Tuesday 26 May 2015

துப்பாக்கி - பழசு 2012

இந்த தீபாவளி வித்தியாசமாகத்தான் இருந்தது. இதுவரை எந்த தீபாவளியன்றும் காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் வெளியில் வந்ததில்லை. இந்த ஆண்டு தான் இந்தப்படத்தை பார்ப்பதற்காக காலை மூணரை மணிக்கு எழுந்து பல்துலக்கி முகத்தை கழுவி அரக்க பரக்க கிளம்பி தியேட்டருக்கு சென்றால் என்னை விட மோசமான நிலையில் பல பேர் இருந்தனர். கும்பலோடு கோயிந்தா போட்டு திரையரங்கிற்குள் நுழைந்தேன்.

கடந்த சில மாதங்களாக வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து நொந்து போய் இருந்த காரணத்தால் இந்த படமாவது சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். வேண்டுதல் நிறைவேறியதா என்பதை விமர்சனத்தில் பாருங்கள்.

விஜய்(ஜெகதீஷ்) மிலிட்டரியில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட ஆள் விஜய்யிடம் சிக்குகிறான்.

அவனை தனியறையில் வைத்து விசாரணை செய்யும் போது இரண்டு நாட்களில் மும்பையில் 12 இடங்களில் குண்டுவெடிக்கப்போவதை அறிகிறார். எந்த விதமான துப்புகளும், குறிப்புகளும் கிடைக்காமல் இருக்கும் போது தனது புத்திசாலித்தனத்தால் அவனை தப்ப விட்டு தன் மிலிட்டரி டீமுடன் பின்தொடர்ந்து சென்று 12 இடத்திலும் குண்டுவைக்க சென்ற மனிதவெடிகுண்டுகளை ஒரே சமயத்தில் சுட்டுக் கொல்கிறார்.
இதனை அறிந்த வில்லன் மும்பைக்கு வந்து விஜய் பற்றிய விவரங்களை கண்டறிந்து டார்கெட் செய்கிறார். க்ளைமாக்ஸில் வில்லனை சுட்டுக் கொன்று விட்டு மீண்டும் மிலிட்டரிக்கு வேலைக்கு செல்கிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

ஒரு படம் அதுவும் தீபாவளிக்கு வரும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். பக்கா எண்டர்டெய்னர் மூவி. ஒரு இடத்தில் கூட தொய்வு விழவில்லை. படம் துவங்கி அரைமணிநேரத்திற்குள் நாம் படத்தினுடன் ஒன்றி விடுவோம். அதன் பிறகு படம் முடிந்ததும் தான் மீள்கிறோம்.
மாஸ் எண்டர்டெய்னர் இப்படித்தான் இருக்க வேண்டும். அதுவும் சமீப காலங்களில் சகுனி, தாண்டவம், மாற்றான் போன்ற படங்களை முதல் நாள் பார்த்து நொந்து போன எனக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது. இது விஜய் வழக்கமான படமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் டாகுடர் நடித்துள்ளார்.

விஜய் படத்தில் அழகாக இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உதவியுடன் ஜம்மென்று வருகிறார். இயல்பாக நடிக்கிறார். நடனம் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன. குறுந்தாடி பக்காவாக பொருந்துகிறது. இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.

தமிழ் சினிமாவின் இலக்கணம் மாறாத லூசுப் பெண் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால். அழகாக இருக்கிறார். குத்து சண்டை வீராங்கனையாம். விஜய்யின் மீதுள்ள கோவத்தில் ஒரே குத்தில் எதிரியை வீழத்தி நாக்அவுட் செய்கிறார். விஜய்யை காதலிக்க வீட்டு பால்கனி வழியாக ஏறி வீட்டுக்குள் குதிக்கிறார். இதனை மீறி இன்னும் சொல்லலாம் தான். நம்ம பதிவுலகத்திலேயே அதிகமான காஜல் ரசிகர்கள் இருக்கிறார். அவர்கள் வர்ணித்துக் கொள்வார்கள்.

சத்யன் விஜய் நண்பராக மும்பையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறார். விஜய் நடத்தும் ஆபரேசனில் உதவுகிறார். முதலில் ராணுவத்தை விட போலீசே புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்னும் அவர் படத்தின் முடிவில் ராணுவம் தான் உயர்ந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

ஜெயராம் சிறு கேரக்டரில் படத்தில் கதையின் ஓட்டத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத கதாபாத்திரத்தில் வருகிறார். இருக்கிறார் செல்கிறார். அவ்வளவே. படத்தில் வில்லன் பாத்திரம் அமைதியாக வந்து கடைசியில் விஜய்யை இரண்டு அடி அடித்து பிறகு அடிவாங்கி செத்துப் போகிறார்.

அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல, விஜய்க்கு இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும். ஏற்கனவே பத்திரிக்கைகளில் படித்தும் நண்பர்கள் மூலம் சில விஷயங்கள் படத்தை பற்றி கேள்விப்பட்டும் எதிர்ப்பார்ப்பை சற்று குறைவாக வைத்துக் கொண்டே சென்றேன். அதனை மீறி அசத்தி ஜெயித்து விட்டார்கள்.

படத்தில் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் தினத்தன்று ஒரு வில்லனின் கையாளை தப்ப விட்டு அவனை தன் 12 படை வீரர்களுடன் பின் தொடர்ந்து சென்று அவர்கள் பிரிந்து செல்லும் போது விஜய் டீமும் பிரிந்து சென்று ஒரே நேரத்தில் 12 பேரையும் சுட்டுக் கொல்லும் காட்சி பெரியதாக பேசப்படும்.

அது போல 5 வீரர்களின் பெண் உறவினர்களை கடத்தி சென்று விஜய்யை கண்டுபிடிக்க வில்லன் முயற்சி செய்யும் திட்டத்தில் புத்திசாலித்தனமாக தன் தங்கையை நுழைத்து தன் வீட்டு நாய் உதவியுடன் கண்டுபிடிக்கும் காட்சியும் அசத்தலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட வேண்டும். காலையில் 4 மணிக்கு காட்சிக்கு செல்லும் போது வெளியில் இருந்த கட்அவுட், பேனர் எதையும் கவனிக்காமல் அவசர அவசரமாக பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே சென்று விட்டேன். படம் முடிந்து திருப்தியான மனநிலையில் வெளியே வந்தால் பயங்கர கூட்டம் நின்று கொண்டிருந்தது அடுத்த காட்சிக்காக.

அதில் ஒரு புத்திசாலி ரசிகன் அங்கு இருந்த ஒரு சிறு கட்அவுட்டுக்கு ஆயிரம் வாலா வெடியை மாலையாக போட்டு பற்ற வைத்து விட்டான். தியேட்டர்காரர்கள் வந்து நெருப்பை அணைத்து விட்டு அவனை துரத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்திசாலி ரசிகனின் செயலை நினைத்து வரும் வழியெல்லாம் சிரித்துக் கொண்டே வந்தேன். இவர்களை நம்பி கட்சியை ஆரம்பித்தால் பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம்.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. இருந்தாலும் நல்ல மாஸ் எண்டர்டெயினர் படத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லை. படத்திற்கு பெண்களின் ஆதரவும் இருக்கிறது. இன்று எங்கள் தெருவில் உள்ள முக்கால்வாசி குடும்பத்தினர்கள் இன்று படத்திற்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.



ஆரூர் மூனா

No comments:

Post a Comment