Wednesday 14 October 2015

காலை உணவும், கட்டன் சாயாவும்

காலை உணவு என்பது எவ்வளவு முக்கியம் என்பது காலையில் 7 மணிக்கே வேலையை துவக்குபவர்களால் தான் உணர முடியும். முக்கியமா ரயில்வே தொழிற்சாலைகளில் பணிபுரிவர்கள். சென்னையின் மற்ற ஏரியாக்களில் 8 மணிவாக்கில் தான் சிறுஉணவகங்கள், கையேந்திபவன்களில் நாஷ்டா கிடைக்கும். பெரம்பூர் தொழிற்சாலைகளான கேரேஜ் ஓர்க்ஸ், லோகோ ஒர்க்ஸ், ஐசிஎப்பை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணிக்கே எல்லா வித உணவுகளும் பறிமாற தயாராக இருக்கும்.


பள்ளிக்காலம் வரை தான் நான் திருவாரூரில் இருந்தேன். 12 வது முடிந்தவுடனே சென்னைக்கு என்னை நாடு கடத்தியதால் அதன் பிறகு எப்பொழுதுமே ஹோட்டல்கள், மெஸ்கள், கையேந்திபவன்கள் தான் தான். சிலசமயம் ஆர்வக் கோளாறினால் சொந்த சமையலும் நடந்ததுண்டு. 

அம்மாவின் நிர்வாகத்தில் (எங்க அம்மா, எங்க அம்மாய்யா, என்னை பெத்தெடுத்த தெய்வம்யா) இருந்த வரை சாப்பிட்ட காலை சாப்பாடு எப்பொழுதுமே சிறந்த உணவுகளை மட்டுமே இப்ப வரை நினைவில் வைத்து இருக்கிறது. 

ஆகககா என்ன காம்பினேசன்கள், இட்லியும் சாம்பாரும், இட்லியும் கடப்பாவும். வாவ். காலை டிபனுடன் சாம்பாரை நாலு ரகமாக செய்து சாப்பிட்டது என் அம்மாவின் கையால் தான். பருப்பை வேக வைத்து மசித்து அதனுடன் மிளகு மற்றும் மசாலாக்களை வறுத்து பொடி செய்து வைக்கப்படும் நீர்த்த சாம்பார், உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை அளவான அளவில் நறுக்கி பெருங்காயம் ஏத்தமாக போட்டு வைக்கப்படும் கெட்டி சாம்பார், பருப்புடன் மஞ்சள் பூசணியை சேர்த்து வேக வைத்து மசித்து முழு சின்ன வெங்காயம் நிறைய போட்டு வேக வைத்து செய்யப்படும் கல்யாண சாம்பார், மசாலாப் பொருட்கள் அரைத்து அதனுடன் வேகவைத்த பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து வைக்கப்படும் கடப்பா  (இது தஞ்சை பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்) என வெறும் சாம்பாரில் மட்டுமே நாலு ரகமென்றால் மற்ற உணவு வகைகள் பற்றி சொல்லவா வேண்டும். 


சட்னி என்றால் தேங்காய்ச் சட்னி, வதக்கிய வெங்காய சட்னி, வதக்கா வெங்காய சட்னி, பீர்க்கங்காய் சட்னி, முள்ளங்கி சட்னி, பிரண்டை சட்னி, கொத்தமல்லி வெங்காய சட்னி, துவையல்கள் அதிலும் டூர் துவையல் என்று ஒன்று இருக்கு. திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் போது அம்மா இட்லியும் இந்த துவையலும் எடுத்து வருவார். இது கெட்டுப் போகாது. வெங்காயம் தக்காளி, புளி, உப்பு சேர்த்து அரைத்து பிறகு தாளித்து நன்றாக துவையல் பதம் வரும் வரை நன்றாக வாணலியில் வதக்கி செய்வது, டேஸ்ட் சும்மா பட்டைய கிளப்பும். இப்ப வரைக்கும் அம்மா சென்னை வந்தால் ஊருக்கு செல்லும் போது எனக்காக ஒரு டப்பா முழுக்க இந்த துவையல் செய்து வைத்து விட்டு தான் செல்வார். 

வாரத்தின் இரு நாட்கள் காலையில் ஆட்டுக்கறியில் நல்ல நெஞ்செலும்பாக மட்டும் அப்பா வாங்கி வந்து தருவார். அதனுடன் முருங்கைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய் சேர்த்து இட்லிக்கான குழம்பாக மட்டும் சற்று நீர்த்து போனது போல் அம்மா வைப்பார். நம்பினால் நம்புங்கள் அப்பவே முப்பது இட்லி வரை சாப்பிடுவேன். 

முதல் நாள் இரவு செய்த மீன் குழம்பென்றால் இட்லியின் எண்ணிக்கை இன்னும் கூட தான் செய்யும். இட்லிக்கே இப்படி என்றால் மற்ற உணவு வகைகளை பற்றி கேட்கவா வேண்டும். 


இட்லியை விட சில நாட்கள் அபூர்வமாக கிடைக்கும் தண்ணி சோறு இன்னும் சுவைக்கவே செய்யும். அதுவும் எங்க அம்மா வழித்தாத்தா பழக்கி கொடுத்த சுட்ட கருவாடு மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சட்டி தண்ணிசோறு சளைக்காமல் சாப்பிடலாம். ஆமாம் என் தாத்தா பெரும்பாலும் காலையில் தண்ணிசோறு விறகு அடுப்பில் எரியும் நெருப்பில் எதுவுமே சேர்க்காமல் அப்படியே சுட்டுத் தரப்படும் கருவாடு தான் சாப்பிடுவார். கூடுதல் சுவைக்காக என்றால் சின்ன வெங்காயம் வைத்துக் கொள்வார். 

அப்பா கூட்டுறவுத் துறையில்  வேலை செய்ததாலும் பட்ஜெட் பத்மநாபனாக இருந்ததாலும் பெரும்பாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவதை விரும்ப மாட்டார். தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லும் சமயங்களில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் அருண் ஹோட்டல், மாத்திரிச்ச பிள்ளையார் (மாற்றிஉரைத்த வினாயகர் என்பது மருவி பேச்சு வழக்கில் அப்படி ஆகிடுச்சி) கோவில் அருகில் இருக்கும் அலங்கார் ஹோட்டல் ஆகியவற்றில் தான் வாங்கி தருவார். அங்கே கிடைக்கும் தோசையும் சட்னி சாம்பார்களும் செம டேஸ்ட்டாக இருக்கும்.


பதினேழாவது வயதில் வெந்நீர் கூட வைக்கத் தெரியாத அப்பாவியாக சென்னை வந்து இறங்கினேன். அப்ரெண்டிஸ் சேர்ந்ததும் ஹாஸ்டலில் மெஸ் வசதி கிடையாது என்பதால் தட்டுமுட்டு சாமான்களுடன் எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் சமையலில் தொபுக்கடீர் என்று குதித்தேன். சில நாட்கள் கேவலமாக சமைத்து சாப்பிட்டு விட்டு பிறகு ஒரு தெய்வத் திருநாளில் கையேந்திபவன்கள் சரணம் என்று முடிவு செய்து எல்லா பாத்திரங்களையும் பரணில் ஏற்றினேன். அதன் பிறகு ஐசிஎப்பில் இருந்த அக்கா கடை தான் அட்சயபாத்திரம், கணக்கு வழக்கே இல்லாமல் சாப்பிட்டு நாங்களாக ஒரு கணக்கு வைத்து அக்காவின் லாபத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தோம்.

கேரளாவுக்கு செல்லும் வரை பெரிதான மாற்றங்கள் காலை உணவில் இருந்ததில்லை. கேரளாவில் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஒரு பெரியவர் கற்றுக் கொடுத்தார். இன்று வரை ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காலை உணவை சாப்பிட்டது அங்கு தான். 

புட்டு, கடலைக்கறி, ஒரு பழம்பூரி, தேங்காய் எண்ணெயில் பொறித்த டபுள் ஆம்லேட், அப்பளம், கட்டன் சாயா இது தான் அந்த ஒரு வருடமும் என் காலை உணவு, சில நாட்கள் மட்டும் கடலைக்கறிக்கு பதிலாக பீப் கறி. இந்த சாப்பாட்டின் முதல் விதி சாப்பாட்டின் இடையே தண்ணீர் குடிக்க கூடாது. புட்டு தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டுமென்றால் எவ்வளவு மெதுவாக சாப்பிட வேண்டும். ரசிச்சி ருசிச்சி சாப்பிட்ட தருணம் அது. ஒரு வாய் புட்டு, ஒரு கடி பழம்பூரி, அப்பளத்துடன் சேர்த்து ஆம்லெட் கொஞ்சம், ஒரு சிப் கட்டன் சாயா. சொர்க்கத்தை அந்த தருணத்தில் காணலாம்.

ஐதராபாத்தில் இருந்த காலத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். சாப்பிட்டுப் பார்த்தால் கன்றாவியாக இருக்கும். ஆனால் பெசரெட் சூப்பராக இருக்கும். சில நாட்கள் முதல்நாள் வாங்கிய பிரியாணியை வைத்து மறுநாள் காலையும் பிரியாணியாக வெளுத்ததெல்லாம் உண்டு.

மத்தியபிரதேசத்தில் பூண்டு வாங்கிய சென்னைக்கு அனுப்பிய காலத்தில் காலை உணவுக்கு படாத பாடு பட்டேன். அங்கு எந்த உணவகத்திலும் காலை உணவு கிடையாது. என்ன தான் சாப்பிடுவாங்க என்று தேடிப் பார்த்தால் அந்த ஏரியா முழுவதுமே காலையில் பொகாவும் டீயும் தான். பொகா என்றால் ஒரு ரகமான அவல் உப்புமா. இது டீக்கடையில் மட்டும் தான் கிடைக்கும். அதுவும் பேப்பரை சுண்டலுக்கு சுருட்டுவார்களே அப்படி சுருட்டி ஒரு கரண்டி பொகா வைத்து தருவார்கள். அப்படியே தின்னுட்டு ஒரு டீ மட்டும் குடித்து விட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான். 

இவ்வளவு கதை பேசுகிறேனே, இன்றைய நிலைமை என்ன தெரியுமா, ரெண்டு ரகமான சட்னியோ, கூடுதலாக ஒரு துவையலோ கேட்டால் மிக்ஸியை கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு அரைக்க சொல்கிறார் இல்லத்து அரசி. 

ம்ஹும். . பேசாம கேரளாவுலயே ஒரு வல்லிய பெண்குட்டியை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு தோணுது. புட்டும் கடலைக்கறியுமா வாழ்க்கை சந்தோசமா போயிருக்கும்.

ஓவரா ஔறிட்டோமோ, இந்த பதிவு என் தங்கமணி கண்ணில் படாம இருக்க செய் ஆண்டவா. கிடைக்கிற சோத்துக்கும் ஆப்பாகிட போகுது.

ஆரூர் மூனா

7 comments:

  1. Hi Senthil, I have been reading your blog for a very long time. I want to talk to you. Can you send me your phone number to vakablr அட் ஜிமெயில் டாட் காம்.

    ReplyDelete
    Replies
    1. அனுப்புறேன் அய்யா, நன்றி

      Delete
  2. அப்பவே முப்பது இட்லி வரை சாப்பிடுவேன். //parthale theriuthu

    ReplyDelete
  3. Thanks anna
    Yenakku niraya veetu samayal tips kodutheenga
    I am catering facilitator
    Pasangalukku sollikodukka naala visayam
    Ashiq

    ReplyDelete
  4. செம காமெடி

    ReplyDelete