Thursday, 12 May 2016

வாக்களிப்போம் நல்லவருக்கு

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக் கட்டத்தை எட்டி விட்டது. எங்கு பார்த்தாலும் பிரச்சாரங்கள். எந்த சானலை திருப்பினாலும் கட்சிகளின் விளம்பரங்கள், யுடியுப் சேனல், இணைய செய்தி இதழ்கள் என எங்கு பார்த்தாலும் பிரச்சாரம். வாக்களிக்க இருக்கும் மக்கள் குழம்பித் தான் போவார்கள்.
மதுவிலக்கு பற்றியும் ஊழல் பற்றியும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் பேசி வாக்கு கேட்பது தான் நகை முரண்.
மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருந்து நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். அனேகமாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் என் இறுதி கட்டுரை இதுவாக தான் இருக்கக் கூடும்.
ஆறு கட்சிகள் பெரும்பான்மையாக போட்டியிருகின்றன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.
திமுக
இந்த மாநிலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி பெரிதாக சம்பாதித்தவர்கள் கலைஞர் குடும்பத்தினர் தான். கலைஞர் அவர்கள் குடும்பத்திற்கு எப்படி சொத்து சேர்ப்பார், எப்படி வாய்ப்புகளை தருவார் என்பதை 1970களிலேயே கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துள்ளார். அதனால் கலைஞரின் குடும்பத்தினர் சொத்து சேர்ப்பது, அதிகாரத்தில தலையிடுவது கடந்த இருபது ஆண்டுகளுக்குள் வந்ததல்ல. தொன்று தொட்ட பழகக்கம்.
மாவட்ட செயலாளர்கள் எல்லாம் குறுநில மன்னர்கள், அவர்களை தாண்டி கட்சியில் மற்றவர்கள் வளரவே முடியாது. வளர நினைத்தாலும் அவர்கள் வளர விடமாட்டார்கள். கலைஞர் எவ்வழியோ அவ்வழி இரண்டாம் கட்ட தலைவர்கள் சொத்து சேர்ப்பதில்.
ஈழம் விஷயத்தில் பெரிதாக நாடகம் போட்டு ஏமாற்றியவர்கள், மே 2009 போர் உச்சத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது நிலைமை கவலை கொள்ள செய்தது. அப்போது கலைஞர் உண்ணாவிரதம் பெரிதும் மாற்றத்தை கொண்டு வரும் நம்பிய லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களில் நானும் ஒருவன். கடைசியில் நடந்தது எல்லாருக்கும் தெரியும். 
இப்போ இணைய திமுகவினர் ஒரு உண்ணாவிரதம் போரை நிறுத்தும் என்று நம்பும் அளவுக்கு நீ அப்பாவியா என்று கிண்டலடிக்கிறார்கள். அடேய் அந்த உண்ணாவிரதம் போரை நிறுத்தாது என்றால் என்னத்துக்கு உங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.
என்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் இமாலய ஊழலான 2ஜியில் திமுகவுக்கு பெரும் பங்கு இருந்தது, என்பதும் இவர்கள் திருந்தவே இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை.
சரி இவ்வளவு தவறு நடந்து போச்சே, இனியாவது தவறை திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால், ம்ஹும், கோடீஸ்வரர் வேட்பாளர் தேர்விலேயே தெரிந்து விட்டது இது மாறவே மாறாது என.
அதிமுக
இருப்பதிலேயே அதிகளவு கேவலமான ஆட்சி தந்தது அதிமுக தான். சர்வாதிகார மனப்பான்மை, கட்சிகாரர்களை மனிதனாக கூட மதிக்காத தலைமை. டயரை தொட்டுக் கும்பிடும் முன்னால் முதல்வர் என கோமாளி ஆட்சி தான் இந்த முறை நடந்தது.
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை சென்றதும் நடந்த கூத்துகள் இனி ஒரு காலத்திலும் நம் மாநிலத்தில் நடக்க கூடாது என மக்கள் வெறுப்படைந்தார்கள். என்ன அழுகை, என்ன பிரார்த்தனை குற்றவாளிக்கு ஆதரவாக மாநிலமே முடக்கி வைக்கப்பட்டது நம் மாநிலத்தில் தான் இருக்கும்.
நான் தீர்ப்பு வந்த தினம் திருவாரூரில் இருந்தேன். பேருந்து நிலையத்தில் நடந்த களேபரத்தை கண்முன்னே பார்த்தேன். கடைகள் அனைத்தும் வலுக்கட்டாயமாக மூடவைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்குகள், மருந்துகடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. அன்று பெட்ரோல் இல்லாமல் தள்ளிக் கொண்டு சென்ற வண்டிகள் ஏராளம்.
வெள்ளத்தில் நடந்தது எல்லாம் கொடூரத்தின் உச்சம். அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மக்களே மக்களோடு கைகோர்த்து செய்தது, ஆளும் அரசுக்கு எவ்வளவு கேவலம். ஆனால் வெக்கமே இல்லாமல் உதவிப் பொருட்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டி இன்னும் கேவலப்படுத்தியது அதிமுக.
இதுவரை ஆட்சிக்கு வராமல் இனி வரவேண்டும் என்று போட்டியிடும் கட்சிகள்
பாமக 
இவர்கள் கட்சியாக பரிணமித்ததே சாதி சங்கத்தில் இருந்து தான், இது வரை சாதியைபின்புலமாக வைத்தே ஓட்டுகளை வாங்கி வந்த கட்சி பாமக. வட தமிழ்நாட்டை சேர்ந்த வன்னியர் பெரும்பான்மையாக வசிக்கும் பல கிராமங்களில் கட்டுப்பாட்டுடன் பாமகவுக்கு ஒட்டுப் போட வைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ரொம்பவே மோசமானவர்கள், அதிகாரத்திற்கு வரவே கூடாது என நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள். தர்மபுரி இளவரசன் விவகாரத்தில். மற்ற கட்சிகள் சாதி மறுப்பு திருமணத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை விட இவர்கள் அந்த வார்த்தைகள் இடம் பெறாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள்.
இன்று வெளியில் மாற்றம் முன்னேற்றம் என்று பேசிக் கொண்டாலும் பின்புலம் சாதியை மையமாக வைத்தே இயங்குகிறது. இவர்கள் உண்மையாக சாதி ஆதரவை விட்டு நடுநிலைக்கு வந்தால் வன்னியர்களும் ஓட்டு போட மாட்டார்கள், மற்ற சாதிகாரர்களும் நம்பி ஓட்டு போட மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சி
புதிதாக உருவான கட்சி, பிரச்சாரங்களும் கொள்கைகளும் ஆரம்பத்தில் என்னவோ இருக்கிறது என்று கவனிக்க வைக்கவே செய்தன. ஆனால் பின்பு முருகன் முப்பாட்டன் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் என மாறி சந்தேகம் கொள்ள வைத்தார்கள்.
இன்று ஆடு மாடு மேய்த்து, விவசாயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற வாதங்கள் என்னை கவரவே செய்தது. ஏனென்றால் நான் அதிகாரத்திற்கு வந்தால் இது செய்வேன் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்குமல்லவா, அந்த கனவு சீமானின் தேர்தல் அறிக்கையில் இருந்தது.
ஆனால் அவர் விலக ஆரம்பித்தது, தமிழ் தேசியத்தை முட்டாள்தனமாக விளக்கிய போது தான்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தால் அவர் தமிழர் அவ்வளவு தான் சிம்பிள். நாலு தலைமுறைக்கு முன் ஆந்திரா பகுதியில் இருந்து இங்கு வந்து செட்டிலாகி தமிழர்களோடு தமிழர்களாக வாழும் நாயுடு, நாயக்கர், ரெட்டியார், இசை வேளாளர் போன்றவர்களை தமிழர்கள் இல்லையென்றால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சீக்கியரையே நாங்கள் தமிழர்களாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். என்னுடன் தான் படித்தான், என்னை விட பக்காவாக மெட்ராஸ் ஸ்லாங் பேசுவான், தமிழ் பெண்ணை கட்டிக் கொண்டு இங்கேயே வேலை பார்க்கிறான், அவன் தமிழனில்லை என்பது சரியான காமெடி.
இவர் பேச்சு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது கலவரத்திற்கே வழி வகுக்கும்.
பாஜக
இவர்களை பற்றி என்ன சொல்ல, இவர்களின் பிரச்சனையே மதவாதம் தான். இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதால் அவர்களின் உணர்வுகளை உசுப்பி வளர்ந்த கட்சி. மாநிலத்தில் ஒற்றை இலக்கத்திற்கே நொண்டி அடிப்பதற்கு காரணம் பெரியார் ஏற்படுத்திய மாற்றம். அதை எளிதில் மாற்ற முடியாமல் ஒரு பிரச்சனையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரச்சனையின் களமிறங்கி தங்களை வளர்த்துக் கொள்ள.
மாட்டுக்கறி தின்பது அவன் அவன் உரிமை, இந்தியாவில் இருந்தால் நீ மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பது, பாரத் மாதாகீ ஜே என்று சொல்ல கட்டாயப்படுத்துவதும் வட மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும், இங்கே வேலைக்காகாது.
எல்லா மதத்துக்காரனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இவர்கள் கண்டிப்பாக ஒற்றை இலக்கத்தை தாண்டவே கூடாத கட்சி.
மநகூ தேமுதிக தமாகா கூட்டணி
ஒரு கட்சி ஆட்சி தான் இந்த நிலைமைக்கு நம்மை கொண்டு வந்து இருக்கிறது. நமக்கு தேவை கூட்டணிஆட்சி தான். ஒருவர் தப்பு செய்தால் ஒரு தட்டி கேட்க முடியும். இது வரை இவர்கள் செயல்பாட்டில் பெரிய அதிருப்தி இல்லை.
நிர்வாகம் என்பதை பொறுத்தவரை சிறப்பாக இருக்குமென்றே நம்புகிறேன். விஜயகாந்த் என்ற தனிமனிதரின் கை ஓங்கியிருக்காமல் எல்லோரின் ஆலோசனைப்படி முடிவெடுப்பதால் சர்வாதிகாரம் தலை தூக்காது.
சிறந்த நிர்வாகிகளை கொண்டு சிறந்த திட்டங்கள் மூலம் ஒரு மாற்றம் நிகழும் என்றே நம்புகிறேன்.

நன்றி

இந்த ஒரு கட்டுரை எந்த மாற்றத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் சிந்திக்க வைக்கலாம் அல்லவா. சிந்தியுங்கள், யாருக்கு ஓட்டு போடுவது என்பது உங்கள் உரிமை, அதை சரியாக செய்து நம் மாநிலத்தை வரும் 5 ஆண்டுகளுக்கு வளமோடு வைத்திருக்க உதவுங்கள்.

ஆரூர் மூனா