Tuesday 26 May 2015

திருவாரூரும் நடுவுல காணாம போன கொஞ்சம் பக்கமும் - பழசு 2012

கடந்த சில நாட்களாக வேலையும் அதிகமாகி ஊருக்கு செல்வதும் அதிகமாகி விட்டதனால் கண்டினியுட்டியாக எழுத முடியவில்லை. இணையத்திலும் புழங்க முடியவில்லை. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப பழைய பதிவுகளை எடுத்து விட்டால் தெரியாது என்று புத்திசாலித்தனமாக யோசித்ததில் நிறைய நண்பர்களிடம் திட்டுடன் பல்பும் வாங்கியது தான் மிச்சம். சரக்கு தீரத்தொடங்கியிருப்பதை கண்டுபிடித்த நண்பர்களுக்கு நன்றி.

சென்ற வார இறுதியில் திருச்சி, வயலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சித்தப்பா மகன் திருமணத்திற்காக சென்று விட்டு விட்டு வார இறுதியை திருவாரூரில் செலவிட்டு வந்தேன். கோயில்களில் நடைபெறும் திருமண சடங்குகளில் வயலூர் சற்று வித்தியாசமானதாக தெரிகிறது.

வடபழனி போன்ற கோயில்களில் திருமணம் தனியாக ஒரு புரோகிதர் வைத்து மண்டபத்தில் நடைபெறும். ஆனால் வயலூர் முருகன் கோயிலில் புரோகிதர் இல்லாமல் நேரடியாக மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் சன்னதிக்கு சென்றதும் அங்குள்ள அர்ச்சகரே மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். உடனே வெளியில் வந்து விட வேண்டும்.
இதற்காகவே கோயிலைச் சுற்றி திருமண மண்டபங்கள் மட்டுமே அதிகம் இருக்கின்றன. காலையில் திருமணத்திற்கு வந்தவர்களை கோயிலின் எதிரில் இருந்த மண்டபத்தில் வரவேற்று காலை சிற்றுண்டிக்கு பிறகு முகூர்த்த நேரத்தில் பத்து உறவினர்களும் மணமக்களும் கோயிலுக்குள் சென்று பத்து நிமிடத்தில் தாலி கட்டி வந்து விட்டனர்.

அதன் பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள், உறவினர்களுடன் புகைப்படம் எடுத்தல், மதிய உணவு எல்லாம் மண்டபத்தில் நடைபெற்றது. எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது. ஏனெனில் வடபழனி கோயிலில் நடைபெற்ற நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். கடைசி வரை அவர்கள் திருமணம் நடைபெறும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி போய் வெளிவந்தேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏகப்பட்ட வித்தியாசங்கள். சில ரசிக்கத்தக்கதாகவும் இருந்தன.
திருமணம் முடிந்து திருவாரூருக்கு திரும்பியதும் சினிமா பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நடேஷ் திரையரங்கத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திற்கு நண்பனுடன் சென்றேன். திரையரங்கில் மொத்தமே 12 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

இது மாதிரி வித்தியாசமான சூழலில் படம் பார்க்கும் போது சில சிரமங்கள் இருக்கும். என்னவெனில் திரையரங்கில் உடன் பார்ப்பவர்களின் ரியாக்ஷனை பார்த்தே படத்தின் ரிசல்ட்டை கணித்து விட முடியும். பத்து பேர் அமர்ந்திருக்கும் சூழலில் என்னத்தை ரியாக்சன் பார்ப்பது, நாமே கணித்து தான் முடிவெடுக்க வேண்டும்.

படத்தின் கதை நமக்கு வேண்டாம். படம் எப்படியிருந்தது என்பதை மட்டும் பார்த்து விடுவோம். படத்தின் பலமே படத்தில் வைக்கும் காட்சிகளுடன் இயக்குனர் எப்படி ஒன்றியிருந்தார் என்பதில் அடங்கி இருக்கிறது. அது இந்த படத்தில் கிரிக்கெட் காட்சியில் அப்படியே தெரிகிறது.

நான் கூட இது போல் நான்கு பேருடன் ஆளில்லாத மைதானத்தில் மொட்டை வெயிலில் விளையாடி இருக்கிறேன். அது போன்ற சமயங்களில் எப்படி விளையாட்டு இருக்குமோ அப்படியே இயல்பு மாறாமல் எடுத்து இருக்கின்றனர். அதனால் அந்த காட்சியில் இருந்தே நான் படத்துடன் ஒன்றி விட்டேன்.

மருத்துவமனையில் பஜ்ஜிக்கு பக்ஸ் இந்த வியாதி வந்தவர்களுக்கு நடக்கப் போவதை விவரிக்கும் காட்சியில் என்னை மறந்து சிரித்துக் கொண்டு இருந்தேன். பக்ஸ் விவரிக்க பஜ்ஜி அவஸ்தையுடன் சரஸ்ஸை எதிர்பார்த்து எட்டிப் பார்க்கும் போது மொக்க நண்பர்களுடன் இது போல் தனிமையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்ட என் அனுபவம் போலவே இருந்தது.

மண்டப காட்சிகளும் நண்பர்கள் மட்டும் ஒருவருக்கு ஒருவர் திருட்டு முழி முழித்து பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சிகளும் சிரிப்பை வரவழைத்தன. சரஸ் என்ன சொன்னாலும் ஹீரோ கேட்பதை பார்த்து பஜ்ஜியும் அது போல் செய்ய முற்பட்டு திட்டு வாங்கும் காட்சியில் சத்தமாகவே சிரித்தேன்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் தவற விட்டு விட்டேன். மற்ற நண்பர்கள் பாரில் உக்கார்ந்துக் கொண்டு போன் அடித்துக் கொண்டே இருந்ததால் ஹீரோவுக்கு நினைவு திரும்பும் காட்சியுடன் திரையரங்கை விட்டு வெளியேறி விட்டேன்.

மொத்தத்தில் படம் நல்லாயிருக்கு, இல்லை என்ற விமர்சனத்தை தாண்டி எனக்கு பிடித்திருக்கிறது. என் அலைவரிசையில் ஒத்துப் போனவர்களுக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.



ஆரூர் மூனா

No comments:

Post a Comment