூர் S2வின் அனுபவம் - பழசு 2012

சில விஷயங்களை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சொல்லி விட முடியாது. பழைய ஞாபகங்கள் என்பது என்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து நிறைந்திருக்கும் என்பது இன்று என் வாழ்வில் நான் கண்டிருக்கும் உண்மை.

பெரம்பூர் என்பது 97 - 2000 காலக்கட்டங்களில் என் ஏரியாவாக இருந்தது. அந்த நாட்களில் நான் அங்கு தான் தங்கியிருந்தேன். பிறகு படிப்பு முடிந்ததும் சென்னையை விட்டு விலகி திருவாரூருக்கு வந்து செட்டிலாகி விட்டேன்.

பிறகு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்க திரும்பவும் சென்னை வாசம். அதுவும் தென் சென்னையின் முக்கிய பகுதியான ஈக்காட்டுதாங்கலில் தான் 2001 முதல் 2010 வரை வாழ்ந்தேன். அதிலும் சில காலங்கள் வெளியூர் அதாவது கேரளா வடநாடுகள் என்று கழிந்தாலும் சென்னை தான் என் மையமாக இருந்தது.
தாறுமாறாக தோத்து 2010ல் சென்னையை விட்டு ஓட்டாண்டியாக சோகத்துடன் விலகிய பிறகு சுத்தமாக சென்னைக்கும் எனக்குமான தொடர்பு சில காலங்கள் விலகியிருந்தது. அதன் பிறகு வேலை கிடைத்து நான் மீண்டும் சென்னைக்கு வந்ததை இரண்டு புத்தகமாகவே எழுதலாம்.

ஆனால் இன்றைய பதிவு அதைப் பற்றியல்ல. சற்று ப்ளாஷ்பேக்கும் நிகழ்காலத்தையும் ஒத்தது. இன்று வேலை கிடைத்து அதே பெரம்பூருக்கு நான் வந்து விட்டேன். எதுவாக இருந்தாலும் இன்னும் 28 வருடங்களுக்கு இதே பகுதி தான்.
படிக்கும் காலத்தில் இங்கு வீனஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது. அப்பொழுது பெரும்பாலான பிட்டு படங்கள் இங்கு தான் வெளியாகும். அவற்றை ஒன்று விடாமல் பார்த்து மகிழ்ந்தவன் நான்.

அதிலும் முக்கியமாக திருட்டு புருசன் என்று ஒரு படம் வந்தது. சென்னையில் ஒரு வருடங்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்த பிட்டு படம் அது. ஜெயப்பிரதாவின் தம்பி தான் அந்தப்படத்தின் நாயகன்.

ஒரு நாயகன் பல பொய்களை சொல்லி ஒன்பது பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சல்லாபிக்கும் படம் அது. ஏகப்பட்ட பிட்டுகளை கொண்ட அந்த படம் பல நாட்கள் ஹவுஸ்புல்லானதும் உண்டு.
அப்படிப்பட்ட திரைப்படங்களை இந்த தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த காலங்கள் உண்டு. நானும் என் நண்பர்கள் நந்தா (இன்று தர்மபுரியில் பெரிய ஹார்டுவேர் கடையை நடத்தி வருகிறான்), சுரேஷ் (இன்று சாப்ட்வேர் பிஸினஸ்மேன்), சித்தப்பு என்கிற செந்தில் (இன்று போஸ்டல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்), ஆனந்த் (ஐசிஎப் ஓர்க்கர்) என பல நண்பர்களுக்கு இது தான் புகலிடம்.

குச் குச் ஹோத்தா ஹை என்ற ஹந்தி படத்தின் முதல் காட்சியை இங்கு தான் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியை கன்னாபின்னாவென்று லாட்டரியை கிழித்து எறிந்து பார்த்தவன் நான்.

இவ்வளவு சிறப்பு பெற்ற வீனஸ் திரையரங்கம் சில வருடங்களுக்கு பிறகு மூடப்பட்டது என்பதை அறிந்த பிறகு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சில நாட்கள் வருத்தப்பட்ட பின் நான் அதனை மறந்து விட்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு சத்யம் திரையரங்கு பெரம்பூரில் துவங்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்த பிறகு எங்கு உள்ளது என்பதை அறிய ஆவலாக இருந்தது. நண்பர்களிடம் விசாரித்த பிறகு அது பழைய வீனஸ் தியேட்டர் என்று அறிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் மீண்டும் அந்த திரையரங்கிற்கு செல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று கும்கி படம் பார்க்க முடிவான பிறகு பெரம்பூரில் எங்கு படம் ஓடுகிறது என்று பார்த்தால் அது S2 என்று தெரிந்தது. மிகுந்த மகிழ்வுடனே சென்றேன்.

படம் எப்படியிருந்தது என்பதை படத்தின் விமர்சனத்தில் சொல்கிறேன், ஆனால் பல நாட்களாக தொலைந்து போன நண்பன் பெரிய ஆளாக மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோசத்தை அடைவோமோ அந்த சந்தோசத்தை நேற்று அடைந்தேன்.

அப்பாடா எந்த விஷயமும் இல்லாமல் ஒரு பதிவை எழுத முடியுமா என்று யோசித்தேன். சற்று முயற்சித்தேன். அதில வெற்றியடைந்து விட்டேன் என்றே நினைக்கிறேன். இனிய வணக்கங்கள் நண்பர்களே.

ஆரூர் மூனா செந்தில்




டிஸ்கி : எனக்கு மதுரையில் சிவக்குமார் என்னும் வாசக நண்பர் உள்ளார். மிகுந்த பாசத்துடன் மரியாதையாக பழகும் உயர்தட்டு நண்பர் அவர். பல நாட்களாக தொடர்பில் இருந்த அவர் சில நாட்களாக எனக்கு போன் பேசவில்லை. இன்று போன் செய்த அவர் என் அப்பாவிற்கு உள்ள பிரச்சனையை கவனமுடன் கேட்டு அதற்குரிய தீர்வையும், மருத்துவமனையையும் சொல்லி மேலும் விவரங்கள் தருவதாக சொன்னார். இது போல் முகமறியா நண்பர்கள் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்தவனாவேன். நன்றி சிவக்குமார்.

No comments:

Post a Comment