Sunday 24 May 2015

3 தமிழ் சினிமா - பழசு 2012

ம்


காலையில் ராக்கி தியேட்டரில் 8 மணிக்காட்சிக்கு நேற்று டிக்கெட் எடுத்து விட்டேன். ஆனால் பேசாமல் படுத்து தூங்கி விட்டு சினிமாவுக்கு சென்றிருக்கலாம். நேற்றிரவு ஒரு நண்பனை வழியில் பார்த்து வினையை கூட்டிக் கொண்டேன். குவாட்டரில் ஆரம்பித்து ஆப் தாண்டி எப்ப வீட்டுக்கு வந்தேன்னே தெரியலை. காலையில் எந்திரிக்கவே முடியலை. படம் பார்க்க ஒக்கார்ந்தா ஒரே தலைவலி வேற. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவென்றால் விடியற்காலை சினிமாவுக்கு செல்ல வேண்டுமென்றால் முதல் நாள் இரவு குவாட்டருடன் நிப்பாட்டிக் கொள்ள வேண்டும் (தக்காளி அப்பக்கூட குடிக்கிறத விட மாட்ட). தியேட்டருக்கு போனா ஒரு பயலும் குளிக்காம, கக்கா போகா ஙேன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறானுங்க(நானும் தாங்க). விமர்சனத்தை முன்னாடி போடனும்கிறதுக்காக எவ்வளவு கொடுமையத்தான் தாங்குறது.

படத்துக்குள்ள வருவோம். படம் ஏற்கனவே பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிலீசாகுது. அதுலயும் பல சிரமம் இருக்கு. இது மாதிரி நிறைய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே போய் உட்கார்ந்தா காதுலேயிருந்து கழுத்து வரைக்கும் பிளேடு போட்டு அனுப்பிச்சிடுவானுங்க. ஹேராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், பாபா, நரசிம்மா (இயக்குனர் இறந்தது தான் எதிர்பார்ப்புக்கு காரணம் சத்தியமா கேப்டன நம்பி போகல)உட்பட பல, கடைசியா ராஜபாட்டை வரைக்கும் பார்த்தாச்சு. பயந்துகிட்டே படத்துக்கு போனேன்.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக படம் நல்லாயிருக்கிற மாதிரியிருந்தது. பள்ளி இறுதியாண்டு படிக்கும் தனுஷூம், ஸ்ருதிஹாசனும் காதலிக்கின்றனர், பல வருடங்கள் கழித்து கல்லூரி படிப்பெல்லாம் முடிந் பிறகு திருமணம் செய்து கொள்கின்றனர், சந்தோஷமாக இருக்கின்றனர், நிற்க. (அதுக்காக நிக்கக்கூடாது உட்கார்ந்தே பிளாக்கை படிங்க) இடைவேளை வருகிறது. படம் சூப்பர், நாம விமர்சனத்துல அருமையா பாராட்டி எழுதனும்னு நினைச்சிருந்தேன். இதுல நைட்டு அடிச்ச மப்பு தெளியாம தலைவலி வேற உயிர எடுத்துக்கிட்டு இருந்தது. இடைவேளை முடிந்து படம் துவங்கி சில நிமிடங்களில் கொலவெறி பாட்டு வந்தது. அத்தோட வெளியில வந்திருந்தன்னா ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும். ஆனால் அதற்கப்புறம் வரும் காட்சிகள் அனைத்தும் மயக்கம் என்ன படத்தின் நீட்சி.

கொலைவெறி பாடல் வரை படம் பார்த்து விட்டு வந்து விட்டால் படம் சூப்பர். படம் முடியும் வரை படம் பார்த்து விட்டு தான் வருவேன் என்று பிடிவாதமாக ஒக்கார்ந்து படம் பார்த்தால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதே போன்ற கேரக்டரை மயக்கம் என்ன படத்தில் பார்த்து விட்டதால் கடுப்படிக்கிறது. என்னுடன் படம் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் தீவிர ரசிகர்கள். அவர்களே படம் இந்த பாட்டுக்கு பிறகு மொக்கை என்று சொல்கிறார்கள்.

ஒருத்தனுக்கு மெண்டல் டிஸ்சார்டர் இருக்கு என்பதை அவன் மனைவிக்கே தெரியாமல் இருக்கிறது என்பது பார்ப்பவர்களின் எல்லோர் காதிலும் பூச்சுற்றுவது போல் இருக்கிறது. கொஞ்சம் நம்புற மாதிரி எடுங்கப்பா. ஏதோ ஒரு பத்திரிக்கையில தலைவர் ரஜினி ஒரு காட்சியில் வருகிறார் என்று படித்தேன். அதனால் எங்காவது தலைவர் வருவாரா என்று தேடித்தேடி களைத்தது தான் மிச்சம்.

படத்தில் தனுஷ் அருமையாக நடித்துள்ளார் என்று நாம் சொல்லக்கூடாது. அனைவரும் அவரின் நடிப்பு பற்றி தெரியும். தேசிய விருது வேற வாங்கியிருக்கிறார். ஆனால் என்ன செய்ய எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. கோவப்படும் காட்சிகள், டியூசன் சென்டரில் ஸ்ருதியை கவர செய்யும் முயற்சிகள், மனநிலை பாதிக்கப்பட்ட பின்பு அதனை ஸருதிக்கு தெரியாமல் மறைக்கும் முயற்சி, தற்கொலை செய்ய கத்தியுடன் முயற்சிப்பது என தூள் கிளப்பியிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் மனதை கொள்ளையடிக்கும் அழகு, கமலஹாசனையே எல்லாருக்கும் பிடிக்கும். அவர் பொண்ணை எப்படி புடிக்காமல் போகும். ஆச்சரியம் நன்றாக நடிக்கவும் செய்கிறார். என் இடைவேளைக்கு பிறகு அழுதுகொண்டே இருப்பது தான் கடுப்படிக்கிறது.

அது இன்னாயா காட்சிக்கு காட்சி மூக்குக்கே மாத்தி மாத்தி முத்தம் கொடுத்துகிறாங்க. பொண்டாட்டி இயக்குனர் என்பதால் தான் மூக்கோட நிப்பாட்டிக்கிட்டார் போல. ஆனாலும் தனுஷூக்கு மச்சம்யா. ஸ்ருதியை சும்மா போட்டு பிரட்டி எடுத்திருக்கார்.

சிவகார்த்திகேயன் முதல்பாதியில் தனுஷை விட அப்ளாஸ் அதிகம் வாங்குகிறார். சரியான பாதையில் சென்றால் அடுத்த சந்தானமாகி விடுவார். நல்ல எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். அவரின் ஒவ்வொரு கமெண்டுக்கும் தியேட்டரே அதிர்கிறது. படம் முழுக்க வந்தால் பெயரை தட்டிக் கொண்டு சென்று விடுவார் என்பதால் இடைவேளையுடன் கழட்டி விட்டு விட்டனர்.

பிரபு, பானுப்பிரியா, ரோகிணி ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். முக்கியமாக நண்பனாக வரும் சுந்தர் இடைவேளைக்கு பிறகு அதிக காட்சிகளில் வருகிறார். படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே மிகப்பிரபலமாகி விட்டது. கொலைவெறி பாட்டு எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை.

படம் முடிந்து வெளிவந்த ஒரு ரசிகர் பட்டாளம் வெளியில் அடுத்த காட்சிக்கு நின்றிருந்தவர்களிடம் வீட்டுக்கு போகச்சொல்லி கொண்டிருந்தனர். விட்டால் நான் அனைவரையும் போகச் சொல்லி காலில் விழுந்தாவது கதறியிருப்பேன், ஆனால் தியேட்டர்காரர்கள் அடிப்பார்களே என்று தான் பேசாமல் வந்து விட்டேன்.

படம் சொல்ல வரும் நீதி என்ன? தற்கொலை செய்யாதீர்கள், மனநோய் தீர்க்கக்கூடியதே என்பது தான். ஆனால் இடைவேளைக்கப்புறம் படம் பார்ப்பவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். நீதி எதிர்விளைவாகிடுச்சி.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment