என் சித்தப்பா ஒருத்தர் இருக்காரு, வித்தியாசமான கேரக்டரு, ஒவ்வொரு குழுமத்துக்கும் இவர் மாதிரியான ஒரு ஆள் கண்டிப்பாக இருப்பார்கள்.
மகாதியானம்னா தெறிச்சி ஓடுவாரு, எப்படியாவது ஆசை காட்டி ஒரு கால் கல்லு வாங்கி வச்சி அவருக்கு ஒரு கட்டிங் கொடுத்துட்டா போதும். அன்றைய பொழுது முழுவதும் நமக்கு செலவு பண்ணி சரக்கு வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருப்பார்.
மறுநாள் தான் அவருக்கு நடந்ததெல்லாம் புரிந்திருக்கும். கையில இருக்குற காசு முழுவதையும் செலவழிக்க வச்சிட்டானேன்னு திட்டிக்கிட்டே நம்ம இருக்குற பக்கமே வர மாட்டார். மறுபடியும் ஒரு நாள் தொக்கா மாட்டிக்குவார். வச்சி செஞ்சிடுவோம் அவரை.
படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போவதற்குள் வெட்டியா சுத்துவோமே, அந்த காலகட்டத்தில் அவர் தான் எங்களுக்கு படியளக்கும் கடவுள்.
நானாவது பரவாயில்லை, பாவம் பார்த்து கொஞ்சமா செலவு பண்ண வைப்பேன். என் மச்சான் ஒருத்தன் இருக்கான் வெள்ளையும் சொள்ளையுமா மேலவாசல்ல. இப்ப சம்பாதிச்சி சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் அந்த சமயம் அவனும் வெட்டிப் பய தானே. கடைசி துட்டு வரைக்கும் அவரை செலவு பண்ண வச்சிடுவான்.
நானும் அவனும் வீட்டு வாசல்ல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். எங்களை கடக்கும் போது பார்க்காத மாதிரியே கடந்து போவார். "யோவ் சித்தப்பா" னு கூப்பிட்டா சிரிச்சிக்கிட்டே "அவசர வேலையே போய்க்கிட்டு இருக்கேன். இப்ப வந்துடுறேன்" னு நழுவிடுவார்.
கண்டிப்பா வேற வழில தான் போவார்னு தெரியும், அங்க ஒரு பட்றய போட்டுருப்போம். கையில இருக்குற ஐம்பது அறுவதுக்கு ஒரு கால் கல்லு மட்டும் தான் வாங்க முடியும். வாங்கி தயாரா உக்கார்ந்து இருப்போம்.
வர்றவர்கிட்ட நைஸா பேசி பம்புசெட்டுக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவோம். போகும் போதே சொல்லிக்கிட்டு வருவார், "டேய் என்கிட்ட காசே இல்லடா, நாளைக்கு சாப்பிடலாம்"னு நழுவுவார். "அட வாங்க சித்தப்பா, இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்"னு சொல்லி ஒரு கட்டிங் தான் கொடுப்போம்.
பத்து நிமிசம் கழிச்சி தலைய சிலுப்புவார். "மவனே, இந்தாடா காசு, ஒரு அரைக்கல்லு, ஒரு கால்கல்லு, ஒரு சோடா பாட்டிலு, சிக்கன் லாம் வாங்கியாடா" ன்னுவார். சாயந்திரம் ஆரம்பிச்ச மகாதியானம் நடுராத்திரி வரைக்கும் நிக்காம ஒடும்.
மறுநாள் மதிய சோறு நேரம் வரைக்கும் வெளிய தென்படவே மாட்டார். வீட்டுக்குள்ள பார்த்தா கொல்லப் பக்கமா தலைல துண்டு போட்டு உக்கார்ந்து விக்ஸ் தேச்சிக்கிட்டு இருப்பார்.
அடுப்பாங்கரையிலிருந்து சித்தி குரல் கேக்கும். கன்னாபின்னான்னு எங்களை தான் திட்டிக்கிட்டு இருக்கும். எங்களை பார்த்ததும் "வாங்கடா கண்ணுகளா, லட்டு சாப்பிடுங்கடா" னு சாப்பிட கொடுக்கும். எங்களுக்கு தெரியாம நைஸா மாமாகிட்ட "வெளியில இவனுங்களோட போன தொலைச்சிப்புடுவேன்"னு மிரட்டி வைக்கும்.
2000 சமயத்துல சில மாதங்கள் எங்களுக்கு இப்படி தான் போய்க்கிட்டு இருந்தது.
ஒரு முறை இப்படி தான் ஓவரா குடிச்சிப்புட்டு சித்தப்பா சைக்கிளை மறந்து வச்சிட்டு நடந்தே வீட்டுக்கு போயிட்டார். நானும் மச்சானும் கொடுக்கலாம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்கு போய் பார்த்தா சித்தி அவரை அடி வெளுத்துக்கிட்டு இருக்கு. நின்ன மேனிக்கு காலை தூக்கி அவர் தாவாடைலயே ஒரு கிக்கு விட்டது பாருங்க.
சித்தி ஒரு பொடவ கட்டுன பொன்னம்பலம் னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. மறுநாள் கேக்கும் போது தான் சித்தப்பா சொன்னார். அன்னைக்கு விக்ஸ் தடவிக்கிட்டு இருந்தது ஹேங் ஓவர்னால இல்ல, சித்தி விட்ட அறைல காது கொய்ய்னு ஆகி வலி தாங்க முடியாம தான் ன்னு.
ஆரூர் மூனா