பிசாசு படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் பிகேவும் பிசாசுவும் ஒரே நேரத்தில் ரிலீசாகப் போகிறது என்றதும் என் முதல் சாய்ஸ் பிகே என்று ஆனது, காரணம் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.
2003 காலக்கட்டத்தில் நான் வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த திட்டத்தின் ப்ராஜக்ட் இன்சார்ஜ் ஆக ஒரு மராத்தி இணைந்தார்.
அடுத்த சில மாதங்களில் ப்ராஜக்ட்டின் பெரும்பாலான பதவிகளில் மராத்தியர்களே இருந்தனர். அதற்கு முன்னரே இந்தி பேச ஒரளவுக்கு கற்றுக் கொண்டதால் நான் தப்பித்து விட்டேன். விடாப்பிடியாக கற்றுக் கொள்ளாத தமிழர்கள் ஆலந்துர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றி விடப் பட்டனர்.
அந்த சமயம் முன்னாபாய் எம்பிபிஎஸ் படம் வெளியானது. படத்தின் பெரும்பகுதி மும்பையில் இருப்பது போல் இருந்ததால் என்னுடன் பணிபுரிந்த சீனியர் மராத்தியர் ஒருவர் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து கிளம்பினார். லோக்கல் கார்டியனாக நானும் படத்திற்கு சென்றேன்.
படம் பார்த்து முடித்த பிறகு தான் தெரிந்தது, இருட்டில் கல் என்று எடுத்தது வைரம் என்று ( ஆஹா என்ன ஒரு உவமை, எழுத்தாளன்டா நீ) இரண்டு நாள் படத்தின் பிரமிப்பிலிருந்து நான் விலகவேயில்லை. அதன் பிறகு சில நாட்கள் இரவுக்காட்சிக்கு முன்னாபாயுடனே இருந்தேன்.
ராஜ்குமார் ஹிரானி என் விருப்ப இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார்.
அடுத்த படமான லகே ரகோ முன்னாபாய் வெளியாகும் முன் எனக்கு டவுட்டை கொடுத்தது. காரணம் அது முன்னாபாயின் இரண்டாம் பாகம் என்பதால். இந்திய சினிமாக்களில் அதுவரை இரண்டாம் பாகமாக வந்த படங்கள் எல்லாமே மொக்கையாகத்தான் இருந்தன.
அதனால் முதல் காட்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அந்த படத்தின் ரிசல்ட் கேள்விபட்டவுடன் இரவுக்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்து படையை திரட்டிக் கொண்டு கிளம்பினால் சத்யம் ஹவுஸ்புல். அடுத்ததாக சென்றது மெலோடி என்று நினைக்கிறேன் நினைவில் இல்லை, அங்கும் ஹவுஸ்புல். அண்ணாவில் முதல் வரிசையில் தான் இடமிருந்தது. அண்ணா திரையரங்கம் எனக்கு தெரிந்து ஹவுஸ்புல்லானது அன்று தான்.
முன்னாபாய் படத்தை விட லகே ரகோ முன்னாபாய் படம் ட்ரிபுள் ஹிட். காட்சியமைப்பிலும். அப்படித்தான். கிட்டத்தட்ட காலாவதியாகி விட்டது என்று நினைத்த காந்தியிசம் இந்த காலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பக்காவான திரைக்கதையில் சொல்லி அசத்தியிருந்தார். மதிப்பில் மேலும் சில படி உயர்ந்தார் இயக்குனர்.
அதன் பிறகு இரண்டு படத்தையும் டிவிடியில் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே நினைவில் இல்லை.
பிறகு நான் திருவாரூரில் இருந்த காலக்கட்டத்தில் 2009ல் த்ரி இடியட்ஸ் படம் ரிலீசானது. நம்மூரில் இந்திப் படங்கள் ரிலீசாகாது என்பதால் காத்திருக்க நேரிட்டது. ஆனால் சில நாட்களிலேயே தஞ்சாவூர் வந்து படத்தின் டிவிடியை வாங்கி படத்தை பார்த்து மகிழ்ந்தேன். இன்று வரை அந்த படத்தின் காப்பி என் ஹார்ட்டிஸ்க்கில் இருக்கிறது. நான் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
அவரின் படங்கள் பார்த்து பார்த்து நான் பரம ரசிகனாகி விட்டேன். உண்மையில் எந்த சமரசத்திற்கும் உட்படாமல் உயரிய கருத்துக்களோடு நினைத்ததை படமாக எடுக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது.
முன்னாபாய் படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் உளவியல் சிக்கல்களை சொல்லி அப்ளாஸை அள்ளியது. லகே ரகோ முன்னாபாய் படத்தில் காந்திய கருத்துக்களை இன்றைய காலக்கட்டத்திற்கு எப்படி பயன்படுத்த முடியம் என்பதை காண்பித்து வசூலை அள்ளியது. த்ரீ இடியட்ஸ் படம் கல்வித்துறையில் நடக்கும் குறைபாடுகளை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியது.
எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாய் வந்துள்ளதே இந்த பிகே படம். மதங்களில் விரவிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை தைரியமாக வெளியில் சொல்லி சாதி மத நம்பிக்கைகள் அதிகமுள்ள, பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதை பெருமையாக போட்டுக் கொள்ளும் மக்கள் நிறைந்த வடஇந்தியாவில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது தான் ஆச்சரியம்.
தமிழில் வந்திருந்தால் கூட இது இன்னுமொரு நல்லபடம் என்ற பெயரையே சம்பாதித்து இருக்கும். ஆனால் இந்தியில் வந்திருப்பது தான் இதன் ஆகப் பெரும் பலம்.
இந்தப் படம் தமிழில் ரீமேக்காகி வந்தால் கண்டிப்பாக பலத்த வரவேற்பை பெறும். மக்களே படத்தை தவற விடாதீர்கள். உங்களுக்காக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் வெளியாகியுள்ளது. படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை. வயிறு வலிக்க சிரித்து மகிழுங்கள்.
ஆரூர் மூனா