Sunday, 24 May 2015

விகடன் அதிபர் S.S.வாசனின் கடைசி நாள்... - பழசு 2012

.



சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும், மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தை அடைந்தவர், வாசன். எஸ்.எஸ்.வாசன் மனைவி பெயர் பட்டம்மாள். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரே மகள் லட்சுமி ஜெமினியின் நிர்வாக இயக்குனராக இருந்த வாசன், இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பை பாலசுப்பிரமணியனுக்கு வழங்கினார்.

அலுவலகத்தில் அப்பா, மகன் என்ற பந்தமே இருந்ததில்லை. அலுவலகத்தில் எல்லோரும் வாசனை "பாஸ்" என்றே கூறுவார்கள். எனவே, பாலசுப்பிரமணியனும் அவரை "பாஸ்" என்றே அழைக்கலானார். வாசனின் இறுதி நாட்கள் பற்றி ஒரு கட்டுரையில் பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:-

"தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோ கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்). அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. 1968 ஏப்ரலில்தான் எனக்குத் தெரியும். எங்கள் குடும்ப டாக்டர் எம்.எஸ்.வெங்கட்ராமன் என்னை அழைத்து, விஷயத்தைச் சொன்னார்.

"இது நோய் முற்றிய நிலை. ஆபரேஷனுக்காக வயிற்றைத் திறந்து பார்த்தபோது, நானே பயந்துவிட்டேன். `இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்' என்று அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், சொல்லாமல் இருக்க முடியவில்லை" என்றார், டாக்டர். அதன் பிறகு, பாஸ் முகத்தைப் பார்த்தேன்.

எதுவுமே நடக்காதது போல் அவர் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தார். அதையும் மீறி அவரிடம் ஒரே சோர்வு தென்படுவதை அப்போதுதான் ஊன்றி கவனித்து உணர்ந்தேன். ஒரு நாள் `பாஸ்' என்னைக் கூப்பிட்டார். தனக்கு என்ன என்பதை அவராகவே சொல்லிவிட்டார். முன்கூட்டித் தெரியும் என்று நானும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

"பாலு! திறமையுள்ள, தகுதியுள்ள மனிதர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து ஓர் இறுதி முடிவை எடுத்து அதன்படி செய்வது என் வழக்கம். வாழ்க்கையில் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம். ஆனால், என் சொந்த உடல் நலம் பற்றிய விஷயத்தில் அதையே செய்தது தவறு என்று இப்போது புரிகிறது.

ஒன்றரை வருடத்துக்கு முந்தியே டாக்டர் வெங்கட்ராமன் என்னை ஆபரேஷன் செய்து கொள்ளச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்னும் சில காலத்துக்கு என் ஆயுள் நீண்டிருக்கும். பலரிடம் கருத்துக் கேட்டுக் காலத்தைக் கடத்தியதுதான், என் உயிரையே விலையாகக் கேட்கிறது" என்றார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, "இந்த விஷயங்கள் எதையும் நீ அம்மாவிடம் சொல்லாதே" என்று என் வாயை கட்டிப் போட்டார். ஆனால், அம்மாவிடம் சொல்லாமல் இருக்க எனக்குத் தைரியமில்லை. தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லிவிட்டு, "தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாதீர்கள்" என்றேன்.

எப்படித்தான் என் தாயார் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டாரோ, அவர் எதுவும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வளைய வந்தார். வீட்டுக்குள்ளேயே ஒரு கொடுமையான, வேதனையான கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்தது. மறைவதற்கு சில மாதங்களுக்கு முன், ரங்கா நர்சிங் ஹோமில் ஒரு நாள் அவருக்கு `டிரிப்ஸ்' ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

மருந்தில் ஏதோ தவறு நடந்து, உடம்பு தூக்கிப்போட ஆரம்பித்தது. படுக்கையில் இருந்தபடி ரொம்ப அவஸ்தைப்பட்டிருக்கிறார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு, வேறு `டிரிப்ஸ்' பாட்டில் பொருத்தப்பட்டதில் உடல் நடுக்கம் சரியாகிவிட்டது. இது நடக்கும்போது, இரவு 8 மணி இருக்கும். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ரங்கா நர்சிங் ஹோம் பறந்தோடிப்போய் அவர் முன்னால் நின்றேன்.

என்னைப் பார்த்தவர், "நடந்ததைக் கேள்விப்பட்டிருப்பாயே... எனக்கு ராத்திரி ஏதாவது ஆகிப்போனால், உடனே போன் செய்து யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம். இரவு வேளையில் யாரையும் தொந்தரவு செய்யாதே. எதுவானாலும், காலை ஆறு மணிக்கு மேல் சொல்லு" என்றார். இதற்கு அவர் என்னிடம் எதிர்பார்த்த ஒரே பதில், "யெஸ் சார்". அதையே நானும் சொன்னேன்.

அவ்வாறு இல்லாமல், நான் உணர்ச்சிவசப்பட்டு, "ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று சொல்லியிருந்தால், அவருக்குப் பிடிக்காது. நான் அமைதியாக நிற்க, "மாதவன் (உதவியாளர்) இங்கே என்னுடன் இருப்பான். நீ இப்போது புறப்படு" என்றார். அதற்கும் "யெஸ் சார்" சொல்லிவிட்டு, கனத்த இதயத்துடன் வெளியே வந்தேன்.

1969 ஆகஸ்டு 26ந்தேதி காலையில் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அப்போது ஏழரை மணி இருக்கும். நான் எதிரில் போய் நின்றேன். அவரால் பேச முடியவில்லை. மிகவும் நலிந்து போயிருந்தார். அன்றைய காலைப் பத்திரிகையைக் கொடுத்து, "இதைப்படி" என்று வலது கையால் சுட்டிக் காட்டினார். "காங்கிரசில் பிளவு மறைகிறது" என்ற தலைப்பிட்டு வெளியாகி இருந்த செய்தி அது.

காமராஜருக்கும், இந்திராவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு மறைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அந்தச் செய்தி சொன்னது. தன் உயிர் மூச்சாக அவர் கருதிய காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, அவரால் தாங்க முடியவில்லை. அந்தப் பிளவு மறைகிறது என்ற செய்தியைப் பார்த்ததும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. சிரிக்க முடியாத அளவுக்கு பலவீனம்.

ஆனாலும் உதடுகள் லேசாக நெளிந்து ஒரு புன்னகையை வெளிப்படுத்த முயன்றன. அன்று காலை 9.20 மணி. நான் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். கண் மூடிப்படுத்திருந்தவரின் இடது கை மட்டும் `முடியவில்லை, முடியவில்லை' என்பது போல் இரு முறை அசைகிறது.

அதன்பின் எந்தச் சலனமும் இல்லை. பதறிப்போய் நாடி பிடித்துப் பார்க்கிறேன். துடிப்பு இல்லை. டாக்டரை அழைக்க எழுந்து ஓடுகிறேன். டாக்டரே அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு, `உயிர் பிரிந்து விட்டது' என்று டாக்டர் அறிவித்தார்."

இவ்வாறு பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

வாசன் மறைந்தபோது தமிழக முதல் அமைச்சராக கருணாநிதி இருந்தார். அவர், மற்ற அமைச்சர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். வாசன் மரணச்செய்தி பரவியதும், சென்னையில் உள்ள எல்லா ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அனைவரும் வாசன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் முதல் அமைச்சர் பக்தவச்சலம், மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆரும், மற்றும் பல நடிகர், நடிகைகளும், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மேக்கப்பைக்கூட கலைக்காமல், விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர். வாசன் உடலைப்பார்த்து எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். வாசனுடன் நீண்ட காலம் பழகிய ஜெமினிகணேசன் கதறி அழுதார்.

நடிகைகள் தேவிகா, வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா ஆகியோர் கண்ணீர் விட்டபடி நின்றனர். சிவாஜிகணேசன் சோகமே உருவாக இருந்தார். பானுமதி, பத்மினி, ஜெயலலிதா, சவுகார்ஜானகி, டி.ஆர்.ராஜகுமாரி, ஏவி. எம்.ராஜன், முத்துராமன், பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ரவிச்சந்திரன், பாலாஜி, நாகேஷ், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்பசெட்டியார், நாகிரெட்டி, ஏ.எல். சீனிவாசன், டைரக்டர்கள் ஸ்ரீதர், ப.நீலகண்டன், திருலோகசந்தர், மாதவன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, கணவர் "கல்கி" சதாசிவத்துடன் வந்து மரியாதை செலுத்தினார். மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், மைலாப்பூர் எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) உள்ள வாசன் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. எம்.ஜி.ஆர், பட அதிபர்கள் ஏவி.மெய்யப்ப செட்டியார், சுந்தர்லால் நகாதா, முன்னாள் அமைச்சர்கள் கக்கன், பூவராகன், தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம் மற்றும் திரை உலகப் பிரமுகர்கள் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

உடலை சுமந்து செல்ல, ஜெமினிகணேசன் தோள் கொடுத்தார். ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்தை அடைந்தது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. "சிதை"க்கு வாசனின் ஒரே மகன் பாலசுப்பிரமணியன் தீ மூட்டினார்.

வாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில், சென்னை நகரில் எல்லா சினிமா கொட்டகைகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆபீசில், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

ஆரூர் மூனா செந்தில்


நன்றி : விகடனின் வாசன் நூற்றாண்டு மலர், மாலைமலரின் காலச்சுவடுகள்

No comments:

Post a Comment