Sunday 24 May 2015

விமான விபத்து - மோகன் குமாரமங்கலம் கடைசி நாள்... - பழசு 2012

.


31.5.1973ந்தேதி இரவு 7.35 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு `இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் போயிங் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 58 பயணிகள், 7 சிப்பந்திகள் ஆக 65 பேர் இருந்தார்கள். இரவு 9.52 மணிக்கு அந்த விமானம் டெல்லி சென்று இறங்கவேண்டும். அதற்கு 30 நிமிடத்துக்கு முன்பாக விமான நிலையத்துடன் விமானத்துக்கு இருந்த ரேடியோ திடீர் என்று துண்டிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் விமானம் தெற்கு டெல்லியில் "வசந்த் விகார்" என்ற இடத்தில் எரிந்து விழுந்து நொறுங்கியது. தூள் தூளாக விமானம் சிதறியது. விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலம், கோவையைச் சேர்ந்த வ.கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாலதண்டாயுதம் ஆகியோரும் பயணம் செய்தார்கள்.

மோகன் குமாரமங்கலம், பால தண்டாயுதம் உள்பட 48 பேர் உடல் கருகி உயிர் இழந்தார்கள். 17 பேர் மட்டுமே காயத்துடன் பிழைத்தார்கள். உயிர் தப்பியவர்களில் மத்திய உதவி மந்திரி பால கோவிந்தவர்மா, தமிழ்நாட்டைச் சேர்ந்த இ.காங்கிரஸ் "எம்.பி." விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். இந்த இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பலியான 48 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகி கிடந்தன. உடல்கள் மீட்கப்பட்டு உறவினர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலத்தின் உடல் அவர் வைத்திருந்த பேனா மற்றும் காது கேட்கும் கருவி (இயர் எய்டு) ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி குருநாம்சிங் உடல் கையில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாலதண்டாயுதம் உள்பட 42 பேரின் உடல்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. பாலதண்டாயுதத்தின் மனைவி மற்றும் அவரது நண்பரான காத்தமுத்து எம்.பி. ஆகியோர் டெல்லி சென்று, எவ்வளவோ முயன்றும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனால் முயற்சி கைவிடப்பட்டது. உடல்களை மீட்கும்போது ஒரு இடத்தில் கணவனும், மனைவியும் கை கோர்த்தபடி பிணமாகி கிடந்தார்கள். அவர்கள் கட்டி இருந்த கெடிகாரத்தில் 10 மணி 3 நிமிடம் காட்டியது. மோகன் குமாரமங்கலத்தின் உடல் சவப்பெட்டியில் வைத்து டெல்லி ஹேஸ்டிவஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி மோகன் குமாரமங்கலம் வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மத்திய மந்திரிகள், வெளிநாட்டு தூதர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு மோகன் குமாரமங்கலம் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் இறுதிச் சடங்குகளை செய்தார். குமாரமங்கலம் மறைவுக்கு ஜனாதிபதி கிரி, கவர்னர் கே.கே.ஷா, பெருந்தலைவர் காமராஜர், தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி, கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உள்பட தலைவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். விபத்து நடந்த இடத்தை பிரதமர் இந்திரா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். ஜனாதிபதி வி.வி.கிரியும் ஆஸ்பத்திரிக்கு சென்று, காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். விமான விபத்தில் மரணம் அடைந்த மோகன் குமாரமங்கலம், முன்னாள் மத்திய மந்திரி சுப்பராயனின் மகன். புகழ் பெற்ற வக்கீலாக விளங்கியவர்.

கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தார். பிறகு இ.காங்கிரசில் சேர்ந்து பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து எம்.பி.யாகி 1971ல் மத்திய மந்திரியானார். மோகன் குமாரமங்கலத்தின் குடும்பம் பல சிறப்புகளை பெற்றது. ராணுவ தளபதியாக இருந்த பி.பி.குமாரமங்கலம் இவரது அண்ணன்.

அவரது சகோதரி பார்வதி கிருஷ்ணன், கம்யுனிஸ்டு தலைவர்களில் ஒருவர். பிற்காலத்தில் மோகன் குமாரமங்கலத்தின் மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய மந்திரியாக இருந்தார். பாலதண்டாயுதம் பொள்ளாச்சியில் பிறந்தவர். சிறுவயது முதலே கம்யுனிஸ்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். பல தடவை சிறை சென்றவர்.

1971 தேர்தலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வ.கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த விமான விபத்தில் சென்னை சுங்க இலாகா கலெக்டர் கவுசல்யா நாராயணன் (வயது 41), சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கேரளாவைச் சேர்ந்த டாக்டர் சாக்கோ (61) மற்றும் சென்னையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் மோரிஸ் (23) ஆகியோரும் பலியானர்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment