Sunday, 24 May 2015

ருத்ரபூமி - Journey 2 The Mysterious Island - சினிமா விமர்சனம் - பழசு 2012

ம்



ஏற்கனவே பலர் தோனி படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டதால் அதனை தவிர்த்து இன்று 8 படங்கள் ரிலீசாகியிருந்தன, சரி நம்ம ராக் நடிச்ச படமாச்சே என்று Journey 2 - The Mysterious Island (ருத்ரபூமி) படத்திற்கு சென்றேன். இது 3D படம்.

படத்தின் கதை, கதாநாயகன் சேன் அவனது அம்மா மற்றும் அம்மாவின் இரண்டாவது கணவர் ஹாக் (தி ராக்(Dwayne Johnson)) ஆகியோருடன் வசித்து வருகிறான். அவனுக்கு ஹாக்கை பிடிக்கவில்லை. சேனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதனை மொழிப்பெயர்க்க ஹாக் உதவுகிறார். அந்த மெசேஜின் படி ஒரு தீவுக்கு அவர்கள் செல்ல முயல்கின்றனர். அதற்கு அவர்களை கொண்டு விட ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி அதில் சேன், ஹாக், பைலட் மற்றும் அவரது மகள் ஆகியோர் செல்கின்றனர். ஹெலிகாப்டர் சூறாவளியில் சிக்கி உடைந்து கடலில் விழுகின்றது, அனைவரும் நீந்தி அந்த தீவுக்கு செல்கின்றனர். அந்த தீவு வினோதமானது, மிகச்சிறிய விலங்குகள் மிகப்பெரியதாகவும், மிகப்பெரிய விலங்குகள் மிகச்சிறியதாகவும் இருக்கின்றன. அங்கு சேனின் தாத்தா இருக்கிறார். அந்த தீவு 140 வருடங்களுக்கு கடலின் உள்ளேயும் 140 வருடங்களுக்கு கடலுக்கு மேலேயும் இருக்கிறது. ஹாக் அந்த தீவு இரண்டு நாட்களுக்குள் கடலில் மூழ்கப் போவதை கண்டுபிடிக்கிறார். அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே கதை.

காதில் பூவை சுற்றிக் கொண்டு லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய பேன்டஸி படம் இது. அது 3Dல் படம் அள்ளுகிறது. குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

அவர்கள் அந்த தீவுக்குள் நுழைந்தவுடன் தென்படும் மிகச்சிறிய யானையை பார்த்ததும் பிரமிப்புக்குள் மூழ்குகிறோம். அது போல் மிகப்பெரிய பல்லி, மிகப்பெரிய தேனீ, மிகப்பெரிய எறும்பு எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ராக் சேனுக்கு காதலியை கவர்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் போது அவரது மார்பில் ஒரு காயை எடுத்து அடிக்க அது எகிறி வந்து நம் முகத்தில் விழுவது போல் வருவது, தான் பலசாலி என்று கூறி மிகப்பெரிய பல்லியை முகத்தில் குத்தி பல்லியை கோவப்படுத்துவது என ராக் அசத்துகிறார். அது போல் சேனாக வரும் (Josh Hutcherson) நன்றாக நடித்துள்ளார். அந்த பைலட்டாக வரும் (Luis Guzman) காமெடியில் அசத்துகிறார். பைலட்டின் பெண்ணும் (Vanessa Hudgens) ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு இருக்கிறார்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் சென்றால் ரசித்து வரலாம். படமும் மிகச்சிறிய படம் தான் மொத்தமே 01.30 மணிநேரம் தான் ஓடுகிறது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment