Sunday 24 May 2015

பஞ்சேந்திரியா - சுதந்திர தினமும் ரிட்டையர்மெண்ட் பார்ட்டியும் - பழசு 2012

சுதந்திர தினம் வந்தாலும் வந்தது, எந்த டிவியை பார்த்தாலும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரத்தை போட்டு கழுத்தறுக்கிறார்கள். டப்பாவான படமெல்லாம் சூப்பர் ஹிட் என்ற பந்தா வேறு.

சன், விஜய், கலைஞர் டிவிக்கள் பத்தாது என்று இந்த மெகா, வசந்த், விண் டிவிக்களும் களத்தில் இறங்கி சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டுக் கொல்லப் போகின்றன. இவனுங்க சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தால் தான் சுதந்திர தினமே நிறைவடையும் போல.

இப்பொழுதெல்லாம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே கொடியேற்றுவதை கடமையாக நினைத்து செய்கின்றன. முன்புபோல ஒரு தெருவுக்குள் உள்ள நண்பர்கள் எல்லாம் மன்றம் அமைத்து தங்களது சுய ஆர்வத்தில் தெருக்களில் கொடியேற்றி, மிட்டாய் கொடுத்து, தேசிய கீதம் பாடி, தெருவுக்குள் உள்ள சிறுவர்களை அழைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுத்ததெல்லாம் மலையேறி விட்டன.

எங்கள் டிவியின் நிகழ்ச்சிகளை பார்த்து எங்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வரும் நிகழ்ச்சி அறிவிப்பைப் பார்த்தால் எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது. கொஞ்ச நஞ்சம் மக்களுக்கு இருக்கும் தேசிய உணர்வை மழுங்கடிக்கும் முயற்சிகளை மட்டுமே டிவிக்கள் செய்கின்றன. வேறென்ன சொல்ல.

----------------------------------------------

இந்தியாவின் மானத்தை தலைநிமிர செய்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்


-----------------------------------------------

இன்றும் ஒரு ரிட்டையர்மெண்ட் பார்ட்டி. இந்த மாதத்துடன் ஒய்வு பெறும் ஒரு சக ஊழியர் ஒருவர் வைத்தார். என்ன தான் பெரிய பாரில் அமர்ந்து சாவகாசமாக ஏகப்பட்ட சைட்டிஷ்களுடன் குடித்தாலும் இது போன்ற சமயங்களில் சக ஊழியர்களுடன் ஒரு மரத்தடியின் ஒரத்தில் அமர்ந்து கொண்டு ஒரு குவாட்டரை இரண்டே ரவுண்டில் மடக்கென்று குடித்து விட்டு சக ஊழியர்களை கலாய்த்துக் கொண்டு பிரியாணியை சாப்பிடும் கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே இது வேறெங்கும் கிடைக்காது.

என்னை வேலை வாங்கும் JE, அடுத்தடுத்த மாதங்களில் ரிட்டையர்மெண்ட்டாகப் போகும் பெரிசுகள், நடுத்தர வயது ஊழியர்கள் என் வயதையொத்த இளசுகள் என எல்லோரும் கூடி நின்று கலாய்த்துக் கொண்டும், பாசத்தை பகிர்ந்து கொண்டும் இருக்கும் இது போன்ற நிகழ்வுகள் தான் மற்ற ஊழியர்களுடன் நம்மை ஒன்ற செய்து விடுகின்றன.

அடுத்த பார்ட்டி வரும் 27ம் தேதி மற்றொரு ஓய்வு பெறும் ஊழியருக்காக நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் இப்போதே நடக்கிறது. சின்ன சின்ன சந்திப்புகள் தான் பெரிய நட்புக்கு ஆதாரம் என்பது இந்த இடத்தில் தான் நிரூபணமாகிறது, என்னை பொறுத்த அளவில்.

----------------------------------

தலைவரு நடந்தே ஜெயிப்பாரு தெரியும்ல


----------------------------------------

நமக்கு ஒரு வீக்னெஸ் உண்டு. படங்களில் சோகமான காட்சிகள் வந்தால் நான் படத்துடன் ஒன்றி அழுது விடுவேன். சிறுவயதிலிருந்தே இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. நானே விடவேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.

சிறு வயதில் வீட்டில் வீடியோவில் பாசமலர் படத்தில் கைவீசம்மா கைவீசு என்று சிவாஜி உணர்ச்சி பொங்க வசனம் பேசும் காட்சியைப் பார்த்து கதறி கதறி அழுக வீட்டில் உள்ள எல்லோரும் டிவியை நிறுத்தி விட்டு வந்து என்னை தேற்ற முயற்சித்தனர். இதைப் பார்த்து கடுப்பாகிப் போன என் அப்பா விறகு கட்டையை எடுத்து வந்து சினிமாவில் வரும் காட்சிக்கெல்லாம் அழுவாயா என்று சாத்தி எடுத்தது எல்லாம் வரலாறு.

இப்பக்கூட அங்காடி தெரு படத்திலும் சோகம் தாங்காமல் நான் அழத்தொடங்க இதைப் பார்த்த என் வீட்டம்மா இன்று வரை டிவியில் எந்த சோக காட்சி வந்தாலும் என்னைப் பார்த்து அழுமூஞ்சி என்று கிண்டல் செய்றார்.

நானும் முயற்சி பண்ணிப் பாக்கிறேன் இதை மட்டும் நிறுத்த முடிய மாட்டேங்குது. அதுவும் சரக்கைப் போட்டு படத்தைப் பார்த்தால் அழுகை ரெட்டிப்பாகுது. என்ன வாழ்க்கைடா இது.


-------------------------------------------

லிப்ட் கேட்டா தப்பா




ஆரூர் மூனா

No comments:

Post a Comment