Tuesday 26 May 2015

மனம் கவர்ந்த தீபாவளி - பழசு 2012

சிறுவயதில் இருந்தே தீபாவளி என்றால் ஒரு சந்தோஷம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. தீபாவளிக்கான முதல் சந்தோஷம் எங்கள் வீட்டு பலகாரம். என் அம்மா 20க்கும் மேற்பட்ட பலகாரங்களை செய்வார். சாப்பிட்டு மகிழ்வதே முதல் காரியமாக இருந்தது.

தீபாவளியன்று விடியற்காலை எண்ணெய் தேய்ப்பது நாங்கள் இருந்த வீட்டுக்கும் வீட்டு ஓனர் வீட்டுக்கும் ஒரே கொல்லை தான். அவர்கள் வீட்டில் ஆட்கள் அதிகம் இருப்பார்கள். விடியற்காலையில் அப்பா எழுப்பி விடுவார். புலம்பிக் கொண்டே எழுந்திரிப்பேன். எண்ணெய் தேய்த்ததும் கொல்லையில் வெந்நீர் போடும் அடுப்பின் அருகில் அமர்ந்து கொள்வேன்.

பக்கத்து வீட்டு ஆட்களும் கொல்லையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் பேசி கலாய்த்துக் கொண்டு அடுப்பில் இருக்கும் நீர் சுட்டதும் குளியல். அதன் பிறகு அப்பா பூஜையறையிலிருந்து எடுத்து கொடுக்கும் புதுத்துணிகளை போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விடுவேன்.

அடுத்ததாக பட்டாசுகள். என் அப்பா சிறுவயதில் இருநூறு ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்குவார். அதில் எனக்கென பிரிக்கப்பட்ட பங்கை எடுத்து வெயிலில் காயவைப்பது, இரண்டு மூன்று பிஜிலி வெடிகளை பிரித்து அதில் உள்ள வெடிமருந்தை ஒருவெடியாக செய்து வெடிப்பது. வெடிக்காமல் போன வெடிகளை பிரித்து வெடிமருந்தை நேரடியாக புஸ் கொளுத்தி விளையாடுவது என அனைத்தும் அருமையான நினைவுகள் தான்.

தீபாவளிக்கென புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது முதல்காட்சி பார்க்கும் சுகம் இருக்கிறதே. அப்பப்பப்பா, அதனை வார்த்தைகளில் அடக்க முடியாது. நான் முதல் முதலாக நண்பர்களுடன் தீபாவளியன்று சென்ற திரைப்படம் அவசர போலீஸ் 100. அந்த சமயத்தில் எனக்கு பத்து பதினொரு வயது இருக்கும். தனியாக சென்று படம் பார்த்ததில் பெரியமனுசனாகி விட்ட நினைப்பு.

பள்ளிப்படிப்பு முடிந்து சென்னைக்கு படிக்க வந்ததும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பட்ட சிரமங்கள் கொடுமையாக இருக்கும். 1998 தீபாவளிக்கு நான் திருவாரூர் செல்ல பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். நின்று நின்று பார்த்து கடைசி வரை பேருந்து கிடைக்கவில்லை. நடுராத்திரிக்கு பிறகு ஒரு கட்டத்தில் பேருந்துகளே இல்லை.

தீபாவளிக்கு மறுநாள் திரும்பவும் சென்னை வந்தாக வேண்டும். அழுகையே வந்து விட்டது. விடியற்காலை 2 மணிக்கு பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறி பாண்டி சென்று அங்கிருந்து மாறி மாறி காலை 9 மணிக்கு திருவாரூர் சென்றேன். தீபாவளியை தவற விட்டது போன்ற உணர்வே இருந்தது.

சென்னையில் படிக்கும் காலத்தில் திரையரங்கிற்கு சினிமா பார்க்க செல்லும் போது தான் என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களையே பார்க்க முடியும். அனைவரும் கல்லூரிப் படிப்புக்கு வெளியூரில் இருந்தார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் வெகு சொற்பம் தான். நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வருவேன்.

வீட்டுக்கு வந்ததும் நல்லி எலும்பு அதிகம் போட்டு மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல் உடன் தோசை பிரமாதமான சாப்பாடு. மறுபடியும் வெடி வெடிக்க வேண்டும் என்பதற்காகவே அரக்கபரக்க தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவிடுவேன்.

இந்த காலத்து பசங்களுக்கு இது போன்ற சந்தோசங்கள் குறைந்து விட்டது. காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது. பட்டாசை வெடிப்பதை குறைத்துக் கொண்டு விட்டனர்.

இந்த ஆண்டு எனது பாட்டி காலமான காரணத்தால் தீபாவளி கிடையாது. எனவே பிறந்ததிலிருந்து முதல் முறையாக இந்த தீபாவளியன்று என் பெற்றோரை பிரிந்து இருக்கிறேன். அதுவே பெரிய வருத்தமாக இருக்கிறது. அடுத்த முறை சேர்த்து கொண்டாடி விட வேண்டியது தான்.

நாளை சென்னையில் இருப்பதால் முதல் காட்சி துப்பாக்கி பார்க்க இருக்கிறேன். காட்சி காலை நான்கு மணிக்கு எனவே நம் வலைதளத்தில் 8 மணிக்கே துப்பாக்கி விமர்சனம் எதிர்பார்க்கலாம்.

என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் இனிய இனிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுங்கள்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment