தெறி சினிமாவுக்கு போவதே பெரும் விஷயமாக இருந்தது. எல்லா அரங்குகளும் டிக்கெட்டுகளை பதுக்கி விட்டன. சமீபத்தில் டிக்கெட் விலையை உயர்த்தி விற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக டிக்கெட்டுகள் கள்ள சந்தைக்கு போனதால் சற்று திணறித்தான் போனேன். வழக்கமாக பிருந்தாவில் டிக்கெட் வாங்கி விடுவேன். ஆனால் அவர்கள் முதல் நாள் இரவு வரை படம் போடுவதை இறுதி செய்யவில்லை.
பிறகு தம்பி தினேஷ் அவனுடைய டிக்கெட்டை எனக்கு விட்டுக் கொடுத்தான். அதையும் சினிமாவுக்கு நிகராக சேஸ் பண்ணி படம் போடுவதற்கு சரியாக நாலு நிமிடம் முன்பு தான் டிக்கெட்டை கைப்பற்றினேன். நன்றி டின்.
படத்தின் பெயருக்கும் படத்தின் கதைக்கு என்ன சம்பந்தம் என்றால் இறுதியில் வில்லனை வீழ்த்தும் போது தெறிபேபின்னு சொல்லுது. அவ்வளவு தான். அதனால் படத்தின் பெயர் தெறியாம்.
படத்தின் கதை என்னவென்றால் கேரளாவில் பேக்கரி வைத்து இருப்பவர் ஜோசப் குருவில்லா எனும் விஜய். அவரது மகள் நைனிகா, நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எமி ஜாக்சன். பேக்கரியில் உதவியாளராக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன்.
விஜய்யை சைட் அடிக்கிறார் எமி. அதனை அறிந்த நைனிகா விஜய்க்கு எமி மேல் காதல் வரவைக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் உள்ளூர் ரவுடியுடன் வம்பு ஏற்பட விஜய்யின் பெயர் குருவில்லா கிடையாது. அவர் ஐபிஎஸ் ஆபீசர் விஜய்குமார் என அறிகிறார்.
விஜய் சென்னையில் டிசிபியாக இருக்கும் போது ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற அமைச்சர் மகேந்திரனின் மகனை துன்புறுத்தி கொன்று விடுகிறார். அதற்காக விஜய்யை பழிவாங்க விஜய்யின் குடும்பத்தை கொன்று விடுகிறார் மகேந்திரன். மகளுக்காக ஊரை விட்டு வந்து கேரளாவில் வாழ்கிறார்.
விஜய் இருக்குமிடம் மகேந்திரனுக்கு தெரிய வர மறுபடியும் மோதல் வர யார் ஜெயித்தார்கள் என்பதே தெறி படத்தின் கதை.
விஜய் நடிப்பில் குறை வைக்க வில்லை. ஆனால் வயதாகி வருவது நன்றாக நடனத்தில் தெரிகிறது. சும்மா பாலீஷாக பட்டும் படாமலும் தான் ஆடுகிறார். பல காட்சிகளில் ஓவர் ஆக்சன் போல் தெரிந்தாலும் சில காட்சிகளில் அட போட வைக்கிறார்.
சமந்தா அவரது முகம் பூசினாற் போல் இருந்தால் தான் அழகாக இருக்கும். டயட்டில் இருந்து முகத்தில் டொக்கு விழுந்து அவரது அழகை குறைத்து விடுகிறது. சில காட்சிகளில் நடித்து உள்ளார்.
எமி என்னும் ஆங்கில நடிகை எதற்காக மலையாள டீச்சர் பாத்திரத்திற்கு என்று தான் தெரியவில்லை. விக்கு கூட மக்காக தான் தெரிகிறது.
நைனிகா க்யூட்டாக இருக்கிறார். அந்த க்யூட்னஸ் தான் படத்துடன் நம்மை ஒன்ற செய்கிறது. எக்ஸ்பிரசன்ஸ் பிரமாதம். பதின்ம வயதில் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்.
மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் காமெடியிலும் ஒரு காட்சியில் சென்ட்டிமென்ட் பெர்பார்மன்ஸிலும் பின்னியிருக்கிறார். எனக்கு அவரது செய்கைகளும் சேட்டைகளும் பிடித்து இருந்தது.
காட்சிகளில் நம்பகத் தன்மை சுத்தமாக இல்லை. முதல் காட்சியில் ஐந்து வயது பெண் குழந்தை ஊரின் மிகப் பெரிய ரவுடியுடன் மோதுவது போல் இருப்பது எல்லாம் அதீ தீவிர லாஜிக் பொத்தல்.
அது போல் பரிதாபம் வரவைக்க திணித்தது போல் பிச்சை எடுக்கும் குழந்தைகளை விஜய் காப்பாற்றுவது போல் இருக்கும் காட்சி. யோசிச்சி காட்சிகளை வைத்து இருக்கலாம்.
படத்தின் கதைக்கு வரவே ஒன்னேகால் மணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். அது போல் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சவசவன்னு இருக்கு.
லாஜிக் பொத்தல்கள் நிறைய இருக்கிறது. ஆக்சன் சீக்வன்ஸ்க்காக எடுத்து இருக்கிறார்கள். அது போல் பள்ளிக்கூடத்தில் நிறைய அடியாட்களை வைத்து சண்டை போட வேண்டிய இடத்தில் ஒரு குச்சியை வைத்து பாடம் எடுப்பது போல் அடிப்பது செம போர்.
புலி அளவுக்கு மோசமில்லை என்றாலும் துப்பாக்கி, கத்தி அளவுக்கு சிறப்பும் இல்லை. நேரம் இருந்தால் அரங்கில் பார்க்கலாம்.
ஆரூர் மூனா