சோறுன்னா சட்டி திம்போம், சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்னு ஒரு பாட்டு கன்னிராசி படத்துல இருக்கும். சின்ன வயசுல அந்த பாட்டு தான் எங்களுக்கு தேசிய கீதம். அந்த பாட்டின் இலக்கணப்படி நொறுக்கிக் கொண்டே இருக்கிறார் அனுஷ்கா. குண்டாக இருப்பதாலேயே வரன்களால் தட்டிக் கழிக்கப்பட்ட அவரது வாழ்க்கையில் விரும்பியவரை எப்படி திருமணம் செய்தார் என்பதே இஞ்சி இடுப்பழகி.
இந்த உலகமகா காவியத்தை அரங்கில் ஆர்வமுடன்(!!!) பார்க்க விரும்புபவர்கள் இத்துடன் ஸ்கிப் செய்து விடவும். விமர்சனத்தில் ஸ்பாய்லர்கள் இருக்கலாம். (நன்றி விக்கி நண்பா). இந்த ஸ்பாய்லர் மேட்டர் ஒரு விவாதப் பொருளாகி பெரும் சச்சரவை கிளப்பியதால் இனி வரும் விமர்சனங்களில் இந்த பாரா தவறாமல் இடம் பெறும்.
எனக்குன்னு ஒரு ராசி இருக்கு. நான் பார்க்க நினைக்கும் படங்களின் முதல் காட்சி எதாவது ஒரு காரணத்தால் தடைபடும். இல்லாவிடில் என்னால் போக முடியாமல் போகும். காட்சி ரத்தாகும். சில சமயம் படமே வெளிவராது. சிக்கலில்லாமல் டிக்கெட் கிடைக்கும் படங்கள் சூரமொக்கையாக இருக்கும்.
இன்றும் அது தான் நடந்தது. நான் போக விரும்பியது உப்புகருவாடு அல்லது 144 படத்துக்கு தான். 9 மணிக்கு கவுண்ட்டரில் போய் டிக்கெட் கேட்டால் 144 காட்சி ரத்து. வாலிபராஜா படம் வெளிவருமா என தெரியாது, உப்புகருவாடு 9.45க்கு தான் காட்சி என்றார்கள்.
9.45க்கு படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டு வேலைக்கு போக முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் 9.10 காட்சிக்கு டிக்கெட் எடுத்தேன். அது. . . . நான் போகவே கூடாது என்று முடிவெடுத்திருந்த இஞ்சி இடுப்பழகிக்கு.
இந்த படம் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்ய சில காரணங்கள் இருந்தன. ஒன்று சில வருடங்களுக்கு முன்பு கீதகீதலு என்று ஒரு தெலுகு படம் வந்திருந்தது. அல்லரி நரேஷ் ஹீரோ. ஒரு குண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி விட்டு சிரமப்பட்டு கடைசியில் குணம் தான் முக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும் படம். கிட்டத்தட்ட பாக்யராஜின் சின்ன வீடு மாதிரியான கதை. ஆனால் பக்கா ஆந்திரா மசாலா படம்.
இந்த படத்தின் போஸ்டர்கள் அந்த படத்தை தான் நினைவு படுத்தின. அந்த படமே கடுப்பா இருக்கும், அதே போல் இருக்கும் படத்தை ஏன் பார்ப்பானேன் என்று முடிவு செய்திருந்தேன். போதாக்குறைக்கு ட்ரெய்லர் செம மொக்கையாக இருந்தது. விதி எப்படியாவது சதி பண்ணி என்னை இந்த படத்தை பார்க்க வைத்த விந்தையை எண்ணி வியக்கிறேன்.
படத்தில் நாயகி குண்டாக இருப்பதால் கிண்டலடிக்கப்படுவது ஒரு காட்சிக்கு ஓகே ஆனால் முன் பாதி முழுக்கவே தொடர்வதால் கடுப்பாகிறது. எந்த குண்டு பொண்ணுய்யா உங்களுக்கு தின்னுக்கிட்டே இருக்கு. அதை குறைத்திருந்தால் கூட பார்க்கிறவனுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிடைச்சிருக்கும். கேப் விடாம அடிச்சி கொல்லுறானுங்க படம் பாக்குறவங்களை.
படத்தின் நாயகனாக ஆர்யா. கச்சிதமாக மிக்சர் மட்டும் சாப்பிடும் கதாபாத்திரம். வரிசையான ப்ளாப்புகளால் இந்த லெவலுக்கு இறங்கிப் போன ஆர்யாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
படம் தமிழ் தெலுகில் சேர்த்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்வதை விட தெலுகு டப்பிங் என்று சொல்வது தான் சாலப் பொருத்தமாக இருக்கும். க்ளோசப்புகளுக்கு மட்டும் தான் தமிழ் வெர்சன் வருகிறது. மிட்ஷாட், லாங் ஷாட் எல்லாமே தெலுகில் இருந்து தமிழுக்கு டப் தான் பண்ணியிருக்கிறார்கள்.
அனுஷ்காவுக்கு நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம் என்று சொல்லி தான் புக் செய்திருப்பார்கள் போல. அவரும் பாவம் சிரமப்பட்டு உடல் எடையை ஏற்றி இறக்கியிருக்கிறார். ஆனால் எல்லாம் வீணாப் போச்சே.
படத்தின் நாட் மட்டும் எடுத்துக் கொண்டால் கேட்க நல்லாயிருக்கு. சமூகத்திற்கு தேவையானதும் கூட. ஆனால் அதனை படமாக்க பொட்டு வைத்து பூச்சூடியிருப்பது தான் சகிக்கலை.
உடல் எடையை குறைக்கனும் என்று ஆசைப்பட்டால் வாயைக் கட்டி உடற்பயிற்சி மூலம் படிப்படியாக குறையுங்கள். ஒரு வாரத்தில் பத்து கிலோ எடையை குறைக்கிறேன் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள். இவ்வளவு தான் படம். ஆனால் சொன்ன விதம் பார்ப்பவனை சாவடிக்கிறது.
படத்தில் காமெடிக்கு நிறைய முயற்சிக்கிறார்கள். நமக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது.
படத்தில் பெர்பார்மென்ஸில் பின்னி பெடலெடுப்பவர் ஊர்வசி தான். மகளுக்கு குண்டாக இருப்பதால் திருமணம் தட்டிக் கொண்டே போவதை நினைத்து கடவுளிடமும், காலஞ்சென்ற கணவனின் போட்டோவிடமும் புலம்பும் காட்சிகளில் நடிப்பில் சீனியர் என்பதை நிருபிக்கிறார்.
பிரகாஷ் பாத்திரப்படைப்பு எரிச்சலுட்டுகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க ஏ சென்ட்டர் ஆடியன்ஸை குறிவைத்தே எடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் பப்படமாவது தான் கொடுமை. தெலுகில் படம் வெற்றியடையும் அபாயமிருக்கிறது.
பொங்கலுக்கோ காதலர் தினத்துக்கோ சின்னத்திரையில் முதன்முறையாக போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆரூர் மூனா