பொதுவா எந்த புத்தாண்டு சபதமும் எடுப்பதில்லை. ஏன்னா ஒரு நல்ல பழக்கமும் நமக்கு இருந்ததில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் விடனும்னு நினைச்சதில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் நாமளா தான் விடனும். கட்டாயப்படுத்தினா அது இன்னும் அதிகரிக்கும். தம்மை விடுறேன், தண்ணியை விடுறேன்னு எந்த வில்லங்க சபதமும் எடுத்ததில்லை.
2014 என் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு. என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு போன ஆண்டு. ஒரு துர்சம்பவத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும், கேரியர் வீழ்ச்சியையும், உருவாக்கி விட்ட கெட்டப் பெயரையும் கடந்து சமநிலைக்கு வரவே 10 வருடங்களாவது ஆகும் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவு அவ்வளவு. அதன் பிறகு தானே உயரத்தைப் பற்றி யோசிக்க முடியும்.
கூடவே இருந்த உடன்பிறப்பும் கிடைத்தவரை லாபம் என பொது சொத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளிக் கொண்டு போக எல்லா சொத்துக்களையும் இழந்து கிட்டத்தட்ட காலாவதியான நிலை தான். மற்ற இழப்பை விட உடன்பிறப்பின் துரோகம் ரொம்பவே வலித்தது.
2015ல் இவற்றை குறைக்க பெரும் பாடுபட்டேன் என்றே சொல்லலாம். கெட்டப் பெயரை நீக்குவது என்பது எல்லாம் சாத்தியமே இல்லை. அதுவும் திரும்பிய பக்கமெல்லாம் உறவினர்களையும், நண்பர்களையும் பெற்ற நான் வருட ஆரம்பத்தில் எந்த நிகழ்வுக்கு போனாலும் கூனிக்குறுகி தான் இருந்தேன்.
ஆண்டின் இறுதியில் இதன் மாற்றத்தை உணரத் தொடங்கினேன். உறவினர்களும், நண்பர்களும் பாசத்தையும், நட்பையும் பலப்படுத்தி என் இறுக்கத்தை குறைத்தனர். அவர்களுக்கு பெருமளவில் நன்றிகள்.
கேரியரில் துவங்கிய இடத்தில் இருந்தே திரும்ப ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை. பரவாயில்லை. கலங்காமல் துவக்கி ஆண்டின் இறுதியில் முன்னேற்றப் பாதையில் கேரியரை செலுத்தியாச்சி. 2016ல் இளநிலை பொறியாளராக பதவி உயர்வு கிடைக்க 99.99 சதவீத வாய்ப்பு வந்து விட்டது. இயல்புநிலையில் கேரியரும். உடன்பணிபுரிந்தோருக்கும் உயரதிகாரிகளுக்கும் நன்றிகள்.
பொருளாதார இழப்பு கடுமையான வலியை கொடுத்தது. நிம்மதியின்றி உறக்கமில்லாமல் எல்லா இரவுகளும் கழிந்தன. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆண்டு நன்றாகவே உணர்ந்தேன். ஆண்டின் துவக்கத்தில் 30 லட்சம் கடன் இருந்தது.
அம்மாவின் பூர்வீக நிலம் விற்று கிடைத்த என் பங்கு பணம், பொது சொத்தில் உடன்பிறப்பின் துரோகத்தால் ஏற்பட்ட இழப்பு போக கிடைத்த மிச்ச பணம், வங்கி லோன், வீட்டமணியின் நகை விற்ற பணம் எல்லாம் சேர்த்து முக்கால்வாசி கடன்களை அடைத்தாகி விட்டது. ஆண்டின் இறுதியில் இரண்டரை லட்சம் மட்டுமே கடன் என்ற நிலையை அடைந்தாகி விட்டது.
2016 முதல் பே கமிஷனின் சம்பள உயர்வு அமலுக்கு வருவதால் மே அல்லது ஜுனில் இன்னொரு லோனை போட்டு மிச்ச கடனையும் முடித்து விட்டால் அவ்வளவு தான். கடனின்றி நிம்மதியாக உறங்கலாம். மாத சம்பளக்காரனுக்கு அது தானே வேண்டும்.
திருவாரூரில் ஒரு ப்ளாட் வாங்கி லோன் போட்டு வீடு கட்டி குடியேறியாச்சி. உடன்பிறப்பின் தொல்லையில்லாமல் பங்கு கேட்க ஆள் வைத்துக் கொள்ளாமல் நானே நான் மட்டுமே அப்பாவின் உதவியுடன் கட்டிக் கொண்ட வீடு. சற்று கவுரவமாக இருக்கிறது.
ஆக 2014ல் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் நீங்கி இயல்புநிலையை அடைய எப்படியும் பத்து வருடம் ஆகும் என்ற நிலையில் இரண்டே வருடத்தில் சாதித்தது மகிழ்ச்சியே.
இந்த விஷயங்களையெல்லாம் ஏன் பதிவில் போட வேண்டும் நாசூக்காக தவிர்த்து விடலாமே என்று கூட தோணியது. இதை பதிவு செய்து வைத்திருப்பது அவசியம். மறுபடியும் ஆணவத்தில் ஆடத் தொடங்கினால் என் தலையைத் தட்டி நிலையை உணர்த்த இந்த பதிவு அவசியம் என மூளை சொன்னது. அதனால் பதிவிட்டு விட்டேன்.
இந்த ஆண்டு இறுதியில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சியையும் மனவலிமையையும் தந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் என்னைப் போல் பெங்களூருவில் இருந்து ஒரு நண்பனும், ஜப்பானில் இருந்து ஒரு நண்பனும், சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பனும் வந்திருந்தார்கள். கடந்த ஆறு நாட்களும் மகிழ்வுடனும், கும்மாளத்துடனும் கழிந்து விட்டது.
இந்த மகிழ்வை ஆண்டு முழுவதும் நான் தக்க வைத்திருந்தால் பாக்கியசாலி தான்.
வரும் ஆண்டு லட்சியம் என்ன,
கடன்களை அடைத்த பின்பு, எனக்கென வீட்டின் உள்ளேயே ஒரு ஸ்டுடியோ அமைத்து, யூடியுப் சேனல் துவக்கி, நல்ல கேமிரா வாங்கி, சினிமா விமர்சனங்களை வீடியோக்களாக போட்டுத் தள்ளி, முதல் நாள் முதல் விமர்சனம் நம்மளுதா இருக்கனும் என்ற கொள்கையை விட்டுத்தராமல் இருக்கனும். இதுக்கு எந்த சிக்கலையும் என் வீட்டம்மணி ஏற்படுத்தாமல் இருக்கனும்.
என் பொண்ணு செய்யும் சேட்டைகளை கட்டுக்குள் கொண்டு வரும் திறமையை கத்துக்கனும், வாரம் ஒரு நாள் மட்டும் மகாதியானத்தில் கலந்துக்கனும், வலைப்பூவில் எழுதுவதை விட்டு விடாமல் இருக்கனும், நக்கீரன் வாயை கட்டனும், பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக்கனும், ரஜினி படம் முதல் காட்சியை எப்பாடு பட்டாவது பார்க்கனும். அவ்வளவு தான்.
வாசகர்களுக்கும், வாசக நண்பர்களும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்பணிபுரிபவர்களுக்கும், துரோகத்தால் முதுகில் குத்திய உடன்பிறப்புக்கும், கடன் கொடுத்தவர்களுக்கும், இவனிடம் இருந்து எப்படிடா பணத்தை திரும்ப வாங்குவது என்று தவிப்பவர்களுக்கும், கடவுள் நம்பிக்கையில்லாத என்னிடம் சிக்கலை பயன்படுத்தி மதமாற்றம் ஏற்படுத்த முனைந்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முயன்ற உறவினர்களுக்கும், பெயர் விட்டுப் போன அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஆரூர் மூனா